தமிழ் மரபு மற்றும் வரலாற்று ஆய்வாளர் க.சுபாஷினி அவர்களால் எழுதப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்த ஜெர்மன் தமிழியல் என்னும் நூல் 10 வருட அவர் உழைப்பின் பலனாகப் பல ஆய்வுகளுக்குப் பின் வெளிவந்து மனதுக்குப் பல தெளிவுகளை ஏற்ப்படுத்தியது. இந்த நூல் இத்தனை வருட காலங்கள் என் மனதில் இருந்த பல எண்ணப் போக்குகளை மாற்றியமைத்தது
இலங்கையில் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிக்காதமைக்கான காரணம், ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறி பரப்புனர்கள் தமது மதம் பரப்பும் பணிக்காகவும் தமிழை தொழில்நுட்ப அடிப்படையில் நவீனப்படுத்தியாமை, கல்வியை எல்லோரும் பெற வழி அமைத்தமை, பழைய தமிழ் அறிஞர்களுக்கு மொழிப்பயிற்சி கிடைத்தமைக்கான காரணம், ஜெர்மனிய பாதிரிமார்களின் தரங்கம்பாடி வருகையும், மார்டீன் லூதருடைய லூதரேனியம் வருகையும் ,அவர்கள் தமிழ் மொழியை ஆழமாகக் கற்றமைக்கான காரணங்களும், குறிப்பாக சித்த மருத்துவ ஏடுகளை ஜெர்மனி கொண்டு சென்று பதிப்பீடு செய்தமை, கற்றமை, வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தமை, பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு காரணமாக இருந்தமை, அச்சுக் கூடங்கள் உருவாக்கியமை, ஒவ்வொரு பாதிரிமார்களின் விபரங்கள், கத்தோலிக்க பாதிரிமார்கள் பற்றிய விளக்கங்கள்,
அந்தக் காலத்திலே இருந்த மக்கள் பலவகையான மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள் என்று பார்க்கின்றபோது வெளிநாடுகளில் இருந்து மதத்தைப் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள் பாடசாலைகளை அமைத்து மொழியைக் கற்பித்தார்கள். அப்படி கட்டுகின்ற போது ஒரு கட்டுப்பாடான முறையில் மொழி கற்பிக்கப்பட்டது லூதரனிய பாதிரிமார்கள் குறிப்பாக சீகன்பால்கு போன்றோர் ஐந்து வகையான பாடசாலைகளை அமைத்து இருந்தார்கள் அதில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றன. பாடசாலைகளாக மூன்று பாடசாலைகளும் போர்த்துக்கீச மொழி ஸ்பானிய மொழி கிடைக்கின்ற இருவகையான பாடசாலைகளும் கட்டியிருந்தார்கள் இதில் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை ஏழு முப்பது வரை பாடசாலை நடைபெறும் கட்டுப்பாடான இந்த கல்வி முறை அறிவை வளர்ப்பதற்கு அவர்களுடைய மத போதனைகளை கற்ப்பிக்க செய்வதற்கும் அவசியமாகப்பட்டது கட்டுப்பாடுகள் தான் ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு வரும் அது உண்மைதான் ஆனால் கட்டுப்பாடுகள் கூடாது என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் அது அப்படி அல்ல என்பதை அறிஞர்களை பார்க்கின்றபோது அறிந்து கொள்கின்றோம்.
பொதுவாகவே வீரமாமுனிவர் என்று தமிழில் அழைக்கப்படுகின்ற பெஸ்கி பாதிரியார் தமிழுக்கு செய்த சேவைகள் பற்றியே அதிகமாக நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் இந்த நூல் ஜெர்மனியில் இருந்து டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அழைத்துவந்த லூதரனியம் பாதிரிமார்கள் தமிழுக்காக செய்திருக்கின்ற சேவைகள், எத்தனையோ எத்தனையோ நூல்கள் அவர்கள் எமது தமிழ் மொழியை இலக்கண இலக்கியங்களை ஆழமாக கற்று எழுதிய நூல்கள் பற்றியெல்லாம் மிக சிறப்பாக இந்த நூல் எடுத்துக்காட்டியுள்ளது.
