“நான் பேசும் இலக்கியம்” 26 ஆவது வெற்றிமணி வெளியீடு.
ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன்(கௌசி). பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். ஆற்றல் மிக்க துணிவும் அன்பும் மிக்க தாயைப் போன்றவர். இவருடைய நாலாவது வெளியீடு இந்தப் புத்தகம். இது 25 ஆக்கங்களைக் கொண்டுள்ளது. வெற்றிமணிக்காக எழுதப்பட்ட கட்டுரைகளும் அதனுடன் சேர்ந்த வேறு 3 அழகான சிறப்பான கட்டுரைகளும் உள்ளடங்கியதாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. 128 பக்கங்களைக் கொண்ட ஒரு அழகான பொக்கிஷம் என்று இதனைக் கொள்ளலாம்.
இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை பார்க்கும் போது அங்கேயே இலக்கியம் சொட்டுகிறது. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற பாடலே நினைவுக்கு வருகின்றது. இந்த அட்டைப்படத்தை வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் வடிவமைத்திருக்கின்றார்.
படிப்பதற்குத் தெளிவான எழுத்தின் வடிவத்தைக் கொண்டுள்ளது. முன்னாள் மொழித்துறை கலாசாரப் பேராசிரியர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்றார்.
புத்தக ஆசிரியர், படைப்புக்களின் சிறப்புக்களைக் கூறிய இவர் புலம்பெயர் பெண் இலக்கியப் படைப்பாளிகளில் பெரிதும் பேசப்படுகின்ற நிரூபா, தமிழ்நதி போன்றோர் வரிசையில் இவரையும் முன்னிறுத்தி இருக்கின்றார். இதனை வெளியீடு செய்துள்ள வெற்றிமணி ஆசிரியர் எழுத்தாளரை முழுமையாகப் புரிந்து கொண்ட வகையில் தன் பதிப்புரையை வழங்கியிருக்கின்றார். எதனைக் கேட்டாலும் நிறைவுத் தன்மையோடு அள்ளிக் கொடுக்கும் தன்மை சிறந்த எழுத்தாளரில் இருக்க வேண்டும். அது திருமதி. சந்திரகௌரி சிவபாலனிடம் அதிகமாகவே உள்ளது எனவும் மற்றும் அவருடைய சிறப்பியல்புகளையும் கூறியுள்ளார். பொதுவாகவே வெற்றிமணிக்கு எழுதும் ஆக்கங்களை அவரே முதலில் படித்து சுவைத்து விட்டு பிரசுரிப்பார். அதனால், அவரே முதல் வாசகனுமாவார். அதனால், ஒவ்வொரு எழுத்தாளர் பற்றிய முழுமையான புரிந்துணர்வு அவரிடம் இருக்கின்றது. சிந்தனை சிவவிநோபன் சிங்கப் பெண் என்று இவ் ஆசிரியரை மிகப் பொருத்தமானதாகவே விளித்து வாழ்த்துரை வழங்கியிருக்கின்றார்.
இந்தப் பேசும் இலக்கியம் பன்முகத் தன்மையைக் கொண்டது. பல அறியாத விடயங்கள் சுவையாகப் படைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்தேசங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை என்று நீண்டு செல்லும் இந்த வரிசையிலே இலக்கியம் சார்ந்த படைப்பு சிறப்பாக சீர்தூக்கிப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. புதிய தலைமுறையினருக்கும் இலகுவாகப் படிக்கக் கூடிய வகையில் பழந்தமிழ் பாடல்களுக்குக் கூட இலகுதமிழில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரிகின்ற பக்கங்களில் என் இதயத்தெளிவு பதிந்திருக்கும். வார்த்தைகளின் படையலுக்குள் மூளைச் சலவை பொதிந்திருக்கும் என இந்தப் புத்தகத்தைப் பற்றி ஆசிரியர் சூக்குமமாகக் கூறியுள்ளார். இதன் பொருளை புத்தகத்தை வாங்கிப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.
