• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 29 ஏப்ரல், 2011

    ஞாயிறு மறையும் முன்...?


     ஞாயிறு மறையும் முன்...?




                                                         .
    தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான்.
    எனக்குள் உறைந்த என்னுயிரே!
    உன் தைரியத்திற்கு இம்மடல் பாடம் நடத்துகின்றது. பல்கலைக்கழகத்தில் நீ கற்கும் பாடங்கள் மனதின் பண்புகளை உனக்குக் கற்றுத்தரும் பாடங்களாய் இருக்க முடியாது. ஏக்கம் கொண்ட மனம் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பதில்லை. பால் கெட்டால் திரைந்துவிடும். நெய் கெட்டால் வயிற்றைப் பிரட்டும். நட்புக்கெட்டால் எல்லாமே தலைகீழாகிவிடும். பேயோடு பழகினும் பிரிவதரிதே. உன்னோடு பழகிய நான் உன்னைப் பிரிவது எப்படி? என் விழிகள் உன்னையே அதிகம் படம் பிடித்துள்ளன. ஏனெனில், நேரிலும் நிழற்படத்திலும் உன்னைத்தானே என் கருமணிகள் அதிகம் நேசிக்கின்றன. அதனால், ஏக்கத்தில் கூட என் கண்கள் கண்ணீரைச் சேகரித்ததில்லை. ஏனெனில் நீ நனைந்து குளிரடைவதை அவை விரும்பியதில்லை!
    ஒன்று சேர்ந்த அன்பு எங்களது. பாகப்பிரிவினை அதற்கில்லை. என்னோடு நீயிருக்கும் பொழுதுகள் உன் பெற்றோர் மற்றோர் உன் நினைவை விட்டு மறைந்த பொழுதுகள். மாற்றானை நீ மணம் முடிக்க என் மூச்சுக் காற்றே முன் நின்று உன்னைத் தடுத்துவிடும் என்பதை அறியாதவன் நான் இல்லை. நீ கணனிக்குள் அகப்பட்ட கவிதை அல்ல. என் மனதுக்குள் எழுதப்பட்ட கவிதை.
    பல்கலைக்கழகத்தில் நீ கற்று பதவி வகித்துப் பெறும் பலனை விடப் பல மடங்கு உன்னை என் இதயத்திலும் செல்வாக்கிலும் உயரத்தில் வைத்திருக்க முடியும். அந்தஸ்தில் குறைந்தவன் நான் இல்லை. சாதியில் சரிந்தவன், நானில்லை. உன்னை விட என்னால் கல்வியால் உயர முடியவில்லை. ஆனால், உன்னை விட என்னால் உழைப்பால் உயர முடியும். உன்னையும் என்னையும் இணைத்த அந்தக் காதலுக்குத் தடையென்ன வென்று என் மூளைக்கெட்டியவரை அறிய முடியாதவனாய் உள்ளேன்.
    "நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
    நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
    !
    ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
    ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
    !
    பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்
    !
    பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க.
    "
    என்று சென்ற நூற்றாண்டில் பாரதி புலம்பியும் இந்த நூற்றாண்டும் தொடர்கிறது காதலுக்கு சிவப்புக்கொடி. காதலுக்காகக் காதலர்கள் உயிர் துறந்த கதை கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்தப் பெற்றோராவது இறந்து விடுவோம்...! இறந்து விடுவோம்...!! என்று நச்சரித்ததைத் தவிர, எங்காவது இறந்த செய்தி கேள்விப்பட்டிருக்கின்றாயா?
    "நம்புபவனுக்கு எல்லாம் கைகூடும்” என்று பைபிள் கூறுகின்றது. ”நம்பிக்கை தான் நிஜங்களை உருவாக்குகிறது” என்று வில்லியம் ஜேம்ஸ் கூறியுள்ளார். பிரியமுள்ள பெற்றோர் உன் பிரிவைத் தாங்கார். பொறுத்தது பொன்னான நேரம். போதும் உன் அமைதி. நம்பிக்கையில் நாள் குறிப்போம். வருடங்கள் பல கடந்தும் வாழுகின்ற எம் காதல், வதுவை காணாது முடிவுறாது. நான் உரைத்த வார்த்தைகள் எல்லாம் நானாய் உரைத்தவை அன்று. எனக்குள் இருக்கும் நீயுரைக்கும் வார்த்தை என்பதை உணர்வாய்.
    திங்கள் பெண்ணாள் செவ்வாய் மலர்ந்து
    புதனன்று சந்திக்க வருஞ்செய்தி சொல்லாயோ?
    பூத்திருக்கும் புதுமலர் புனைந்தெடுத்து மாலையாக்கி
    மங்கலநாண் மகிழ்ந்தேத்த, வியாழனன்று நாள் குறித்து
    வெள்ளிக்கொலுசிட்டு வதுவைவினை முடித்து
    சனியன்று சடங்கு வைக்கும் செய்தி சொல்ல
    ஞாயிறு மறையுமுன் வந்துவிட மாட்டாயோ
    நாமிணையும் நற்செய்தி நம்பெற்றோர் செவிநுழைய.
    உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவன்
    சித்திரத்து ரோஜாவைச் சிறைப்பிடித்த
    உன் இதயக் காவலன்.
    கணனி மூலம் அக்கடிதம் அவள் கண்களுக்குச் சமர்ப்பணம் ஆகியதும் நிம்மதிப் பெருமூச்சுடன் காதல் தேவதைக்கு உள்ளத்து நன்றியைப் புன்சிரிப்புடன் உதிர்த்துவிட்டபடி படுக்கையில் சாய்ந்தான், சுதன்.
    குறிப்பு: பெற்றோர்களே! பூக்கள் மலரவேண்டும். மொட்டோடு கருகிவிடத் தீப்பந்தமாகாதீர்கள். 

