சுதன் சிந்திக்கும் முன்னே அவன் சிந்தனைகள் தேவியால் செயற்படுத்தப்பட்டுவிடும். ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும் ஓட்டம். எல்லோரும் வாழ்வதற்காய் உழைப்பார்கள். ஆனால் சுதன் தம்பதியினர் உழைப்பதற்காக வாழ்ந்தார்கள். உறவுகள் சேர்ந்தன. உள்ளங்கள் மகிழ்ந்தன. வாழ்க்கை இனித்தது. இம்மனைவியைப் பெற என் தவம் யான் செய்தேன் என்னுமாப்போல் சுதன் கழித்திருந்தான். கற்பனை மனைவி கைவந்தபின் என்ன கவலை சுதன் பெறப் போகின்றான்!
ஆனால், பிறர் பார்வைக்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்னும் எண்ணமே பலர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. அடுத்தவரைப் பார்த்து அதுபோல் நாமும் வாழவேண்டும் என்னும் பேராசையே மனிதனை ஒரு இடத்தில் தங்கவிடாது ஓடஓட அலையவிடுகின்றது. அதன் மூலம் மனிதன் மனஅழுத்தம் என்னும் நோயைச் சம்பாதிக்கின்றான்.
தாய்நாடு இலங்கை விட்டு புலம்பெயர்ந்து ஜேர்மனியில் புகுந்துவிட்டாலும் அயலவர் பார்வைக்கு தன் வாழ்வு உயர்வாய்த் தோன்ற வேண்டும் என்ற உள்ஊக்கம் சுதன் ஓய்வுக்குத் தடை போட்டது. அளவுக்கு மீறி சிக்கனமின்றி பணத்தைச் சேகரித்தாலும் அளவோடு சிக்கனமாய் ஒரு பிள்ளையைப் பெற்றான். தாய் தந்தை இருவர் உழைப்பிலும் மகன் செழிப்படைந்தான்.
அடிக்கடி தேவி சுதனைக் கேட்பாள். ``சுதன் எமக்கு எல்லாச் செல்வங்களையும் கொடுத்த கடவுள். பிள்ளைச் செல்வத்தில் மட்டும் சிக்கனத்தைக் கையாண்டுவிட்டாரே. ஒரு பெண் பிள்ளை இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்´´
``நிறைவான வாழ்க்கையை யார் பெற்றிருக்கின்றார்கள். ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு ஏக்கம் சொல்லமுடியாது ஒளிந்துதான் இருக்கும். ஆணுக்கு ஆணாக பெண்ணுக்குப் பெண்ணாக ராம் எங்களை சந்தோசப்படுத்தட்டும். அதில் திருப்தியை நாம் பெறுவோமே´´ என்று சுதன் தேவியை திருப்திப்படுத்துவான்.
உழைப்பை மட்டுமன்றி அன்பையும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதில் அளவுகணக்குப் பார்க்காத தேவி தன் மகனுக்கு அன்பை எப்படிக் கெடுத்திருப்பாள் என்று சொல்லவே தேவையில்லை. தாய்ப்பாசம் என்பது ஒருவகை மனஊற்று. உயிரினங்கள் அனைத்திற்கும் உரிய பற்று. அநுபவித்துப் பார்க்கும்போது ஓர் ஆச்சரியம். மனதைத் தாண்டி ஆழ்மனதில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பாசம். எதனையுமே மேலதிகமாகச் செய்யும் தேவி பாசத்தையும் மேலதிகமாகவே தெவிட்டாவண்ணம் மகனுக்குக் கொடுத்தாள்.
ஐரோப்பாவில் புதிதாய் எது நவீனமாய்த் தோன்றுகின்றதோ அது ஐரோப்பியநாடுகளில் நடைபயலும் முன்பே ராம் பயன்பாட்டில் பழையதாய்விடும். பியானோ, சங்கீதம், தாய்மொழி, ஐரோப்பியநடனம் அத்தனையும் அவனுக்குக் கற்றுத் தரப்பட்டது. ராம் ரசனையில் சொர்க்கமாய் சொந்தமாய் ஒரு வீடு. வேகமாய்ப் பறக்கும் ஒரு ஆடம்பரவாகனம். பெற்றோர் யந்திரமாய் உழைத்ததனால் மகன் இந்திரனாய் வாழ்ந்தான்.
பொதுவாக செல்லம் அதிகமாகக் கொடுத்து வளர்க்கும் பிள்ளை தறுதலையாவான் என்று சொல்வார்கள். ஆனால், இந்த முதுமொழி ராம் விடயத்தில் பொய்மொழி.
தொடரும்........
பிறர் பார்வைக்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலர் வாழ்வைத் தீர்மானிக்கின்றது.-
பதிலளிநீக்குமிக மோசமான இந்தப் பின்பற்றலால் பலர் வாழ்வு நாசமாகிறது என்பது சரியான உண்மை.
அப்படி ஒரு மனது எனக்கு இல்லையென்று மகிழ்கிறேன்.
கதை தொடரட்டும். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கதை நல்லாப்போகுது. Copy & Paste போட முடியாத தடை உள்ளதால், சிலவற்றை Highlight செய்து என்னால் பாராட்ட முடியவில்லை. இருப்பினும் ஒட்டுமொத்தப்பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅன்புடன் VGK
கதை நன்றாக செல்கிறது...
பதிலளிநீக்குமுடிவில் சொன்னது கொஞ்சம் வியப்பு தான்...
எப்படி போய் மொழியானது என்று தெரிந்துகொள்ள ஆவல்.
பதிலளிநீக்குகதை மாந்தர்கள் அறிமுகமும்
பதிலளிநீக்குஅவர்கள் குண நலத்தையும்
மிகச் சுருக்கமாக ஆயினும்
மிகத் தெளிவாக படிப்பவர்கள்
அறிந்து கொள்ளும்படி சொல்லிப்போனது
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
ஒரு பெண் குழந்தை ,அதுவும் முதலில் பிறந்தால் மிக நல்லதுதான். கதை சீராக செல்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் கெளரி,கதை மிகவும் நன்றாக செல்கிறது.தொடருங்கள் படுத்த பகுதியை ஆவலோடு எதிப்பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு