• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 3 மார்ச், 2020

  ஜெர்மனியில் முதன்முதலாக தொடர்கதை எழுதிய பெண் எழுத்தாளர்  மனைவி நல்லவளாகவும், புத்திசாலியாகவும் இருந்தால், மனைவியை முன்னேற்ற வேண்டியது கணவனின் கடமை. என்னுடைய மனைவி நல்ல கெட்டிக்காரி சொன்னவர் யார்? 

  2011 ஆம் ஆண்டு ஹம் நகரிலே பிரான்ஸ் தமிழரங்கு தமிழ் கலாசார ஒன்றிய விழாவிலே முத்தான மூன்று கலைஞர்களாக கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவரான அமரர் திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களின் கணவன் ஜோர்ஜ் அவர்களே இவ்வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் ஆவார். இலங்கையில் பருத்தித்துறையில் இருந்து 1988 இல் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் ஹம் நகரில் வாழ்ந்து வந்தது ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் இருந்து எழுதி வந்த எழுத்துக்கள் இடையில் நின்று போனது. காலம் எழுத்தாளர்களை மறந்து விடுகின்றது. மறக்கப்படுகின்றார்கள். தொடர்ந்த செயற்பாடுகளே எழுத்தாளர்களை அடுத்தவர்கள் கண்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கும். இதற்கு அத்தாட்சியானது திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களின் இழப்பு. 

  நான் அறிந்த வரையில் ஜேர்மனியில் முதன் முதலாக தமிழில் ஒரு தொடர் கதையை எழுதிய ஒரு பெண் எழுத்தாளர் என்னும் பெருமை திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களையே சாரும். ஒரு எழுத்தாளராக கலைஞராக அவர் வலம் வந்த காலப்பகுதியில் ஜேர்மனி மாத இதழ்களான திரு காசி. நாகலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட வண்ணத்துப்பூச்சி, இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பூவரசு போன்ற இதழ்களில் இவருடைய படைப்புக்கள் வெளிவந்தன. 

  இம் மாத இதழ்களில் வெளியான கதைகளை உள்ளடக்கியே கதம்ப வாசகங்கள் என்னும் ஒரு நூல் இவரால் 2004 இல் திருகோணமலையில் வெளியீடு செய்யப்பட்டு ஜேர்மனி ஹம் நகரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின் நிதங்களின் தரிசனம் என்னும் அமரர் திருமதி லூர்த்தம்மா யோசேப் அவர்களின் ஞாபகார்த்த மலர் ஒன்றை 2010 இல் வெளியீடு செய்திருந்தார். இது கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்களுடன் மேற்படி தம்பதியரினது வாழ்க்கை வரலாறு, பரம்பரைப் பெருமைகளைப் பதிவதுடன் இந்நூல் மாரீசன்கூடல் பற்றிய பிரதேச வரலாற்றினையும் ஓரளபதிவு செய்கின்றது. இவ்விரண்டாம் பாகத்தில் முழுமையாக ஒரு குடும்பத்தின் ஏழு தலைமுறைக்கான சந்ததி வரலாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

  திருமதி. புஸ்பராணி ஜோர்ஜ் என்பவர் 3 குழந்தைகளுக்குத் தாயான பின்பே பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தில் சாதாரண தொழிலாளியாக இணைந்து யாழ் கொக்குவில் கல்லூரியில் கணக்கியல் படித்து Higher National Diploma படித்து கணக்காளராகப் பதவி வகித்தார். இவரது அயராத ஊக்கமும் உழைப்பும் கணவனின் ஒத்துழைப்புமே இவரது உயர்வுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஜேர்மனியிலுள்ள ஹம் தமிழாலய உதவி நிர்வாகியும், ஆசிரியருமாகக் கடமையாற்றியதுடன் 1993 கலாசார சிதைவு என்ற நாடகத்திலும், ஐசாக் இன்பராசா அவர்களின் நாடகக் குழுவிலும் நடிக்கத் தொடங்கி ஏறக்குறைய 30 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

  கதம்பவாசகங்கள் என்னும் நூலில் 10 சிறுகதைகளும் நெடுங்கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. எழுதாத கோலங்கள், பிரியாத உறவுகள், ஓயாத பயணங்கள், முடியாத தொடர்கள், சுதிசேரா சுரங்கள், ஒலிக்காத ஓசைகள், அழியாத சுவடுகள், சுவையா இலக்குகள், புரியாத சில நொடிகள், நிழலின் நிசங்கள் ஆகிய தலைப்புகளில் இவை அமைந்துள்ளன. 

