• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 16 ஜூன், 2011

    கல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா?


    கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அகலிகை படலம் 25 பாடல்களில் கம்பரால் பாடப்பட்டது. அகலிகைமேல் ஆசை கொண்டு அவளை அநுபவிக்க விரும்பிய இந்திரன், அகலிகை கணவன் கௌதம முனிவர் காலைக்கடன் முடிக்க வெளியில் சென்ற நேரம் பார்த்து கௌதம முனிவர் போல் உருமாறி அகலிகை வீட்டினுள் நுழைந்தவிடுகின்றான். தன் இச்சையைத் தீர்க்க அகலிகையை அணைக்கின்றான். வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம் தருகின்றாள். ஞான திருஷ்டியினால், நிலை உணர்ந்த கௌதமர் வீடு நோக்கி வரப் பூனையாக மாறிய இந்திரன் ஓடிமறைகின்றான். கௌதமரும் இந்திரனைச் சபித்து அகலிகை கல்லாக மாறச் சாபமிடுகின்றார். பிழை பொறுத்தல் பெரியோர் கடனே என வேண்டிக்கேட்ட அகலிகைக்கு ''இராமன் காற்துகள் பட்டு நீ மீண்டும் பெண்ணாகக் கடவது'' என சாபவிமோசனம் கொடுக்கின்றார். இதில் கம்பர் தன் வரிகளால் உணர்த்திய வரிகள் மேற்கொள் குறியிடப்பட்டு இக்கவிதையில் துணையாய் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு கௌதமர் செய்தது சரியோ தவறோ என ஆராயப் புகுந்தமை இக்கவிதையாய் விருந்தாகிறது.


    நேரே காணல் காட்சிப் பிரமாணம்
    தெரிந்தவை கொண்டு தெரியாதவை 
    தெளிந்தே கூறுதல் அநுமானப்பிரமாணம்
    உயர்ந்தோர் கருத்தை ஏற்று
    ஒத்துக்கொள்ளல் ஆகமப்பிரமாணம்

    அநுமானப்பிரமாணம் அணைத்தே
    அழகின் தேவதைஅக லிகைவாழ்வில்
    அடைந்த நிலைமை ஆராயப்புகுந்தேன்.

    இராமாயணத்தில் இருபத்தெட்டுப் பாடலில்
    இணைந்துவந்த அகலிகைப் படலம்
    இதயத்தி லுறுத்திய இன்னலை
    இயம்ப விழையுமிக் கவிதை

    இந்திரன் ஓர் தேவன்
    இதயம்நிறை காமக் கள்வன்
    தந்திரமாய் அகலிகை வாழ்வை
    கல்லாகச் செய்தகயவ னென்பாருண்டு
    கயவன் இந்திரனோ கௌதமனோ!
    கலங்கு கிறதென்கவி யுள்ளம்

    கவின்மிகு அழகி அகலிகை
    காதல் கணவன் கௌதமன்
    கண்மூடி யிட்ட சாபத்தால்
    கடத்தினாள் கல்லாய்க் காலத்தை
    விதியென்று விட்டிட முடியுமா?
    சதியென்று சாடிவிட்டால் போதுமா?
    மதியிழந்த முனிவன் முனிவு
    கதியிழக்கக் காரணம் ஆகியது

    ஞானப் பார்வை கொண்டவராம்
    காலைக்கடன் முடிக்கச் சென்றாராம் - இந்திரன்
    வேளையுணர்ந்து நுழைந்த நிலை
    வேவு காணமுடியா ஞானமென்ன பெற்றார்?

    இந்திரன் இந்திரனாய் வந்திருந்தால்
    வந்திருப்பான் யாரென் றுணர்ந்து
    வஞ்சிக்கப் பட்டிடாள் வஞ்சியவள்.
    வந்தது இந்திரனாயன்று கணவனாயல்லவா!

    இம்மியளவு மிதையுணரா கௌதமன்
    இட்ட சாபமது பலிக்கலாமோ!
    முனிவையடக்க முடியா முனிவர்
    பெண்ணை அடக்கி யாண்டாரோ!

    ''எல்லையில் நாணமெய்தி யாவர்க்கும் நகைவந்தெய்த
    புல்லிய பழியினோடும் புரந்தரன் போய்பின்றை
    மெல்லியலாளை நோக்கி ' விலைமகள் அனையநீயும்
    கல்லியல் ஆதி' என்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்''

    விலைமகளென வாய் கூசாது விதந்துரைத்தல்
    பொறுத்திருக்க மாட்டார் உடலால் பிழைத்தார்.


