விதியே விதியே தமிழச்சாதியை என்ன செய்யக் கருதியிருக்கிறாய்? என்று பாரதியார் கேட்டதுபோல், இன்று உலகநாடுகள் எல்லாம் விதியே விதியே உலக நாடுகளை என்ன செய்யக் கருதியிருக்கிறாய்? என்று கேட்பது போலாயிற்று. சற்று பின்னோக்கி சென்ற ஆண்டு இறுதிப் பகுதியை நினைத்துப் பார்ப்போம் ஓட்டம், ஓட்டம், ஓட்டம். விழாக்களும், பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், கூத்தும் கும்மாளமும், நாளாந்த வேலைகளும், காண்பதை எல்லாம் வாங்கி வந்து வீட்டிற் குவிப்பதும், என்று மனிதன் ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கி தலையில்(மூளைக்குள்) தட்டி அடங்கிக்கிட என்று மனிதனை அமர்த்திவிட்டாயிற்று.
என்னை நினைத்துப் பார் என்று இயற்கை அடிக்கடி சமிக்ஞை காட்டியது; புரிந்ததா? Greta Thunberg என்னும் சிறுமி நாடு நாடாய் கூச்சல் போட்டாள். Friday for Future என்னும் பதாதைகளுடன் மக்களைத் திரண்டி எங்கள் எதிர்காலத்தை நீங்கள் அழிக்கப் போகின்றீர்கள் நாங்கள் தான் போராட வேண்டும் என்று போராடினாள். ஐரோப்பிய ஒன்றியம் வருடக்கணக்கில் சூழல் மாசடைதலைத் தடுக்க கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். இந்த நிலையில் ஒரு சிறிய கண்ணுக்குத் தெரியாத 60 – 140 நானோ மீட்டர் அளவுடைய கிருமி இயற்கையை பாதுகாத்து விட்டது. மனிதனை அடக்கி விலங்குகளை, பறவைகளை, இயற்கையை சுயமாக சுதந்திரமாக திரிய விட்டிருக்கின்றது. விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. வானவெளி சுத்தமாகின்றது. தேவை கருதிய போக்குவரத்துச் சேவைகள் நடைபெறுவதனாலும், வியாபார ஸ்தாபனங்களில் விற்பனை நடைபெறாததனால் பிளாஸ்டிக் பாவனை குறைவடைந்துள்ளதனாலும், கடற்தொழில் கட்டுப்படுத்தப்பட்டதனாலும், சூழல் மாசடைதல் தவிர்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜேர்மனியில் 27.03.2020 திகதி முற்பகல் 10.00 மணி Robert Koch Institute சட்டரீதியான அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி ஜேர்மனியில் 50.871 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள், 351 பேர் இறந்துள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது. Nordrhein westfalen மாநிலத்திலேயே அதிகமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். இங்கு நோய் தொற்றுக்குள்ளானவர்கள் 11.523 பேர் எனவும் இறந்தவர்கள் 88 பேர் எனவும் தெரியவருகின்றது. அதிலும் ஹைன்ஸ்பேர்க் என்னும் வலையத்திலுள் மட்டும் 1090 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளார்கள். உலக சுகாதார அமைப்பின்படி 80 வீதமான நோய் தொற்றிகள் சாதாரணமானதாகவே காணப்படுகின்றன. Robert Koch Institute தலைவர் Herr. Lothar Wieler கூற்றுப்படி பரிசோதனை 3 விதமாக நடைபெறுகின்றன எனத் தெரிவித்துள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியவர்கள், மருத்துவ ஊழியர்கள் என்னும் முறையிலேயே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தீவிர நோய்க்கு உட்பட்டவர்கள் தவிர்த்து ஏனையோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நாடே வெறிச்சோடிக் கிடக்கின்றது. Nordrhein westfalen மாநிலம் மீட்புப் பணிக்காக 25 பில்லியன் ஒயிரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒருவருக்கு நோய் இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்கு 14 நாட்கள் தேவைப்படுகின்றன. ஜேர்மனியில் 2 மணித்தியாலத்தில் நோயைக் கண்டுபிடிப்பதற்கான உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அது ஏப்ரல் மாதத்திலேயே நடைமுறைப்படுத்துப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் ஜேர்மனிய அதிபர் Angela merkel அவர்களுக்கு Pneumokokken என்னும் தடுப்பூசி கொடுத்திருந்தார். Angela merkel அவருடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவருக்கு வழங்கப்பட்ட முதலாவது பரிசோதனை எதிர்மறையானதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அதிபர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்தே தன்னுடைய கடமைகளை மேற்கொள்ளுகின்றார்.
