• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 26 டிசம்பர், 2010

    புலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு

              ( அங்கம் 1)
    புலம்பெயர்விலே தமிழர்களிடையே திருந்த வேண்டிய சில விடயங்களை உலகறிய உரக்கச் சொல்ல உங்கள் முன் விரிகிறது இக்கட்டுரை. இங்கு வாழும் தமிழர்களிடையே இளைஞர் போக்குகள், தமிழர் விழாக்கள், நேரக்கட்டுப்பாடின்மை, புறங்கூறல், மாற்று இனத்தினருடன் இணைந்து வாழாமை போன்ற பலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் எம்மினத்தின் உயர்வுக்கு இக்கட்டுரை உந்துதலாய் இருக்கும் என்று நம்பி பேனாவை கையெடுத்தேன்.
                                           நாடுவிட்டு நாடு வந்தும்
                                           கேடு கெட்ட குணநலங்கள் 
                                           நாடி இன்பம் தேடித்திரியும்
                                           பேடிவாழ்வு தீர வேண்டும்.

    வேட்டைத் தொழிலில் நாட்டம் கொண்டு, விலங்கு, பறவை கொன்று தின்று, வாழ்வு கண்ட மனிதன், நாள்கள் நகர, காலங்கள் கழிய, நல்லவை நாடி, சமூகம் அமைத்து கலாசாரம் கண்டு, இறையைப் படைத்து, மொழியைப் படைத்து, நாகரீக வாழ்வை நன்றாய்க் கண்டான். பண்பாட்டு நூல்கள் பலர் படைத்து சீர் பெற்று வாழ்வு சிறக்க உழைப்பைத் தந்தனர். மனிதன் வாழ்க்கையின் பாதையில் நற்பழக்கவழக்கங்கள், அநுபவரீதியில் கண்டு பட்டுத் தெளிந்த வாழ்க்கையை வாழப்பழகிக் கொண்டான். அப்படியானால், காலப்போக்கில் கண்ணில் காணும் நல்லவை கண்டு மனிதன் திருந்த வேண்டியது அவசியமாகின்றது. திருந்தியும் உள்ளான்.
                 தாயகத்திலே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பேகர் என்ற நான்கு இனங்கள் மட்டும் சேர்ந்தும் சேராதும், புரிந்தும் புரியாதும் போட்டி பூசல் என வாழ்ந்து தன்நாடு, நிம்மதியில்லை என வெளிநாடுகளுக்குத் தேடி ஓடிப் பலர் வந்தனர். தமிழீழத் தாயக உணர்வுப் போராட்டுத் தளைத்தோங்க முன் மேற்கல்வி மேற்கொள்ளவே வெளிநாடுகள் நோக்கி தமிழர்கள் நகர்ந்தனர். ஆனால், தற்பொழுது கற்றவர், கல்லாதவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அந்நியநாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். வந்த நாடுகளோ ஓர் இனம் மட்டும் ஒதுங்கி வாழும் நாடுகள் அல்ல. அவை பலநாட்டு மக்களும் பல நாட்டுக் கலாசாரங்களும் பின்னிப்பிணைந்து வேலைத்தளங்ளிலும், பாடசாலைகளிலும், போக்குவரத்துச்சாதனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கலந்து களிநடம் புரிகின்ற நாடுகள் ஆயின. 
                 இச்சை கொண்டு மனிதன் தன்னைப் பார்த்துத் தன்னுடைய குறைநிறைகளை அலசி ஆராய்ந்து தன்னைச் சுயமதிப்பீடு செய்யக் கூடிய நிலைமை மனிதனுக்கு ஏற்படுகின்றது. பிறநாட்டினர் கலாசாரப் பழக்கவழக்கங்களில் இருந்து நல்லவற்றைத் தேடிப்பெற்றுத் திருந்தி வாழக்கூடிய வசதிவாய்ப்புக்களைப் பெற்ற தமிழினம் திருந்தி வாழ்தல் நியாயம் அல்லவா. மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் வாசனை உண்டு என்னும் கூற்றுக்கிணங்க பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்துப் பாலருந்தும் அன்னத்தைப் போல் நல்லவற்றை நாடிப் பெற்றுக் கொள்ளல் சிறப்பு இல்லையா? ஆனால் எங்கு சென்றாலும் அழுக்குகளைக் களையோம் என அடம்பிடிக்கின்ற தமிழர் நிலைமைகளை அநுபவித்து ஆற்றாமையில் என் பேனா வார்த்தைகளைச் சிந்துகின்றது. 

