• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 25 ஏப்ரல், 2011

    கவிதை பாடலாம்


    ஓடிவந்து தலையணையில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுத மகளை அணைத்தெடுத்துக் காரணம் வினவுகின்றாள் தாய், ''அம்மா! நான் யாப்பருங்கலக்காரிகை கற்றேன், பரணி கற்றேன் கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். வெண்பாவிற்கு என் பா இணையில்லையென என் சொற்பா எடுத்துக்கவி பாடியிருந்தேன். ஆனால், கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள், ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதையா? கவிதை தருமமா? இதை நான் ஏற்க வேண்டுமா? என்று கலங்கித் தன் தோல்வியைத் தாங்க முடியாதவளாய், அழுது தீர்த்தாள். இதுதான் விடயமா? என்று சிரித்த தாயார், அவளைத் தடவியபடி,
        ' தலையிடி காய்ச்சல் வந்தால்
          தயவுடன் மருந்தைக் கேளாய்               
          மலையிலுள்ள கல்லைத் தூக்கித்
          தலையில் போட்டால்
          தலையிடி நின்று விடும்.'
          
         ' பைசாவைக் கொடுத்து
           நைசாக வாங்கிப்
           பையன்கள் ஊதும் பலூன்
           படார் படார்'
             
          ' உச்சியில் நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை
           குருத்தெடுத்த வாழை போல் கூனிக் குறுகி இருக்கார்'

    இவையெல்லாம் கவிதை போல் உனக்குத் தெரியவில்லையா? இங்கு உவமையில்லையா? எதுகையில்லையா? ஆனால் இதைப் பாடியவர் யாரென்று தெரியுமா? பாடசாலைப் படியை மிதிக்காத ஒரு பாமரன். என்றாள், தாயார். விக்கித்து நின்றாள், மகள்.
                     இதிலிருந்து என்ன தெரிகின்றது. ஆராரோ ஆரிவரோ தாலாட்டுப் பாடல் தொட்டு ஒப்பாரி அமங்கலப் பாட்டு வரை பாடல் மனித வாழ்வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. பாட்டுப் பாடும் புலவனும் தேடிப்பெறும் கரு வாழ்வில் கலந்து நின்று மிளிர்ந்து நிற்கும் நிகழ்வுக் கோலங்கள். விறகை வெட்டும் விறகு வெட்டியும், வெத்திலை உரலில் போட்டு வாய்சிவக்கக் கவிபாடும் எம்மூர் பாட்டியும் இன்னும் எமது மனக் கண்ணில் நின்று நிலைக்கும் கவிஞர்கள்.
                     கவிபாடக் காவியம் கற்றிருக்க வேண்டும், இலக்கணம் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். என்றெல்லாம் அவசியமில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும். கேள்வி ஞானமும், உணர்ச்சிப் பெருக்கும் கற்பனை வளமும் நிறைந்து விட்டால், மூளை கொட்டிக் கொண்டே இருக்கும், கவிதை பெருகிக் கொண்டே இருக்கும். இப்படித் தான் பாடவேண்டும் என்ற வரன்முறை கொண்டு பாடியிருந்தால், புதுக்கவி புனைந்து பாரதி இன்றுவரை எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்திருப்பாரா?
                     அந்நிய மொழியைத் தமிழ் மொழியில் கலந்து கவிதையின் சிறப்பைச் சீர்குலைப்பதாகப் பலர் கலங்குகின்றார்கள். மொழி எமது எதிhகாலத் தலைமுறையினரைச் சென்ற சேர வேண்டும் என்று அல்லும் பகலும் கண்முழித்துக் கட்டுரைக்கும் எமது முயற்சி என்னாவது. எமது தமிழை எமது தலைமுறையினர் நாடி வரவேண்டுமென்றால், இலகுபடுத்தல், விளங்கச் சொல்லல் அவசியம். அந்த விளக்கம் எங்கே கிடைக்கும்? அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா? அந்நியமொழி வாடை கண்ட அந்நியநாட்டார், அவ்வாடை கலந்திருக்கும் எம்மொழியையும் அறிய ஆவல் கொள்ளமாட்டாரா? அதைக் கற்க வேண்டும் என்ற ஆவலில் எம்மொழியயும் தொட்டுப் பாhக்க மாட்டாரா? அதில் மையல் கொள்ள மாட்டாரா? தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம் இல்லையா? சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா? அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது  நாம் ஏற்கவில்லையா? மணிப்பிரவாளநடை என்று நாம் இரசிக்கவில்லையா?
            