பாலர் பாடசாலைகள், பாடசாலைகள் 19.04.2020 வரை மூடப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான வீட்டுப்பாடங்கள் மின்னஞ்சல், இணையத்தளம் மூலம் அனுப்பப்படுகின்றன. சில இசைக் கல்லூரிகள் இணையம் மூலம் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் 20.04.2020 வரை மூடப்பட்டுள்ளன. சில பல்கலைக்கழகங்கள் Projekt மேற்கொள்ளும் மாணவர்களுக்கான திட்டங்களை இணையம் மூலம் செய்வதற்கு வழி செய்துள்ளன. சினிமா, konzert theater, ஜிம், பிசியோதெரபி, விளையாட்டுக் கழகங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உணவகங்கள், வியாபார ஸ்தாபனங்கள் போன்றன காலவரையறையின்றி மூடப்பட்டுள்னன. மருத்துவசாலைகள், தனியார் மருத்துவசாலைகள், வயோதிபர்களைப் பராமரிக்கும் நிறுவனங்கள், மளிகைச் சாமான் கடைகள், மருந்துக்கடைகள், சுகாதார சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், சில நிறுவனங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. சில நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி கடமையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். மேமாத இறுதிவரை களியாட்ட இசை, நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
திறந்த போக்குவரத்து வாகன வசதிகள் சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. ரிக்கட் பரிசீலிக்கப்பட மாட்டாது. வாகன நிறுத்துமிடங்களின் வரி வசூலிக்கப்பட மாட்டாது. ஜேர்மனியில் ஊரடங்கு உத்தரவு இல்லை. வீட்டைவிட்டுத் தனி ஒருவர் அல்லது கணவன், மனைவி என இருவர், அல்லது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வெளியில் செல்லலாம். குறைந்த பட்சம் 1.5 மீற்றர் தொலைவிலேயே ஒருவருக்கொருவர் பேச்சுப் பரிமாற்றம் இருக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனைப் பணம் 200 ஒயிரோவில் இருந்து 25,000 ஒயிரோ வரை அதிகரிக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகை கட்டாமல் விட்டால் வீட்டைவிட்டு அவர்களைக் காலி பண்ண முடியாது. வேலைக்கு வராமல் விட்டால் தகுந்த காரணம் காட்டினால், வேலையை விட்டு நீக்க முடியாது. பெற்றோரைப் பிள்ளைகள் வெளியே வராமல் பாதுகாக்க வேண்டும். பேரப்பிள்ளைகள் தாத்தா பாட்டியை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பண முதலீட்டை அரசாங்கம் இந்நோய்க்கு எதிராக வழங்கியுள்ளது. இத்தாலியைப் போன்று வைத்தியர்கள் பற்றாக்குறை இங்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், தற்போது தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.
ஜேர்மனியில் டோட்முண்ட் நகரமானது குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும். அங்கு தமிழர்களுக்குத் தேவையான ஆடை, அணிகலன்கள், உணவுப்பதார்த்தங்கள், பலசரக்குப் பொருட்கள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவ் வியாபார ஸ்தாபனங்களில் பல சரக்குச் சாமான்கள் விற்பனை செய்யப்படும் 3 கடைகள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூட வியாழக்கிழமைகளில் இந்திய இலங்கை மரக்கறிகள் வருகின்ற காரணத்தினால் வெள்ளி, சனிக்கிழமைகளில் மாத்திரமே தமிழர்கள் பொருட்கள் வாங்குவதற்குச் செல்கின்றார்கள். அவர்கள் கூட இருவர் இருவராகச் செல்ல வேண்டிய காரணத்தினால், தமிழர்களின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது. கடைகளில் கறுவா, இஞ்சி இரண்டும் அமோகமாக விற்பனையாகிறது. தமிழ் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் வருகை தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பாடசாலை பரீட்சைகள், போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இக் கொரொனா நோய்ப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 750 பில்லியன்கள் ஒயிரோக்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. சில கால்பந்தாட்ட வீரர்கள் கொரொனா நெருக்கடியைச் சமாளிக்க தங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்திருக்கின்றார்கள். ஜேர்மனியில் இந்நோயின் நிலவரம் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாதுள்ளது.
எல்லா நாட்டிலும் இதன் தாக்கம் இருக்கிறது. விரைவில் இந்தப் பேரிடரிலிருந்து விடுபட வேண்டும். நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஉண்மை. இன்று உலகமே ஒன்றாய் சேர்ந்து ஒன்றை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது
நீக்குஆய்வு நோக்கில் பதிவு செய்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குஏனைய நாட்டவரும் கருத்தில் கொள்ளலாம்
காலம் பதில் சொல்லும் - அதுவரை
ஈழத்தில் நாமும் வீட்டுக்காவல்!
ஆம் உங்கள் பதிவுகள் அதனை வெளிப்படுத்துகின்றன
பதிலளிநீக்கு