• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 27 அக்டோபர், 2012

  பூக்களின் படைப்பு (அநுபவம்)


  Image Hosting  எங்கள் இல்லம் மலர்கள் நிறைந்த பூங்காக்கு நடுவே அமைந்திருந்தது. எனது தாயாருக்குப் பூக்கள் என்றால், அலாதிப் பிரியம்.  வகைவகையான மலர்ச்செடிகளை தேடிப் பெற்று வீட்டைச்சுற்றி நட்டிருந்தார். காலையில் வீட்டுவாசலைத் திறந்தால், முட்டி மோதிக்கொண்டு பவளமல்லிகை வாசனை வீட்டினுள்ளே நுழைந்துவிடும். அந்த அநுபவத்தை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அலாதியாய் அமர்ந்து கொள்ளும் இந்த வாசனைக்கு ஈடு செய்ய ரோஜா மலர்களின் வாசனை தூக்கி நிறுத்தும் எமது கெட்ட எண்ணங்களை. அநுபவித்துப் பாருங்கள். 

                 பாடசாலையில் நான் பணிபுரிகின்ற காலங்களில்  தினமும் காலையில் பணிக்காய் நான் புறப்படத் தயாராகியதும் எனது தாய், வாசலில் வந்து நின்று எனக்கு ஒரு முத்தம் தந்து வாசல் கதவருகே நட்டப்பட்டிருந்த ரோஜா மலர் ஒன்றைப்பறித்து எனது பின்னலில் வைத்து விடுவார். இது தினமும் நடைபெறுவது. முத்தமும் மலரும் எனது காலை அன்பளிப்புகள். அன்று ஒருநாள் எதையுமே சிந்தித்து சரி பிழை பார்க்கும் நான், யதார்த்தமாக அன்று காலை எனது தாயிடம் இந்த ரோஜாமலர் எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆசையாக மலருகின்ற மலரை சிலகாலம் வாழவிடாமல் பறித்து நாம் கூந்தலில் வைப்பது தவறில்லையா அம்மா! என்று கேட்டேன். அவற்றிற்கும் வாழ ஆசை இருக்கும் அல்லவா அம்மா! என்றேன். பொதுவாகவே மலர்கள் என்றால், மனதைப் பறிகொடுக்கும் எனது அம்மாவும், பார்த்தாயா இது பற்றி எதுவுமே நான் நினைத்துப் பார்க்கவில்லையே. இன்றிலிருந்து நான் பறிக்கவில்லை என்று கூறினார். அன்றைய நாள் திடீரொன இரத்தக்கொதிப்பு அதிகமாகி எனது தாயாரும் என்னைவிட்டு ஒரேநாளில் நினைத்துப் பார்க்க முடியாதவாறு உயரப் போய்விட்டார். அவர் சொன்னதைச் செய்துவிட்டார். வார்த்தைகளின் வலிமையை நினைத்துப் பார்க்கின்றேன். எண்ண எண்ண கொந்தளிக்கும் நினைவுகள். எனது சிந்தனை எந்தவிதத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது.

           அம்மாவின் உடலைக் கொண்டு வந்து வீட்டின் நடுவே வைத்தார்கள். அவரைச் சுற்றி மலர்களால் அலங்கரித்தார்கள். எனது தந்தை ஊரின் பெரிய மனிதராகக் கருதப்பட்டவர் என்ற காரணத்தினால், பல நிறுவனங்களிலிலெல்லாம் இருந்து மலர்வளையங்கள் கொண்டுவந்து அம்மாவின் காலடியில் வைத்தார்கள். சுற்றவர மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி அம்மா ஆழ்ந்த மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நானும் அவரருகே அழுதபடி அமர்ந்திருந்தேன். அங்கே மலர்கள் எனக்குக் கற்பித்த பாடம். இன்றும் என் அநுபவப் பாடமாகக் கருதுகின்றேன். 

           உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே படைக்கப்படுகின்றன. மனிதன் பிறந்தால், அவனால் உலகு உய்யவேண்டும்.  நான்கு பேராவது வாழ வேண்டும். படைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே என்ற உண்மைத் தத்துவத்தை யாம் புரிந்து கொள்ளவேண்டும். மலர்கள் மலர்ந்து மண்ணில் சருகாகி மாய்கின்ற போது அந்தப் படைப்பின் பலன் நிறைவேற்றப்படுவதில்லை. அதனைப் பறித்து ஆண்டவன் காலடியில் சேர்க்கின்ற போது அம்மலர் இன்புறுவது நிஜமே. அதனைக் கூந்தலில் வைத்து ஒரு பெண் பெருமை கொள்ளும் போது அக் கூந்தலில் அமர்ந்திருக்கின்ற மலரும் பெருமை கொள்ளுகின்றது. அதன் வாசனை அவள் செல்கின்ற இடமெல்லாம் கூடவே செல்கின்றது. திருமணவீடுகள், ஆலயங்கள், முதல்ராத்திரி என்று அனைத்து இடங்களிலும் அழகாய்க் காட்சியளிக்கும் மலர்கள், ஒருநாள் வாழ்ந்தாலும் பிறர் மனதைச் சந்தோசப்படுத்தி நான் இறக்கின்றேன் என்ற பெருமிதத்தில் இறக்கின்றன. பிறரை அழகுபடுத்தி பிறர் மனதை கொள்ளை கொள்ளவைத்து தன்னை இழக்கின்ற மலர் தந்த பாடம் எனது அம்மாவின் இறுதி அஞ்சலியாக அமைந்திருந்தது. அம்மாவைச் சூழவர படுத்திருந்து எனக்குப் பாடம் நடத்திய மலர்களைப் பார்த்து ஒரு ரோஜாமலரைப் பறித்து எனது அம்மாவின் கூந்தலில் வைத்தேன். வெடித்தது அழுகை. படித்தேன் பாடம்

