நாம் எமது ஐம்புலன்களினால் பெறுகின்ற இன்பத்தைவிட இலக்கிய இன்பம் பெருமை பெற்றது. அதை அப்படியே ஏற்று சுவைத்து இன்புறுவோரும் உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான மெய்யுணர்வைக் கொண்டு ஆராய்ந்து பார்த்துப் பொருள் கொள்வோரும் உண்டு. இலக்கியத்தில் இன்பம் பெறுவோர் கம்பரைத் அறியாதிருக்க மாட்டார்கள். கம்பன் கற்றவர்க்கும்;;;, கற்பனை சுவை சுவைத்து இன்புறுவோர்க்கும் சுவாரஸ்யமானவர் மற்றவர்க்குச் சிதம்பரசக்கரம் போலாவார்.
இக்கம்பன் இலக்கியச்சுவை சில கண்டு இன்புற்று அவர் அகவாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றையும் எடுத்துக்காட்டி உலகுக்கு அறிவுரை பகரும் ஒரு கவிச்சக்கரவர்த்தி வாழ்வியலில் எவ்வாறு வேறுபட்டுள்ளார் என எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றியும் இக்காலப் பண்புகளுடன் இவை எப்படி ஒன்றுபடுகின்றன எனவும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் ''கம்பர் இலக்கியச்சுவை நுகரநுகர இன்பம் பயக்கும் உள்ளத்திலும் தேனூறும்'' என்று கூறுகின்றார். இக்கம்பர் தமிழ் இலக்கியவரலாற்றிலே சோழர்காலப்பகுதி என்று சொல்லப்படும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்தவர். இக்காலப்பகுதியில் அரசியல் தழைத்தோங்கிய காலம், செல்வச்சிறப்பு மிக்க காலம். இக்கால வாழ்வியல் இலக்கியங்கள் போல் அக்காலத்தில் உலகியலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கியங்கள் தோன்றின. கம்பர் இயற்றிய காவியம் தன்னிகரில்லாத் தலைவனை எடுத்துரைப்பதாய் இருந்தமைக்கு இதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். ஒரு தலைவனுடைய வாழ்க்கைவரலாற்றை எடுத்துக் கூறுமுகத்தால் மக்களுடைய நல்வாழ்விற்குக்கு இன்றியமையாத அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் எடுத்துரைக்கும் இலக்கியம் காவியம் அல்லது காப்பியம் எனப்படுகின்றது. மக்களுடைய நல்வாழ்வுக்கு இன்றியமையாத அறிவுரைகளை இலக்கியச்சுவை சொட்டுச் சொட்ட இராம கதை மூலம் கம்பரால் கம்பராமாயணம் இயற்றப்பட்டது. சொல்நயம், ஓசைநயம், கற்பனைநயம் என பல நயங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்ட கம்பராமாயணம் ஒரு கடல். அதில் மூழ்கி எடுப்பவை எல்லாம் முத்துக்கள். பாக்களின் சுவைகள் பலாக்கனியின் தேன் சுவைகள். அதில் ஒரு அற்புத சொல்நயம் ஒன்றை ரசிப்போம்
சொல்நயம்:
அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாள், அரவெல்லாம்
அஞ்சு வணத்தின் வேகமிகுத்தாள், அருளில்லாள்
அஞ்சு வணத்தின் உத்தரியத்தாள், அலையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிர்ஆரத் தணிகொண்டாள்.
இப்பாடலில் அஞ்சுவணம் என்னும் ஒரு சொல் வேறுவேறு பொருள் கொடுத்து நயம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவதில் ஐந்து நிறங்கள், என்றும், அடுத்து அஞ்சும் உவணம் அதாவது அஞ்சுகின்ற கருடன் என்றும் பொருள் தந்தது. அடுத்து அம்சுவர்ணம் என அழகிய பொன் எனப் பொருள் கொண்டது. அடுத்து அம்சுவள் நத்தின் எனப் பிரிந்து அழகிய பெரிய சங்கு எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதன் பொருளை எடுத்துநோக்கினால், ஐந்து நிறங்களில் ஆடையுடுத்தாள், பாம்புகள் எல்லாம் கண்டு நடுங்கும் கருடனின் வேகத்தைக் கொண்டவள், அழகிய பொன் கொண்டு செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவள், கடல்நீரில் தோன்றிய அழகிய பெரிய சங்கிலுண்டான முத்துக்களினால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய மாலையை ஆபரணமாக அணிந்தவள் என இலங்காதேவியைக் கம்பன் சொல்நயம் மிக்க பாடல் மூலம் வர்ணிக்கின்றார்.