    15.04.11 Kj;Jf;fkyk; ,izaj;jpy; ntspahdJ.


    செவ்வாய், 26 ஏப்ரல், 2011

    எது நிஜம்



                                                        கருவிழி மறைக்க இமையொன்று திரையிட்ட நாளென்ற திரைப்படம் முடிவடைகிறது. நீண்ட ஓய்வு தேடினும் சிலமணிநேரமாவது இறந்து மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரோட்டம். படபடவென்று செக்கன்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் கடிகாரமும் உண்மையான ஊழியனாய் மீண்டும் ராதிகா, உலகில் சஞ்சரிக்க உலுப்பிவிட்டது, அவள் உணர்வுகளை. திரையகற்றிச் சாளரத்தை மெல்லத் திறந்தாள். சத்திரத்து வாசல் பிச்சைக்காரனைப்போல் புகுபுகுவென்று உள்நுழைந்து சில்லிட்ட தென்றல்காற்று மனதுக்கு இதமான உணர்வை உணர்த்தியது. செய்தொழில் முடித்துத் தன் ஊதியத்தொழில் தொடங்க வீட்டைவிட்டுப் படியிறங்கினாள். சூரியனைக் கட்டிப்போட்டிருந்த இருள் தன்பிடியை மெல்லமெல்லத் தளர்த்தியது. 
                                ராதிகா, அவசரஅவசரமாகப் பேரூந்து நிலையத்தை அடைந்தாள். சத்தமின்றி அருகே ஊர்ந்து வந்த பேரூந்து தரித்து நின்று வாசலைத் தாராளமாகத் திறந்துவிட்டது. குபுகுபுவென்று உள்நுழைந்த எறும்புக்கூட்டமாம் சனநெருக்கடியுள் நுழைந்தவளுக்கு இருக்கை சந்தர்ப்பவசமாய் இடந்தந்தது. தன்முன்னே அமர்ந்திருந்த இருபருவக் குழந்தைகளின் முகத்தில் பட்டுத்தெறித்த அவள் பார்வை மீண்டும் சென்று அதில் ஒரு பளிங்குச் சிற்பத்தை விட்டகல முடியாவண்ணம் அப்பிக் கொண்டது. தேநீருக்குள் விழுந்த சீனிபோல் கரைந்து போனாள். புன்னகை புரியும் பாங்கில் புதியவள் முகத்தில் அந்நியோன்யம் நாடினாள். சிறகடிக்கும் இமையினுள் சிக்கிக்கொண்ட கருவிழிகள் பற்கள் இல்லாமலே சிரித்தன. ஓவியன்   கைப்படாத சித்திரம், சிற்பி வடிக்காத சிலை, ஆயிரம் கண்களை வசப்படுத்தும் அற்புத உடல்வண்ணம். அவள் தாயார் தங்கபஸ்பம் உண்டாளோ! கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித்தாளோ! பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ! இவ்வாறெல்லாம் மனதில் சிந்தனைகள், ராதிகாவின் மூளையில் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன. Nächste Haltestelle Merscheid தரிக்குமிடம் அறிவிக்கப்பட்டதும் அந்தப்பருவச்சிறுமியின் பார்வை சட்டென்று உள்வரவு  நுழைவிற்குப் பறந்தது. பேரூந்து நின்றது. ஆவலின் இறுதி ஓரம் தடுக்கிவிழ இறுக்கமானது, அவளின் உடலின் முகவரி. சிவந்தது கன்னங்கள், ஏங்கிய தாகம் தீராதவள் தோழியிடம் முறையிட்டாள். அவள் தோழி வரிகளில் வர்ணமிட்டாள். 
           கடுகதி என் நினைவு 
           காக்கவைப்பது உன் வரவு
           ஏங்கவைப்பது உன் பண்பு 
           இரங்கி நிற்குது என் காதல் 
    படபடவென்று தொலைபேசியில் இசைக்கருவி மீட்டுவது போல விரல்கள் ஆடிய நர்த்தனத்தில் விரைந்து சென்றது எஸ்.எம்.எஸ். யாரோ எழுதித் தாளமிட்ட கவிதைக்குத் தன் கற்பனையாமென கடைவிரிக்கும் கவிஞர்களை இக்கணம் சொப்பனம் கண்டாள், ராதிகா. சிலநிமிடங்களில் தலைவளைத்து விடைபெற்றபடி பேரூந்தை விட்டகன்றாள், அந்த அழகின் அவதாரம். 
                   காலச்சுழற்சியின் அடுத்தநாளும் அதேபேரூந்து அதே இருக்கை. அந்த சுந்தரப்பாவையின் சிநேகிதி தன்னுடைய சிரிப்பை எங்கோ தொலைத்திருந்தாள். முகத்தின் தசைகள் அவள் கட்டளைக்குள் கட்டப்பட்டிருந்தன. அவள் அருகே வந்த ராதிகாவும் உள்ளத்திடம் உத்தரவு கேட்காமலே மிக விரைவாக 'இன்று உங்கள் சிநேகிதி பாடசாலைக்கு விடுமுறை எடுத்து விட்டாளா?' 'இல்லை அவள் இனிமேல் வரமாட்டாள்' நேற்றுப் பிற்பகல் ஒரு விபத்தில் இறந்து விட்டாள்' மின்சாரம்தாக்கியது போன்று ஒருகணம் நாடிநரம்புக்குள்; இரத்தம் அத்தனையும் ஒன்றாக அதிவேக வெப்பத்தில் கொதித்தெழுந்தன. திடீரென்று சூரியகிரகணம் வந்துவிட்டது போன்று உணர்வுகள.; அனைத்தும் இருண்டு போயின. ஒருநாள் இதயம் முழுவதும் ஆச்சரியமாகி மறுநாள் இதயத்தைப் பிழிந்தெடுத்துப் போன அந்தப்பருவப் பெண்ணை எண்ணிஎண்ணிக் கலங்கினாள்,ராதிகா.
                    எது நிஜம். அவள் இரம்மியம் நிஜமா? அவள் காதல் நிஜமா? அவள் கல்வி நிஜமா? இல்லை அவளைப் படைத்ததுதான் நிஜமா? அவள் வாழ்க்கைதான் நிஜமா? எதுவும் நிஜமில்லை என்று அறிந்தபின்னும் நமக்குள்ளே போட்டிகளும் பொறாமைகளும், மறைமுகப்பேச்சுகளும், இதயத்தை வெட்டிப்பிழியும் வார்த்தைகளும், காலம் கடந்தும் தொடர்ந்தே வாழ்வோம் என்ற இறுமாப்புப் பேச்சுகளும் தற்பெருமையும் கொண்டு மனிதன் வாழும் வாழ்க்கைக்கு இவளின் மறைவும் ஒரு எடுத்துக்காட்டு.


    திங்கள், 25 ஏப்ரல், 2011

    உயிர்கள் தேடி



    ஒவ்வொருவர் கைகள் மேலும் கைகள் வைக்கப்பட்டன. கைகளை இறுகப்பற்றினர். ''மனத்தைரியம் கொள்ளுங்கள். துணிந்தோம் செயலில் இறங்குவோம் நெஞ்சு பஞ்சு போலுள்ள கோழை யாராவது இருந்தால், கைகள் விலகட்டும். அறுவராய் நாங்கள் கோழைகள் அல்ல என்று நிருபித்தபடி அந்த தோட்டத்தினுள் தனியாய் அமர்ந்திருக்கும் ஒரு வீட்டினுள் நுழைந்தனர் நண்பர்கள். கையில் வெள்ளைக் கடதாசி அத்துடன் ஒரு கண்ணாடிக்குவளை இருந்தது. கதவை இறுகச் சாத்தினான் ஒருவன். கடதாசியில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டன. அதன்மேல் கண்ணாடிக்குவளை வைக்கப்பட்டது. அக்குழாமில் ஒருவன் தந்தை இறந்து 6 மாதங்களே ஆகியிருக்க வேண்டும். அவரை அழைத்து உரையாடத் துணிந்தார்கள் நண்பர்குழாம். கேள்விகள் தொடுக்கப்பட்டன. கண்ணாடிக்குவளை அசைவு கண்டது. சொல்லும் உளமும் துணிவானால், துணிந்து இறங்கு செயலினிலே. உள்ளத்தெளிவு இல்லையெனில் ஒதுங்கிச் செயலை விட்டுவிடு. மனமென்ற ஒன்று வடிவின்றி உடலுள் இணைந்தது. அது உரமாகப் பதியாது நின்றால், உருவாகும் தவறான நிலை. திடீரென கதவு திறந்த அடித்து மூடியது. நிலைகுலைந்தனர் அவ் இளைஞர்கள். தவறி விழுந்து உடைந்து சிதறியது கண்ணாடிக்குவளை. குரலில் மாற்றம் கண்டவரும் உணர்வில் மாற்றம் கண்டவரும் நிலையது கண்டு அனைவரும் பதறியடித்து வீடு நோக்கிப்பறந்து சென்றனர். செயலின் உண்மைதேடி விரிந்தது மனம். 
                           திடீரென ஏற்படும் அதிர்ச்சி குரலில் மாற்றத்தைக் கொண்டுவரும். இல்லை மனிதனை ஊமையாக்கிவிடும். இது உண்மை. இறந்தவர் உண்மையாகவே ஆவியாகவே வந்திருந்தால் அவர் ஆவியாகத்தான் வர வேண்டும் என்று அவசியம் இல்லையே. கணனி, தொலைக்காட்சி, வானொலி பழுதானால் திருத்தம் செய்து பழையநிலைக்குக் கொண்டுவந்துவிடுவோம் எமது உடலைப்போலே. அப்படி முடியாது போனால், அவற்றை வீசி எறிந்துவிடுவோம். வைத்திருந்து அழகு பார்க்க மாட்டோம். அவற்றின் உயிரான மின்சாரத்தின் உருவத்தைக் காட்டமுடியுமா? அதேபோல்த்தான் வாகனம் இயங்க அதற்கு ஆதாரமான இயக்கசக்தியை யாராலும் காட்டமுடியுமா?  அவ்வாறே உடலினுள் இருந்து உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிர் சக்தியைக் காட்டமுடியுமா? பொருத்தமான உடலினுள் புகுந்து கொண்டு ஆட்சிசெய்யும் அந்த உயிரானது அந்த உடல் தனக்குச் சௌகரியம் அற்றதாக இருக்கும் நிலையில் அந்த உடலினுள் இருந்து வெளியேறிவிடுகின்றது. திரும்பவும் அந்த உடலினுள் புகும் சக்தியை அந்த உடல் இழந்துவிடுகின்றது. உடலற்ற அந்த உயிரை எப்படி நாம் காணமுடியும். வெறும் காற்றுக்கு மூளையின்றி உடலெங்கெ உறவெங்கே புரியப் போகின்றது. வெறும் பொருட்களுடன் உடலை ஒப்பிட முடியுமா என்று சர்ச்சை நம்மவர்களிடம் எழலாம். ஏன் மனிதனும் ஏதோ ஒன்றாய் ஆரம்பத்தில் உருவாகியிருக்கக் கூடாது? திடீரென ஏற்படும் தும்மலின் போது எமது இதயம் ஒருமுறை நின்று தொழிற்படுவதாக ஆராய்ச்சியின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை எப்போதோ அறிந்த எம்மவர் தும்முகின்றபோது 100 என்று கூறுகின்றார்கள். அதாவது 100 வருடங்கள் வாழவேண்டும் இதயம் நின்று விடக்கூடாது என்பதற்காகவே. இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்றைய விமானம் அன்றைய புஷ்பவாகனம். இன்றைய அணுவாயுதம், அன்று பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நாகாஸ்திரம் போன்ற ஆயுதங்கள். இன்றைய தொலைக்காட்சி அன்று அப்பர் சுவாமிகள் கண்டு இரசித்த கைலைக்காட்சி. (எங்கோ நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிகளை எமது வீட்டினுள் இருந்த வண்ணம் நாம் கண்டு கழிக்கின்றோம் அல்லவா! அதேபோல் எங்கோ இருக்கும் கைலையை நேரே கண்டு அப்பர் சுவாமிகள் இரசித்தார் அல்லவா) இன்றைய வானவியலாளர்கள் தொலைநோக்கிக் கருவிகள் மூலம் கண்டறிகின்ற நட்சத்திரக் கூட்டங்கள் அன்று ஞானிகள் ஞான சிருஷ்டியின் மூலம் கண்டறிந்ததாக இருக்கின்றது. இவ்வாறு நோக்கும் போது அதி மீத்திறனுள்ள புத்தி ஜீவிகள் வாழ்ந்து அழிந்து இப்போதுள்ள மனித இனம் தோன்றியிருக்கலாம். இது வளர்ந்து கொண்டு செல்லும் நிலையே இப்போது நாம் காணும் சந்ததி வளர்ச்சி நிலை. 