  தமிழ்த்தோட்டத்தில் பூ என்ற தலைப்பில் அநுபவத்திற்காக பரிசு பெற்ற படைப்பு
  Free Pictures


  30 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த பாராட்டுக்கள் சகோ !
   அனுபவத்தில் வாசமும் சோக நேசமும்
   இழைந்து மணக்கிறது. வாடாமலர் .

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீண்ட நாட்களின் பின் உங்கள் வரவு கண்டு சந்தோசம் அடை கின்றேன். மிக்க நன்றி

    நீக்கு
  2. முதல் படம் வெகு அருமையாக ஜொலிக்குது. பட்டாம் பூச்சிகளும் பறக்குது. பட்டு ரோஜாக்குவியல் ;))))

   கடைசிபடத்தில் ஒரு ரோஜா இன்னொரு ரோஜாவைக் கையில் பிடித்துள்ளது .... அழகோ அழகு. சூப்பர் ;)

   மீண்டும் வருவேன்.....

   பதிலளிநீக்கு
  3. தமிழ்த்தோட்டத்தில் பரிசுபெற்ற படைப்புக்கு என் அன்பான வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  4. தங்கள் தாயாருக்கு பூக்களின் மேல் இருந்த பேரன்பும், பிறகு அந்தப்பூக்களையும் நாம் பறிக்காமல் வாழவைக்க வேண்டும் என தாங்கள் எடுத்துக்கூறியதும், ஏற்பட்ட வைராக்யமும் என்னை மிகவும் சிந்திக்கத்தான் வைத்து விட்டது.

   பதிலளிநீக்கு
  5. தங்கள் தாயாருக்கு பூக்களின் மேல் இருந்த பேரன்பும், பிறகு அந்தப்பூக்களையும் நாம் பறிக்காமல் வாழவைக்க வேண்டும் என தாங்கள் எடுத்துக்கூறியதும், ஏற்பட்ட வைராக்யமும் என்னை மிகவும் சிந்திக்கத்தான் வைத்து விட்டது.

   ....>>>>>

   பதிலளிநீக்கு
  6. பூக்கள் யாவும் மிகமிக அழகு தான். அவற்றின் ஆயுள் மிகமிகக்குறைவு தான். அப்படியும் அவை தாங்களும், சிரித்து, பிறரையும் மகிழ்வித்து, சூடுபவரையும் மணம் கமழச்செய்து ஏதேதோ விந்தைகள் புரிந்துவிட்டே மடிகின்றன என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் அதை வெகு அழகாகத்தாங்கள் தங்களுக்கே உரித்தான எழுத்து நடையில் விளக்கியுள்ளது, மிகச்சிறப்பாகவே உள்ளது.

   பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உலகப் படைப்புக்கள் அத்தனையும் அப்படியே. ஏதோ ஒருவருக்குப் பிரயோசனமாகவே படுகின்றது

    நீக்கு
  7. வார்த்தைகளின் வலிமையை சிந்திக்கத் தூண்டும் சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

   பதிலளிநீக்கு
  8. சோகமான பூக்கள் கதை. மனதை வருத்தியது.
   பணி தொடரட்டும்.
   நல்வாழ்த்து
   வேதா. இலங்காதிலகம்.

   பதிலளிநீக்கு
  9. மனதிர்க்கு நிம்மதி தரும் மலர்களுக்குள்ளும் இப்படி மனதை கனக்கச் செய்யும் ஒரு நிகழ்வா?

   பதிலளிநீக்கு
  10. மனம் நெகிழச் செய்ததுடன்
   சிறந்த கருத்தையும் முன்வைத்துப் போகும்
   பதிவு அருமையிலும் அருமை
   பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
   தொடர வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  11. மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

   பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  பனைமடலால் ஒரு மிரட்டல

  அன்பு, காதல், பாசம், பரிவு, இரக்கம், விட்டுக்கொடுப்பு இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். இரு மனங்கள் இணையாத உறவு பொய்யான உறவாகவே அமைய...