இதேபோல் இவர் காவியத்தில் வருகின்ற ஒரு பாடலில் படிக்கும் போதே ஓசைநயம் மிக்கு இருக்கின்ற ஒரு பாடலை எடுத்துநொக்குவோம்.
ஓசைநயம்:
உறங்கு கின்ற கும்பகன்ன
உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்றுகாணெ
ழுந்தி ராயெழுந் திராய்
கறங்கு போல விற்பிடித்த
கால தூதர் கையிலே
உறங்கு வாயு றங்குவாயி
னிக்கி டந்து றங்குவாய்
கும்பகர்ணனை யுத்தத்திற்கு அழைக்கும் பாடலை ஒரு தடவை உச்சரித்துப் பாருங்கள். அதன் ஓசைநயம் நன்கு புரியும்.
இவ்வாறு சுவைகள் எல்லாம் கொட்டிக்கிடக்கும் கம்பராமாயணத்தை இக்காலப்பகுதியிலும் கம்பன் கழகம் வைத்துப் பலவாறாகப் போற்றிப் பாடுகின்றார்கள். பலவாறாக ஆராய்ந்து இன்புறுகின்றார்கள்.
இக்கம்பராமாயணம் தந்த கம்பர் சற்றுத் தலைக்கனம் மிக்கவர் என்று அறியப்படுகின்றார். சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தருவாயா என்று கம்பர் அவளைக் கேட்டிருக்கின்றார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே இருக்கின்றது என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். அதை வாங்கிய கம்பர்
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே
என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு அதனை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்
...........................................................பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.
எனப்பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவி;ட்டுச் சென்றாராம். இச்சம்பவத்தின் பின் என் சஞ்சலம் விரிகிறது. ஒரு இலக்கிய கர்த்தா தமிழின் மேல் கொண்டுள்ள பற்று பணத்திற்கு விற்கப்பட்டதா? பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு கம்பரில் வைத்திருந்த எண்ணத்திற்குப் பங்கம் விழைவிக்கின்றது.
ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்
குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங்
கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் விடர்.
பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது. அப்படியானால் பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது.
ஒளவை ஒரு பாடலிலே மன்னன் அதியமானைப் புகழ்ந்து பாடும்போது மாற்றரசனை வெட்டிவெட்டி மழுங்கேறிய கத்தியையுடைய மன்னனே என்று பாடுகின்றார், அவ் அரசனின் கண்கள் தன்பிள்ளையைப் பார்த்தபோதும் சிவப்பாகவே இருந்தனவவாகப் பாடுகின்றார். அதாவது செறுவரை நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பனவே இவை போன்ற பாடலின் மூலம் போர் வெறியைத் தூண்டும் பாடலைப் பாடிப் பாடி வீர உணர்ச்சியை ஊட்டிப் பல உயிர்களைச் சூறையாடச் செய்து பரிசில்களைப் புலவர்கள் பெற்றுச் சென்ற செயலானது அப்புலவர்கள் பின் நீதிநூல்களைப் பாடியிருந்தும் அதன் பயன்தான் என்ன இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது அல்லவா! அவ்வாறே இக்காலத்திலும் தமக்கு ஒரு சலுகை, புகழ், ஆதாயம் வரும் என நம்பிப் பலர் உணர்வு மிக்க வரிகளைப் பயன்படுத்திப் பாடல்கள் பாடுவதும், கவிதைகள் வடிப்பதும் நோக்கமாக்க கொண்டிருக்கின்றார்கள்.
அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள் என ஆதாரம் காட்டக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறே இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டமாட்டாமல், புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்குப் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும்.
