• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 22 ஏப்ரல், 2011

    உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்


    உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள் 
                                                      


    வாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை நோட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக 
         
           'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி
            சொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்டு
             சிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு 
             சிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''

    என உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 டிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா? எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.

                 முதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம், ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.

                 புத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அதேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும்? வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.v

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...