• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 16 மார்ச், 2020

    "நினைவுகள் துணையாக" கவிதைநூல் விமர்சனம்




    கவிதை இலக்கியம் என்பது மனிதனின் உள்ளத்திற்குள் புகுந்து உணர்வுகளுடன் பேசும். ஒன்றைத் தொட்டு வேறு ஒன்றாய் விரியும். மனதுக்குள் சிலசமயங்களில் ஆழ்ந்த சிந்தனையையும், மகிழ்ச்சியையும், கிளுகிளுப்பையும், அழுகையையும் தோற்றுவிக்கும். யாருமற்ற உலகத்தில் சில நொடிப் பொழுதுகள் எம்மை வாழ வைக்கும். இவ்வாறான உணர்வுகளை சந்திக்க வைத்த பொலிகையூர் ரோகா அவர்களுடைய “நினைவுகள் துணையாக” என்ற கவிதைத் தொகுப்பு என் கைக்குள் அடக்கமாகிய போது ஒவ்வொரு பக்கங்களையும் திருப்புகிறேன்.  என் மனதுக்குள் பல பக்கங்கள் விரிகின்றன.

    கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரன்முறையை மனிதன் தாண்டி எத்தனையோ வருடங்களாகி விட்டன. “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மாகவிதை” என்று மகாகவி பாரதியார் ஆளுமையுடன் அன்று பாடினார். அதற்கேற்ப இன்று வரை ஹைக்கூ, துளிப்பா, புதுக்கவிதை என எத்தனையோ கவிதை வடிவங்கள் எம்மிடையே கோலோச்சுகின்றன. அன்று பாரதி கஞ்சாக்கவி என்று உரைத்த தமிழ் உலகம் இன்று பாரதியைக் கொண்டாடுகின்றது. 

    தற்காலக் கவிதை பற்றி கவிஞர் சுரதா அவர்கள் “கவிதை என்பது சொற்களின் சுருக்கம்” என்று கூறுவார். இது கடல் மட்டத்தின் மேல் தெரியும் ஒரு பனி மலை போல் இருக்கும் வெளியே தெரிவது சிறு தொடர் ஆனால் கடலுக்குள் ஆழச்சென்று பார்த்தீர்கள் என்றால் பரந்து விரிந்து ஆழமாகக் காணப்படும் அது போலவே தான் தற்கால கவிதைகளை நான் இனம் காணுகின்றேன். கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விளக்கம் நாம் கொள்ள முடியாது. காலத்துக்குக் காலம் அதன் வடிவங்கள் மாறிக் கொண்டுதான் வந்திருக்கின்றன.

    “காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை கொட்டி பிழைப்பது மேல்” என்னும் முதுமொழியை யாம் அறிந்திருக்கின்றோம். யாப்பருங்கலக்காரிகை கற்று மன்னர்களைப் புகழ்ந்து கவி பாடி, அவர்கள் கொடுக்கும் வெகுமதியைப் பெறுவதிலுள்ள கடினத்தைக் குறித்து அதனை விட பேரிகை கொட்டி வாழலாம் என்று சலிப்படைவதாக இம்முதுமொழி யாப்பருங்கலக்காரிகை கற்பதில் உள்ள கடினத்தன்மையை குறிக்கின்றது. பாவினம் படைக்க காரிகை கற்பதின் கடினத்தை அறிந்து தற்காலத்தில் கவிதை வடிவங்கள்; மாற்றங்கள் கண்டுள்ளன. 

    “உள்ளத்து உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை
    தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை” 

    எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் உரைப்பது போல காதலின் அழகையும் ஆழத்தையும் கவிதையாக வடித்து இந்நூலை ஆக்கியதாக எழுத்தாளர் பொலிகையூர் ரேகா தன்னுடைய உரையிலே கூறியிருக்கின்றார். 

    இலங்கையில் வடமாராட்சி மாநிலத்திலுள்ள பொலிகண்டி என்னும் ஊரில் பிறந்து இந்தியாவிலே தன்னை இனங்காட்டிக் கொண்டிருக்கின்ற பொலிகையூர் ரேகா அவர்கள் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். இளங்கலைக்கல்வி, முதுகலை வணிகவியல்,  வணிக ஆய்வியல், முதகலை வணிக நிருவாகவியல், வணிக நிர்வாக ஆய்வியல் ஆகிய கல்வித் தகைமைகளைப் பெற்றிருப்பதுடன் குருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதைத் தொகுப்பை 2017 ஆம் ஆண்டும், மனிதர்கள் காத்திருக்கின்றார்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை 2018 ஆம் ஆண்டும், சங்க இலக்கியங்களில் காந்தள் என்ற ஆய்வு நூலை 2019 ஆம் ஆண்டும் வெளியீடு செ;யதிருக்கின்றார். இவருடைய “நினைவுகள் துணையாக” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு வெற்றிமணி வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. 