              '' வால வ்ருத்த குமார னெனச்சில
                  வடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே
                ஞாலநின்னை வியக்கு நயக்குமென்
                  நடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்
                பால லோசன பாநுவி லோசன
                  பற்ப லோசன பக்த சகாயமா
                கால காலத்ரி சூல கபாலவே
                  கம்ப சாம்ப கடம்ப வனேசனே'
    இது எப்படியிருக்கிறது. மணிப்பிரவாளநடை. மோழிக்கலப்பு ஏற்பட்டாலும் மொழி தனித்தன்மை இழக்கக் கூடாது. பிறமொழி எம்மொழியைக் கவர்ந்திழுக்கும் ஆளுமை பெறவேண்டும்.
                அடுத்து சொற்களைக் கவிச்சுவைக்கேற்ப பிரித்துச் சொல்லல், நீட்டிச் சொல்லல், போன்று சந்தத்திற்கேற்ப தன் சுதந்திரத்தைக் கையாள்வான் கவிஞன். இதற்காகவே அளபெடை இலக்கணத்தில் இடம்பெற்றது. இலங்கு என்பது பிரகாசம் எனப் பொருள் பெறும். ஆனால் பாட்டில் ஓசை குறையுமிடத்து அந்த ஓசையை நிறைத்தற் பொருட்டு இலங்ங்கு என்று ஒற்றளபெடை பயன்படுத்தல் மரபல்லவா? இதே போலவே ஐயா என்னும் சொல் அய்யா எனவும் ஒளவை என்னும் சொல் அவ்வை எனவும் வழங்கப் படுகின்றது. இந்த ஐ, ஒள என்னம் இரு சொற்களும் இலக்கணத்தில் போலி என்று அழைக்கப்படுகிறது. எனவே, அதுவும் கவிஞன் சுதந்திரம். அதுவே இலக்கணத்தில் இடம்பிடித்திருக்கின்றது.
                 இதைவிட இன்னுமொரு சர்ச்சை எம்மவரிடையே நடமாடுகின்றது. ஓருவர் பயன்படுத்திய சொல்லை, பொருளை வேறு ஒருவர் கையாளுகின்றார். என்பதே அது. இதுவே பலவித ஆராய்ச்சியின் பலனாக நான் கண்ட உண்மை என்னவென்றால்,
         ' கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
           என்ன பயனும் இல' என்னும் திருக்குறளை மனதில் பதித்த கம்பர், மாடத்திலே மலர்ப்பந்தாடிய சீதையையும் வீதியில் மாமுனியுடன் வந்து கொண்டிருந்த இராகவனையும் நோக்க வைக்கின்றார்.
           ''கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
            உண்ணவும் நிலை பெறார்.....||
                       என்னும் வரிகளைத் தொடுக்கின்றார். இதேபோல் கம்பரைக் கையாண்ட எமது கண்ணதாசனை நோக்கினால், கம்பர் ஓரிடத்தில் பயன்படுத்திய                               
             ''தோள் கண்டார் தோளே கண்டார்
               தொடுகழல் கமலமன்ன
             தாள் கண்டார் தாளேகண்டார்
               தடக்கை கண்டாருமஃதே '     என்னும் வரிகளைத்
               
                     ''தோள் கண்டேன் தோளே கண்டேன்
              தோளில் இரு விழிகள் கண்டேன்' என்று பயன்படுத்திப் பாடல் யாத்துள்ளார். இதேபோன்று ஆலயமணி என்னும் படத்திற்கு கண்ணதாசனிடம் ஒரு பாடல் கேட்கப்பட்டது. அவரும்.
                   'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
                   அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே –அந்த
                   தூக்கமும் அமைதியும் நானானால் ...' என்னும் பாடலை அனுப்பியிருந்தார் ஆனால்; முதல் கிழமை வாலி எழுதி அனுப்பியிருந்த பாடல் போல் இப்பாடல் காணப்பட்டிருந்தது. அது
           'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
            சாந்தம் உன் மனதில் நிலவட்டும் - அந்த
         தூக்கமும் சாந்தமும் நானாவேன்' அங்கு கண்ணதாசன் பாடலில் காணப்பட்ட அமைதி, வாலி பாடலில் சாந்தமானது நெஞ்சு மனதானது. இருவரின் எண்ணப் போக்கும் ஒன்றாயிருக்கிறதே எனக் கண்ணதாசனிடம் வினவியபோது, அவர் கூறிய பதில்  ஆ.மு.தியாகராஜபகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில் ''தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும். சாந்தம்
               உன் மனதில் நிலவட்டும்! – ஆகா. அந்தத்
               தூக்கமும் சாந்தமும் நானானால்' என்று தியாகராஜபகவதர் அவர்கள் கூறிய வசனமே இருவர் மனதிலும் நின்று நிலவியது என்பது தெரிய வந்தது.
                எனவே, கற்றது கருத்தில் நிறைந்தால் அது எப்போதோ கவிவரியாக வெளிவரும் அது தன்னையறியாமல் உணர்ச்சி வேகத்தில் கொட்டும் போது மூளையென்னும் பண்டகசாலையிலிருந்து பெருக்கெடுக்கும். இதுதான் ஒருவர் கையாண்ட பொருளை வேறொருவர் கையாள்வதன் காரணம்.
                                  நீண்ட விளக்கத்தைத் தன் மகளுக்கு வழங்கிய தாயார் இப்போது புரிகிறதா? யாரும் கவிபாடலாம் என்னும் கவிதை தருமம். என்று கூறி மெல்லச் சிரித்தாள்.

                                          
                  




                  





    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...