• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 31 அக்டோபர், 2012

    வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி வகைகள்




                  
                   'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'' என்ற ஒளவையார் கூற்றுக்கிணங்க அரிய பிறப்பாகிய மானிடப் பிறப்பெடுத்த மனிதன், மற்றைய உயிர்களினின்றும் மேம்பட்டவன். மனம் என்ற மாபெரும் சக்தி படைத்தவன். மனதைக் கொண்டிருப்பதனாலேயே நாம் மனிதர்களாகின்றோம். வளமுடன் வாழ வழி காட்டுவது அந்த மனம்தானே. இந்த மனதின் சக்தியை சிதற விடாமல் ஒரு குறிக்கோளுக்குள் குவித்தோமேயானால், நாம் எண்ணுகின்ற எக் காரியங்களிலும் வெற்றியை அடைந்து விடலாம். 
                   
                    நமது எண்ணங்களை சிதறவிடாது நமது குறிக்கோளில் மனம் முழுவதையும் ஒருமுகப்படுத்துகின்றபோது எண்ணங்களுக்கு ஆற்றல் மிதமாகின்றது. அடுப்பில் ஒரு பாத்திரத்தினுள் நீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பாத்திரத்தின் மூடி தள்ளியதைப் பார்த்த ஜேம்ஸ்வர்ட் தனது கவனம் முழுவதையும் அதில் செலுத்தி நீராவிக்குத் தள்ளும் சக்தி இருக்கின்றது, என்று அறிந்து ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார். அப்பிள் மரத்தில் இருந்து விழும் பழம் கீழ் நோக்கி விழுவதை அவதானித்து ஏன் விழுகின்றது! மேலே செல்லவில்லை என்று சிந்தித்துத் தனது கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்திய சேர்.ஐசாக்.நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டறிந்தார். லூதர் பர்பாங் ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்து செடி கொடிகளுக்கு உயிர் இருக்கின்றது என்று கண்டறிந்தார். கணனிக்குள் தன் மூளையை ஒருங்கிணைத்த காரணத்தினாலேயே வின்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர், பில்கேட்ஜ் இன்று உலகத்திலேயே இரண்டாவது பணக்காரன் என்ற நிலையை அடைந்துள்ளார். ஒரேவிடயத்தில் தமது எண்ணங்களைச் செலுத்தியவர்களே தலைசிறந்த விஞ்ஞானிகளாகியிருக்கின்றார்கள். எனவே, எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். சூரியனுடைய கதிர்களை ஒரு கண்ணாடி லென்ஸ் மூலம் குவிக்கும் போது ஒளிக்கதிர்கள் ஒன்றாக திரண்டு லென்ஸை ஊடுருவிச் சென்று எரிக்கின்ற நெருப்பாக மாறுகிறது. லென்ஸின் கீழே வைக்கப்பட்டிருக்கும் பஞ்சை எரித்துவிடுகின்றது. திரண்டு ஒரு நிலைப்படும் எண்ணம் உச்சத்தை அடையும். ஒரு செயல் வெற்றியடைய வேண்டுமானால் முழுமனத்தையும் செலுத்துவது, முழு ஆற்றலையும் ஒன்று குவிப்பது, முழு அறிவையும் புகுத்துவது போன்ற 3 திறன்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் வெற்றி கிட்டும்.

