“இஞ்ச பாருங்கோ இது நான், நான்
காசு கட்டி வாங்கின வோஸ்மெஸின். இதில் என்ர பிளளைகள்ட உடுப்பும், என்ர உடுப்பும்தான் கழுவலாம். உங்கட ஊத்தைகள இதுக்குள்ள போட்டுக் கழுவாதீங்க‘‘
“அப்பிடியென்றா நானென்ன கையாலயா கழுவுறது‘‘
“என்னென்றாலும் செய்யுங்க. ஸ்ரட்டு(நகரம்) க்குள்ள இருக்கிற பொது மெஷினில
கழுவுங்க. இல்லாட்டிக் கழுவாமப் போடுங்க. எங்களுக்கு ஒன்டும் பிரச்சினையில்ல‘‘
கணவன் இரத்தினத்திடம் கட்டளையிட்டாள், நிவேதா.
வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறாளே, வேலைக்குப் போனால், அவளுக்குப் பொழுதுபோகும் என்று ஏதாவது வேலைக்குப் போ என்று நிவேதாவை வேலைக்கு அனுப்பினான் ரத்னம். இது அவனுக்கு இப்படி அடிமைத்தனத்தைத் தரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அடக்கமாக வாழ்ந்தவனுக்கு அவளை அடித்துத் திருத்தத் தெரியவில்லை. குடிப்பழக்கமில்லாதவனுக்கு போதை என்ர பெயரில் அவளைக் போட்டுப்பிரட்டத் தெரியவில்லை.
வங்கிக்கணக்கை தனக்கும் மனைவிக்கும் இணைந்த வைப்பில் வைத்ததனால், உழைப்பின் ஊதியத்தை பங்கு போட்டுவிடுவாள் நிவேதா.
“உங்கட பிள்ளைகளுக்கு நீங்கதான் காசு செலவழிக்க வேணும். என்னுடைய வருமானத்தை
நம்பியா பிள்ள பெத்தனீங்கள்‘‘
“பிள்ளைகளுக்கு ஹின்டகெல்ட் (அரசாங்கத்திலிருந்து வரும் பணம்) ல நீங்க
கை வைக்கக் கூடாது‘‘
“இது நான் வாங்கின ரி.வி நீங்க பார்க்க கூடாது. முடியுமா இருந்தா நீங்க
வேற ரி.வி வாங்கிப் பாருங்க. பிள்ளைகள் பார்க்கிற நேரம் கரைச்சல் கொடுக்காதீங்க‘‘
இத்தனை கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு அவ்வீட்டில் நரக வாழ்க்கை வாழ்ந்த இரத்தினம். தன் வீட்டுப் பிரச்சினைகளை வெளியில் சொன்னால், அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் மறைத்தான்.
அன்று இரத்தினத்திற்கு நெஞ்சுவலி பொறுக்க முடியவில்லை. வீட்டிலோ யாருமில்லை. நண்பன் சுரேஷை அழைப்போம் என்று தொலைபேசியை அழுத்தினான். அவனும் வந்து ரத்தினத்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான். இதயம் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக கூறிய வைத்தியர் மருந்தும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.
வீட்டிற்கு வந்த நிவேதா, தொலைபேசியை பரீட்சித்துப் பார்த்தாள் ரத்தினம் யாருடனோ கதைத்திருக்கின்றான் என்பதை அறிந்தாள்.
“இஞ்ச பாருங்கோ. எங்க போயிற்று வாறீங்க. யாருக்கு ரெலிபோன் எடுத்தனீங்கள்.
உங்களிட்டச் சொல்லியிருக்கிறன். இந்த ரெலிபோன் நீங்க பாவிக்கக் கூடாதென்று. உங்கட ஹென்டியால
எடுக்கலாம்தானே. என்ர பெட்டில வந்து படுத்திருக்கிறீங்க. எல்லாம் குழம்பிப் போய் கிடக்கு‘‘
தொடர்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.
“நான் ஒன்றும் சும்மா. உம்மட வாசம் பிடிக்கப் படுக்கல்ல. சரியா நெஞ்சுக்குள்ள
குத்திச்சு. என்ர ரூமுக்குள்ள போக முடியல்ல. அதுதான் டக்ககென்று உம்மட ரூமுக்குள்ள
போய்ப் படுத்தனான்‘‘
“சும்மா நடிக்காதீங்க. கண்டவனோட கதைக்கிறதுக்கெல்லாம். நான் காசு கட்டத்
தேவயில்ல. கூப்பிட்டு வச்சு என்ர புராணம் பாடத்தானே ரெலிபோன் எடுத்த னீங்க‘‘
“உனக்கு எத்தனை தரம் சொல்றது. ஆஸ்பத்திரிக்குப் போகத்தான் கூப்பிட்டனான்.
என்ர ரெலிபோனில சாச் இறங்கிப் போச்சு‘‘
“நம்பிட்டன் நடிக்காதீங்க|‘‘
“நீ என்ன மிருகமாடி. உனக்கு என்ன ஈவு இரக்கமில்லயா? எப்பிடி அடக்கமா மணவறையில வந்து இருந்தா.
இப்பிடி பிசாசு மாதிரி இருக்கிறியே. உனக்கு நான் கொடுத்த இடம் தான் என்ன இந்தளவுக்குக்
கொண்டுவந்து விட்டிருக்குது. மற்ற ஆம்பிள்ளைகள் மாதிரி நானும் உன்ன வீட்டுக்குள்ள அடைச்சு
வச்சிருந்தா இப்படிக் பேச்சு வந்திருக்காது‘‘
மனதுக்குள் இருந்ததெல்லாம் கொட்டித் தீர்த்தான்.