வாசகர்களின் வாசிப்புத் தன்மைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் அதிக நேரம் எடுக்கக் கூடாது என்பதற்காகவும் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன். குறிப்பாகப் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு நான் அடிமை. பழைய நாகரிகங்கள், அதன் சிறப்புக்கள், வரலாறுகள், இலக்கியங்கள், அவர்கள் வாழ்ந்த அழகான வாழ்க்கை முறை, அவர்களுடைய மென்மையான மனம், வீரம், காதல், மிக சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இவ்வாறான விடயங்களைப் படிக்கும் போது அதனோடு சேர்ந்து நாங்கள் பயணித்துக் கொண்டு செல்வோம். எப்போது பெண்கள் சுதந்திரம் பெற்றார்களோ அன்றிலிருந்து மகளிர் தினம் கொண்;டாடப்பட்டது என்று பொதுவாக சொல்வார்கள். இடையில் ஏதாவது அடக்குமுறைகள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கக் கூடும். ஆனால், ஆதிகாலத்தில் பெண்கள் மிகவும் சுதந்திரமாக இருந்திருக்கின்றார்கள். அதற்கு இலக்கியமே சான்று. பொன்னியின் செல்வனில் பூங்குழலி இலங்கைவரைப் படகோட்டி வந்தாள். அந்தளவிற்கு வீரமாகவும் சுதந்திரமாகவும் இருந்திருக்கின்றார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் மிக்க துணிச்சலுடன் எதிர் கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் புத்தகங்களின் ஒவ்வொரு பாகங்களும் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை வாசிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு வாசிப்போம். இவ்வாறு சுவையையும், ஆர்வத்தையும் தூண்டக் கூடிய இலக்கியங்களை இன்றைய தலைமுறையினர் தவற விடுகின்றார்கள். இத்தன்மையை இவ்வாறான புத்தகங்கள் மீண்டும் கொண்டு வந்து அவர்களின் ஆவலைத் தூண்டக் கூடியது.
அந்தக் காலத்தில் பொதுவாக புலமைக்குள் போட்டி இருந்தது. ஆனால், அந்தப் போட்டியையும், பொறாமையையும் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் காட்டிக் கொள்ளாமல் புலமையிலேயே காட்டிக் கொள்வார்கள். இதற்கு ஒளவையும், கம்பரும் விதிவிலக்கல்ல. இதில் ஒரு அழகான சம்பவம் கூறப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழன் அவையிலே ஆஸ்தான கவியான கம்பர் வீற்றிருக்கின்றார். கம்பருக்கு அவர் புலமையிலே சிறிது செருக்கு இருக்கின்றது. அங்கு ஒளவை வருகின்றார் அவருக்கு குலோத்துங்க சோழன் அவையிலே வரவேற்பு நடக்கின்றது. இதனைப் பொறுக்காத கம்பர், நான் சொல்லுகின்ற ஒரு அடியிலே உள்ள பொருள் என்னவென்று கண்டுபிடித்து ஒரு பாடல் பாட வேண்டும் என்று சொல்லுகின்றார். அதற்கு ஒளவையும் சம்மதிக்கின்றார். ஒளவையை குறைத்து மதிப்பிடும் கம்பர்
“ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ” என்று வரி கொடுக்கின்றார். அதாவது ஒரு தண்டிலே நான்கு இலைகளைக் கொண்டுள்ள ஆரைக்கீரையை பொருளாகக் கோண்டு வரி கொடுக்கின்றார். அடீ என்பது நாகரீகமற்ற முறையில் விளிப்பதாக அமைகின்றது. உடனே ஆத்திரம் கொண்ட ஒளவையும் அடிக்கு அடாதானே பதில்.
‘எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா’
எட்டே கால் லட்சணமே என்றால், அவலட்சணமே. எமனேறும் பரியே எருமை. பெரியம்மை என்றால், மூதேவி. அவர் வாகனம் அண்டங்காக்கா. கூரையில்லாத வீடு குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் குரங்கு. ஆரையடா சொன்னாய் அடா என்றால், ஆரைக்கீரையை என்றும் யாரையடா என்று விளிப்பதாகவும் சிலேடையாக ஒளவை பாடல் அமைகின்றது. இதன்பின் ஒளவையின் சிறப்பை கம்பர் தெரிந்து கொண்டதாக அச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இச்சம்பவம் இப்புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனைப் படிக்கும் போது எனது தாத்தா எனக்குக் கூறிய
“மந்திக்கு வால் நான்கு மதகரிக்கு கோடெட்டு
மங்கைக்குத் தனமில்லை முயலுக்கு கொம்பு”
என்ற பாடலைச் சொல்லி, இது எப்படி அதாவது எப்படி மந்திக்கு வால் நான்கு என்று வரும் . இப்பாடடுக்குப் பொருள் சொல் என்று தாத்தா கேட்பார். நாம் புரியாதிருக்க அதன் விளக்கத்தை அவர் கூறினார். அப்போது எமக்குப் புரியவில்லை. இலக்கியம் படித்த பின்பே எமக்குச் சரியாகப் புரிந்தது. மந்திக்கு வால், நான்கு மதகரிக்கு கோடு 8, மங்கைக்குத் தனம், இல்லை முயலுக்கு கொம்பு. இப்படியாகபப் பாடல்களைப் பிரிக்க வேண்டும். இவ்வாறான புதிர்கள் அக்காலங்களில் பேசப்பட்டன. இவற்றை இந்நூல் ஞாபகப்படுத்துகின்றது.