                 மீண்டும் தொட்டதற்கே வருகின்றேன். டைனோசோரியா இனம் வாழ்ந்து மடிந்து பல கோடி ஆண்டுகளாகி விட்டன. அதேபோல் முதல் மனிதனை ஆக்கிய இனம் அல்லது அந்த அது ஏன் அழிந்திருக்க மாட்டாது. ஏன் மனித இனமும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கக் கூடாது. அழிந்த, இறந்த, இல்லாமல் போன எதையும் தேடுவதிலோ, சிந்திப்பதிலோ எந்த பிரயோசனமும் இல்லை. போனது போனதுதான்..சிந்திக்கச் சில வரிகள் தந்தேன். உயிர் தேடி அலையும் உறவுகளுக்காக.



                                                          

    எண்ணமும் வாழ்வும்



                                                அது ஒரு வியத்தகு உலகம். ஆண்டவனின் அற்புதப் படைப்பு. இயற்கையே அதற்குத் தீனி போடும். அங்கு விருந்தாளிகளே மனிதர்கள். பூமியைப் போர்த்திவிட்ட பச்சை ஆடையில் விலங்குகளின் இராட்சியம். விருட்சங்கள் பரந்து விரிந்து விண்ணிலிருந்து ஆதவன் மண்ணைத் தடவத் தடை போட்டிருந்தன. விருட்சங்களை முத்தமிடும் மேகங்கள், விண்ணுக்குச்செய்தி சொல்ல விரைந்து கொண்டிருக்கும். கீச்சிடும் குருவிகளின் சங்கீதக் கச்சேரிக்குச் சல்லரி தட்டும் நீரருவிகள், கானகத் தெருவிற்கு வெள்ளைத் தெரு போட்டிருந்தன. மழையின் பின் விடுபட்டுக் கோடையின் மகிழ்ச்சிக் குதூகலிப்பில் தம்மை மறந்து பாடல் இசைத்துப் பறந்து கொண்டிருக்கும் அந்தப் பறவைகளைக் காணக் கானகம் நோக்கித் தொலைநோக்கியுடன் நாளும் வரும் விருந்தாளி, சிமோன்.
          சிமோனுக்குப் படைக்கப்படும் விருந்து காதினிக்கப் பாடும் பறவைகள். கண்குளிர அவை பறக்கும் காட்சிகள். கொதித்துக் கொண்டே வடிந்தோடும் பாலோடையின் அருகேதான் கச்சேரி கேட்க ஒதுங்குவான். அவனுக்கு வருமானம் நாட்டில். பிடிமானம் காட்டில். உழைக்கும் நேரம் தவிர அவன் உல்லாசம் காண்பது, இவ்வுலகில்தான். மலைகளில் ஏறிஏறி அவன் கால்கள் தேடுவதும், இப்பறவைகளைத்தான். உறங்கும் நேரம் கூட அவன் கட்டிக் கொண்ட படுப்பது, தலையணையல்ல. பறவைகள் பற்றிய புத்தகமே. அவனது நீண்ட கால்கள் நாரைக் கொக்கை நினைவுபடுத்தும். நீண்ட மூக்கு பறவைகளின் சொண்டுக்கு விளம்பரம் செய்யும். அமைதியாக அங்குமிங்கம் பார்த்துக் கொண்டிருந்து ஓரிரு வார்த்தைகள் பேசும் பாங்கு, பறவைகள் தலையைத்திருப்பித் திருப்பிப் பார்த்து இடையில் ஒரு தடவை கீச்சிடும் அந்தச் செயலைப் படம் பிடித்துக் காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கைவிரல்களும் கால்விரல்களும் மெல்லமெல்ல குவிவடைந்து வளைந்து பறவைகளின் பாதங்கள் போலவே மாறிக் கொண்டே வருகின்றன. உன் எண்ணத்திற்கு    நாளும் நீ என்ன தீனிபோடுகின்றாய்? என்று வினாவினேன். பறவை, பறவை, பறவை. அப்படி என்ன சுகம் அதில் காண்கின்றாய்? என்றேன். பார்ப்பது சுகம், அது பறப்பது சுகம் அதன் உருவம் சுகம், உணர்வு சுகம் என்று அவன் சுகங்களைச் சுவையொடு சொன்னான். அதனால் மெல்லமெல்ல அதுவாக மாறுகின்றான்.
                    மனிதனின் எண்ண அலைகளே அவனை ஆட்டிப்படைக்கின்றன. இது கண்கூடாக் கண்ட ஒரு அத்தாட்சி. எண்ணங்கள் பிற உயிர்களிடம் ஏதோ ஒரு தனிச்சக்தியாகப் பரவுகின்றன. அது காந்த சக்தி கொண்டது. மனோதத்துவ நிபணர்கள் கூற்றுப்படி உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகத்தான் மனிதன் இயங்குகின்றான். என்றும் சந்தோஷமான மனநிலையுடைய ஒருவன் முகம் செழிப்புடனும், கவலையுடனும் மனவருத்தத்துடனும் இருக்கும் ஒருவனின் தோற்றம் வாடிவதங்கிய செடிபோல் இருப்பதையும் கணுகூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. எமது எண்ணத்தின் படியேதான் வாழ்க்கை அமைகின்றது. எண்ணம் ஒருவனின் உடல் அமைப்பையே மாற்றும்போது உளஅமைப்பை மாற்றாமலா விடப்போகின்றது. பெண்வேடம் போட்ட அமெரிக்க நகைச்சுவை நடிகர், Philip Wilson இவ்வேடம் தன்னுடைய Personality ஐ மாற்றிவிடுவதாகக் கூறி அவ்வேடம் போடுவதையே  விட்டுவிட்டார்.                                                                                                                                                                                                                  
              எனவே  நாம் மனதில் எதை எண்ணுகின்றோமோ அப்படியே ஆகிவிடுகின்றோம். எண்ணமென்பது உயர்வானால், அது வாழ்வை உன்னதமாக உயரவைக்கும். நல்லதையே எண்ணுவோம் நல்லவராய் வாழ்வோம்.




    கவிதை பாடலாம்


    ஓடிவந்து தலையணையில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுத மகளை அணைத்தெடுத்துக் காரணம் வினவுகின்றாள் தாய், ''அம்மா! நான் யாப்பருங்கலக்காரிகை கற்றேன், பரணி கற்றேன் கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். வெண்பாவிற்கு என் பா இணையில்லையென என் சொற்பா எடுத்துக்கவி பாடியிருந்தேன். ஆனால், கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள், ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதையா? கவிதை தருமமா? இதை நான் ஏற்க வேண்டுமா? என்று கலங்கித் தன் தோல்வியைத் தாங்க முடியாதவளாய், அழுது தீர்த்தாள். இதுதான் விடயமா? என்று சிரித்த தாயார், அவளைத் தடவியபடி,
        ' தலையிடி காய்ச்சல் வந்தால்
          தயவுடன் மருந்தைக் கேளாய்               
          மலையிலுள்ள கல்லைத் தூக்கித்
          தலையில் போட்டால்
          தலையிடி நின்று விடும்.'
          
         ' பைசாவைக் கொடுத்து
           நைசாக வாங்கிப்
           பையன்கள் ஊதும் பலூன்
           படார் படார்'
             
          ' உச்சியில் நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை
           குருத்தெடுத்த வாழை போல் கூனிக் குறுகி இருக்கார்'

