• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 12 செப்டம்பர், 2012

    பாதணியை மதிப்பதா? மிதிப்பதா?


            
           பாதணி என்ன கேவலமா? – அதை
           வெளியே ஒதுக்குவதென்ன தர்மமா?
           காலணி திருத்தும் மனிதனையும்
           கேவலமாய் எண்ணல் வேதமா?
           அர்த்தம் புரிந்தும் புரியாதுலகில் வாழ்கின்றோம்
           அதன் பயனை மட்டும் பெறுகின்றோம்
           வேடிக்கை உலகதனில் மனிதன் 
           விவஸ்தையற்று வாழுகின்றான்
           விளக்கம் இன்றிய பண்பாடு பேணுகிறான்
           சிந்தனை புரியும் மனிதனையும்
           நிந்தனை செய்துகேலி பண்ணுகிறான்.

    காலணி என்றும் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் பாதணி பற்றிப் பேசப்படுவதே இவ் ஆக்கம். எமது பாதங்கள் எமது உடலைத் தாங்கி நின்று நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. அத்தனை தசை நார்களும் பாதங்களில் படிந்திருக்கின்றன. மனிதனின் ஆதாரசக்தி பாதங்களில் அமைந்திருக்கின்றது. மனிதனின் இரண்டு பாதங்களும் இரண்டு வைத்தியர்கள் போல் அமைந்திருக்கின்றன. பாதங்கள் இன்றி மனிதன் நிற்க முடியாது நடக்க முடியாது போகின்றான். இந்தப் பாதங்கள் நோய் நொடியின்றி வாழவும், குளிர்  சூட்டிலிருந்து எமது பாதங்களைக் காக்கவும், அசுத்தங்கள் அதை எட்டாமல் பேணவும் பாதுகாப்புக்காக அணிவதே பா....தணி என்பதை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கின்ற பாதணியை மதிப்பதா? மிதிப்பதா? 
                 
            கொதிக்கும் வெயிலில் நாம் நடக்க வெப்பத்தைத் தானேற்று சூட்டிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பூச்சி புழுக்கள் எமைத் தீண்டாது தடுக்கின்றது. சேற்றிலே நாம் நடக்க சேற்றைத் தான் பூசி எமது பாதங்களைத் துப்பரவாக வைத்திருக்கின்றது. நோய்க்கிருமிகள் எம்மை வந்தடையாதிருக்க பாதங்களைப் பாதுகாத்து உடலைப் பேணுகின்றது. இவ்வாறு வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை  எமது உடலும் வீட்டின் உள்புறமும் சுத்தமாய் இருக்க  வெளியே கழட்டி வத்துவிட்டு வீட்டினுள் நுழைகின்றோம். இவ்வாறு எமக்காகச் சேவை புரிகின்ற பாதணியைக் கேவலமாகக் கருதும் பழக்கம் மனித இனத்திடம் இருக்கின்றது. தமக்குதவுவாரை ஏறெடுத்தும் நோக்காத மனிதர் எம்மோடே பவனி வரும் பாதணியை மாத்திரம் எங்கே கண்டு கொள்ளப் போகின்றார். 
    பாதணி பாதுகாப்புக் கவசமே தவிர மரியாதையற்ற பொருள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே. இருந்தும் கோயிலின் வெளியே கழட்டி வைப்பது சுத்தம் கருதியே என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆலயத்தினுள் பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப்பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. கடவுளுக்கு மரியாதை கொடுப்பதற்காக கழட்டுவதாகத் தவறான எண்ணமும் நம் மத்தியில் இருக்கின்றது. 
           
                                இதைவிட பூப்புனிதநீராட்டுவிழா என்பது ஒரு மதச்சடங்கல்ல. பூப்படைந்த பெண்ணில் பிடித்திருப்பதாகக் கருதும் துடக்கு நீங்க வேண்டும் என்ற கருத்தில் இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பெண் உண்ட பொருள்கள் எல்லாவற்றையும் ஆலத்தி மூலம் கழித்துவிடுவதான சம்பிரதாயம் எம்மத்தியில் இருக்கின்றது. எந்தவிதமான மத சம்பந்தமான சடங்குகளும் இங்கு இல்லை. புதிய புதிய முறைகள் அவரவர் பண வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எமது பெண் வயதுக்கு வந்துவிட்டாள். ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களே உங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். என்பதை நாள் குறித்து உறவினர் நண்பர்களை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. ஆனால், இங்கு என்ன பாதணி சமாச்சாரம் வருகின்றது என்று எண்ணுகின்றீர்களா? 
            அழகழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம். அதனுள் அழகழகான பாதணிகள் அணிந்து மண்டபத்தில் பெண்கள் வலம் வருவார்கள். ஆடைகளுக்குக் கொடுக்கும் அவதானத்தை பாதணிகளுக்கும் கொடுப்பார்கள். இம்மண்டபத்தில் விளக்குகள், ஆலத்தித்தட்டு பூத்தட்டு ஏந்திவரும் பெண்கள் உட்படஅழகுக்காலணியில் வரிசையாக வருவார்கள். விளக்குகளுடன் கூடவே வரும் காலணியை  மேடை வந்தவுடன் கழட்டிவிட்டுப் போகும்படி பணிக்கப்படும். ஆனால் பருவமடைந்த பெண்ணோ பாதணியுடனே ஏறிக் காட்சியளிப்பார். ஆலத்தி எடுக்கும் பெண்கள் காலணியைக் கழட்டிவிட்டே ஆலத்தி எடுக்க வேண்டும். மேடையிலோ எந்தவித கும்பங்களோ வைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கும்பங்களை பாதணியுடனேயே தரிசித்து திருநீறு குங்குமம் இட்டு வருவார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கிவரும் பெண்பிள்ளைகள் அணிந்திருப்பார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கி வரும் பெண்பிள்ளைகள் பாதணி அணிந்திருத்தல் என்ன நியாயம். தலையைப்பிய்க்க வேண்டியிருக்கின்றதே. புரியவில்லை, புரியவில்லை. புரியாமல்த்தானோ எல்லாம் நடைபெறுகின்றது. 
                 