பாதிரிமார்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் குறிப்புக்கள் சிறப்பாக இருக்கின்றது. சீகன்பால்க் கட்டிய பாடசாலையில் ஒரு மருத்துவரை ஆசிரியராக நியமித்து மாணவர்களுக்கு அவற்றை நாள்தோறும் கற்பித்த தன்மை இக்கால அலட்சியப்போக்கிற்கு பாடம் நடத்துகின்றது. வைத்திய கேள்வி கேட்பவர்கள் மாத்திரம்தான் மருத்துவத்தை பற்றி அறிய வேண்டும் என்ற போக்கு அக்காலத்தில் இருக்கவில்லை. பெண்கள் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் சீகன்பால்க் அவர்கள் தன்னுடைய பாடசாலையில் பெண்களையும் கற்பிக்க செய்தமை சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றது.
சித்த மருத்துவ நூல்களை இந்தியாவில் இருந்து எடுத்து வந்து பலர் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுகள் நம்மத்தியில் இருக்கின்றன. ஆனால் அது எப்போது நடந்தது என்பதற்கான தெளிவான விளக்கத்தை இந்த நூல் மூலம் பெற்றுக் கொண்டேன். லூதரனியம் பாதிரிமார்கள் 50 பேர் தமது பணிகளைச் செய்வதற்காக தரங்கம்பாடிக்கு வந்தபோது காலநிலை மாற்றத்தினால் இளவயதிலேயே குறுகிய காலப்பகுதியிலேயே இந்தியாவில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். அந்த நேரத்தில் சித்த வைத்திய முறைகளை ஏடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட பாதிரிமார்கள் அவற்றில் உள்ள மருத்துவ மகத்துவத்தை அறிந்து கொண்டு அவற்றை அப்படியே ஜெர்மனியில் உள்ள ஹாலே கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அவற்றைத் தொகுத்து நூல்களாகிய அந்த மருத்துவத்தின் மகிமையை உலகத்துக்கு அறியச் செய்திருக்கின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஏடுகளை, அதைவிட எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டு சிதிலமடைந்து கிடந்த ஏடுகளை ஒன்றாகத் தொகுத்து அவற்றுக்கு என்று மருத்துவர்களை அமைத்து அவர்கள் செய்த சேவையை நினைக்கின்ற போது களவாடிச் சென்ற ஏடுகள் என்பதை தாண்டி அவர்கள் செய்த சேவையின் புனிதத்துவம் புரிகின்றது.
லூதரனியம் பாதிரிமாருக்கும் கத்தோலிக்க பாதிரிமாருக்கும் இடையே ஏற்பட்ட வேத விளக்க போட்டிகளின் காரணமாக தோன்றிய தமிழ் நூல்கள் பல எடுத்துக்காட்டுகின்றன. லூதரேனிய தத்துவ விளக்கத்திற்கு எதிர்வினையாக வேதவிளக்கம் என்னும் ஒரு நூல் வர அதற்கு எதிராக லூதரேனியம் திருச்சபை போதகம் வந்தது. அதற்கு எதிராக பெஸ்கி பாதிரியாரின் பேதக மறுப்பு என்னும் நூல் வெளிவந்தது . இவை போன்ற நூல்கள் தமிழுக்குக் கிடைத்தன. குறிப்பாக அனைத்தையும் என்னால் கூற முடியாது அந்த நூலை வாசித்து பார்க்கின்ற போது புரிந்து கொள்வீர்கள்
இந்திய அரசினால் விருது பெற்ற இந்த நூல் நிச்சயம் இந்திய அரசினால் விருது பெறவேண்டியது என்பதை பக்கம் பக்கமாக இந்த நூலைப் படிக்கின்ற போது அறிந்து கொண்டேன்.
பாதிரிமார்களின் சேவை விவரங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஇன்னமும் நிறைய நூல்கள் உள்ளன சகோதரி...
பதிலளிநீக்குஆம். தேடல் செய்து வாசிக்க வேண்டும்
நீக்குநூலைப்பற்றிய அருமையான விளக்க கட்டுரை நன்றி சகோ.
பதிலளிநீக்குநூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நன்றி சார்
நீக்குபல தரவுகள் திரட்டப்பட்டதாக
பதிலளிநீக்குநன்கு ஆய்வு செய்தமையால்
நாங்களும் அறிய முடிந்தது.
வீரமாமுனிவர் போன்ற பலரை
நாளைய தலைமுறை அறிய வேண்டும்!
நூலின் சிறப்பு நன்றாக எடுத்தாளப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஆய்வு என்றால் எப்போதும் அதன் பலன் நன்றாகவே இருக்கும் பணி தொடரட்டும்.
வாழ்த்துகள்.