    இப்படியும் சில இளைஞர்கள்:

    21 ம் நூறறாண்டில் பலவித நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மலிவாக விஞ்சி நிற்கின்ற நாட்டிலே, சாதாரணமாக இவற்றை இளைஞர்களும் இளம் யுவதிகளும் கையாளுகின்றார்கள். தண்ணீரைக் குடிப்பதற்குத் தயங்கினாலும் Schulervz, Face Book, Twitter, Myspace, MSN, ICQ, இதுபோன்று பலவித கணனிப் பேச்சுத் தொடர்பு தளங்களுக்கு விஜயம் செய்வதற்குத் தயங்குவதில்லை. முகங்காணா நட்புக்களையும் முகங்காணும் நட்புக்களையம் கொண்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள். குறைந்த கட்டண வசதியுள்ள தொலைபேசிகள் மூலம் SMS என்னும் ஒரு கலையைப் பயன்படுத்தி அடிக்கடி நண்பர்களுடன் பேச்சுத் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு இளையோர் நட்புறவு அதிரிக்கும் வாய்ப்புக்களை புதுப்புது நவீன சாதனங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நட்புறவு நன்றே. ஆயினும், நட்புறவு நண்பர்கள் வாழ்வைச் சீர்குலைக்காது இருக்குமேயானால், நட்பிற்கு பங்கம் வரப் போவதில்லை. 

                ஆனால், புலம்பெயர்வில் தமிழ் இளைளஞர்கள் பெண்பிள்ளைகளுடன் பக்குவமாய்ப் பேசுகின்றார்கள். ஆசைவார்த்தைகளை அழகாய்ச் சொரிகின்றார்கள். உண்மை நட்பென உளம்பதிய உரைக்கின்றார்கள். சுதந்திரம் பற்றிச் சுவையாய் புகட்டுகின்றார்கள். போதை வார்த்தைகளால் பெண்பிள்ளைகள் மனதை புரட்டிப் போடுகின்றார்கள். பொது இடங்களில் வீதிளில் சந்திப்புக்கு அழைக்கின்றார்கள். ஆசைதீரப் பேசி, கலகலப்பாய்ப் பழகுகின்றார்கள். பின் அழைத்துப் பழகிய பெண்களைப் பற்றியே அவதூறாகப் பேசுகின்றார்கள். இறுதியில் புலம்பெயர்ந்த பெற்றோர்களின் பெண்களைத் திருமணம் செய்யப் போவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண் எடுக்க மாட்டோம். இலங்கையில் இருந்துவரும் அப்பாவிப் பெண்களை திருமணம் செய்து வாழ்வோம் என வீராப்பாய்ப் பேசுகின்றார்கள். வக்கிர புத்தியுள்ள இவ் இளைஞர்களுக்கு தாயகத்துத் தங்கங்கள் அடைக்கலமாக வேண்டுமா? அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுத்துத் தாம் அற்புதமாய் வாழ வேண்டுமா? இப்படிச் சில இளைய தலைமுறைக்கு அத்திவாரம் இட்டது யார்? நமது எதிர்கால இளஞ்சமுதாயம் இவ்வாறு வளர்க்கப்பட்டதன் காரணம்தான் யாதோ? இவ் ஐரோப்பிய மண்ணிலே வாழுகின்ற ஐரோப்பிய இளைஞர்களுடன் வாழும் பாக்கியம் இவர்கள் பெறவில்லையா? அனைத்து இன மக்களுடன் பழகும் போது அவர்கள் குணநலன்களைப் புரியாமல்; இந்நாட்டில் எவ்வாறு வாழ முடிகின்றது? 