    இவையெல்லாம் கவிதை போல் உனக்குத் தெரியவில்லையா? இங்கு உவமையில்லையா? எதுகையில்லையா? ஆனால் இதைப் பாடியவர் யாரென்று தெரியுமா? பாடசாலைப் படியை மிதிக்காத ஒரு பாமரன். என்றாள், தாயார். விக்கித்து நின்றாள், மகள்.
                     இதிலிருந்து என்ன தெரிகின்றது. ஆராரோ ஆரிவரோ தாலாட்டுப் பாடல் தொட்டு ஒப்பாரி அமங்கலப் பாட்டு வரை பாடல் மனித வாழ்வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. பாட்டுப் பாடும் புலவனும் தேடிப்பெறும் கரு வாழ்வில் கலந்து நின்று மிளிர்ந்து நிற்கும் நிகழ்வுக் கோலங்கள். விறகை வெட்டும் விறகு வெட்டியும், வெத்திலை உரலில் போட்டு வாய்சிவக்கக் கவிபாடும் எம்மூர் பாட்டியும் இன்னும் எமது மனக் கண்ணில் நின்று நிலைக்கும் கவிஞர்கள்.
                     கவிபாடக் காவியம் கற்றிருக்க வேண்டும், இலக்கணம் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். என்றெல்லாம் அவசியமில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும். கேள்வி ஞானமும், உணர்ச்சிப் பெருக்கும் கற்பனை வளமும் நிறைந்து விட்டால், மூளை கொட்டிக் கொண்டே இருக்கும், கவிதை பெருகிக் கொண்டே இருக்கும். இப்படித் தான் பாடவேண்டும் என்ற வரன்முறை கொண்டு பாடியிருந்தால், புதுக்கவி புனைந்து பாரதி இன்றுவரை எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்திருப்பாரா?
                     அந்நிய மொழியைத் தமிழ் மொழியில் கலந்து கவிதையின் சிறப்பைச் சீர்குலைப்பதாகப் பலர் கலங்குகின்றார்கள். மொழி எமது எதிhகாலத் தலைமுறையினரைச் சென்ற சேர வேண்டும் என்று அல்லும் பகலும் கண்முழித்துக் கட்டுரைக்கும் எமது முயற்சி என்னாவது. எமது தமிழை எமது தலைமுறையினர் நாடி வரவேண்டுமென்றால், இலகுபடுத்தல், விளங்கச் சொல்லல் அவசியம். அந்த விளக்கம் எங்கே கிடைக்கும்? அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா? அந்நியமொழி வாடை கண்ட அந்நியநாட்டார், அவ்வாடை கலந்திருக்கும் எம்மொழியையும் அறிய ஆவல் கொள்ளமாட்டாரா? அதைக் கற்க வேண்டும் என்ற ஆவலில் எம்மொழியயும் தொட்டுப் பாhக்க மாட்டாரா? அதில் மையல் கொள்ள மாட்டாரா? தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இது ஒரு சந்தர்ப்பம் இல்லையா? சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா? அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது  நாம் ஏற்கவில்லையா? மணிப்பிரவாளநடை என்று நாம் இரசிக்கவில்லையா?
            


              '' வால வ்ருத்த குமார னெனச்சில
                  வடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே
                ஞாலநின்னை வியக்கு நயக்குமென்
                  நடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்
                பால லோசன பாநுவி லோசன
                  பற்ப லோசன பக்த சகாயமா
                கால காலத்ரி சூல கபாலவே
                  கம்ப சாம்ப கடம்ப வனேசனே'
    இது எப்படியிருக்கிறது. மணிப்பிரவாளநடை. மோழிக்கலப்பு ஏற்பட்டாலும் மொழி தனித்தன்மை இழக்கக் கூடாது. பிறமொழி எம்மொழியைக் கவர்ந்திழுக்கும் ஆளுமை பெறவேண்டும்.
                அடுத்து சொற்களைக் கவிச்சுவைக்கேற்ப பிரித்துச் சொல்லல், நீட்டிச் சொல்லல், போன்று சந்தத்திற்கேற்ப தன் சுதந்திரத்தைக் கையாள்வான் கவிஞன். இதற்காகவே அளபெடை இலக்கணத்தில் இடம்பெற்றது. இலங்கு என்பது பிரகாசம் எனப் பொருள் பெறும். ஆனால் பாட்டில் ஓசை குறையுமிடத்து அந்த ஓசையை நிறைத்தற் பொருட்டு இலங்ங்கு என்று ஒற்றளபெடை பயன்படுத்தல் மரபல்லவா? இதே போலவே ஐயா என்னும் சொல் அய்யா எனவும் ஒளவை என்னும் சொல் அவ்வை எனவும் வழங்கப் படுகின்றது. இந்த ஐ, ஒள என்னம் இரு சொற்களும் இலக்கணத்தில் போலி என்று அழைக்கப்படுகிறது. எனவே, அதுவும் கவிஞன் சுதந்திரம். அதுவே இலக்கணத்தில் இடம்பிடித்திருக்கின்றது.
                 இதைவிட இன்னுமொரு சர்ச்சை எம்மவரிடையே நடமாடுகின்றது. ஓருவர் பயன்படுத்திய சொல்லை, பொருளை வேறு ஒருவர் கையாளுகின்றார். என்பதே அது. இதுவே பலவித ஆராய்ச்சியின் பலனாக நான் கண்ட உண்மை என்னவென்றால்,
         ' கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
           என்ன பயனும் இல' என்னும் திருக்குறளை மனதில் பதித்த கம்பர், மாடத்திலே மலர்ப்பந்தாடிய சீதையையும் வீதியில் மாமுனியுடன் வந்து கொண்டிருந்த இராகவனையும் நோக்க வைக்கின்றார்.
           ''கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
            உண்ணவும் நிலை பெறார்.....||
                       என்னும் வரிகளைத் தொடுக்கின்றார். இதேபோல் கம்பரைக் கையாண்ட எமது கண்ணதாசனை நோக்கினால், கம்பர் ஓரிடத்தில் பயன்படுத்திய                               
             ''தோள் கண்டார் தோளே கண்டார்
               தொடுகழல் கமலமன்ன
             தாள் கண்டார் தாளேகண்டார்
               தடக்கை கண்டாருமஃதே '     என்னும் வரிகளைத்
               
                     ''தோள் கண்டேன் தோளே கண்டேன்
              தோளில் இரு விழிகள் கண்டேன்' என்று பயன்படுத்திப் பாடல் யாத்துள்ளார். இதேபோன்று ஆலயமணி என்னும் படத்திற்கு கண்ணதாசனிடம் ஒரு பாடல் கேட்கப்பட்டது. அவரும்.
                   'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
                   அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே –அந்த
                   தூக்கமும் அமைதியும் நானானால் ...' என்னும் பாடலை அனுப்பியிருந்தார் ஆனால்; முதல் கிழமை வாலி எழுதி அனுப்பியிருந்த பாடல் போல் இப்பாடல் காணப்பட்டிருந்தது. அது
           'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
            சாந்தம் உன் மனதில் நிலவட்டும் - அந்த
         தூக்கமும் சாந்தமும் நானாவேன்' அங்கு கண்ணதாசன் பாடலில் காணப்பட்ட அமைதி, வாலி பாடலில் சாந்தமானது நெஞ்சு மனதானது. இருவரின் எண்ணப் போக்கும் ஒன்றாயிருக்கிறதே எனக் கண்ணதாசனிடம் வினவியபோது, அவர் கூறிய பதில்  ஆ.மு.தியாகராஜபகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில் ''தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும். சாந்தம்
               உன் மனதில் நிலவட்டும்! – ஆகா. அந்தத்
               தூக்கமும் சாந்தமும் நானானால்' என்று தியாகராஜபகவதர் அவர்கள் கூறிய வசனமே இருவர் மனதிலும் நின்று நிலவியது என்பது தெரிய வந்தது.
                எனவே, கற்றது கருத்தில் நிறைந்தால் அது எப்போதோ கவிவரியாக வெளிவரும் அது தன்னையறியாமல் உணர்ச்சி வேகத்தில் கொட்டும் போது மூளையென்னும் பண்டகசாலையிலிருந்து பெருக்கெடுக்கும். இதுதான் ஒருவர் கையாண்ட பொருளை வேறொருவர் கையாள்வதன் காரணம்.
                                  நீண்ட விளக்கத்தைத் தன் மகளுக்கு வழங்கிய தாயார் இப்போது புரிகிறதா? யாரும் கவிபாடலாம் என்னும் கவிதை தருமம். என்று கூறி மெல்லச் சிரித்தாள்.

                                          
                  




                  





    வெள்ளி, 22 ஏப்ரல், 2011

    வாழ்ந்து ஓய்ந்தோர் இல்லம்


          பெற்றோர் முதிர்ந்த அழகு வடிவம் காணக் காத்திருக்கும் எத்தனையோ அவர் இரத்தங்களிடையே நானும் ஒருத்தி. தங்கள் கடமை முடிய கடைத்தேறிய பெற்றோர்களிடையே உலக வாழ்க்கை அத்தனையும் அநுபவித்துப் பூரண வாழ்வு கண்ட பெருமையுடன், தன் வாரிசுகள் வாழ்வின் மகிழ்வுக்கு வழிவிட்டு, ''வாழ்ந்து ஓய்ந்தோர் இல்லம்' அதில் ஓர் தாய். வாழ்வின் கணக்கைத் தெரியப்படுத்தும் அநுபவ வரிகள் முகத்தில். எடுத்த உணவில் அரைப்பகுதி வாயினுள் மீதி தரையில். தள்ளாடும் பாதங்கள் குழந்தைத் தளிர்நடைப் பருவத்தை நினைவுபடுத்தும். மழலைமொழியாய் அறளை மொழி. குழந்தைச் சிரிப்பு. வாழ்க்கை வட்டத்தில் மீண்டும் மழலையாய். தொடர்கின்றாள் வாழ்வை. 
                                      
