சித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர்க்கு மட்டும்)
சித்திரையில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு - அது
தாய்மார்கள் ஆன்மா ஈடேற்றம் காணும் சிறப்பு.
கற்றவர்கள் கூட அதற்கு தரும் மதிப்பு
எப்படியோ ஆகட்டும் என்ற ஒரு போக்கு
அன்று தாய்மார்களின் ஆன்மாக்கள் உலகில் இருந்து பிரிக்கப்பட்டு ஈடேற்றம் காணும் நாள். அவ்வுலகிலும் ஒரு இறப்புநாள் என்றே நான் கருதுகின்றேன். அதுவும் பூமியில் வாழும் தமது பிள்ளைகள், அன்றைய நாள் விரதம் இருந்து, பூசை புரிந்த ஆன்மாக்கள் மட்டுமே ஈடேற்றம் காணும் நாள். அந்த ஆன்மாக்கள், பூமியில் வாழும் போது எப்படி நன்மைகள் செய்திருந்தாலும் பிள்ளைகள் அன்றைய நாள் விரதம் அநுஷ்டிக்க வேண்டும். அப்போதுதான் தாய்மார் ஆன்மாக்குள் ஈடேற்றம் காணும் என்ற ஒரு நம்பிக்கை நம்மவர் மத்தியில் புகுந்துள்ளது. தந்தையர் ஆன்மாக்கள் அங்கு தரித்து வைக்கப்படும். மற்றைய உறவுகள் எல்லாம் உலாவித் திரியும். ஆடி அமாவாசை வந்தால், மீண்டும் ஒரு பிரிவு. தந்தையர் ஆன்மாக்கள் எல்லாம் ஆன்மாக்கள் உலகில் இருந்து விடைபெற்று ஈடேற்றம் காணும் நாள். அதுவும் ,பூமியில் வாழும் பிள்ளைகள் ஆடி அமாவாசை விரதம் இருக்க வேண்டும். தாய் பௌர்ணமியில் ஆண்டவன் காலடி நாடுவாள். தந்தை அமாவாசையில் ஆண்டவன் காலடி நாடுவார். ஆனால் திருமணபந்தத்தில் நுழையாத சகோதரர், பிள்ளைகள் இறந்தால், அவர்கள் ஆன்மாக்கள் ஈடேற்றம் காண எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். அது பற்றி வினா எழவில்லையா? இவர்களின் ஆன்மாக்களின் நிலை தான் என்ன? மனதினுள் எழுந்த வினாக்களின் சிந்தனைகள் விரிந்தவளாய் யான், வழமைபோல் அன்றும் சிந்திரா பௌர்ணமி அன்று எனது பெற்றோர் படத்திற்கு விளக்கேற்றினேன். மனக்கவலைகள் யாரிடமும் கூறினால் அரைவாசியாகக் குறையும் மனமகிழ்ச்சிகள் யாரிடமும் கூறினால் இரு மடங்கு அதிகரிக்கும். இவ்வாறே மகிழ்ச்சியோ கவலையோ எனது பெற்றோர் படங்களின் முன் பகர்வது எனது வழக்கம். அன்றும் அவ்வாறே.
அன்று சித்திரா பௌர்ணமி அடுத்த வீட்டில் இருந்து வந்த அழைப்புக் கூட இருந்தது. நேரம் போதாமையால், வேலைக்குப் போகுமுன் அடுத்த வீட்டார்க்குச் சிறிது கையுதவி செய்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றிருந்தேன். வீட்டுக்குள் சென்ற போது வாசனை மூக்கைத் துளைத்தது. அவர் தாயாரின் உருவப்படம் ஒரு மேசைமேல் வைக்கப்பட்டிருந்தது. அழகான பூக்கள் தாயாரின் படத்திற்கு வைப்பதற்காக, அன்றே வாழத்துடித்து மலர்ந்த மலர்களை அது வாழும் போதே பறித்து எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பூஜைக்குரிய ஆராத்தித் தட்டுக்கள், கற்பூரம், சந்தனக்குச்சி, சாம்புராணி இப்படியெல்லாம் ஒரு சுவாமி படத்திற்கு அலங்கரிப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமையலறையினுள் அமர்க்களம். 3,4 குடும்பங்களை விருந்துக்கு அழைத்ததனால், பெண்களின் கலகலப்புப் பேச்சுக்களும் சிரிப்புக்களும் தாளித வாசனையுடன் கலந்து கொண்டு வீடெங்கும் பரவியிருந்தது. தாய்மண்ணிலே உணவுக்காக ஏங்கும் ஏழைகளுக்கு இப்படியான சந்தர்ப்பங்களில் இப்படியாகச் சமைத்துக் கொடுப்பது வழக்கம். இதுவும் இப்படியான நாள்கள் செய்வதன் அவசியமும் கூட. ஆனால், இங்கு........ ஐரோப்பிய நாடுகளில் ..........கலகலப்பில் நானும் கலந்து கொண்டேன். சிறிது கையுதவியும் செய்தேன். சமையலும் முடிவடைந்தது. தாயாரின் படத்தின் முன் 15 கறிகளுடன் சோறும் வடை பாயாசங்களும் படைக்கப்பட்டன. பூஜை ஆரம்பமானது. தேவாரங்கள் பாடப்பட்டன. கற்பூர ஆராத்தி காட்டப்பட்டது, சாம்புராணி தீபம் போடப்பட்டது. முடிந்தவுடன் எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பின் விஜய் நடித்த சுறா படம் போடப்பட்டது. உணவருந்தி படம் பார்த்து விருந்தினர் விடை பெற்றனர்.
