• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 8 அக்டோபர், 2010

    சர்வதேச முதியோர் தினம்




    பூமிச்சுழற்சி காலங்களைக் கழியச் செய்கின்றது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வயதை வளரச் செய்கின்றது. வளருகின்ற வயது முதுமைக்கு வழி சமைக்கின்றது. பூமிகூட வயதாகி விட்டதனால் தன்னுடைய சுழற்சியில் சிறிதளவு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். முதுமையிலும் அழகு கொண்டு மனிதர்கள், முயன்று கொண்டிருக்கின்றார்கள்.  . தன் அநுபவப்பாடத்தால், உலகை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பூமி சுழன்று கொண்டிருப்பது போல் மனிதன் வாழ்க்கையிலும் சுழற்சி காணப்படுகின்றது. முதுமையில் மனிதர்கள் குழந்தை போலாகி விடுகின்றார்கள். முதுமையில் மூளை தன் செயற்பாட்டில் தளர்வு காண யாதும் தெரியாக் குழந்தை நிலைக்கு மனிதர்கள் ஆளாகின்றார்கள். மூளைச் சேமிப்புப் பகுதி தொழிற்பாடு குறைய மெல்ல மெல்ல தனது பதிவுப்பகுதி அழியத் தொடங்குகின்றது. இதனால், வயதானோர், பல உளவியல் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இம்முதுமையில், மூளையின் நரம்பு மண்டலங்களின் அணுக்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்குகின்றது. உடல் எதிர்ப்பு சக்தி குறையும் போது பலவித நோய்களுக்கு உட்படுகின்றார்கள். இழையச் சீர்கேடு ஏற்படுகின்றது. உடற்தசைகளின் பாரம்; குறைகின்றது. தோல் சுருக்கம் காணுகின்றது. பார்வை பாதிக்கப்படுகின்றது. மூட்டுவலி ஏற்படுகின்றது. 60 வயதுக்கு மேல் முதியோர் முள்ளந்தண்டிலுள்ள அணுக்கள் குறைவதனால், அவர்கள் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறாக பாதிப்புக்குள்ளாகும் முதியோர், படிவளர்ச்சி கண்டு முதுமை பெற்று இறக்கின்றார்கள் என்று படிவளர்ச்சிக் கோட்பாடு கூறுகின்றது.

                     பிறந்தவர்கள் இறக்கின்றார்கள் என்பது நியதி. இது தவிர்க்க முடியாது போகின்றது. தசைச் சுருக்கம் அகல பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதுமையை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பலவிதமான நோய்கள் உடல் மூட்டு வலிகள், உளவலிகள் கொண்டிருக்கின்ற வயதானவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்களை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டிய அவசியத்தையும் கருதி ஒக்டோபர் 1 ம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக ஐக்கியநாடுகள் பொதுசபை பிரகடனப்படுத்தியது. இது 1990 ம் ஆண்டு மார்கழி மாதம் திகதி 45ஃ106 பிரிவு. மானத்திற்கமைய  பிரகடனப்படுத்தப்பட்டது. ஆயினும் 1991 ஆம் ஆண்டே உலகமெங்கும் முதன்முதலாக அநுஷ்டிக்;கப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தேசிய தினமாக அநுஷ்டிக்கப்படுகின்றது.

                      பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோராகக் கணிக்கப்படுகின்றனர். ஐ.நா வின் கணிப்பீட்டின் படி ஒவ்வொரு பத்துப்போருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் காணப்படுகின்றார்கள். 2050 இல் 5 க்கு ஒன்று என்றும், 2150 இல் 3 க்கு ஒன்று என்ற அடிப்படையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிறப்பு வீதம் குறைவடைந்து இறப்பு வீதமும் குறைவடைவதனால், முதியவர்கள உலகலாவிய ரீதியில் அதிகரித்துள்ளார்கள். இன்று உலகம் முழுவதும் 60 கோடி முதியவர்கள் காணப்படுகின்றார்கள். இலங்கையிலே 2006 கணிப்பீட்டின் படி அண்ணளவாக 22 இலட்சம் முதியோர்கள் காணப்படுகின்றார்கள். ஜேர்மனியிலே அண்ணளவாக 20 மில்லியன் முதியோர்கள் காணப்படுகின்றார்கள். காலப்போக்கில் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரியவருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் 60 - 70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமும் 70 – 80 வயதுக்கு இடைப்படடோர் 34.3 வீதமும் 80 – 90 வயதுக்கு இடைப்பட்டோர் 1.3 வதமுமாக உள்ளனர். இதில் அதிகமானவர்கள் வறுமைக்கு உட்பட்வர்களாகவே உள்ளார்கள். இந்த வகையில் இவர்களின் பராமரிப்பை முக்கியப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

                      அடுத்தவர்களில் தங்கி வாழ வேண்டிய முதியோர்களை, அவர்கள் வாழும்போது முழுமையாகப் பராமரிக்க முடியாது சில பிள்ளைகள் தவிக்கின்றனர். வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் கருதி அவர்களை வீட்டில் தனியே விடுவதனால், பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. முதியோர் விடுதிக்கு அவர்களை அனுப்புவதனால் வயதானோர் பல மனஉழைச்சல்களை அடைவதாக அறியப்படுகின்றது. தனிமை அவர்கள் உள்ளத்திலே பய உணர்வை ஏற்படுத்துகின்றது. அதுவே மன நோய்களை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகின்றது. இது பற்றி மனிதநேயங்கொண்ட  மனிதர்கள் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். இன்றைய இளந்தலைமுறையினர் நாளைய முதியோர்கள். இன்றைய முதியவர்கள் நிலை. நாளை இளந்தலைமுறையினர் நிலை. எனவே சிந்தித்துச் செயற்படுத்துவோம்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...