  இவருடைய கதைகளை சீர்தூக்கிப் பார்க்கும் போது இவருடைய கதைகளில் தன்னுடைய அனுபவங்களைக் கதைகளில் பதியமிட்டிருக்கின்றார். பிறந்த மண்ணுக்கும் தான் வாழ்ந்த மண்ணுக்குமிடையே பாலம் போட்டு நடந்திருக்கின்றார். கதைகளைப் படிக்கும்போது ஆர்வம் மேலீட்டால் புத்தகத்தை மூடி வைக்க முடியாத வண்ணம் எழுத்துநடை எம்மை இழுத்துக் கொண்டு செல்கின்றது. 

  “பெண்களான நீங்கள்தான் பெண்களை வாழவிடாமல் பழிச்சொற்களைச் சுமக்கக் காரணமாகிறீர்கள். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அவர்களின் வசைமொழிகளால் தான் ஒழுக்கமாய் உயர்ந்த எண்ணங்களோடு வாழும் பெண்களும் தமக்கேற்பட்ட பழி மாறப்போவதில்லை என மனம் சோர்ந்து போய் நாளாவட்டத்தில் தான் பிழை செய்யாமலே பழி பாவத்திற்கு உள்ளாகி விட்டேன். நான் எப்படி நடந்தாலும் இந்த உலகத்திற்கு என்னவென்று ஒரு மன உடைவின் உந்தலால் தன்னை மாற்றி நடத்தை கெட்டவளாக ஆகிவிடுகிறாள்” என பெண்களே பெண்களுக்கு விரோதிகள் என்பதைத் தன் எழுத்தில் அடையாளங் காட்டுகின்றார். இவ்வாறு பல இடங்களில் நீதிபதியாய் நியாயம் சொல்லுகின்ற தன்மையைக் காணக் கூடியதாகவுள்ளது.  

  தொடுவானம் ஆசிரியர் அ.பி.ஜெயசேகரம் அவர்கள் மனிதவாழ்வில் புதைந்திருக்கும் பல்கூறுகளில் வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடை காண முயல்பவர் எழுத்தாளரே என்றும் இந்நிலையில் ஈழத்தமிழரின் சமகால வாழ்வு அவர்களின் புலப்பெயர்வு, பொருளாதார தடை, உறவுகளின் பிரிவு, போன்ற புறச்சூழல்களை முன்னிறுத்தி பல்வேறு வினாக்களைத் தனக்குள்ளே எழுப்பி அவற்றிற்கான விடைதேடும் பாங்கில் தன்னுடைய கதைகளை புஸ்பராணி நகர்த்திச் செல்கின்றார் என்கிறார்.

  பூவரசு ஆசிரியர்  இந்துமகேஷ் அவர்கள் ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகையில் அன்னிய மண்ணின் வாழ்க்கைச் சூழல், குடும்பப் பொறுப்பு, தாயக மண்ணில் உறவுகளின் பிரிவுத்துயர், என்று விரைந்தோடும் காலகட்டத்தில் நேத்திற்காய் மல்லுக்கட்டி கலை, இலக்கியம் என்று கால்பதிக்க முயலும் பெண்களின் வரிசையில் புஷ்பராணி ஜோர்ஜ் கவன ஈர்ப்புப் பெறுகிறார் என்கிறார்.