ஒரு மணி நேரம் வேலைக்குத் தாமதமானாலும் கூறவேண்டியவற்றைச் சரியான நேரத்தில் எடுத்துக் கூறாவிட்டால், அது கூறாமலே மறைந்து போய்விடும் அல்லவா! அதனால், அந்தத் தாயின் மகளை அருகே அழைத்தேன். இந்த 4 குடும்பங்களில் ஒருத்தியாக உணவு பிரமாதம் என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு விடைபெற்றுச் செல்லும் ஒரு சாதாரணமான பெண் நான் இல்லை. என்றும் எதையும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நான், இன்று இந்த சித்திராபௌர்ணமி பற்றிச் சிந்தித்தேன். உங்கள் தாயில் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் விருப்பும் புரிகின்றது. ஆனால், ஏன் இது செய்யப்படுகின்றது என்று சிந்தித்தீர்களா?
• எதற்காக படத்தின் முன் படையல்கள் படைக்கப்படுகின்றது? உங்கள் தாயின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்திவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவா? அது திவசத்தில் அல்லவா செய்கின்றார்கள். இன்றைய நாள் விரதம் இருந்து தாயாரின் ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவல்லவா செய்யப்படுவது. நீங்கள் படையல்கள் படைத்து அழைத்தால், உங்கள் தாயாரின் ஆன்மா இங்கு வந்து உணவு அருந்துவதா? இல்லை ஈடேற்றம் காண்பதா? சிந்தித்துப் பாருங்கள்.
• உங்கள் தாயின் படத்தின் முன் பூஜைப் பொருட்கள் வைத்திருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் தான் என்ன? உங்கள் தாயார் இறையென்னும் நிலையடைந்துவிட்டார் என்று உறுதியான மனநிலை நீங்கள் கொண்டதனாலே தானே! அதனாலே தானே கற்பூh ஆராத்தி எடுத்தீர்கள். பின் ஏன் ஈடேற்றம் கருதி விரதம் இருக்கின்றீர்கள்? திடமான நம்பிக்கை கொள்ளாத எதுவுமே மனிதர்;கள் செய்வது தவறு, என்றே நான் கருதுகின்றேன். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
• இங்கு தேவாரம் பாடப்பட்டதே! தோடுடைய செவியன் என்பது சிவபெருமானைக் குறித்துத் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் அல்லவா! இங்கு வைக்கப்பட்டிருக்கும் உருவப்படமானது உங்கள் தாயாரினுடையதல்லவா! தாயாரின் உருவப்படத்தின் முன் இறைவனை நினைத்துப் பாடினீர்கள் என்றால், தேவாரங்கள் கரும்பின் சக்கையைச் சப்பித் துப்பியதைப் போன்றவை. உதாரணத்திற்கு திருஞானசம்பந்தர் ''தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி'' என்ற தேவாரத்தைப் பாடி உமையம்மையாரால் பாலூட்டப் பெற்றவர். அந்த கரும்பின் சாற்றை அவர் அருந்தி விட்டார். அதன் சக்கையை நாம் பாடுவதில் என்ன இருக்கின்றது? இறைவனை எண்ணி நீங்கள் பாட வேண்டுமானால், நீங்களாகவே நினைத்துப் பாடுங்கள். அதில் பொருள் இருந்தால் போதுமானது. அதை எதிர்பார்த்தால் அவர்கள் கடவுளர்களும் இல்லை. பாடல்களில் கவித்துவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் விளங்காது பாடப்படும் பாடல்களும் பலன் தராது, மந்திரங்களும் பலனளிக்காது. ஏனென்றால், அவை மனதில் பதியப்படுவதில்லை. மூளை ஏற்றுக்கொள்வதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
