ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்ற ஆண்களின் தற்கொலை, இயற்கை இறப்புக்களுக்கு
அவர்களின் மனைவி, பிள்ளைகளே காரணம் எனக் குற்றச்சாட்டுக்கள் வலுவாக அதிகரித்து வருகின்றது.
கத்தியின்றி, இரத்தமின்றி கொலை நடைபெறுகின்றது என பெண்களில் பழி போடப்படுகின்றது. இக்கட்டுரை
இது பற்றிய ஆய்வுக்குட்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளருகின்ற ஆண்பிள்ளைகள்; பற்றிய கணிப்பீடு இக்கட்டுரையில்
இடம்பெறவில்லை.
ஆண்களின் இறப்பு
வீதம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டு போவது தற்பொழுது கவலைக்குரிய விடயமாகக்
காணப்படுகின்றது. இலங்கையிலிருந்து 90 சதவீத பெண்கள் திருமணம் செய்து,
அல்லது திருமணம் செய்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி புகுந்த பெண்களாகவே
காணப்படுகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
வீட்டுச் சூழலில் அடங்கி
ஒடுங்கி வாழ்ந்தவர்களுக்கு திடீரெனக் கிடைக்கின்ற சுதந்திரம் அவர்களுக்கு கட்டுக்கடங்காத
சுதந்திரத்தை அளிக்கின்றது. இதைவிட முற்றுமுழுதாக பெண்களிடமே பழி போட்டுவிட முடியாது.
தனிமையில் இந்நாடுகளில் வாழ்ந்த ஆண்கள் பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்துப்
பின் குடிக்கு அடிமையாகிவிடுகின்றனர். தமது இப்பழக்கத்தை மறைத்து தாயகத்திலிருந்து
பெண்களைத் திருமணம் செய்து அழைத்து வருகின்றனர். கணவனிடம் காணப்படும் இப்பழக்கம் பற்றி
அறியாமலோ வாழ்க்கையிலேயே குடியை வெறுக்கும் ஒரு பெண்ணாகவோ இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு
வந்தபின் இதனை அறியும் போது தனது வெறுப்பை கணவனில் காட்டத் தொடங்குகின்றாள். இது காலப்போக்கில்
பெரிய பூதாகரமாகின்றது. போதைக்கு அடிமையாகும் ஆண்கள் அளவுக்கதிகமாகக் காட்டுகின்ற அதிகாரம், ஆண்களிடம் பெண்களுக்கு
ஒரு வெறுப்பு நிலையை ஏற்படுத்துகின்றது. மூர்க்கமாகத் தமது கோபத்தைக் காட்டுவதும், கையில் கிடைப்பதைக் கொண்டு
அடிப்பதும், என வன்முறையில் ஈடுபடும்போது வாழ்க்கை என்பது ஒருமுறையே அதை ஏன் இப்படி
நரகவாழ்க்கையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கணவன்மாரை விட்டு தனியே வாழ
முற்படுகின்றார்கள்.
அதேவேளை திருமணமாகிய பின்னர்
குடியை ஆரம்பித்து அளவுக்கதிகமாகக் குடிக்கும் ஆண்கள் தாம் குடிப்பதற்கு பெண்கள்தான்
காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு வருகின்ற போது
அப்பாவிகளாக கணவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ்க்கையை புலம்பெயர்வில் பெண்கள் ஆரம்பிக்கின்றனர்.
காலப்போக்கில் மனைவிமாரின் புத்திசாலித்தனத்தை அறிந்த ஆண்கள் அவர்களை முன்னிலைக்குக்
கொண்டு வருவதற்காக முதலில் மொழியை ஒரளவாவது கற்பதற்கு பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள்.
இதில் திறமைசாலிகள் வென்று விடுகின்றார்கள். முடியாதவர்கள் படிப்பென்ற பேச்சுக்கே இடமின்றி
வீட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றார்கள். பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாறி பிள்ளைகளைப்
பெற்றெடுத்து அவர்களைப் பாடசாலைக்குக் கொண்டு செல்வதற்காகவும் மற்றைய கடமைகளைச் செய்வதற்காகவும்
தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர். இக்காலகட்டத்திலே உலகத்தையும் பிள்ளைகளை வளர்ப்பதையும்
கற்றுக் கொள்ளுகின்றார்கள்.
இக்காலகட்டத்திலேயே பெண்களுக்கான
ஆசைகள் அளவுக்கதிகமாக உயர்கின்றது. மற்றையவர்கள் போலத் தாங்களும், மற்றைய பிள்ளைகளைப் போலத்
தமது பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்ற அபரிவிதமான ஆசை மேலோங்குகின்றது. தமது தகுதி
பற்றி நினைத்துப் பார்க்காது பிள்ளைகள் விரும்புகின்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்
கொடுக்கும்படியும் மற்றைய பிள்ளைகள் செல்கின்ற விளையாட்டுக்கள், கலை வகுப்புக்கள் என்று
எல்லாவற்றையும் தமது பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற நச்சரிப்புகளை கொடுக்கின்றனர்.