  நூலகவியலாளர் செல்வராஜா அவர்கள் ஐ.பி.சி வானொலியில் இவர் பற்றிக் கூறும்போது தனது உணர்வுகளை சம்பவக் கோர்ப்பாக்கிக் கொட்டத் துடிக்கும் வேகம் தெரிகிறது. இவருடைய ஆக்க இலக்கியம் மேலும் மேலும் தொடரவேண்டும் அதற்கு தனது எழுத்துக்களைப் மேலும் மேலும் பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும். இன்று ஈழத்து எழுத்துத் துறையில் நன்கு பேசப்படும் பிற எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து அவர்களின் எழுத்துக்களின் பாணிகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சம்பவங்களை எழுத்தில் வடிப்பதில் பல நுணுக்கங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிய வேண்டும். உரையாடல்களில் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் பாணி வரவேற்கத்தக்கது. நீண்ட உரையாடல்கள் வாசகரைக் கவர்வது குறைவு. இத்தகைய அடிப்படை நுட்பங்களை மனதில் பதித்து மேலும் மேலும் வளர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இன்று எழுத்தாளர் புஸ்பராணி நம்மத்தியில் இல்லையானாலும் இவ் அறிவுறுத்தல்கள் வளருகின்ற எழுத்தாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று கருதுகின்றேன். 

  இவர் நீண்டு வாழ்ந்திருந்தால் நிலையான பல படைப்புக்களை இவ்வுலகிற்குத் தந்திருக்கலாம். காலம் கரைத்துவிட்ட படைப்பாளியாக இவர் கருதப்படாது வாழ்ந்திருக்கலாம். இவரால் உலகுக்கு அளிக்கப்பட்ட கதம்பவாசகம் ஒன்றேயானாலும் அது பல நிதர்சனங்களின் தரிசனமாகவுள்ளது.  உதவி: கதம்பவாசகங்கள்
        நூலகவியலாளர் செல்வராஜா 
        திரு. ஜோர்ஜ் 

  இக்கட்டுரை வெற்றிமணி பங்குனி இதழில் வெளியானது. 

  12 கருத்துகள்:

  1. மிக அருமையான மதிப்பீடு. அவரது எழுத்துக்களுக்கு அணியாரம். அறிமுகத்துக்கு நன்றி. வாழ்த்துகள் இருவருக்கும்.

   பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல் ! ஈழத்து எழுத்தாளர்களில் பெண்கள் இல்லையா என்ற என் ஐயம் தீர்ந்தது. தகவல்களுக்கு நன்றி

   Benjamin LE BEAU France

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தவறாக நினைக்கவேண்டா ! தங்களுடன் உண்டான பழக்கம் அண்மையில் தானே ஏற்பட்டது.

    அதற்கு முன்னே யான் பழகிய ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் இடையே பெண்களைப் பார்த்தது இல்லை.

    தங்கள் எழுத்துக்கள் அடியேனை ஈர்த்ததால்தான் தங்கள் தொடர்பைத் தொடர்கிறேன்.

    என் மதிப்புக்கு உரிய எழுத்தாளர்களில் தங்களுக்கு முதலிடம் உண்டு என அறிக


    நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்றே எதிர்பார்த்திருந்தேன்.

    நன்று நன்று ! தங்கள் கேள்வியின் உரிமை எனக்கு மகிழ்வு தருகிறது.

    எப்போதுமே தங்கள் எழுத்தில் உள்ள சிந்தனையின் ஆழம், பரிமாணம் என்னைக் கவருகின்றன.


    நன்றியுடன்
    நான் இல்லையா என்று நான் கேட்ட கேள்விக்கு இவ்வாறான பதிலை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா

    நீக்கு
  3. போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்

   பதிலளிநீக்கு
  4. நிச்சயமாக. அவர் இல்லாத இந்த வேளையில் அவரை நினைத்து பார்க்கின்றேன்

   பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   பதிலளிநீக்கு
  6. ஒரு படைப்பாளரை நன்கறிய முடிந்தது
   சிறப்பு
   பாராட்டுகள்

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  பனைமடலால் ஒரு மிரட்டல

  அன்பு, காதல், பாசம், பரிவு, இரக்கம், விட்டுக்கொடுப்பு இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். இரு மனங்கள் இணையாத உறவு பொய்யான உறவாகவே அமைய...