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ஒரு கவிஞனை இனங்காண அவனால் எழுதப்பட்ட ஒரு கவிதை போதுமானது. காலம் கடந்தும் அவர்களை வாழ வைக்கும்.

    “யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும் 
    செம்புலப் பெயல் நீர் போல்
    அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” 

    என்னும் இப்பாடலை எழுதிய புலவருக்கு செம்புலப் பெயல் நீரார் என்னும் பெயரை இப்பாடலே கொடுத்தது. கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் 192 பாடல்களும் நற்றிணையில் 226 பாடல்களும் பாடியிருந்தாலும் அவருடைய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலே பெரிதாகப் பேசப்படுகின்றது. 

    இவ்வாறு இந்நூலிலுள்ள சில கவிதைகள் மனதோடு பேசு பொருளாகக் காணப்படுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே காணப்படும் விரகதாபம் கவிதைகளிடையே இழையோடிக் காணப்படுகின்றன. 

    “நீர் வரத்துக்காகவும் 
     உரிமையாளர் வரவுக்காகவும் 
     நீர்க்குழாயடியில் 
     காத்திருக்கும் குடங்கள் போல
     உன் வரவுக்காகவும்
     உண்மை அன்புக்காகவும் 
    வெறுமையோடு காத்திருக்கின்றேன்” 

    என்னும் கவிதையில் காதலன் வரவுக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கு நீர்க்குழாயடியில் காத்திருக்கும் குடங்களை இக்கவிஞர் ஏன் உவமையாக எடுத்துரைக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தால், இவர் மனதிலே வேரூன்றிப் போயிருக்கும் சமூகப் பார்வை வெளிப்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். தண்ணீர் தட்டுப்பாடு இந்திய மண்ணில் காலம் காலமாக பேசுபொருளாகக் காணப்படுகின்றது. நீயும் வர மாட்டாய் நீரும் வரமாட்டாது என்னும் தவிப்பு தென்படுகின்றது. 

    “வானிலிருந்து நீ வராத பருவத்தில்
    தானாய் எங்கள் விழிகளில்
    தாரைதாரையாய் கண்ணீர் மழை” 

    என்று பாடினார் தேவகி மைந்தன். சமூக சிந்தனை ஊறிய மனதில் கவிதையின் கருவாக அதுவே பிரதிபலிக்கும். பாரதியாரின் சுயசரிதையிலே அவருடைய 10 வயதில் ஒரு 9 வயதுப் பெண்ணைக் காதலித்திருக்கின்றார். “தேசபக்தி வீரனைப் போல உன் வரவுக்காய் காத்திருக்கின்றேன்” என்று ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். பின் கண்ணம்மாவைத் திருமணம் செய்த போது “காதல் ஒன்றாய் கடமை ஒன்றாய் ஆனது” என்று குறிப்பிடுகின்றார். காதலியைக் காத்திருக்கும் போதும் அவருக்கு அவர் மனதுக்குள் உள்ள தேசபக்தியே உவமைப் பொருளாகக் கையாளப்படுகின்றது. அதேபோல் காதலன் வரவுக்கு நீரின்றி வாடும் மக்களின் உணர்வை எடுத்து வந்திருப்பது இவருடைய சமூகப்பார்வையே ஆகும். 

    “தூரத்து நிலவு காட்டி 
    என் தாய் அளித்த 
    உணவு  போல
    எங்கோ இருப்பாய் என்ற 
    உன் மேலான நம்பிக்கையில் 
    என் பொழுதுகள் 
    கழிந்து கொண்டிருக்கின்றன”

    என்னும் கவிதையிலே ஒரு ஏமாற்றம் புலப்படுகின்றது. அன்று தொட்டு இன்றுவரை “நிலா நிலா ஓடிவா. நில்லாமல் ஓடி வா” என்று நிலாவைக் காட்டி சோறூட்டிய தாய்க்குத் தெரியும் நிலா வராது என்னும் உண்மை. ஆனால், குழந்தையிடம் தூரத்து நிலவைக்காட்டிய போது நிலா வரும் என்று தாய் உரைத்த பொய், அந்தக் குழந்தை மனதில் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிய ஏமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு வராத காதலனுக்காக தன் பொழுதுகளை கழித்துக் கொண்டிருக்கும் காதலியை இக்கவிதையில் படம் பிடிக்கின்றார். காதலில் ஏமாற்றங்களே அதிகம் என்பதை இந்நூலில் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றன. நிலாவைப் பாடாத கவிஞர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம். முரளிதரன் அவர்கள் நிலா பற்றிய ஒரு கவிதையில் தந்திருக்கின்றார். 

    “பசிக்காக அழுதது குழந்தை
    தாய் அம்புலி காட்டினாள்
    ரொட்டி கேட்டு அழுதது
    குழந்தை” 

    கிடைக்காததற்கு புலம்புவதைவிட கிடைப்பதற்குப் புலம்புதல் உத்தமம் என்பதைப் புரிய வைக்கின்றார். 