இனி விட்ட இடத்திற்குத் தொடருகின்றேன். உலகுக்கு நீதி சொல்லிய கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தன் பாடலைப் பேரம் பேசி; அரைவாசி பணம் கிடைத்தமையால் அரைவாசிப் பாடல் பாடிச் சென்றிருக்கும் சம்பவம்; இலக்கிய கர்த்தாக்களுக்கு எவ்வாறு உணரப்படுகின்றது. சொல்லும் செயலும் ஒன்றானால் உலகம் சொல்லும் உன் பெயர் என்னும் ஒரு வாக்கை நான் எழுதியிருந்தேன். ஏனெனில் உலகுக்கு ஒரு செய்தியை நாம் சொல்லும் முன் நாம் அதுபோல் நடக்க வேண்டும். இதனையே பரிசுத்தம் என்பார்கள். இங்கு கம்பர் செயல் என்னைக் கலங்க வைக்கின்றது. இது பற்றி அறிந்த இலக்கியவாதிகள் உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.
வணக்கம். கம்பர் காலத்தில் வித்துவச் செருக்கும் தத்துவக்காச்சலும் பல புலவர்களுக்கு இருந்ததாக அறிந்துள்ளேன். அதனால்தான் பின்வந்த காளமேகப்புலவர் சிலேடை அமைப்பில் பாடல்கள் பாடியதாகவும் அறிந்துள்ளேன். ஓளவையாரைப் பொறுத்தவரையில் 3 பேர் சங்ககாலம் தொட்டு சோழர்காலம்வரை இருந்ததாக வரலாறு கூறுகிறது. திருவள்ளுவர் காலத்தில் இருந்த ஓளவையார் திருக்குறள் வெளியீட்டுக்குச் சென்றிருக்கிறார். அக்காலத்தில் அதிகமான் அரசன் கோலோச்சிய காலம். அந்த அரசன்தான் தன் பிள்ளையை சிவந்தகண்ணுடன் பார்த்ததாகப் பாடல் இயற்றியுள்ளார். அதன் வரிகள் "செறுவரைநோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பனவே" அதாவது செறுவர் என்றால் பகைவர். பகைவரைப் பார்த்துப் பார்த்துச் சிவந்த கண்ணள் தன் குழந்தையைப் பார்க்கும் போதும் சிவந்திருந்ததே என்பது அதன் கருத்து. தங்கள் கட்டுரை மிகவும் நன்று. என்னை மதித்து தங்கள் பதிவை அனுப்பிவைத்தமைக்கு ஒரு சிறப்பு நன்றிகள். வாழ்க தமிழ்.பணிவுடன் கங்கைமகன்.
பதிலளிநீக்குஅந்தக் காலத்து பாடல்களைப் படித்து இன்புற்ற பின்னர் இக்காலத்திலும் கவிதை என்று வசனத்தை பிரித்துப் போட்டு மக்களை மயக்குகிறார்கள் பலர். அவர்கள் கவிதைகளைப் பார்க்கும்போது " கான மயிலாட " என்ற பாடல்தான் மனதிற்குள் தோன்றுகின்றது.
பதிலளிநீக்குநல்ல ஆக்கமென்று
பதிலளிநீக்குசொல்கிறேன் என் வாழ்த்தை.
பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சொல்லும் செயலும் ஒன்றானால் உலகம் சொல்லும் உன் பெயர் /
பதிலளிநீக்குஅருமையான கமப்ரின் பாடலகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அனைவருக்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்குகம்பர் சுவாரசியமான பதிவு
பதிலளிநீக்குDrPKandaswamyPhD சொன்னது//
பதிலளிநீக்குகவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். உள்ளத்து உணர்ச்சியே கவிதை. அற்புதமான சிந்தனைக் கவிதைகள் எல்லாம் எழுதுகின்றார்கள். ஆனால், யாப்பமைதிகளுடன் எழுதப்பட்ட குறள், வெண்பா, கலிப்பா, விருத்தம் என்ற பெயர்கள் எல்லாம் தமது கவிதைகளுக்கு பெயராக வைத்துக் கொள்வதுதான் சகிக்க முடியாமல் இருக்கின்றது. யாப்புக்கள் எல்லாம் தலைகீழாக தடுமாறுகின்றது. எனப்ப இந்த ஆசை . பின்னுட்டத்துக்கு நன்றி ஐயா
தலைவாழை இலைபோட்டு எட்டுவகை காய்கறியோடு
