மானினமும் புள்ளினமும்
சோடிசேர்ந்து குலாவுபுகழ்
சோலை சார் சிகரமதில்
யானையுண்ட விளாங்கனியை
தானெடுத்து விளையாடிக்
காத்திருந்தான் காளையவன்
காரிகையின் வரவுக்காய்
ஆடைகளைந்த ஆரணியம்
புத்தாடை புனைந்து சரசரக்க
சுத்தமிடும் மலையருவி
சங்கீதம் பாடிவர
பித்துப் பிடித்தவன் போல்
காத்திருந்தான் காளையவன்
காரிகையின் வரவுக்காய்
கட்டுக் கட்டாய் அவளுக்காய் கரம் வடித்த
கவிக்குவியலில் ஒன்றெடுத்தான்
உயிரோடும் தன் உதிரத்தால்
நினைவோட முத்திரை பதித்தான்
துணையாக வருவாளா என விடைகாண
காத்திருந்தான் காளையவன்
காரிகையின் வரவுக்காய்
கட்டைப் பாவாடையும்
குதியுயர்ந்த காலணியும்
குட்டையாய் கத்தரித்த
குஞ்சி அழகுடனே
நெட்டையாய் வந்தவள்
குட்டையனே!
காதல் உனக்கொரு கேடாவென
கிழித்தெறிந்தாள் அவன் மனவரிகளை
சளிப்புடனே சுருக்கென்று சென்றாள்.
மலையுச்சியிலிருந்து மனவரிகள்
நிலம் நோக்கிப் பறக்கின்றன
போடி! நீ ஒரு கேடி – உன்னைத்
தேடி வந்த நான் ஒரு
கோடி கோடி முட்டாள்
உளஅழகறியா உனைக் கவி வடித்த
நான் ஒரு முட்டாள் முட்டாள் என
விட்டொழித்தான் அவள் நினைப்பை.
என்ன படத்தைப் பார்த்துக்கவிதை எழுதப்பட்டுதா? நினைக்காத திசையில் கவிதை போகுதே! something diffrent
பதிலளிநீக்கு