                    ஐரோப்பிய இளைஞர்கள் பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையானால், அவர்களை வற்புறுத்தப் போவதில்லை. புரிந்துணர்வுடன் விட்டுவிடுவார்கள். திருமணம் செய்த மனைவியோ, கணவனோ தமது குணநலன்களுக்கு ஒத்துவரவில்லையானால், தாமாக புரிந்துணர்வுடன் ஒதுங்கிவிடுவார்கள்.  ஆனால், அந்தப் பெண்ணைப் பழி வாங்கும் உணர்வோ, அவளைப் பற்றிய அவதூறான பேச்சுக்களோ பேசி, அப்பெண்ணை மானபங்கப்படுத்தப் போவதில்லை. அவளுக்கு ஒரு உதவி தேவைப்படும் பட்சத்தில் மனமுவந்து அவ்வுதவியைச் செய்வார்கள்.  இது ஏன் நடக்கின்றது என்றால், இருவர் திருமணம் செய்வது என்பது இணைந்து வாழ்வதற்கே ஆகும். பொருத்தம் இல்லாத இருவர் மனதால் வேறுபட்டு, குணத்தால் வேறுபட்டு, நாளும் பொழுதும் சண்டை செய்தபடி வாழுகின்ற போது வாழ்வு சுவைக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முடியவில்லையானால், புரிந்துணர்வுடன் பிரிந்து நண்பர்களாவதில் தவறு ஒன்றும் இல்லையே. பலருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பேசியதில் அவர்கள் பண்பை உணரக்கூடியதாக இருந்தது. இது திருமணத்தின் பின் ஏற்படுகின்ற நிலை. ஆனால், எமது இளைஞர்கள் திருமணத்தின் முன்னேயே பெண்கள் பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கிவிட்டால், திருமணத்தின் பின் எப்படி ஆவார்கள்!!!!!
                 அதனால், பெண்பிள்ளைகளுக்கு ஒரு எச்சரிக்கை. இளைஞர்கள் பேச்சுக்கு இடந்தராது உங்கள் வாழ்;கையைப் பற்றிச் சிந்தித்து வாழப் பழகி; கொள்ளுங்கள். பெற்றோர் எச்சரிக்கையை தலைமேற் கொண்டு நடவுங்கள். எப்பெற்றோரும் தம் பிள்ளைகள் கெட்டுப்போக இடந்தர மாட்டார்கள் என்னும் உண்மையைத் தலைமேற் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்.

    வாசகர்களே! அங்கம் 2 உடன் மீண்டும் உங்களைச் சந்திக்கின்றேன். அதுவரை பொறுத்திருங்கள்.  
                     

    2 கருத்துகள்:

    1. உங்கள் ஆதங்கத்தை அழகாய் எடுத்து வைத்து ஒரு பாடத்தை இயல்பபாய் எடுத்து உரைத்திருக்கிறீர்கள்...

      //பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்துப் பாலருந்தும் அன்னத்தைப் போல் நல்லவற்றை நாடிப் பெற்றுக் கொள்ளல் சிறப்பு இல்லையா?//

      இந்த காலத்திற்கு இந்த பிரித்துணரும் நடத்தை மிக அவசியம். நம்முடைய அடிப்படை பண்பை மறத்தல் நல்லதல்லவே...?!

      பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் மிக கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம், அதை விட பிள்ளைகளும் பெற்றோர்களின் அறிவுரையை கேட்டு நடந்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் .

      நல்லதொரு பகிர்வு. நன்றி

      பதிலளிநீக்கு
    2. //நாடுவிட்டு நாடு வந்தும்
      கேடு கெட்ட குணநலங்கள்
      நாடி இன்பம் தேடித்திரியும்
      பேடிவாழ்வு தீர வேண்டும்...
      இளையோருக்கு தேவையான நல்லதொரு பதிவு.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...