    உடலால் கற்பிழந்தாள்
    உணர்வாள் கற்பிழந்தாளன்று
    பஞ்சகன்னியர் வரிசையில்
    நின்று நிலைப்பவள் அகலிகை
    நெஞ்சம் உணராது சாபமிட்ட
    வஞ்சகன் கௌதமன் குற்றமே!


    ''புக்கு, அவளோடும், காமப்புதுமணமதுவின் தேறல்
    ஓக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும்,
    தக்கது அன்று' என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.''

    அணைந்தபின் உணர்ந்தனள் 
    உணர்ந்தபின் ஓராளென
    குற்றமுணர்த்திய அகலிகையுள்ளம் 
    உணராநிலை யென்னென்பேன்
    உணர்வன்றி உறுதியில்லை
    உறுதியாய் உணர்ந்திருந்தாள் 
    உதறித் தள்ளியிருப்பாள்.
    உண்மைக் கணவனேயாகில்
    விபரீதமாகிடும் எனத்
    தாழ்ந்ததன் தவறென்ன
    மனதால் தயங்கி
    முனிவர் வருகைக்காய்
    தாமதித்த அகலிகை குற்றவாளியா?

    முனிவ ரென்றால், ஒறுத்தல் குற்றம்
    முனிவரன்றன்றி முனிவர் காப்பரென
    முடிவுகொண்ட அகலிகை பாவியானாள்
    பழி சுமந்தாள் கல்லாய் சமைந்தாள்


    பாதிப்பும் பெண்ணுக்கே 
    பழியும் பெண்ணுக்கே
    பக்கத்துணையே நம்பா
    துணையும் ஒரு துணையா?
    பாவி அகலிகையா?
    பழி தந்து தப்பிய இந்திரனா?
    சாபம் தந்த கௌதமனா?


                           

               

    6 கருத்துகள்:

    1. இங்கு கருவாய் உருவெடுத்திருப்பது இந்திரனின் காம இச்சையே. தேவனாய் இருந்தும் காமனால் ஆட்கொள்ளப்பட்டமையால், காமத்தை வெல்ல முடியாத தேவனே சாபத்திற்குரியவன்.

      பதிலளிநீக்கு
    2. நல்ல சிந்தனை வாழ்த்துக்கள். . .

      பதிலளிநீக்கு
    3. ஆனால், தேவன் சாபம் பெறவில்லையே. சபிக்கத்தானே பட்டான். தீர்ப்பைச் சரியான முறையில் கொடுக்காதவர் செயலும் குற்றம்தானே

      பதிலளிநீக்கு
    4. எப்போதும் தங்கள் வனப்பு பதிவு
      படித்து திரும்பிவிடுவேன்
      இன்றுதான் தங்கள் கவிதைச் சுரங்கத்தினுள்
      நுழைந்தேன் வியந்தும் போனேன்
      அதிர்ந்தும் போனேன் மனம் மிக மகிழ்ந்தும் போனேன்
      இத்தனை நாள் ஆங்கிலத் தலைப்பில்
      இந்த இலக்கியப் பெட்டகம் இருப்பதால்
      இதுவும் அழகு சார்ந்த பதிவாக இருக்கும் என
      எண்ணி பாராது இருந்தது எத்தனைதவறு
      என உண்ர்ந்தேன்
      நானும் அகலிகை குறித்து ஒரு பதிவுக்கு
      யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தங்கள்
      பதிவினைக் கண்டேன் மிக மிக அருமை
      தொடர்ந்து தங்கள் பதிவுகள் அனைத்தையும் இன்று
      படித்து விட எண்ணியுள்ளேன்
      பின் விரிவாக பதிவிடுகிறேன்
      தங்கள் மேலான வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

      பதிலளிநீக்கு
    5. சிலவிடயங்களைச் சிலர் தவிர்த்து விடுகின்றார்கள். அதனால் இலக்கியத்தில் நாட்டம் உள்ள சிலருக்காகவாவது இது புரியட்டுமே என்று என் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் இலக்கிய ஆவலுக்காய் இவை போன்ற கவிதைகளை என் பதிவில் இடுகின்றேன். கற்றது விட்டுப்போகாது. ஆவலிருந்தால் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. தொடர்ந்து கொள்ளுங்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...