                                               குடும்பச்சுமை சுமக்கும் மருமகளின் தொழிலுக்குத் தன் பாரம் இடையூறாய் இருத்தல் தவறு. படுத்த படுக்கையை நனைத்து விட்டால் மெத்தையைச் சுத்தம் செய்யத்தான் முடியுமா? நாள் குறித்து நகரசபை வாகனத்திற்கு ஒப்படைக்கும் வரை வீட்டினுள் துர்நாற்றத்தைச் சுவாசிக்க வேண்டுமல்லவா? தான் தாங்கிய பிள்ளை தன்னைத் தாங்கி முகம் சுளிக்க வழிவிடாது, தனக்காய்த் தன் உழைப்பில் ஒருபகுதியை மனநிறைவுடன் முதியோர் இல்லத்திற்குச் செலுத்தி தன் சுத்தம் பேணிச் சுகம் நாடி, அழகு முதியவளாக்கி, தன்னை அடிக்கடி வந்து பார்த்து, தன் விருப்பும் தன் மகன் விருப்பும் இணைந்த நாளில் மகன் மனையில் மகிழ்வுடன் சுவாரஸ்யம் அநுபவிக்கும்  அந்தத் தாய், மெச்சுகிறாள், தன் மகனை. பாலர் பாடசாலைகளில் இருந்து அழைத்துவரப்படும், சுட்டிப் பயல்கள் சுதந்திரத்திற்கு தடையின்றி. அவர்களின் குறும்புகளை அடிக்கடி இரசிக்கின்றாள். முதியோர் இல்லத்தாதிமாரின் முகம் சுளிக்காத பணிவிடையில் அமைதியும் சாந்தமும் காண்கின்றாள். அடிக்கடி மகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுகின்றாள். முறையாய் வளர்த்த தன் மகனின் சிறப்பான வாழ்வு கண்டு தேவையின்றி அவர் குடும்ப வாழ்வில் தனது தலையை நுழைக்காது பூரித்து நிற்கின்றாள். பிள்ளைகளைப் பிரியவில்லை.  பிரிவுத் துயரும் அவளுக்கில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. தன்னைக் கண்டு முகம் சுளிக்கவும் யாருமில்லை. தாய் வேண்டுமென்று ஓடிவரும் தன் பிள்ளைகளைத் தழுவுகின்றாள். நேரமில்லாது  ஓடித்திரிந்து ஓயாது உழைக்கும் தன் மகன் குடும்பத்திற்கு, தடையாய் அவள் முதுமை வாழ்வு முகம் சுளிக்கவில்லை.  அநுபவித்து முடித்த வாழ்வின் அமைதியான காலப்பகுதியை துயரின்றித் தொடரும் அத் தாய் போல் வாழும் பாக்கியம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்.........

    உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்


    உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள் 
                                                      


    வாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை நோட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக 
         
           'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி
            சொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்டு
             சிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு 
             சிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''

    என உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 டிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா? எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.

                 முதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம், ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.

                 புத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அதேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும்? வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.v

    அன்புக்கு வரையறை தான் ஏது





     மாரிக் குளிரில் வாடித் தத்தம் இல்லங்களில் பதுங்கியிருந்த மக்களெல்லாம்ரூபவ் புற்றீசல் போல் கோடைவெயிலில் குதூகலமாய் அரைகுறை ஆடையில் வீதியெங்கும் விழாக்கோலம்.. விரல்கள் விறைக்கக் காற்சட்டைப் பையினுள் பதுக்கிய கைகளுடன் ஒடுங்கிச் சென்றவர்கள் உதறிய கைகளுடன் நிமிர்ந்த நடையுடன் ஹாயான பரபரப்பு. ஐஸ்கடையில் நிரம்பி வழிந்த மக்களுள் ஒருவளாய் அழகாகத் தன் வளர்ப்புத் தாயுடன் அமர்ந்திருந்தாள் லிசி.தலைமயிர் கோதிவிடப்பட்டு அழகான ரிபனால் கட்டப்பட்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் கண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது சூரியக் கதிரைத் தணிக்கும் கண்ணாடி அணிந்திருந்தாள். முத்துக்கள் வேலைப்பாடமைந்த போர்வை அவள் அழகை மேம்படுத்தியிருந்தது. அவள் அழகில் கவரப்பட்டவளாய் அவளருகே சென்று வளர்ப்புத் தாயிடம் ஹாய் சொல்லியபடி ஒரு இருக்கையில் அமருகின்றேன். அவளது தலையைத் தடவி விட்டபடி நாடியைப் பிடித்தேன். கருணைக் கண்களால் என்னை ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பி விட்டாள். பார்வையின் கனிவு வளர்ப்பின் தன்மையைப் பறைசாற்றியது. லிசி கை கொடுக்கவில்லையா எனத்தாயார் கேட்டவுடன் தனது கையை என்னிடம் நீட்டினாள். பதிலுக்கு நானும் கைகொடுத்த வண்ணம் தாயாரிடம் கேட்டேன். எத்தனை வருடங்களாக உங்கள் அணைப்பில் இவள்ரூபவ் என்றேன். 5 வருடங்களாக என் வாழ்க்கையே இவள் தான். இவள் என் வார்த்தையை மீறியதே இல்லை. என் காலடியே தஞ்சம் என்றிருப்பாள். அவளுக்கு நான் எனக்கு அவளென்றே வாழ்கின்றோம். நானும் நோய் கண்டு விட்டேன். எனக்குப் பின் யார்தான் இவளைக் கவனிப்பார்களோ? எனது சொத்துக்கள் எல்லாம் இவளுக்காய்ப் பதியப்பட்டு விட்டது. நானில்லாவிடினும் என் சொத்துக்காய் இவளைப் பராமரிக்கப் போட்டா போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அவள் வாழும் வரை வசதியாக வாழ வேண்டும். என்று கூறி ஐஸை அவளிடம் நீட்டினாள். லிசியும் லாவகமாக ஐஸைச் சாப்பிட்டாள். அவர்களிடம் இருந்து விடைபெற நான் எத்தனித்த போது அந்தச் செல்வச் சீமாட்டியும் auf wieder sehen (Bye)சொல்லும் படி அவளைப் பணித்தாள். அவளும் ''வவ்வ் வவ்' என்று அழகான தன் பாஷையில நளினமாக விடைதந்தாள்.
                               செய்கின்ற செயலுக்கு முக்கியத்துவம் தாராமல் செயலின் பின்னோக்கியுள்ள மனநிலையின் முக்கியத்துவத்தில் மனம் கொண்டேன். மண்ணுக்காய் வணக்க ஸ்தலங்களிலும் வீதிகளிலும் உயிர்கள் சங்காரம் செய்யப்படும் நிலையை எண்ணி மனம் வருந்தரூபவ் மூக்கு வடிந்தபடி ஆடையின்றி வாடையில் மெலிந்து, பால் வற்றிய தனங்களுடன் சோகம் சுமந்து வறுமையால் வெம்புகின்ற தாயைப் பசியுடன் நோக்கும் பற்பல சோமாலிய நாட்டுப் பாலகர்களை நோக்கிக் கனத்த மனதுடன் என் கால்கள் வீடு நோக்கி நடை பயின்றன. அன்பு செலுத்த ஒரு வரையறை ஏது. வர்க்க பேதம் தான் ஏது. இதயம் சிறிது. அதன் கொள்ளளவு பெரிது. அனைத்து உயிர்கள் ஏங்குவதும் அந்த அன்புக்காய்த்தானே.

    ஒரு குளவியின் அலறல்






    ஸ்... ஸ்.....இரவின் மடியில் துயிலும் துரையும் துடித்தெழுந்தார். தன் உறக்கம் துறக்கக் காரணமான அந்த ஒலியைக் காண மின் ஒளியை நாடினார். மீண்டும்   நிசப்தம். கையில் கிடைத்த துணியைச் சுழட்டிச் சுழட்டிப்பார்த்தார். எதுவும் இல்லை. மின் விளக்கை அணைத்துப் போர்வையை அணைத்தார். மீண்டும் ஸ்.....ஆத்திரங் கொண்டவர் உறங்கும் மகளைப் பார்த்தார். அவளும் உறக்கங் களைவாள். குளவி என்றறிந்து பயத்தில் அழுவாள். என்ற அக்கறையுடன் சாளரம் திறந்து சத்தத்தின் காரணியை வெளியே அடித்து விரட்ட சுற்றும் முற்றும் பார்த்தார். 

    பதுங்கியிருந்த குளவியும் துயருடனே, ''ஏ! மனிதா! செயற்கை ஒளியில் என் கண்களுக்குள் மின்னல் போன்றொரு தாக்கம். என்னால் அசைய முடியவில்லை. என் இறகுகள் சிறிது. அவற்றின் ஓசையோ பெரிது. நான் பறக்கும் போது பரவும் ஒலியைத் தடுக்கும் சக்தி எனக்கில்லை. இருக்கும் இடத்தைவிட்டு நகரத் துடிக்கும் என் உயிரைக் குடிக்க நீயும் துடிப்பதும் ஏனோ? என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையும். நீ மனிதன் அல்லவா! எதிரி என்று நினைத்து அப்பாவிகளையும் சந்தேகக் கண் கொண்டு சங்காரம் செய்யும் எமன் வர்க்கம் அல்லவா நீ. எங்கே என் கூக்குரல் உன் காதுகளுக்குக் கேட்கப் போகின்றது. மாரிக்குளிரில் மயங்கிக் கிடந்த யான், இன்று கோடைவெயிலின் குதூகலிப்பில் உன் கோட்டைக்குள் புகுந்து விட்டேன். புறப்பட வேண்டும். என் புத்திரர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.   சிறகு விரித்தது குளவியும். படார் என்று தலையில் ஏதோ அடித்தது போன்ற பிரமை. ஓ... என்ற அலறலுடன் விழுந்தது, அந்தக் குளவி. அதன் உயிர் ஓய்ந்தது. நிம்மதியுடன் படுக்கையில் சாய்ந்தார், துரை. தாயின் பாசத்திற்காய்த் தவித்தன குளவிக் குழந்தைகள்.
             
