உலகம் விஞ்ஞானத்தின் ஏணியில் ஏறி செவ்வாய்க்கிரகத்தைத் தொட எத்தனித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்களும் அதற்காக துணிந்து விட்டார்கள். நாம் இன்னும் பழைமையைக் கட்டிக்கொண்டு தள்ளாட முடியுமா? இலக்கியங்களோ ஊடகத்துறைகளோ உலக வளர்ச்சிக்கு ஒப்ப போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்காவிட்டால் அவை புதை குழியில் தள்ளப்பட்டுவிடும். Harry Potter, Der Herr der Ring போன்ற கற்பனைத் திரைப்படங்களை உருவாக்கிய அமெரிக்கா போன்ற மேல் உலகநாடுகள், இவ்வாறான திரைப்படங்களை உருவாக்குவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நாம் மட்டும் ஏன் பழங்கலைகளை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த திரைப்படத்துறைக்கு தித்திப்பாய் தலைகாட்டியது ஐ என்னும் திரைப்படம்.
வேணு ரவிச்சந்திரன் அவர்களின் துணிவான தயாரிப்பில், சுபா அவர்களின் எழுத்தாற்றலில், சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ஐ என்ற திரைப்படத்தில் லீ என்கின்ற லிங்கேசனாகிய நடிகர் விக்ரம் தன் உழைப்பைப் பிழிந்து எம் கண்களுக்கு விரிந்து படைத்திருக்கின்றார். இயல்பாகவே ஒரு திரைப்படம் தன் நடிப்பில் உருவாகப் போவதற்கு கையெழுதிட்டுவிட்டால் நடிகர் விக்ரம் தன்னை அக்கதாபாத்திரமாகவே மாற்றும் முனைப்பில் ஈடுபட்டுவிடுவார். தன் உழைப்பை முற்றுமுழுதுமாக அக்கதாபாத்திரத்திற்கு தந்திடுவார். அதுவும் நடிகர் விக்ரமின் ஐம்பதாவது திரைப்படம் என்றால் கேட்கவா வேண்டும். இரண்டு வருடங்கள் இப்படத்திற்காகத் தன் உடல் அமைப்பையே மாற்றியிருக்கின்றார். நடிகர் விக்ரமுக்கு ஒரு சபாஷ்.
ஒரு திரைப்படத்தின் இரசiனையைத் தூண்டும் முக்கிய அம்சம் இசை. ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது ஒரு பிளஸ் பொயின்ட் ஆக அமைகின்றது. பாடலாசிரியர்கள் கபிலன், மதன்கார்க்கி இருவரின் வரிகளுக்கும் தன் இசை மூலம் உயிர் கொடுத்திருக்கின்றார். சிற்சில இடங்களில்; இவரின் இசையே இவ்விடங்களைத் திரிலாகக் காட்டுகின்றது.
சங்கர் தன் இயக்கத்தின் மூலம் நடிகர்களை அக்கதாபாத்திரங்களாக நடமாடவிட்டிருக்கின்றார். சந்தானம் தனது வழமையான நகைச்சுவையில் தன்னை வெளிக்காட்டியுள்ளார்.
இத்திரைப்படம் தற்போது அநேகமாக எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்றே கருதுகின்றேன். ஏனென்றால் நூறு கோடி செலவில் உருவாகி ஐம்பது நாட்களில் இருநூற்று இருபத்தைந்து கோடி வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது என்றால் கேட்கவா வேண்டும். ஒரு மனிதனின் மன வக்கிரம் அவனை எவ்வாறெல்லாம் கொடூரமான செயல்களைச் செய்யத் தூண்டும் என்பதையே இத்திரைப்படத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது. ஐ என்பது பொருத்தமில்லாத தலைப்பாகவே எனக்குப்படுகின்றது. காதலை முதன்மைப்படுத்த எழுந்த கதையானால் அது வேறுவிதமாக அமைந்திருக்கும். தன்னை வீழ்த்தி தன்னை மீறி ஒருவன் உயர்ந்து கொண்டு போகும் போது ஒருவனுக்கு ஏற்படுகின்ற பொறாமை உணர்வை ஒரு கும்பலுடன் சேர்ந்து அழிக்க நினைப்பதும், கூடவே இருந்து ஒரு பெண்ணை அடைய நினைக்கும் ஒருவன் ஏமாறும் போது ஏற்படும் பொறாமை உணர்வும், ஒரு வலிமையுள்ளவனை வலியிழக்கச் செய்யும் தந்திர உத்திகளே இத்திரைப்படமாக விரிந்துள்ளது.