இந்நூலில் சேர, சோழ, பாண்டியர், பல்லவர் காலத்துக் குறிப்பேடுகளையும், அந்நிய படையெடுப்புக்கள் அதன் தடயங்கள், தமிழிலே ஏற்பட்ட பிறமொழிக் கலப்புகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். கவிஞர் கண்ணதாசனுடைய மதிப்புமிக்க வரிகள் காணப்படுகின்றன. பழந்தமிழ் செய்யுள்கள் தற்காலத்து திரைப்படப்பாடல்களாகக் காணப்படுகின்றன “யாயும் ஞாயும் யாராகியரோ, நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் போன்ற பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன். என்னும் பாடலிலே நீ வருகின்ற வழி தன்னில் யாருன்னைக் கண்டார். உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார். உன் மலர் கூங்தல் அலைபாய அவர் என்ன சொன்னாh. உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்;” என்னும் வரிகளிலே பெண்ணில் சந்தேகக் கேள்விகளைக் கேட்பதாகப் பாடல் அமைந்திருக்கும். அதற்குக் காதலி அதற்கான காரணத்தை அழகாகக் கூறுகின்றாள். இவ்விடயம் இலக்கியப் பாடலில் இருந்தே கண்ணதாசனால் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை இங்கு கொண்டு வந்திருக்கின்றார்.
இன்றைய சில திரையிசைப்பாடல்களைக் கேட்கும் போது எங்கே சுவை போனது, எங்கே நயம் போனது, எங்கே உலகம் போய்க் கொண்டிருக்கின்றது என்னும் கவலை எம்மத்தியில் இருக்கின்றது. எவண்டி உன்னைப் பெத்தான் பெத்தான். கையிலே கிடைத்தால், செத்தான், செத்தான். அதாவது மாமனாரைப் போட்டுத் தள்ளிப்போட்டு நானும் நீயும் நன்றாக இருப்போம். இதற்கு மகள் எப்படி ஒத்துக் கொள்வார். இவ்வாறு இன்றைய பாடல்கள் காண்படுகின்றன. இது பழைய புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மிகக் கவலைப்படக்கூடிய விடயமாக இருக்கின்றது.
இலக்கியமும் அதனோடு சேர்ந்த விழிப்புணர்வும், அதனோடு சேர்ந்த இயற்கை என தனது படைப்புக்களை சிறகடித்து இப்படைப்பாளர் பறந்திருக்கின்றார். மட்டக்களப்பின் மகத்தான பாடல்களைப் பட்டியலிட்டிருக்கின்றார். தமிழுக்கு மகத்தான சேவை புரிந்தது மட்டக்களப்பு என்று சொல்லலாம். நாட்டுப்புறப்பாடல்களில் பேச்சுத் தமிழ் கொட்டும். ஆராரோ ஆரிவரோ என்னும் தாலாட்டுப் பாடலிலே மண்ணின் வாசம் வீசுவதைக் காணலாம். கிழக்கின் ஜோதி விபுலானந்த அடிகளார் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அக்காலத்துக் காதல் உணர்வுகள் அழகுணர்ச்சியோடு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தலைவி தோழிக்குத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய காதலன் தன்னை மறந்து போவதை தீம்பால் உண்பவன் கொள்கலன் வரைதல் என்று சொல்லப்படும். ஒரு பாத்திரத்தில் இருக்கும் பாலை நுகர்ந்து குடித்துவிட்டு அப்பாத்திரத்தைக் கவிட்டு வைத்துவிட்டுப் போவது போன்ற செயலை தலைவி தன் தோழிக்குக் கூறுவது போன்ற பாடல்கள் இந்நூலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்னும் பாடலின் சந்தர்ப்பம் போன்றவை இந்நூலில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான இலக்கியம் படைக்கச் சிறுவர்களையே படைப்பாளியாக்கிய வெற்றிமணிப் பத்திரிகையின் ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.