    எமது சந்தோஷத்திற்காய் எம்மை அறியாமலே எத்தனை எத்தனை உயிர்களைக் குடிக்கின்றோம். அந்த அந்த உயிர்களின் நிலையில் நின்று சிந்தித்துப்  பார்ப்போமேயானால் உயிர்களின் உன்னதமும் புரியும் உயிர் குடிக்கும் உக்கிரமமும் குறையும். 

    எத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே

     

    வட்ட வடிவமான பூகோளத்தில் வளமாக வாசம் செய்யும் நாம், இயற்கையில் இரம்யத்தை இரசிக்கும் போது இன்னிசை மனதில் இழையோடிக் கொண்டேயிருக்கும். சூரியன் தன் வர்ணப் பெட்டகத்திலிருந்து வர்ணக்கதிர்களை எடுத்து உலகெங்கும் அள்ளித் தெளித்துவிட்டான். ஆஹா....எத்தனை வர்ணக்கலவை. இவை புரிகின்ற வர்ணஜாலக்காட்சியே வானவில்லின் வடிவம். அற்புதம், அற்புதம். ஆகாயத்திரையில் செம்மஞ்சள் கதிர்களால் வண்ணப்படம் வரைந்து, கடலலையில் நிறக்கண்காட்சியை நடத்தி மெல்லமெல்லத் தன் கரங்களால் வர்ணக்கலவையை வாரி எடுத்து, கதிரவன் நாள்தோறும் உலகுடன் உறவாடி மகிழ்கின்றான்.
                                    காற்றுக்கும் மரத்துக்கும் என்ன காதல் இச்சையோ? ஒட்டி உறவாடி ஆடி, மகிழ்கின்றனவே. மெல்லியதென்றல் தன் மென்கரங்களால் மரக்கிளைகளைத் தழுவ ஒய்யாரமாய்க் குதூகலிக்கும் மரங்களில் திடீரென விளையாடிப் பார்க்க நினைத்த காற்றுச் சற்று மிதமாகத் தடவியது. சடாரென இலைகள் ஆட்டம் கண்டன. ஆடிஆடி இலைகள் மகிழ, அதை ஆட்டிஆட்டிக் காற்றும் மகிழ நடன அரங்கேற்றம் ஒன்றை நடத்தத் திடீரென்று மழை முகிழ்கள் தமது கட்டை அவிழ்த்து விட்டன. சேர்த்து வைத்திருந்த வெள்ளிக்கம்பிகள் சரசரவென மண்ணோக்கி விரைந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் போட்டன. மழையோடிணைந்து இடிமுழக்கம், பக்கவாத்தியம் இசைக்க ஒரு நடன அரங்கேற்றம் அரங்கேற்றியது. கொட்டும் மழையில் கொண்டாட்டம் கண்டு காற்றும் மழையும் கலகலக்கின்றன. கச்சேரியில் தம்மை இழக்கின்றன.
                                     இன்னுமொரு இலையுதிர்காலக் கச்சேரியை இரசிக்கப் புகுவோம். காலத்தின் கோலத்தால், களை இழந்த சருகுகளின் சங்கீதத்தை இரசிக்க எண்ணிய காற்றுச் சற்று சருகுகளைத் தூண்டிவிட்டது. சலசலவென மண்ணின் மடியில் சரணடைந்தன, சருகுகள். போதுமா! காற்றுக்கு. ஒரு மூச்சு வேகத்தைக் கூட்டி விசிறியது. கூடிக்கிடந்த சருகுகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து பறந்து கண்களுக்குப் பரவசமூட்டின. சங்கீதத்தைக் காற்றுக்குச் சமர்ப்பித்தன. இயற்கை எத்தனை களியாட்டங்களை எமக்குக் காட்டுகிறது. 

                                      சிறகுகளில் சித்திர வேலைப்பாடமைத்து சிங்காரமாய் வந்து மலர்களில் அமர்ந்து கொள்ளுகிறதே வண்ணத்துப்பூச்சி. அகலக் கண் விரித்து அருகே சென்று பார்த்தால், வண்ணத்துப்பூச்சியை மலர் இரசிக்கிறதா! மலரை வண்ணத்துப்பூச்சி இரசிக்கிறதா! என்று புரியாது நிற்போம். ரோஜாமலருக்குள் இததனை சோகமா! முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா! காயம் செய்த ஆயுதத்தை அருகே வைத்துக் கொண்டு இரத்தம் சிந்துகின்றதே இந்த சிவப்பு ரோஜா.   காலைவேளை கண்ணீர்த்துளிகள் அந்த ரோஜாக்களின் மேல் பனித்துளிகளாய்ப் பட்டும் படாமல் படர்ந்து கிடக்கின்றன. இவை கண்டு கழிக்கின்றன எம் மனங்கள்.


                                      இன்னும் எத்தனை எத்தனை இன்பம் கிடக்கிறது, பூமியில். அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திட இன்பப் பக்குவ மனம் கொண்டான், மனிதன். கவிக்கண் கொண்டு படைத்தான், கவிஞன். உவமைமிகு உரைநடைச் செய்யுளாய் வடித்தான், எழுத்தாளன். ஓவியமாய் வடித்தான், ஓவியக் கலைஞன். இசையாய் இசைத்து இன்புற்றான், இசைஞானி. அத்தனையையும் தன் கைக்குள் அடக்கி, இரசித்து இரசித்து இன்புற்றான் புகைப்படக் கலைஞன். இவை அனைத்திற்கும் அப்பால் அப்படி என்னதான் உள்ளது! என்று ஆராயப் புகுந்தான், விஞ்ஞானி 

    இத்தனை உள்ளங்களிலும் எண்ணங்களைத் தூண்டிவிடும் எழிலரசி இயற்கை மாதேவியே நீ வாழி, வாழி

    சுரங்கள் சிந்துகின்றன

    மண்டபம் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. பட்டாடையில் பெண்கள் பளபளத்தனர். அரங்கு அழகுக் கோலம் காட்டி நின்றது. அத்தனை பேரும் இசையை சுவாசிக்கும் இதயம் படைத்தவர்கள். முன் வரிசையில் சரஸ்வதி போல் வீற்றிருந்தாள், சுரதா. வண்ணப்பட்டாடையில் கட்டம் போட்ட துகில். அதில் இசைக் கருவிகளின் இலச்சினை. வாத்தியங்கள் அத்தனையும் வாரியெடுத்த தேகம். அவள் இதழ்களில் சுரங்கள் வாசம் செய்கின்றன. நாவில் சரஸ்வதி வீணையுடன் வந்து குடிகொண்டிருந்தாள். கச்சேரி களைகட்டியது. இதயங்கள் அத்தனையும் இசையில் சங்கமமாயின. ஆயினும், சுரதாவின் மனதில் ஏற்பட்ட இரணத்தின் வேதனை குறைந்தபாடில்லை. சில அதிகார வேட்கை கொண்ட புல்லுருவிகள் கூறிய வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதியப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர் உரை வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டாள்,சுரதா. 