“போதும். நிறுத்துங்க. நான் சொல்றதத்தான் கேட்கவேணும். இருக்கிறதென்றால், இருங்க முடியாட்டி எங்கேயாவது தொலஞ்சு போங்க‘‘
ஆவேசமாகக் கத்திய நிவேதாவுடைய வார்த்தைகளுக்குள் இருந்த தனியே வாழும் ஆசை. இரத்தினத்திற்கு ஆத்திரத்தைக் கொண்டுவந்தது. ஆவேசம் கொண்டு அடிப்பதற்குக் கை நீட்டினான். ஓடி வந்த மகன், இரத்தினத்தைப் பிடித்துத் தள்ளி விழுத்தினான். பிள்ளைகளும் தாயுமாகச் சேர்ந்து இரத்தினத்தை வீட்டிற்கு வெளியே தள்ளினர்.
“போடா. போ எங்கேயாவது போய்த் தொலை…..‘‘
தாயும் பிள்ளைகளும் கத்தித் தள்ளிய இரத்தினம் வாசலுக்கு வெளியே கிடந்தான். வீட்டின் யன்னல் திறக்கப்பட்டது. அவனுடைய துணிமணிகள் வெளியே வீசப்பட்டன. அழுது அழுது ஓய்ந்த இரத்தினம் எல்லாவற்றையும் தூக்கிக் கட்டியவனாக நண்பன் சுரேஷ் வீட்டிற்குச் சென்றான்.
“எனக்கு இது தேவையாடா? சும்மா
இருந்த என்னக் கல்யாணம் செய் கல்யாணம் செய் என்று எல்லாரும் கரைச்சல் படுத்தி, ஒரு பேய என்ர தலையில் கட்டிப் போட்டுதுகள்.
இப்பப் பார் என்ன உழைச்சும் இப்பிடி நடுத்தெருவில நிக்கிறனே‘‘
“ஏன்டா இப்பிச் சொல்ற உனக்கு நான் இல்லயா? என்ன வந்தாலும் பார்ப்போம். இப்பப் போய்ப்
படு‘‘
``என்னன்டுடா நித்திர வரும். வருத்தமென்டு
சொன்னால் நடிப்பு என்றாள். இப்படியும் ஒரு பொம்பிள இருக்குமாடா? பிள்ளைகளுமல்ல அவளோட சேர்ந்து என்ன அடிக்க
வருதுகள். இப்பிடி ஒரு நரக வாழ்க்கை வாழ்றத விட்டிற்று என்னத்தையும் குடிச்சிட்டு செத்துப்போகலாம்‘‘
“உனக்கென்ன விசரா. உனக்கு என்ன குறை. நல்லா உழைக்கிறா நீ உனக்கு நாங்கள்
இருக்கிறகம். விட்டுப்போட்டு ஒரு வீடு எடுத்திட்டு ராசா மாதிரி வாழு. ஆனா, உன்ர பிள்ளைகளுக்கு காசு கட்ட வேண்டியது
உன்ர பொறுப்பு. அதக் குடுத்திட்டு. சந்தோசமா வாழு‘‘
“இல்லடா அவள எப்பிடியெல்லாம் வச்சிருந்தனான். ஏன் தான் கடவுள் என்னப் போட்டு
இப்பிடிச் சோதிக்கிறாரோ தெரியாது‘‘
“விடுடா அந்தக் கதைய. இனி நடக்க வேண்டியதப் பார்‘‘
ரத்தினம் தனியே வீடெடுத்தான். நிவேதாவும்
ஜேர்மனி படிப்புச் சரியில்லை என்று பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு இலண்டனில் குடியிருக்கச்
சென்று விட்டாள். அவளுக்குத் தெரியாமல் பிள்ளைகள் தந்தை இரத்தினத்துடன் கதைப்பார்கள்.
தாயாரின் கெடுபிடிகள், பழக்கங்களை வளரும்போதும், நாலு பேருடன் பழகும் போதும் பிள்ளைகள் அறிந்து
கொள்வார்கள் அல்லவா!
காலங்கள் கடந்தன. ரத்தினத்திற்கு வயது 40. தனிமை நோயைத் துணையாகக் கொண்டது. ஆயினும்
உடலுழைப்பில் சளைக்காது பாடுபட்டான்.
பலமுறை தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியாத
பிள்ளைகள் அப்பா என்னவானார் என்று தெரியாமல் ஜேர்மனி பொலிஸாருக்கு அறிவித்தனர். வீட்டு
இலக்கத்தைத் தேடிச் சென்ற பொலிஸார் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியும் திறக்கப்படாத
கதவினை திறந்தனர். அங்கே பிணமாகக் கிடந்த இரத்தினத்தைக் கண்டனர். இரத்தினத்தின் உடலைப்
பரிசீலனை செய்த வைத்தியர் இரத்தினத்தின் உடலை விட்டு உயிர் பிரிந்து 3 நாட்களாகி விட்டன என்று உரைத்தார்.
வேதனை
பதிலளிநீக்குஇப்படி ஆகி விட்டதே...
பதிலளிநீக்குஉள்ளத்தைத் தொட்ட பதிவு
பதிலளிநீக்குஅருமை