    “உலக அதிசயங்கள் 
     எத்தனையோ
     இருந்துவிட்டுப் போகட்டும்
     எனக்குத் தெரிந்த 
     ஒரே அதிசயம் நீதான்
     என்னால் புரிந்து கொள்ள
     முடியாத அதிசயமும் நீதான்! 

    என்னும் கவிதையின் பாடுபொருள் பழையதாக இருந்தாலும் இன்றும் பேசப்படும் பொருளும் அதுவாகவே இருக்கின்றது. 

    “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் 
    வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
    நுழைசெல்லும் காற்று இசையாதல் அதிசயம் 
    குருநாதர் இல்லாத குயில்பாட்டு அதிசயம்
    அதிசயமே அதிர்ந்து போகும் 
    நீ எந்தன் அதிசயம்”

    என்னும் வைரமுத்து உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் இருந்தாலும் இந்த அதிசயங்களே அதிர்ந்து போகின்ற நீ என்னுடைய அதிசயம் என்று கூறுகின்ற பாணியிலேயே இவ் ஆசிரியரும் பெண்கள் அதிசயம் பற்றிக் கூறுகின்றார். படைப்பின் அதிசயம் அதுவாக இருந்தாலும், இங்கு அதிசயமாக எடுத்துக்காட்டப்படும் அனைத்திலும் அழகுதான் மேலோங்கி நிற்கின்றது. ஆனால், இந்த இடத்தில் ஒருவிடயம் பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம். இயற்கையின் படைப்பின் ஒரு அங்;கமே பெண். அப்பெண்களை அதிகமான அதிசயப் பொருளாகவும், காமப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும் படைத்துக் காட்டுகின்றவர்கள் கவிஞர்களே. இக்கவிஞர்களே பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கும் காரணமாகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. கவிஞர்கள் பெண்களைப் போகப் பொருளாகப் படைத்துக் காட்டுகின்றார்கள்.

    வாலி ஜீன்ஸ் படத்திற்காகப் பாடிய பாடலில்

    “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி”

    என்னும் சொற்களின் மூலம் விரசத்தை ஏற்றுகின்றார். இவ்வாறு பெண்கள் அங்கங்களை மிதமிஞ்சிய சொற்களின் மூலம் வர்ணிப்பது, மானிடப் பிறவி என்ற எண்ணத்தை விடுத்து அதிசயப்பொருளாகக் காட்டுகின்ற கற்பனை கடந்த வர்ணனைகளை பயன்படுத்துவது பழந்தமிழ் இலக்கியங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. இக்கவிதை நூலின் ஆசிரியர் “என்னால் புரிந்து கொள்ள முடியாத அதிசயம் நீதான்” என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது  இங்கு அழகையும் மீறி ஒரு மனவுணர்வைப் பதிவு செய்வதாகப்படுகின்றது. “ஆறும் அது ஆழம் இல்ல. அது சேரும் கடலும் ஆழம் இல்ல. ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசு தான்யா” என்ற முரளிதரன் அவர்களுடைய வரிகளுடன் ஒத்துப் போவதாக உணர்கின்றேன். தன் காதலியின் மனதின் ஆழத்தைப் புரிய முடியாது காதலன் தவிப்பு வரிகளாக இவற்றைக் கொள்ளலாம். 

    இவ்வாறு பல மன உணர்வுகளை ஏற்படுத்தும் கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல் வெற்றிமணி பத்திரிகையின் 25 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. ஜேர்மனியில் வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் அன்னையாரின் 100 ஆவது பிறந்தநாளையும் சர்வதேச மகளிர் தின விழாவையும் முன்னிட்டு நடத்தப்பட்ட புதுமைப்பெண்கள் 2020 என்னும் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 







    12 கருத்துகள்:

    1. ஆஹா...அருமையான கவிதைகளை அற்புதமாக விமர்சித்தவிதம் மனம் கவர்ந்தது.எடுத்துக்காட்டாக சொல்லியவைகள் தங்கள் விரிந்த ஆழ்ந்த வாசிப்பினையும் எமக்குத் தொட்டுக்காட்டிப் போகிறது...வாழ்த்துகளுடன்..

      பதிலளிநீக்கு
    2. சிறப்பான கவிதை நூல் என்று தெரிகிறது. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

      பதிலளிநீக்கு
    3. “தூரத்து நிலவு காட்டி
      என் தாய் அளித்த
      உணவு போல
      எங்கோ இருப்பாய் என்ற
      உன் மேலான நம்பிக்கையில்
      என் பொழுதுகள்
      கழிந்து கொண்டிருக்கின்றன”

      அருமை
      அருமை

      பதிலளிநீக்கு
    4. அருமையான கண்ணோட்டம்
      பலருக்கு வழிகாட்டும்
      பாராட்டுகள்

      கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
      http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

      பதிலளிநீக்கு
    5. கவிதை பற்றிய அழகான பதிவு. வாழ்த்துகள் தொடருங்கள்...

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...