                      முதலில் ஒரு குறிக்கோளைத் தெரிவுசெய்ய வேண்டும். தன்னம்பிக்கையுடன் அக்குறிக்கோளைப் பிரார்த்தனை மூலம் ஒவ்வொரு நாளும் மனம் ஒன்றி;க் கேட்கும் போது மனதில் ஆழமான உறுதி ஏற்படும். பிரார்த்தனை என்ற பெயரில் எமது மனதிற்கு நாமே கட்டளையிடுகின்றோம் அல்லவா. இதன் மூலம் ஆழமாகக் குறிக்கோள் மனதில் பதியும். அப்போது முயற்சியில் மனம் ஒன்றி விடும். வாகனம் ஓட்டும் போது எப்படி மனம் ஒன்றி வாகனத்தைச் செலுத்துகின்றோம் அப்படியேதான். இந்த மனித உடலால் எதுவுமே செய்ய முடியாது. மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதனை வெற்றி கொள்ளுங்கள். வெற்றி என்பது நாம் விரும்பியதெல்லாம் வெற்றி கண்டு விடுவதல்ல. எம்முடைய தீமைகளைத் தீய எண்ணங்களைத் தீய ஆசைகளை தீய செயல்களை வெற்றி கொள்ள வேண்டும். வள்ளுவர் வழியில் தவம் என்னும் நூலிலும் தீய எண்ணங்களில் நின்று வெற்றி கொள்தல் மாபெரும் வெற்றி என்கிறார். இவையெல்லாவற்றையும் வென்றுவிட்டால், பிறரால் நாம் குறை கூறப்பட மாட்டோம். குறையில்லாமல் வாழுகின்ற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை. இவ்வாழ்க்கையுடன்,  நாம் கொண்ட ஒரு குறிக்கோளை நோக்கி மனம் ஒருமைப்பாட்டுடன் செல்லும் போது நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றி காணலாம்.  

                      குறிக்கோளை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், முயற்சி என்பது முழுமனதிலும் நிறைந்திருக்க வேண்டும்.முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்""முயற்சி திரிவினையாக்கும்" எனப்படுகின்ற பழமொழிகளை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், சந்தர்ப்பம் சூழ்நிலை சரியான முறையில் அமையாதுவிட்டால், எப்படி முயன்றாலும் "சாண் ஏற முழம் சறுக்குவது" போலவேதான் அமையும். எனவே சந்தர்ப்பம் சூழ்நிலையைச் சரியான முறையில் அமைத்துக் கொள்வது அவரவர் கடமையாகும். சூழ்நிலையை மாற்றியமைப்பதுவும் முயற்சியின் ஒரு வடிவமாகவே கருதப்படுகின்றது. சூழ்நிலையைச் சாதகமாக்கி சாதிக்க நினைக்கும் காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் முன்னேற வேண்டும். மனிதப் பரிணாமக்கோட்பாட்டின் தந்தை சார்ள்ஸ் டாவின் அவர்கள் தான் வாழ்ந்த சூழலைத் தன் ஆராய்ச்சிக்கு ஏற்ப மாற்றியமைத்தார். புழுவோடும் பூச்சிகளோடும் தன் வாழ்நாளைக் கழித்தார். பரிணாமக் கோட்பாட்டின் தந்தையானார்.

                       சூழ்நிலையில் பங்கம் வருகின்றபோது விதியை நோகின்றார்கள்.  அறிவாளிக்கு மதி பெரிது. முட்டாளுக்கு விதி பெரிது. விதி என்று எண்ணுகின்ற முட்டாள் கூடப் பிரார்த்தனை மூலம் "விதியை மதியால் வெல்லலாம்" என்று எண்ணுகின்ற போது பிரார்த்தனை முயற்சிக்குத் துணை செய்கின்றது. தினமும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்து பிரார்த்தனை செய்கின்ற போது மூளையானது அதனை நிமிடந்தோறும் ஏற்று குறிக்கோளை அடைவதற்கான வழிவகைகளை அடைவதற்கு ஆயத்தங்களைச் செய்யும். எனவே பிரார்த்தனை வெற்றிக்கான வழிகளைக் காட்டிவிடும்.

