• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 8 டிசம்பர், 2010

    பரீட்சையும் திறமையும்

                                        
            
    தைரியம் மிக்க தாமரைக்கு நடந்தது தான் என்ன? பரதம் ஆடும், அவள் கால்கள் பதட்டம் கண்டதும் ஏன்? பட்டென்று விடையளிக்கும் அவள் மூளை பரீட்சையில் பங்கம் விளைவித்ததும் ஏன்? அடுக்கடுக்காய் வினாக்கள் கோர்வைபோல் அவள் ஆசிரியர் மூளைக்குப் படையெடுத்தன. அவள் மாணவர்கள் மனநிலையைக் கற்றுத்தான் இத்தொழிலைக் கையேற்றாள். அருகே தாமரையை அன்பாய் அழைத்தாள். '   தாமரை உமக்கு என்ன நடந்தது. பரீட்சையே வாழ்க்கை என்று நம்புகின்றாயா? இல்லை, அது ஒரு சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனம் ஏற்கப் பழக வேண்டும். அறிவுக்கிடங்கிற்குள் அமிழ்ந்து கிடப்பவள் அல்லவா நீ. நீ அள்ளிப் பருகியவை அளப்பரியன. பதட்டம் ஏன் ஏற்படுகின்றது? பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்னும் அதிகூடிய வெறியே இதற்கெல்லாம் காரணம். பரீட்சை மண்டப வாயிலை அடைந்தவுடன் உனது இதயம் பட்பட்டென்று உன்னை எதிர்த்து நின்று துடிக்கின்றதா? உடலில் திடீரென்று வெப்பம் அதிகரித்து வியர்வை வெளிவர எத்தனிக்கின்றதா? தொண்டையில் நீர் வற்றி நாவறண்டு வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றனவா?'' அத்தனை வினாக்களுக்கும் 'ஆம்' என்ற விடையே தாமரையிடமிருந்து வெளிவந்தது. அழகாகச் சிரித்த ஆசிரியர், 'அது அப்பொழுது மாத்திரம் உன்னோடு உறவாட இணைந்த ஒரு உணர்வு. அதி வேகமாக உனக்குள் பெருக்கெடுக்கும் உணர்வு. அது முற்றுமுழுதான பதட்டமும் அன்று. முற்று முழுதான பயமுமன்று. உனக்குள்ளே உனது ஆளுமையைப் புதைப்பதற்காய்ப் புறப்பட்ட ஒரு தற்காலிக எதிரி. வீட்டிலிருந்து புறப்படும் முன் பரீட்சை என்னும் ஒன்று இருப்பதையே மறந்து விடு. முதல் நாள் மண்டை வீங்கப் படிக்காதே. பரீட்சை அன்று மூக்குமுட்ட உணவருந்தாதே. நேரத்துக்குப் படுத்து நேரத்துக்கு விழித்தெழு. பரீட்சைக்குப் போகும் போது படமாளிகைக்குப் போகும் உணர்வுடன், பதட்டும் தரும் பெற்றோரையும், பரீட்சைப் பேச்செடுக்கும் நண்பர்களையும் அதட்டி அடக்கு. இயற்கையை அநுபவித்துக் கொண்டே பயணமாகு. படிக்க வேண்டியவை அனைத்தும் படித்து விட்டேன். இனி எது வரினும் துணிந்து செயற்படுவேன். பலன் எதனையும் ஏற்றுக் கொள்வேன் என்னும் பக்குவத்தை மனதில் வரவழைத்துக் கொள். 
         போட்டிக்களத்தினுள் நுழைந்து விட்டாயா! அடக்கத்துடன் முதலில் சுத்தக்காற்று உள் நுழைய அநுமதி வழங்கும்படி ஆசிரியரிடம் பயமின்றிக் கேள். இல்லையேல், அநுமதி பெற்று சாளரத்தை நீயாகவே திறந்து சுத்தக்காற்றை அழைத்தெடு. கையில் வினாப்பத்திரம் வந்து அமர்ந்து விட்டதா? இல்லை, உன் திறமையை வெளிப்படுத்தும் உனது நேரம் வந்து விட்டதா? ஆழமாகக் காற்றை உள்ளே இழுத்து இரண்டு நிமிடம் வைத்திருந்து பின் வெளியகற்று. சிறிது குளிர்ந்த நீர் அருந்து. எல்லாம் அறிந்தவள் நீ என்னும் ஒரு கர்வத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள். உனக்கு முன்னே அமர்ந்திருக்கும் மேற்பார்வையாளர் உடையேதும் அணியவில்லை. அல்லது கோமாளிபோல் உடையணிந்துள்ளார், என்று மனதிற்குள் நினைத்துப் பார். உன்னையறியாமலே உனக்குச் சிரிப்பு வந்து உன் எண்ணத்தைத் திசை திருப்பும்.  
                         இத்தனையும் நினைத்தப் பார். நானும் உன் வயது கடந்தவள் தான். எத்தனையோ பரீட்சைகளில் அமர்ந்து சித்தியும் பெற்றுள்ளேன். தென்துருவத்தை அடைந்த முதல்ச் சிறுவன் நான் தான் என்று நாளை சரித்திரம் குறிக்கும். என்று 12 வயதிலே நம்பியவர் அமுட்சேன் என்பவர். நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. வெற்றி என் கையில் கிடைக்கும் என்று நம்பு. பரீட்சை உன் திறமையைத் தீர்மானிப்பதில்லை. பட்டங்கள் உன் திறமைக்கு விலாசப்பலகை அல்ல. உன் செயலே நாளை கல்வெட்டில் உன் திறமைக்குக் கட்டியம் கூறும்'' என்று தைரிய நீர் பாய்ச்சப்பட்ட தாமரை மனதால் மலர்ந்தாள். ஆசிரியைக்கு நன்றி கூறி அவ்விடத்தை விட்டு மெல்லத் தெளிவுடன் நடந்தாள். 
           இது தாமரைக்கு மட்டுமல்ல தாமரை போல் இருக்கின்ற அத்தனை பரீட்சார்த்திகளுக்கும் அன்பு வார்த்தைகள். 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...