                                     மேடையை அலங்கரிப்பவர்கள் பாதணி அணிந்த பாதங்களுடனேயே மேடை அலங்காரங்கள் செய்வார்கள், ஆலத்தி எடுப்பவர்கள் பாதணிகளைக்; கழட்டி வருகின்ற போது அலங்காரஞ் செய்தவர்கள்  விட்டுச் செல்லும் அசுத்தங்களை பாதங்களில் ஏற்றுக்கொள்ளவேண்டும். பாதணிகள் பாதுகாத்து வந்த பாதங்கள் பழுதடைய இங்கு இடம் அளிக்கப்படுகின்றது. ஏனென்று கேட்டால் அது அப்படித்தான் என்னும் பதிலே விளக்கமாகப்படுகின்றது. காலம் காலமாக வரும் நடைமுறை என்னும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இது வடிவேல் பாசையில் சின்னப்பிள்ளைத்தனமாகவேபடுகின்றது. காலம் காலமாக வந்த நடைமுறைகளா இப்போது பூப்புனிதநீராட்டுவிழாக்களில் நடைபெறுகின்றன.
                   
                                      காரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது. ஆடைஅலங்காரங்கள் அழகல்ல. மனஅறியாமை நீக்கும் அழகே அழகு. தெளிவுமட்ட மனதில் சிந்தனை விரிவுபடும். நான்கு பக்கப் பார்வையில் உலகை அளக்கும் ஆற்றல் புலப்படும். அது அப்படித்தான் எனில் அது எப்படி? என்று அறியும் பக்குவம் பெற்று மனிதன் என்ற அந்தஸ்திற்கு உயிர் பெற்ற உடல் மாக்கள் என்ற இடத்தில் இருந்து மக்கள் என்ற ஸ்தானத்திற்கு உயரும். காரணம் கேட்பவன் மடையன் என்றால், இவ்வுலகு கல் மண்ணில் இருந்து நாடுகள் என்ற அந்தஸ்திற்கு மாற்றம் பெற்றிருக்க மாட்டாது.   



    5 கருத்துகள்:

    1. காலணி பற்றிய கவிதையும் கட்டுரையும் சிந்திக்க வைக்கிறது.

      பதிலளிநீக்கு
    2. தன் கால் அழகாக இருக்க வேண்டும்... மற்றவர்களுக்கு பாதிக்குமே என்று எண்ணாத சுயநலவாதிகள்... செய்வது எல்லாம் சரியே என்று நினைக்கும் 'அறிவாளி' கள்...

      நல்ல விளக்கங்கள்... கருத்துக்கள்... நன்றி...

      பதிலளிநீக்கு
    3. காரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது.

      சிந்திக்கவேண்டிய கருத்துகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

      பதிலளிநீக்கு
    4. பாதணி பற்றியும் அதன் பயபாடுகள் பற்றியும், அவை எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பது ப்ற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

      பாதணி அல்லது காலணி போல ஒருவருக்கு செருப்பாகத் தேய்ந்து உழைத்து உதவினாலும், அந்த அன்பையும் பிரியத்தையும் உணராமல், தன் காரியம் முடிந்ததும் காலணி அல்லது பாதணி போன்ற கழட்டி எறிந்து விடுபவர்களும் இருக்கிறார்கள் ! ;(

      கவிதை நல்லாவே எழுதியிருக்கீங்க.

      காரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும் தான்.

      பகிர்வுக்கு பாராட்டூக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

      [நேற்றே கருத்தளிக்க முயற்சித்தும் கமெண்ட் பாக்ஸ் ஏனோ நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. மின்னஞ்சல்களுக்கு நன்றிகள்]

      பதிலளிநீக்கு
    5. பாதணி பற்றிய விவரம் நன்று.
      பணி தொடர நல்வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...