ஹைக்கூ பற்றிய புதிய கண்ணோட்டம் வைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் பற்றிப் பேசிய ஆசிரியர் வாழ்வு, இயற்கை, புதியன புகுதல் பழையன கழிதல், ஆரோக்கியமற்ற வாழ்வு, திருவள்ளுவர் வாசுகி பற்றிய விடயங்கள், பெண்கள் தினத்தில் வெளியிடப்பட்ட இந்நூலில் பெண்கள் பற்றிய விடயங்கள், தாய்மையைப் போற்றிப் பெண்களை அதிசயப் பிறவியாகவும் விளித்துள்ளார். உண்மையில் அதிசயப் பெண், ஆற்றல் வாய்ந்த சிங்கப்பெண், தன்னுடைய உள்ளக்கிடக்கை, ஆற்றல், இவற்றையெல்லாம் வெளியில் எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்னும் தமிழ் மீதுள்ள அவா, பற்று, போன்றவற்றை இச்சிறிய புத்தகமே தெளிவாகக் காட்டிவிடுகிறது. கொட்டுவதற்கு அதிகமான விடயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிறிது சிறிதாக இப்புத்தகத்தில் கொட்டியிருக்கின்றார். நிச்சயமாக திருப்தியையும், இலக்கியம் சார்ந்த ஆவலையும் தூண்டக்கூடிய அழகான ஒரு படைப்பு. இவ்வாறான படைப்புக்கள் மென்மேலும் வெளியிட வேண்டும். ஏனென்றால் மிகுந்த சுவைமிகுந்த விடயங்கள் அவருடைய உள்ளக்கிடக்கையில் நிறைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. இப்புத்தகத்திற்கு மென்மேலும் வரவேற்பை வழங்கி நான் குறிப்பிடாத பல விடயங்களை நீங்கள் சுவைக்க வேண்டும் முழுவதையும் சொல்லிவிட்டால், வாசிப்பவர்கள் ஆர்வத்திற்கு ஒரு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே சிலவற்றை மட்டும் கூறியிருக்கின்றேன். எனவே இப்புத்தகத்தை வாங்கி அவருக்கும் ஊக்குவிப்பை வழங்கி மென்மேலும் அவருடைய பல படைப்புக்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.
அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரியாரே
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமையான ஆய்வுக் கண்ணோட்டம்
பதிலளிநீக்குமகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் வருகையும் வாழ்த்தும் கிடைத்தமைக்கு மிக்க நன்றி
நீக்குமுதல் பாராட்டு : 'நான் பேசும் இலக்கியம் ' பற்றி ஆய்வுரை எழுதிய திருமதி அரிணி கண்ணன் அவர்களுக்கு . அட்டைப்படம் தொட்டு கௌசியின் எழுத்துகள் வரை அழகாக அறிமுகம் செய்திருக்கிறார்.
பதிலளிநீக்குஈழ மண்ணின் மகள் கௌசியின் எழுத்தில் தமிழ் மணம் கமழும் ; தமிழின் மனமும் தவழும். அவர் சிந்தனைத் தெளிவு மிக்க எழுத்தாளர் ; மகளிர் நாள் விழாவுக்காக அவர் வெளியிட்ட நூலை முழுதாகப் படிக்க ஆவல் . கிடைக்கும் இடம் விலை தெரிவித்தால் நலம் . அதனை எழுதி வெளியிட்ட திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர் நட்பு யான் பெற்ற பெரும் பேறே!வாழ்க பல்லாண்டு.
அன்புடன்பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
பிரான்சு
மிக்க நன்றி சார். உங்கள் பாராட்டுக்கள் எங்கள் பலம்
நீக்குமிகவும் சுவாரசியமான கட்டுரைகள். நல்ல அலசல். வாழ்த்துக்கள் கௌசி அவர்களுக்கும் ஹரிணி கண்ணன் அவர்களுக்கும்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி..தங்கள் புதிய புத்தகத்திற்கு...வாழ்த்துகள்...ஒரு அருமையான படைப்பாளியின் ,சகோதரியின் அறிமுகம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. ..தொடரட்டும் தங்கள் படைப்பு ஆக்கம்...
பதிலளிநீக்குநன்று.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் வாழ்த்துகள்.