                     ஒலிவாங்கி கைகளில் தரப்பட்டது. வார்த்தைகள் சரமாரியாகப் பொழிந்தன. '' இசையால் வசமான இதயங்கள் அத்தனைக்கும் என் இதயபூர்வமான வணக்கங்கள். சிறப்பு விருந்தினராக மேடைக்கு என்னை அழைத்த போது அப்பெருமையை ஏற்றுக் கொள்ளும் சமுதாயத்தினிடையே தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்;றேனா? என்பது கேள்விக்குறி. மனதில் பட்டதை பட்டென உரைக்கும் ஆளுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்த இசை எனக்குத் தந்துள்ளது. இசை கற்கும் போதே எமது உள்ளமும் தூய்மையாக்கப்படுகின்றது. இசைமீது பக்தியும் ஏற்படுகின்றது. '' பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பது போல் இயல்பாகவே பணிவும் ஏற்பட்டுவிடுகின்றது. தேன் தானும் கெடாது. தன்னைச் சேர்ந்தவரையும் கெடுக்காது. இவ்வாறுதான் இசைத்தேன், தன்னை இசைப்பவரையும் இன்புற வைத்து, அதை இரசிப்பவரையும் இன்புற வைக்கும் தன்மை கொண்டது. உலகம் அனைத்தும் இசை மயம். குயிலின் குரல், கடலலையின் ஓசை, நீரோடையின் சலசலப்பு, இவையெல்லாம் இயற்கை எமக்களிக்கும் இசைக்கச்சேரிகள். ஆனால், இலக்கண அமைப்புக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டவை அல்ல. கர்நாடக இசை, முறைப்படி சங்கீத இலக்கணங்களுக்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்காக கர்நாடக இசை கற்றுவிட்டேன், என நான் ஒரு போதும் பெருமைப்பட்டதில்லை. அத்தனை அறிஞர்களும் அடிப்படை அறிவு கொண்டவர்களா? இல்லையா? என ஆராயாமலே இரசிப்பவள,; யான். இசை ஒரு பொதுச்சொத்து. இதை இரசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. நான் தான் இசைஞானி. எனக்கு வாத்தியங்கள் வாத்தியம் வாசிப்பவர்கள் தான் இவர்கள். ஏனக் கலைஞர்களை அடிமைப்படுத்தி, எம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்வது கீழ்த்தரமானதல்லவா? கலைஞர்களை இகழ்ந்து மேடைகளில் முழக்கமிடுவது அநாகரிகமானதல்லவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சாதகமாகப் பெருங்கலைஞர்களாக உருவெடுத்தவர்கள், அடிப்படை கர்நாடக இசை அறிவுமில்லாது, ஏனைய கலைஞர்கள் மனதைப் புண்படுத்தல் மன்னிக்க முடியாத குற்றம். 
            ' போற்றுவார் போற்றட்டும்ளூ புழுதி வாரித்
             தூற்றுவார் தூற்றட்டும்ளூ தொடர்ந்து செல்வேன்
             ஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால்
             எடுத்துரைப்பேன்ளூ எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்'
    மேலும் அனைத்து இசைப்படைப்பாளிகளும் உலகுக்கு இன்பம் தருபவர்கள். எனக்கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்'. பார்வையாளர் கரகோஷம் ஓங்கி ஒலித்தது. 
               நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தெளிந்த சிந்தையுடன் மெல்லென இருப்பிடம் நோக்கி நகர்ந்தாள். இரண்டு வாரங்கள் தன் மனையாளின் இதயத்திலிருந்த இரணங்களுக்கு இவ் அரங்கு மருந்திட்டது கண்டு, அவள் கணவன் அவள் கரங்களைத் தன் இரு கரங்களால் இறுகப்பற்றிக் கொண்டான். 

    பரீட்சையும் திறமையும்



    தைரியம் மிக்க தாமரைக்கு நடந்தது தான் என்ன? பரதம் ஆடும், அவள் கால்கள் பதட்டம் கண்டதும் ஏன்? பட்டென்று விடையளிக்கும் அவள் மூளை பரீட்சையில் பங்கம் விளைவித்ததும் ஏன்? அடுக்கடுக்காய் வினாக்கள் கோர்வைபோல் அவள் ஆசிரியர் மூளைக்குப் படையெடுத்தன. அவள் மாணவர்கள் மனநிலையைக் கற்றுத்தான் இத்தொழிலைக் கையேற்றாள். அருகே தாமரையை அன்பாய் அழைத்தாள்: '   தாமரை உமக்கு என்ன நடந்தது. பரீட்சையே வாழ்க்கை என்று நம்புகின்றாயா? இல்லை, அது ஒரு சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனம் ஏற்கப் பழக வேண்டும். அறிவுக்கிடங்கிற்குள் அமிழ்ந்து கிடப்பவள் அல்லவா நீ. நீ அள்ளிப் பருகியவை அளப்பரியன. பதட்டம் ஏன் ஏற்படுகின்றது? பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்னும் அதிகூடிய வெறியே இதற்கெல்லாம் காரணம். பரீட்சை மண்டப வாயிலை அடைந்தவுடன் உனது இதயம் பட்பட்டென்று உன்னை எதிர்த்து நின்று துடிக்கின்றதா? உடலில் திடீரென்று வெப்பம் அதிகரித்து வியர்வை வெளிவர எத்தனிக்கின்றதா? தொண்டையில் நீர் வற்றி நாவறண்டு வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றனவா?'' அத்தனை வினாக்களுக்கும் ஆம் என்ற விடையே தாமரையிடமிருந்து வெளிவந்தது. அழகாகச் சிரித்த ஆசிரியர், 'அது அப்பொழுது மாத்திரம் உன்னோடு உறவாட இணைந்த ஒரு உணர்வு. அதி வேகமாக உனக்குள் பெருக்கெடுக்கும் உணர்வு. அது முற்றுமுழுதான பதட்டமுமன்று. முற்று முழுதான பயமுமன்று. உனக்குள்ளே உனது ஆளுமையைப் புதைப்பதற்காய்ப் புறப்பட்ட ஒரு தற்காலிக எதிரி. வீட்டிலிருந்து புறப்படும் முன் பரீட்சை என்னும் ஒன்று இருப்பதையே மறந்து விடு. முதல் நாள் மண்டை வீங்கப் படிக்காதே. பரீட்சை அன்று மூக்குமுட்ட உணவருந்தாதே. நேரத்துக்குப் படுத்து நேரத்துக்கு விழித்தெழு. பரீட்சைக்குப் போகும் போது படமாளிகைக்குப் போகும் உணர்வுடன், பதட்டும் தரும் பெற்றோரையும், பரீட்சைப் பேச்செடுக்கும் நண்பர்களையும் அதட்டி அடக்கு. இயற்கையை அநுபவித்துக் கொண்டே பயணமாகு. படிக்க வேண்டியவை அனைத்தும் படித்து விட்டேன். இனி எது வரினும் துணிந்து செயற்படுவேன். பலன் எதனையும் ஏற்றுக் கொள்வேன் என்னும் பக்குவத்தை மனதில் வரவழைத்துக் கொள். 




         போட்டிக்களத்தினுள் நுழைந்து விட்டாயா! அடக்கத்துடன் முதலில் சுத்தக்காற்று உள் நுழைய அநுமதி வழங்கும்படி ஆசிரியரிடம் பயமின்றிக் கேள். இல்லையேல், அநுமதி பெற்று சாளரத்தை நீயாகவே திறந்து சுத்தக்காற்றை அழைத்தெடு. கையில் வினாப்பத்திரம் வந்து அமர்ந்து விட்டதா? இல்லை, உன் திறமையை வெளிப்படுத்தும் உனது நேரம் வந்து விட்டதா? ஆழமாகக் காற்றை உள்ளே இழுத்து இரண்டு நிமிடம் வைத்திருந்து பின் வெளியகற்று. சிறிது குளிர்ந்த நீர் அருந்து. எல்லாம் அறிந்தவள் நீ என்னும் ஒரு கர்வத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள். உனக்கு முன்னே அமர்ந்திருக்கும் மேற்பார்வையாளர் உடையேதும் அணியவில்லை. அல்லது கோமாளிபோல் உடையணிந்துள்ளார், என்று மனதிற்குள் நினைத்துப் பார். உன்னையறியாமலே உனக்குச் சிரிப்பு வந்து உன் எண்ணத்தைத் திசை திருப்பும்.  
                         இத்தனையும் நினைத்தப் பார். நானும் உன் வயது கடந்தவள் தான். எத்தனையோ பரீட்சைகளில் அமர்ந்து சித்தியும் பெற்றுள்ளேன். தென்துருவத்தை அடைந்த முதல்ச் சிறுவன் நான் தான் என்று நாளை சரித்திரம் குறிக்கும். என்று 12 வயதிலே நம்பியவர் அமுட்சேன் என்பவர். நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. வெற்றி என் கையில் கிடைக்கும் என்று நம்பு. பரீட்சை உன் திறமையைத் தீர்மானிப்பதில்லை. பட்டங்கள் உன் திறமைக்கு விலாசப்பலகை அல்ல. உன் செயலே நாளை கல்வெட்டில் உன் திறமைக்குக் கட்டியம் கூறும்'' என்று தைரிய நீர் பாய்ச்சப்பட்ட தாமரை மனதால் மலர்ந்தாள். ஆசிரியைக்கு நன்றி கூறி அவ்விடத்தை விட்டு மெல்லத் தெளிவுடன் நடந்தாள். 
           இது தாமரைக்கு மட்டுமல்ல தாமரை போல் இருக்கின்ற அத்தனை பரீட்சார்த்திகளுக்கும் அன்பு வார்த்தைகள். 

    இப்படியும் ஒர் பெண்ணா!


     இப்படியும் ஒர் பெண்ணா!



