• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 31 அக்டோபர், 2010

    ஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்


                           ஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள் 
                           நூல் வெளியீட்டு விழாவில் 
                           என்னால் வழங்கப்பட்ட உரை

                     இங்குள்ள எழுத்தாளர்களுக்கு நான் புதுமுகம். மண்சஞ்சிகையில் நான் அறிமுகம். இன்று வெளியிடப்பட்ட இந்நூலில் என் விரிமுகம். 10 வருடங்களாக மௌனமாக இருந்த என் குமுழ்முனைப் பேனா பேசத் தொடங்கியது, முதல்முதல் மண்சஞ்சிகையிலேயே அடுத்து என்னை அடையாளப்படுத்தி என்னை உறங்க விடாது விழித்திருக்கச் செய்த ஊடகம் இலண்டன் தமிழ் வானொலியே. எனவே இன்றைய பொழுதில் இவ்விரண்டிற்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இன்று என் கையில் இந்த ஒலிவாங்கி தரப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறந்த ஓர்செய்தி சொல்ல என் மனம் பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாவில் சிறு நடுக்கம் நாள் கடந்த பேச்சின் அச்சம். 
                       ஆன்றோர் எழுத்தாளராய் இருக்கலாம். ஆனால்  எழுத்தாளர் ஆன்றோராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்றோரென்றால் அகன்றோர். சிறந்த பல அறிவுசார்ந்த நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் துறை போகக் கற்று நுண்மான் நுழைபுலம் மிக்கவராய் அறிவால் அகன்றோரே ஆன்றோராவார். இந்த அறிவு சிறந்த பல கருத்துக்களைக் கூற எடுத்துக்காட்டுக்களை எடுத்து வர உதவியாய் இருக்கும். இவர்கள் பற்பல நூல்கள் கற்பதாலும் விரிவுபட்ட மனத்தாலும் எச்சிறு விடயத்தையும் ஆழ்ந்து நோக்கி அகலப் பார்த்து அடுத்தபடி எழுத்தில் வடிக்கும் ஆய்வாளர்கள். ஆன்றோர்கள். ஆனால், எழுத்தாளர்கள் எழுத்தை ஆள்பவர்கள். இவர்களால் இராமயணத்திற்கு ஒப்பான இல்லை அதனை விட மேலான ஒரு காவியத்தைப் படைக்க முடியும். யாப்பெருங்கலக்காரிகை கற்றிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் இவற்றையெல்லாம் விட சுவை ததும்பும் வாழ் உலகிற்கு  ஏற்ப காலத்திற்கு ஏற்ப கவியமுதம் பருகச் செய்ய முடியும். 
       
         ''சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
           சோற்புதிது, சோதிமிக்க 
           நவகவிதை, எந்நாளும் அழியாத
           மா கவிதை'

     என்று பாடினார் பாரதி.  எனவே ஓர் எழுத்தாளர், காலத்துக்கேற்ற கருத்துக்களைக் கூறுபவராய் தான் கூற வந்த கருத்தை ஆணித்தரமாகவும் ஆளுமையுடனும் கூறக் கூடிய வல்லமை மிக்கவராயும் புத்தம் புதிய இலக்கிய வடிவங்களைப் படைக்கக் கூடிய எழுத்தாற்றல் மிக்கவராயும் இருப்பார். அவ்வாறு எழுத்தை ஆளுபவரே எழுத்தாளராவார்.  
           அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
            ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
           வெந்து தணிந்தது காடு – தழல்
            வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
                தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
                          