இவ்வாறான சூழலில் கணவன் 2 அல்லது 3 வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இங்கு மனைவியே குற்றவாளி
ஆகின்றாள். கஷ்டப்பட்டு உழைத்து மனைவி, பிள்ளைகளைக் கவனிக்கும் ஆண்கள் தமது குடும்பம் உயர்வான இடத்திற்கு வரப்
போகின்றது எனக் கற்பனை செய்கின்றான். மாடு போல் உழைப்பவனுக்கு வீட்டுக்கு வந்ததும்
புல்லுப் போடுபவர் கண் விழித்து இருப்பது அருமை. பிள்ளைகளை அடுத்தநாள் பாடசாலை அழைத்துச்
செல்லவேண்டும் என்ற காரணத்தைக் காட்டி சோறை ஆக்கிப் போட்டு சுருண்டு படுத்துவிடுவாள்.
களைத்து வீடு வரும் கணவன் களைப்பு நீங்க ஒரு கிளாஸ் மதுவுடன் தனது உணவை அடைந்துவிட்டு அப்படியே உறங்கிவிடுகின்றான். ஒரு கிளாஸ் 2, 3, என்று போத்தல் கணக்கிற்கு
உயர்கின்றது. இதுவே திருமணத்தின் பின் மதுவுக்கு அடிமையாகும் அநேகமான ஆண்கள் நிலை.
காலப்போக்கில் பிள்ளைகள்
வளருகின்ற போது அப்பா குடிச்சுக் குடிச்சுக் கெட்டுப் போகிறார். இந்த மாட்டைத் திருத்த
முடியாது. இது இப்படியே கிடந்து செத்துப் போகட்டும் என்று பலவாறாகப் பிள்ளைகளுக்கு
அருகிலே வைத்து தந்தைமாரைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பிள்ளைகள் மனதில் பதியவைப்பது
தாயாகத்தான் இருக்க முடியும். இதனால் பிள்ளைகள் தந்தையை விட்டு விலகி இருக்கின்றனர்.
தந்தை இல்லாத சமயத்திலே, தந்தையில் பாசத்தையும் மரியாதையையும் சொல்லிக் கொடுத்து, தந்தையின் அர்ப்பணிப்புக்கள்
பற்றித் தெரியப்படுத்தி வளர்க்க வேண்டிய பாரிய கடமையை மனைவி என்பவள் மறந்துவிடுகின்றாள்.
தந்தையை ஒரு பிள்ளை எதிர்த்துப் பேசுகின்றது என்றால், தாய் பேசிய தாக்கமே பிள்ளை
மனதில் நின்று வெளிப்படுத்துகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தந்தை பற்றிய தவறான எண்ணப்
போக்கு மனதில் பதிந்த பிள்ளைகள் தாயுடனேயே தாய் சொல்வதே உண்மை என்று கேட்டு தந்தையை
வெறுக்கத் தொடங்கும். மனைவி, பிள்ளைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஆண், கடைசியில் குடியை மணந்து
அதற்குத் தன்னை அடிமைப்படுத்துகின்றான். இதனால், நோய்வாய்ப்படுகின்றான். நோயில் துன்;பப்படுகின்ற கணவனின் அருகில் இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணையானவள் இவ்வாறான
குடித்துக் குட்டிச் சுவரான கணவனுடன் வாழமுடியாது என்று சொல்லி அவனை ஒதுக்கிவிடுகின்றாள்.
தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனியே வாழுகின்றாள். இவ்வாறான பல குடும்பங்களைக் காண்கின்றோம்.
விவாகரத்து எடுத்துவிட்டால்
அரசாங்கம் தனக்குப் பணம் தந்து உதவும் என்ற துணிச்சலுடன் தனியே வாழும் பெண், அவனுக்கு வேண்டிய மருத்துவ
வசதிகளைக் கூடச் சரியான நேரத்தில் கொடுக்காது விடுவதும், தேவையான உணவுவகைகள் உண்ணக்
கொடுக்காது விடுவதும் ஒரு கொலை முயற்சி என்றே சொல்ல வேண்டும். புலம்பெயர்வில் அதிகமான
பிள்ளைகள்; தாயார்மாருடன் சேர்ந்து கொண்டு தந்தைமாரை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.
பிள்ளைகளுக்காக குடும்பப் பொறுப்பை மனைவியிடம் விட்டுவிட்டு உழைப்பதில் கவனம் செலுத்திய
கணவன் இறுதியில் குடும்பமே இல்லாமல் இருப்பதுதான் இங்குள்ள சூழ்நிலை. சாதாரண சேட்டைத்
தான் அணிந்து, இரவுபகல் வேலை பார்த்து மனைவிக்கு 10 பவுணில் நகையும், பட்டு ஆடையும், பிள்ளைகளுக்கு அப்பிள் கைத்தொலைபேசியும் அவுடிக் காரும் வாங்கிக் கொடுத்து
அப்பாவிகளாக வாழுகின்ற ஆண்கள் நிலை பரிதாபத்துக்குரியது.