• இறந்தவுடன் உயிரென்னும் ஆத்மாவானது வேறு ஒரு உடலினுள் ஐக்கியமாகின்றது என்பது கர்மக்கோட்பாடாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அப்படியெனில், எங்கோ ஒரு உடலினுள் ஐக்கியமாகிவிட்ட அந்த ஆத்மாவிற்கு மீண்டும் ஈடேற்றம் காண நீங்கள் விரதம் இருப்பது பெரிய பாவம் இல்லையா! இது நியாயமாகிவிடுமா! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
• இல்லை உங்கள் தாயாரின் ஆத்மா இன்னும் அலைந்து திரிகின்றது என்றால், 30 வருடங்கள் கழிந்த நிலையிலும் அந்த ஆன்மா அலைந்துதான் திரிகின்றதா! இத்தனை வருடங்களும் நீங்கள் விரதம் இருந்தது பலன் அளித்திருக்காது என்ற நம்பிக்கையீனம் உங்களிடம் குடிகொண்டிருக்கின்றதா! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
• உலகில் நன்மைகள் பல செய்து வாழும் மனிதன் இறந்துவிட்டால், அவனது ஆன்மா பிள்ளைகள் சித்திராபௌர்ணமி விரதம் இருந்தாலேயே ஈடேற்றம் காணும் என்றால், உலகில் வாழும் வரை தீமை செய்பவர்கள். பிள்ளைகள் மூலம் ஈடேற்றம் கிடைக்குமென்று கருதியவர்களாக நிம்மதியாக இறக்கலாமே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
உயிரற்ற உடலால் என்ன பயன் என்று அந்த உடலைத் தீக்கிரையாக்கி விடுகின்றோமே. உடலற்ற அந்த உயிரால் என்ன பயன்! ஆன்மா என்பது உடலுள் இருக்குமானால், சத்திரசிகிச்சையின் போது அது எங்கே செல்கின்றது? ஆழ்ந்த மயக்கம் கழிந்து எழுந்தபின் சத்திரசிகிச்சையின் போது நடந்த நிகழ்ச்சிகளை எமது ஆன்மா தெரியப்படுத்தியிருக்குமே. அந்த மூளைதான் ஆன்மா என்று, அந்த மூளை கொண்ட மனிதன் சிந்திக்கத் தவறுவதுதான்
ஏன்? ஆன்மா என்று அலட்டிக் கொண்டு அதன் மூலம் வருமானம் தேடுபவர்களுக்கு அது தொழிலுக்கு ஆதாரம். ஆனால், அனைவரையும் அறிவற்றவர்களாய்க் கருதுவது தவறு அல்லவா! எனவே வாழும் போதே நன்றிக் கடன் செய்வதாக இருந்தால், செய்ய நினைப்பவர்களுக்கு மனத் திருப்தியுடன் செய்து முடித்துவிட வேண்டும்.;; வாழ்ந்து இறந்து எரிந்துவிட்ட, புழுபூச்சிகளுக்கு இரையாகிவிட்ட உடலுக்குச் செய்கின்றவை எல்லாம் வெறும் போலியாக பிறருக்குக் காட்டுகின்ற வெளிக்காட்டுகை என்பதையும்; புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கிரியைகள் எல்லாம் எமது தாயார்; தினம் (ஆழவாநச'ள னயல) போல் பெற்றோர்க்கு நன்றி செலுத்துவதற்காகவும் இறந்த அவர்களை நினைப்பதற்காகவுமே செய்யப்பட்டவை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
இது உங்களுக்கும் உலகுக்கும் சொல்லும் சிந்தனை. நான் வருகின்றேன் என்று ஒருவரைச் சிந்திக்கத் தூண்டிய மனதுடன் விடைபெற்றேன். அவள் சிந்தித்தாளோ இல்லையோ, உலகு சிந்திக்கட்டும். உலகத்து மாயையை.
புதன், 27 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்
ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர் தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.