                     இத்தனையும் சாதகமாக அமைகின்ற போது உடல்நிலையை ஓரங்கட்டிவிட்டால், உடல் ஆரோக்கியம் குன்றி உடலும் உள்ளமும் செயலிழந்து போகும். நமது பழக்கவழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன.  கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகின்றபோது ஆரோக்கியமும் குன்றுகின்றது. எடுக்கின்ற முயற்சியில் முழுக்கவனமும் செலுத்த முடியாமல் போகின்றது. எண்ணங்கள் சிதறடிக்கப்படுகின்றன. வெற்றி மூழ்கடிக்கப்படுகின்றது. எனவே நல்ல பழக்கவழக்கங்களை கைக்கொள்ளும்போது எடுத்த இலட்சியத்தில் வெற்றி காணலாம். இதைவிட எம்மை அறியாமலே எமக்கு ஏற்படுகின்ற நோய்கள் கூட வெற்றிப்பாதையில் தடைக்கல்லாக அமைகின்றன. அதற்கு மனம் என்ற அங்குசத்தை ஆளுகின்ற சக்தியை யாம் பெற்றுக் கொள்ள வேண்டும். கணனி உலகில் அப்பிள் நிறுவனத்தை உருவாக்கி குறுகிய காலப்பகுதியில் உலகப்பிரசித்தி பெற்ற ஸ்ரீவ் ஜாப்ஸ் (Steve jobs) தன் உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால், வெற்றிப்பாதையின் இடையிலேயே வாழ்க்கையை இழந்தார். உலகம் ஒப்பற்ற விஞ்ஞானியை  இழந்தது. எனவே கண்ணுங்கருத்தும் வெற்றியை நோக்கியிருக்கும்போது சுகதேகியாக வாழவேண்டும் என்ற எண்ணமும் மனதில் மேலோங்கி நிற்க வேண்டும்.

                 எனவே இலக்கைத் தெரிவுசெய்யவேண்டும். அதன் முக்கியத்துவத்தை அறியவேண்டும். அந்த இலக்கை அடைய உறுதியாக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான வரைபடத்தை மூளையில் வரைந்து வைத்திருக்க வேண்டும். அதில் நம்பிக்கை வைத்தல் வேண்டும். நம்பிக்கையில் சூழ்நிலை, பிரார்த்தனை, உடல்நிலை, முயற்சி போன்றவற்றை  தெளிவான ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவந்து  முழுமனதையும் நமது இலக்கினுள் ஒருமுகப்படுத்தும்போது வாழ்க்கையில் 100 வீதம் வெற்றியை அடையலாம்.
           
            

         



    10 கருத்துகள்:

    1. முயன்றால் முடியும்; அருமையான கருத்து.

      பதிலளிநீக்கு
    2. பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
      விண்டுமி போனால் முளையாதாம்-கொண்டபேர்
      ஆற்றுலுடையார்க்கும் ஆகா தளவின்றி
      ஏற்ற கருமஞ் செயல்---என்றும் அவ்வை கூறிச் சென்றிருக்கிறார்.

      பதிலளிநீக்கு
    3. வாழ்கையில் வெற்றி பெற வேண்டிய வழிகளைப்பற்றிய நல்லதொரு அல்சல்.சிறப்பான கருத்துக்கள்.

      பதிலளிநீக்கு
    4. வாழ்க்கையில் வெற்றியடைய சொல்லப்பட்டுள்ள கருத்துக்களும் உதாரணங்களும் வெகு அருமை. பாராட்டுக்கள்.

      இதை முன்பே [என் இளம் வயதிலேயே] யாராவது எனக்கு எடுத்துச்சொல்லியிருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன் ! ;)))))

      பரவாயில்லை இப்போதாவது தங்கள் மூலம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சியே.

      அன்புடன்
      VGK

      பதிலளிநீக்கு
    5. அழகு தமிழில் ஆக்கம் அருமை. சிறந்த நல்வழிப்படுத்தல் கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்.!!!!

      பதிலளிநீக்கு
    6. அருமையான கருத்துக்கள் பல...

      சிறப்பான பகிர்வு...

      மிக்க நன்றி...

      பதிலளிநீக்கு
    7. தங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் அருள் கூர்ந்து நேரம் கிடைக்கையில் சென்று வாசிக்கவும் நன்றிகளுடன் மாலதி

      பதிலளிநீக்கு
    8. குறிக்கோளை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், முயற்சி என்பது முழுமனதிலும் நிறைந்திருக்க வேண்டும்

      அருமையான தன்னம்பிக்கை வரிகள்.. பாராட்டுக்கள்...

      தீபாவளித்திருநாள் வாழ்த்துகள் ..!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...