இதேவேளை மனைவியை அடக்கி ஆள
நினைக்கும் ஆண்வர்க்கத்தின் பக்கத்தில் உலகைப் படித்த பெண்கள் அடங்கி வாழ மறுப்பது
யதார்த்தம். ஆண்கள் போலே தமது கவலையை மறைக்கத் தாமும் குடிக்கு அடிமையானால், இக்கதை மாற்றிப் பேசப்படுமோ? என்ற வினாவினை எழுப்புகின்றாள்
பெண்;. குடித்துத்தான் கவலை மறப்போம் என்பது போலியான வார்த்தை. தனியே வேறு பொழுதுபோக்குகளை
பழகிக்கொள்ளலாமே என்றால், பாவமும் பழியும் ஆண்களிலேயே அதிக வந்து விழுவதாலும் பெண்ணைப்பற்றிய அனுதாபம்
சமுதாயத்தில் அதிகமாக இருப்பதாலும் பிரச்சினைகளை மறைத்து இணைந்து வாழ்வதாக வெளி உலகத்திற்குக்
காட்டி மனதால் பிரிந்து வாழ்கின்ற குடும்பங்கள் புலம்பெயர்வில் அதிகமாகக் காணப்படுகின்றன.
புரிந்துணர்வுடன் வாழுகின்ற
குடும்பங்களே வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்துகின்றன. ஆண்கள் உண்மையை மறைத்து திருமணம்
செய்வதும், ஆண் என்ற மமதையை காட்டுவதும், பெண்கள் தமது விரலுக்கேற்ற வீக்கம் போல் போதும் என்ற மனமே சிறப்பு தரும்
என்று எண்ணி இவற்றில் அக்கறை கொள்ளவேண்டும். ஆசைகளை அளவுக்கதிகமாக வைத்தால் வாழ்க்கையை
இழக்கவேண்டியே வரும். மனைவி கணவனில் வைக்கின்ற உண்மையான அன்பு அவன் கவலைகளை மாற்றச்
செய்யும் என்று நான் கருதுகின்றேன். அந்த உண்மையான அன்பை மனைவி தருவதற்கேற்றவாறு வாழ
வேண்டியது கணவனின் கடமையாகின்றது. துன்பப்படுபவரைக் கண்டால் இரக்கப்படும் நாம், நமது கணவன் நோயால் வாடுகின்றபோது
கண்டு கொள்ளாமல் விடுவது எவ்வளவு அரக்கத்தனம். அவனில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும், அவன் ஒரு உயிர். ஒன்றாக
வாழ்ந்து பிள்ளைகளை அவன் மூலம் பெற்று வளர்த்தோம் தானே. இறுதிக்காலத்திலாவது மன்னிப்பு
என்ற அளப்பெரிய ஆயுதத்தை ஏந்தி கடைசி காலத்தில் பக்கபலமாக இருக்கலாமே. பெண்கள் என்றால்
பொறுமை என்னும் இலக்கணத்தை ஏற்று மனிதப்பண்பில் வழுவாது வாழ்ந்து பாசத்துடன் வாழலாம்
அல்லவா? உயிர் என்பது விலைமதிக்கமுடியாதது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்த காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து subscribe பண்ணுங்கள். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி
புலம் பெயர்ந்த அனைத்து ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்களா?
பதிலளிநீக்குவிடியோவில் பேசும் பெண்மணி கண்களை அங்கும் இங்குமாக சழற்றிக்கொண்டே இருக்கிறாள். அதனால் அவள் சொல்லும் செய்திகளின் மேல் ஒரு நம்பிக்கை வரமாட்டேனென்கிறது.
உளவியல் ரீதியாக அலசப்பட்ட நல்ல கட்டுரை வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குஉண்மையான அன்பு இருக்க வேண்டும்... அருமையாகச் சொன்னீர்கள்...
பதிலளிநீக்குபாரப்பட்சமின்றி நடு நிலையோடு
பதிலளிநீக்குபிரச்சனையின் அடியாழம் வரைப் போய்
அருமையாக விரிவாகப் பதிவு செய்த விதம்
மனம் கவர்ந்தது
சென்றபதிவில் கதையாகப் படித்ததற்கு
ஒரு அருமையான விளக்கப்பதிவாக
இந்தப் பதிவு அமைந்திருப்பது அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்
இந்த அருமையான பதிவு
பதிலளிநீக்குஅதிகப் பேரிடம் சென்றடைய வேண்டும்
எனும் நோக்கில் என் முக நூலிலும்
பதிவு செய்துள்ளேன்
வாழ்த்துக்களுடன்...
அருமையான கட்டுரை
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
உளவியல் ரீதியாக அலசப்பட்ட நல்ல கட்டுரை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான ஆய்வு
பதிலளிநீக்கு"புரிந்துணர்வுடன் வாழுகின்ற குடும்பங்களே வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்துகின்றன." என்பது உண்மை தான்!
புரிந்துணர்வு தானாக வராது; ஆணும் பெண்ணும் தாமாகவே புரிந்துணர்வோடு வாழ முயல வேண்டும்.