பதிலளிநீக்குவிருந்துவைத்ததுபோல கம்பனின் பாடலகளில்
உள்ள சிறப்புகளை சொல்லிச் சென்ற விதம் அருமை
"ஓசைபெற்றுயர் பாற்கடல் உற்றொரு..." என்கிற கம்பனின்
அவையடக்கப் பாடல்தான் அவையடக்கப் பாடலிலேயே
சிறந்தது என நான் பேசுகின்ற கூட்டங்களில்
அதிகமாக குறிப்பிட்டுச் சொல்வேன்
அத்தகைய கம்பனிடம் வித்தியா கர்வம் இருக்க
வாய்ப்பு இருக்குமா என்கின்ற சந்தேகம் மட்டும்
எப்போதும் எனக்குண்டு
அருமையான தரமான மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இது போன்ற சிந்தனைக்கு விருந்து வைக்கும் பதிவுகளை வரவேற்கிறேன் கௌரி. தமிழையும் தமிழ்க்குடியின் ஆதிச்சுவடுகள் தேடி நான் உணர்வுபூர்வமாக பயணிப்பதில்லை. அது ஒரு விஞ்ஞானியின் மெய்ஞானப் பயணமாகவே இருக்கிறது. முன்பிருந்து மூத்த தமிழ்க்குடியின் பெருமைகள் கசடற என்னுள் புகுவதற்கு இந்த வகையான தேடல்கள் உறுதுணை புரிகின்றன என்று நம்புகிறேன். இனி தங்களின் கேள்விக்கு வருவோம்,
பதிலளிநீக்குமூன்று ஔவை இருந்தனர் என்பதிலேயே எனக்கு சம்மதமில்லை. ஔவையின் வரலாற்றில் நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியமோ, காலம் கடக்கும் வித்தையோ ஏதோ ஒன்று தெரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் உண்டு. அதேபோல கம்பர் பற்றிய கருத்துகளிலும் நிறைய முரண்கள் தோன்றுகின்றன. 'கூழுக்கு பாடி குடி கெடுத்தாளே பாவி' என்பதற்கும் 'பெண்ணாவாள் அம்பொற் சிலம்பி' என்ற வார்த்தைகள் தரும் உண்மையான விளக்கம் பற்றியும் எனக்கு சந்தேகம் உண்டு. (கூழுக்காக ஒரு தாசிப் பெண்ணை புகழ்வாரா மூதுரை பற்றி எழுதிய ஔவை, அதுவும் களவியல் ஒழுக்கம் பற்றி எழுதப்பட்ட காலத்தில்...)
// ஒளவை ஒரு பாடலிலே மன்னனைப் புகழ்ந்து பாடும்போது மாற்றரசனை வெட்டிவெட்டி மழுங்கேறிய கத்தியையுடைய மன்னனே என்று பாடுகின்றார்// இது போர் வெறியை தூண்டுவதில்லை. தரமறிந்துதான் ஒருவனை எதிரியாக நினைப்பார்கள். இவனெல்லாம் உன் எதிரியா என்று ஆட்டத்தை கலைத்துவிடும் முயற்சியாகவும் இருக்கலாமே.
பாடிப்பரிசில் பெறுவது புலவர்களுக்கும் புரவலர்களுக்கும் உண்டான நியதி. வாழ்த்துக்கள் வாழவைக்கும் என்று நம்பப்பட்ட காலம். பொய்யுரைத்த புலவர்கள் காலவெள்ளத்தில் அறியப்படாமல் போனதை சரித்திரம் சொல்கிறது.
எனவே என்னைப் பொறுத்தவரை, எத்தனையோ கருத்துக்களை தன்னுள் பொதிந்திருக்கும் பழந்தமிழரின் பெருமை பாடும் இலக்கியங்கள் சொல்லும் செய்திகளை கடைபிடிக்க முயற்சிக்கலாம் , தற்காலத்திற்கு ஏற்ப புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். அதை எழுதியவரின் வாழ்க்கை பற்றி ஆராய்வது சரி முடிவைத் தராது என்று தோன்றுகிறது.
சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் என்பது நிருபிக்கப்பட்ட மனோதத்துவம் ஆகும். நாமும் அப்படியே கொள்வோமே.
தலை வாழை இல்லை போட்டு
பதிலளிநீக்குஅறுசுவை விருந்து படைத்தது போல
உள்ளது உங்கள் படைப்பு.. விருந்துண்ட
மகிழ்வில் கிறங்கி இருப்பது போல
உணர்கிறேன். ஆஹா... அற்புதமான பதிவு.
இலக்கிய வ்ருந்துக்கு நன்றி.
THANJAI AMMAPETTAI BAALU - FROM KINGDOM OF BAHRAIN.