              

               பட்டம் சூட்டப்பட்ட அந்த விழாவிலே அவள் தோளில் அணியப்பட்ட மாலை அவளுக்குப் படித்த செருக்கையும் சேர்த்துச் சூட்டியது. படித்ததனால் அறிவுடன் சேர்த்துத் தலைக்கனமும் கிரீடமாக அன்று அவள் தலை சுமந்தது. ''பெருக்கத்து வேண்டும் பணிவு, கல்விச் சுரங்கம் சுமப்பவள் பண்புச் சுரங்கமும் சுமத்தல் வேண்டும். பல்கலைக்கழகம் காணாத எத்தனையோ அறிவாளிகள் உலகில் உலா வருகின்றார்கள். உலக வாழ்க்கையை உன்னதமாக வாழ்ந்து இன்பமாக அநுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ரதியோ கற்ற மமதையை மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்படும் ஒரு ரகம். ஆண்டவன் சிலரைச் சோதிக்கப் பொறுத்திருந்து ஏற்ற நேரம் பார்ப்பாரோ என்னவோ! அக்கரை அவளுக்குப் பச்சையாகப்பட்டது. அந்நியநாட்டு மோகம் அவள் கண்ணை மறைத்தது ''மாங்கல்யம் தந்துனானே மகஜீவன கேதுனா|| மந்திரம் ஒலிக்க அவள் மார்பில் மாங்கல்யம் அணியப்பட்டது. அவள் பெயருக்குத் திருமதி சூட்டப்பட்டது. மேலைநாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஒரு சொந்தம், மனைவி என்ற ஒரு அந்தஸ்தை ரதிக்குத் தந்திருந்தது. கணவன் என்னும் பற்றுக்கோட்டுடன் ஐரோப்பியநாட்டில் கால் வைத்தாள்.
               உயர்ந்த கட்டிடங்களும் வெள்ளைத் தோல்களும் நவீனத்துவ நாகரீகச் சின்னங்களும் அவளுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவள் நினைத்துப் பார்த்தறியாத நிலையில் தன் கணவன். சாதாரண ஒரு சாப்பாட்டுக்கடையில் சமையல் தொழிலைச் செய்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில் வாகன வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தான். கன்னத்தில் தன் கையாலேயே ''பளார்,பளார்|| என்று அறைந்தாள். இடி விழுந்தது போல் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள். தன்னுடைய இறுமாப்பிற்கு வந்த இடியை நினைத்து வேதனைப்பட்டாள். கிட்டே வந்த கணவனை எட்டி நிற்கப் பணித்தாள். மனதுள் வைராக்கியத்தை ஊன்றினாள். ''இன்றிலிருந்து நானும் நீங்களும் அடுத்தவர் கண்களுக்குத்தான் கணவன் மனைவி|| முடிவாகக் கூறினாள். ''கல்வியில் ஏற்றத்தாழ்வு கணவன் மனைவிக்கிடையில் பார்த்தல் குடும்பவாழ்க்கைக்கு ஏற்றதல்ல. உன்னைவிட ஆளுமை அதிகம் எனக்கிருக்கிறது. என்னால் சமுதாயத்தில் உயர்ந்து நின்று காட்டமுடியும். நான் படிக்கவில்லை என்பதற்காகப் பண்பு இல்லாதவனா? இந்த நாட்டில் கண்கலங்காது உன்னை வைத்துக் காப்பாற்றக் கூடிய சக்தி எனக்கு இருக்கின்றது. என்ன சொல்கின்றாய்?|| தன் கருத்தை அவன் கூறினான். அவள் எதுவும் பேசவில்லை. மனது இறுக்கமாகியது. ''நான் இங்கிருந்து எங்கும் போகமாட்டேன். உங்கள் முன்னே இருந்தபடியே உங்களுடன் வாழாத வாழ்க்கை வாழப் போகின்றேன். அன்றிலிருந்து விருந்தினர் வந்தால் மட்டும் வீட்டில் சிரிப்பொலி கேட்கும், மழலைமொழி கேட்கும். சமையலறை அடுப்பு சூடு காணும். தன்னைச் சுற்றி ஒரு வட்டும் போட்டாள். அதற்குள்ளே இருந்தபடி வெளியுலக இன்பம், குதூகலவாழ்வு பலவற்றையும் வெறுத்தாள். தானும் வாழாமல் தயாவையும் வாழவிடாமல் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுகாலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றாள். 
    ஆசிரியர் கருத்து
             இப்படியும் ஒரு பெண்ணா! படிப்பால் உயர்ந்தவர்கள் எதையும் வளைந்து கொடுத்துச் சமாளிக்கத் தைரியம் உள்ளவாகளாக இருத்தல் வேண்டும். படித்த அறிவால், குடும்பத்தை உயர்த்தி நிறுத்த முடியாதுவிட்டால், இந்தப் படிப்பிற்கு இந்த நாட்டில் எந்தப் பயனும் இல்லை. நினைத்தது மட்டும் நடப்பதில்லை. நடந்ததையே நினைத்ததாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவனால்தான் வாழ்க்கையைப் பூரணமாக அநுபவித்து வெற்றி காணமுடியும். 

    செவ்வாய், 19 ஏப்ரல், 2011


    என் வாசகங்கள் 20

          
    Flash Banner Generator    

    இலண்டன் தமிழ் வானொலியிலே வானொலிவாக்கு என்ற பெயரிலே வெளியான எனது படைப்புக்கள் இப்பக்கத்தில் வருகின்றன. பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்க

                                              
                              
                               பொறாமை 





    20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது 
          புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள் 
          புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.


    19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
          அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும். 
                              
                                              
                                
                                         சந்தேகம் 


    18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
          சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
                                 
                                      
                           
                                         உழைப்பால் உயர்தல் 


    17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
         சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்
    16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால் 
         உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.


    15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
        உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
        உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம். 

                                          


                                                    நம்பிக்கை


    கஷ்டங்கள் வாட்டும் போது தளர்ந்துவிடாது அநுபவப்பாடம் கற்றுக் கொண்ட ஞானத்துடன் நிமிர்ந்து நடவுங்கள். பாதைதோறும் தொடர்ந்துவரும். துன்பங்களும் அநுபவங்களும் உங்களைப் பூரண மனிதனாகப் பிரகாசிக்கச் செய்யும். நம்பிக்கை கொண்டு நகரும் பயணம் எப்போதும் வெற்றிப் பாதைக்கே வழிசமைக்கும்.  கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.

                                                    
                                                              
                                                                   மகாத்மா



    போதனை புரியும் மனிதன், அப்போதனையின் ஆரம்பத்தில் தன்னை ஒருமுறை பரீசீலனை செய்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதனைச் செய்வதற்கு அடியேனாகிய யான் பொருத்தமானவனா இறைவா! என்று மனதினுள் ஒன்றுக்குப் பலதடவை சிந்தித்து, அதற்கேற்ப  ஒழுகி பிறருக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டியது அவசியம்.   மகாத்மாகாந்தியின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் மதங்கள் தோன்றிய மகிமை புரியும். மனிதன் மாமனிதனாகப் பிரகாசிக்க முடியும். மகாத்மாவாக மாற முடியும

                                                    
                                           
                                                  மனைமாட்சி
    1.          குணம் கொண்டு தன் குலம் விளங்கச் செய்து
                 குணவதியாய் மிளிர்தலும் மனை மாட்சி 


    2.          சிக்கனம் பேணிக் கைப்பணம்தனை அளந்து – தன் 
                 புத்தியைக் கொண்டு மனைவிளங்கச் செய்தலும் மனைமாட்சி


    3.           சித்தத்துள் சினம் அடக்கி உத்தியைப் பூணாக்கி
                  நித்திய இன்பத்தை நிலைக்க வைப்பதும் மனைமாட்சி


                                       

                                              தியாகம் 


    4.            தம்வாழ்வைத் தீயாக்கி பிறர்வாழ்வுக்கு ஒளியேற்றல்
                   தியாகம் செய்வார்க்கு யாகமாம்.


    5.           அவதூறுகளும் அவமானங்களும் இடையூறுகளும் தாங்கி
                   இடையறாது பணி செய்தல் தியாகம்.


    6.            உறுதியும் உழைப்பும் உயர்வாய் நோக்கித் - தன்
                   உடல்வலி நோக்காத் தன்மைத்து தியாகம்.
                                                
                              உயர்ந்தோர் உள்ளம் 
    7.         பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்
                உயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும். 
    8.        அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
                உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.
    9.        மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும் 
               உயர்ந்தோர் உள்ளம்.
                              
                                    
                                                            நன்றி நவிலல்
    10.      நன்றிநவில விதிமுறை இல்லை
                நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.
    11.       வலிந்து கேட்பதன்று நன்றி 
                நன்றி பெற்றார் மனத்தின்கண்
                விரும்பிக்கொடுப்பது.
    12.      நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
                நவிலத் துடிப்போடு வெளிப்படும்.

                                                    

                                              பொறாமை


    13.     அகத்தில் பொறாமை புறத்தில் வேஷம் - அதுவே
               அழிவைத் தரும் அடையாளம்


    14.     அடுத்தவன் வாழ்வின் உயர்வு – உன்
              அயராத உழைப்புக்கு வழிகாட்டி
              கெடுத்து அவன் வாழ்வைச் சிதைக்க நினைப்பது – உன்
              பொறாமைக் குணத்தை வெளிக்காட்டும்

    20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது 
          புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள் 
          புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.

    19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
          அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும். 
                                          
                                          
                                         சந்தேகம் 

    18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
          சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
                                   
                                      
                         
                                   உழைப்பால் உயர்தல் 


    17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
         சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்


    16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால் 
         உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.


    15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
        உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
        உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம். 

                                         

                            

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...