    சிறிய அக்கினித் துகள் காட்டினையே எரித்து அழித்து விடுகின்றது.  அவ்வாறே ஒரு சிறு எழுத்தாளன் கைமுனைப் பேனா. ஒரு சமூகத்தை திருத்தி நல்வழிப்படுத்தக்கூடிய வல்லமைமிக்கது. அது வாசகர் உள்ளங்களை குத்திக் கிழிக்கும் கத்திமுனையாய் இருத்தல் கூடாது. வாசம் வீசும் மல்லிகையாய் இருத்தல் வேண்டும் சுகந்தம் வீசி மனதைச் சாந்தமாய் ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படையாய் இருத்தல் வேண்டும். ''பாட்டினிலே எழுத்தினிலே அன்பு செய்' என்று பாரதி கூறுவார். ''ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்ய நான் பாட வேண்டும்' என்று வள்ளல் பெருமானார் சொல்வார். சமுதாயக் கீறல்கள், வாழ்க்கை அத்தியாயங்களில் எமது மக்களுக்கு ஏற்படும் வடுக்கள், வருங்கால வாரிசுக்களுக்கேற்ற அறிவுரைகள்,போன்ற இத்யாதி இத்யாதி எண்ணக்கருக்கள், எழுத்தில் அரங்கேறி வாசகர் நெஞசங்களில் இடம்பிடிக்கும் போது அவர்கள் உள்ளங்களில் ஒரு சிந்தனைத் தூண்டல் ஏற்படல் வேண்டும் ஏற்படுத்தல் வேண்டும். ''எழுதுகின்ற கலைஞன் யாருக்காக எழுதுகின்றோம் என்பதை மறந்து விடாமல் எழுத வேண்டும். அந்த எழுத்தில் உண்மையான அன்பு இருத்தல் வேண்டும்.' என்று சொல்வார் னுச.  இராதாகிருஸ்ணன். 
                            ஒரு படைப்பாளியின் படைப்புக்களில்  அப்படைப்பாளியின் உள்ளம் தெளிவாகப் புலப்படும். தன்னுடைய மனஓட்டய்களைத் தன் படைப்பிலுள்ள மாந்தர்களின் வாயிலாக நிகழ்ச்சிகளின் வாயிலாக வர்ணனை வாயிலாகப் புலப்படுத்துவார். மிகச் சாதாரணமான சொல்லைக்கூட இலக்கிய உருமாற்றம் செய்தோ இலக்கிய மொழிமாற்றம் செய்தோ வழங்குவது மரபு. இதனால், மக்களின் இயல்பான மொழி வழக்குகள் இலக்கியத்தில் இடம் பெறாமல் போகலாம். யதார்த்தம் எனப்படும் அந்த உண்மை நிலை இலக்கியத்தில் இடம் பெறாமல் போனால் அந்த இலக்கியமும் இலக்கிய கர்த்தாவும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள். கம்பர் ஓரிடத்தில்
           ''வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியில் விரிய
            பொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்
            மையோ! மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!
            ஜயோ! இவன் வடிவென்பதோ அழியா அழகுடையான்! 

    என்று இராமனின் அழகை வர்ணிக்க வார்த்தையின்றி ஜயோ என்று இலக்கியச் செல்வாக்கற்ற ஒரு சாதாரண சொல்லைத் தன் பாடலில் செருகி இலக்கியத்தின் சுவையைக் கூட்டியுள்ளார். 
                                 இந்த அந்நிய மண்ணிலே தமிழால் நாம் இணைந்துள்ளோம். பழந் தமிழ் இலக்கியங்கள் என்று எமது கரங்களுக்குக் கிடைக்கக் கூடிய சங்க நூல்கள், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் போன்றவை இலக்கண வரம்புக்குட்பட்டதாகவும் திருத்தமான இலக்கிய வடிவங்களாகவும் காணப்படுகின்றன. 2000 ஆண்டுளுக்கு முற்பட்டே இவ்வாறான திருத்தமான இலக்கியவடிவங்கள் எம்மிடையே இருக்கின்றதென்றால் எமது தமிழின் பழமை எவ்வாறு இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை.                        எனவே எழுத்தை ஆள்பவர்களாகிய நாம் அத் தமிழ் அழிந்து விடாது போற்றிப் பாதுகாத்தல் வேண்டும். எமது பழந்தமிழ் புலவர்கள் தமிழில் எந்தளவில் ஈடுபாடுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் சீத்தலைச்சாத்தனார் என்னும் ஒரு புலவர் தமிழ்க் குற்றம் கண்டாரேயானால் தன்னுடைய எழுத்தாணியால் தன்னுடைய தலையில் ஓங்கிக் குத்துவார். அதனால் சீத்தலைச் சாத்தனார் எனப் பெயர் பெற்றார். ஓட்டக்கூத்தரோ தமிழில் குற்றம் கண்டு பிடித்தாரேயானால் குற்றவாளியின் காதைக் கடித்து விடுவார். நல்லவேளை இப்போது ஒட்டக்கூத்தர் இங்கில்லை இருந்திருந்தால் பலர் காதில்லாமல் தான் இருந்திருப்போம். எனவே எப்படியெல்லாமோ கட்டிக்காத்த தமிழ் அழிந்து போகாது காக்க வேண்டியது எமது கடமையல்லவா.  சாலையிலே செல்லும் மாட்டுக்கு இருபறமும் மறைத்துக் கட்டியிருப்பார்கள். நேராகச் சாலையைப் பார்த்தே அந்த மாடு செல்லும் இவ்வாறே கட்டுப்பாட்டுடன் எழுதும் எழுத்தாளன் தன் எழுத்தை வடிப்பான். ஆனால் போருக்குச் செல்லும் குதிரை எந்தவித மறைப்பும் இன்றி அனைத்துப் பக்கங்களையும் பார்த்தே ஓடும். இதே போன்றே எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளேயும் அடங்காத எழுத்தாளன் தன் எழுத்துக்களை அனைத்துப் பார்வையையும் அகல விரிதுதுத் தன்னுடைய எழுத்தை வடிப்பான். அவ்வாறே எழுத்தாளர்கள் எந்தவித கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை அழகு நடையில் வடித்துத் தமிழுக்கும். தமிழினத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கூறி. இவ்வளவு நேரமும் என் எண்ணஓட்டத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி கூறி எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.
           
                   
            

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...