பல ஆங்கிலத் திரைப்படங்களின் கலவை போல் ஒவ்வொரு ஒப்பனைகளும் அமைந்திருக்கின்றன். Hunch back, The Fly, Schönste und das Biest போன்ற திரைப்பட ஒப்பனைகள் இதில் காணப்படுகின்றன.
Schönste und das Biest
நன்றி இணையம்
கதாநாயகியாக நடிக்கின்ற ஏமி ஜாக்சன் நடிப்பில் உயிரோட்டத்தை என்னால் காணமுடியாது போகின்றது. என்னவோ தெரியவில்லை எம்மவர்களுக்கு சொந்தநாட்டில் இருக்கும் அழகிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இயல்பாகத் தமிழ் பெண்களுக்கேயுரிய நாணம் என்னும் உணர்வை ஏமி ஜாக்சனால் கொண்டுவரமுடியவில்லை. தமிழ்நாட்டில் அழகான தமிழ் நடிகைகளை சங்கரால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இதன் மூலம் திரைப்படத்தின் உண்மைத் தன்மை கெட்டுவிடுகின்றது. இதனை ஏனோ எமது தமிழ் இயக்குனர்கள் புரிந்து கொள்வதில்லை. ஏமி ஜாக்சன் நடித்த ஒரு வெளிநாட்டுக்காரியை எப்படி தமிழ்க் குடும்பப் பெண்ணாக சித்தரிக்கமுடியும். மதராசுபட்டினம் என்னும் திரைப்படத்தில் ஏமி ஜாக்சன் நடித்தது சாலச்சிறந்தது. ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஏனெனில், கதைக்கருவுக்கு ஒத்துப் போகின்றது. ஆனால், இத்திரைப்படத்திற்கு கதாநாயகித் தேர்வில் சங்கர் தோற்றுவிடுகிறார். கதைக் கருவுக்கேற்ப கதாநாயகி ஒரு தமிழ்க்குடும்பப் பெண்ணே. இதற்கு எங்கேயோ இருக்கும் ஒரு ஐரோப்பியப் பெண்ணை இதில் நடிக்க வைப்பதில் சங்கர் என்ன பெருமையைப் பெறுகின்றார் என்பது எனக்குப் புரியவில்லை. மொழி என்பதும் இனம் என்பது எமது அடையாளம். இதனை ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஒரு பொய்மையை மெய்மையாகக் காட்ட ஐரோப்பியர்கள் விரும்புவதில்லை. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தும் ஜேர்மனியர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. ஏனென்றால், மொழி ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளவே பயன்படுகிறது. இதற்கு எதற்கு வலுக்கட்டாயமாக வேற்று ஒரு மொழியைப் பயன்படுத்த வேண்டும். இதுபோலவே தான் நடிகைகளும் புரியாத மொழியை கலாச்சாரத்தை ஒரு நடிகைக்கு கொடுப்பதனால், அதன் உண்மைத் தன்மையைக் கொண்டுவர முடியாது. ஒப்பனையிலும் இவர் காப்பியடித்தாகவே படுகிறது. ஆனால், ஒப்பனைக் கலைஞர்கள் தமது பணியைச் சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். இவ்வாறான கலைஞர்கள் புதிய வடிவ அமைப்பை ஒப்பனை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, காட்சியமைப்புக்கள், கதை, நடிப்பு, இசை அனைத்தும் என்னைக் கவர்ந்துள்ள வேளை, சிற்சில தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையும் எனக்கு உண்டு. ஏனென்றால், தமிழ் திரையுலகு முன்னிலைக்கு வருவதற்கு ஒவ்வொரு தமிழனும் விரும்புவான். அதன் கடினமும் புரிந்திருப்பான். வேற்று மொழித் திரைப்படங்களைப் பார்க்கும் பொது, எப்போது எம்மொழித் திரைப்படங்களை இப்படி நாம் பார்ப்போம் என்று அங்கலாய்ப்போம். அதனால், அதன் நெளிவு, சுழிவுகளை அகலக்கண் கொண்டு பார்த்து தீர்ப்பளிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உண்டு.
நன்றி சகோதரியாரே
பதிலளிநீக்குநல்ல விமர்சனம்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களின் பார்வையில் விமர்சனம் நன்று படம் பார்த்து விட்டேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்--