நெடிதுயர்ந்த மாடங்கள்
கடிதென விரையும் சாலை
கொட்டும் பனி வாட்டியெடுக்கும் குளிர்
வாழ்கிறோம் வந்த நாட்டில்
உணவு தொட்டு அத்தனையும் இரசாயணம் கலந்த வாழ்வு. இயற்கை அழகை எங்கே நாம் இரசிக்க முடியும். இயற்கையை இரசிக்க இடம் தருகின்றதா இவ்வாழ்க்கை. வாகனத்தின் போக்கில் நிலாவின் புதுப்பொலிவைக் காண்கிறேன். காண்போர் கண்களுக்கு விருந்தாகும் நிலா, எட்ட நின்று என் கருத்தைக் கவர்கின்றது. நான் பிறந்த போதும் இப்டியே நின்றது. நான் வளர்ந்த போதும் இப்படியே நின்கின்றது. கால மாற்றங்கள் உடலிலும் உள்ளத்திலும் வாழ்விலும் பல மாற்றங்களைக் காட்டி நிற்கின்றன. இந்த வட்ட நிலா மட்டும் நான் கண்ட அதே கோலத்தில்.
சின்ன வயதில் மட்டக்களப்பு வாவியிலே, பூரணநிலா பொங்கிப் பூரிக்கும் அழகை நினைத்துப் பார்க்கின்றேன். அவ்வேளை அவ்வாவியிலிருந்து தோன்றும் ஒரு இனியஓசை இன்றும் என் காதுகளுக்குள் கானமிசைக்கின்றது. உலகில் எங்கும் கேட்கமுடியாத அந்தப் பாடும் மீன்களின் பரவச கானம் பலர் இதயங்களைக் கொள்ளை கொண்டது. இவ் இனிய ஓசை பற்றி விபுலானந்த அடிகளார் நீரர மகளிரின் காந்தர்வ இசை எனக் களிப்பின்புற்றுக் கூறியுள்ளார்.
''நீல வானிலே நிலவு வீசவே மாலைவேளையே மலைவி தீருவோம்
சாலை நாடியே சலவி நீருளே ஆலைபாடியே பலரொடு ஆடுவோம்
நிலவு வீசவே மலவு தீருவோம் சலவி நீருளே பலரோடாடுவோம்
நீசரி காகம மாபத நீசா கரிகம மாபவ பதளி சாசரி''
விபுலானந்த அடிகளாரின் ஆராய்ச்சித் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகப்படுகின்றது. பூரணநிலவியே பொங்கியெழும் ஓசையும் ஆண்டுதோறும் ஆனித்திங்களில் மட்டக்களப்பு மாநிலம் எங்கும் காணப்படும் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பாடப்படும் பாடல்களும், சிலப்பதிகாரக் கவிதைகளின் சிலம்பொலிகளும் விபுலானந்த அடிகளாரை இசை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்
''அஞ்சிறையும் புள்ளொளியும் ஆன்கன்றும் கழுத்தில்
அணிமணியின் இன்னொலியும் அடங்கியபின் நகரார்
பஞ்சியைந்த அணிசேரும் இடையாமப் பொழுதில்
பாணனொடும் தோணியிசை படர்ந்திரனோர் புலவன்
தேனிலவு மலர்பொழில் சிறைவந்து துயில
செழுந்தரங்கத் தீம்புனலில் நண்டினங்கள் துயில
மீனலவன் சிலவந்து விண்ணிலவன் துயில
விளங்கு மட்டு நீர்நிலையில் எழுந்ததொரு நாதம்''
எனப் பாடும் மீன் நாதம் கேட்டுப் பரவசமுற்றுப் பாடினார் விபுலானந்த அடிகளார்.
எனவே மீனினம் இசை பொழிய இடந்தந்த வெண்ணிலாவே யாழிசை நரம்புகள் எல்லாம் தெளிவாக ஆராய்ந்து யாழ்நூழை ஆக்கி அந்நூலுக்கு ஏற்ப யாழினையும் உருவாக்கித் தந்த விபுலானந்த அடிகளார் உள்ளத் தூண்டலுக்கு நீயும் காரணமோ!
யாழ் பற்றிச் சில வார்த்தைகள் (1936)விபுலானந்த அடிகளார் சொற்பொழிவிலிருந்து
சங்ககாலத்திலே மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில்கள் பெறுவது புலவர்கள் வழக்கமாய் இருந்தது. அதேபோல் பாணர்கள் யாழ் மீட்டிப் பரிசில்கள் பெறுவர். பாணர்கள் யாழ் மீட்டிப் பாடும்போது அவர்கள் மனைவியர் பாடினிகள் நடனம் ஆடுவர். இக்காலத்தில் இருவகை யாழ்கள் வழக்கத்தில் இருந்தன. அவை 7 தந்திகளுடைய செங்கோட்டி யாழும் 21 தந்திகளுடைய பேரியாழும் ஆகும். இவை பற்றிப் பத்துப்பாட்டு அழகாக எடுத்துக்காட்டுகின்றது. அதன்பின் சிலப்பதிகார காலத்தில் 14 தந்திகளுடைய சகடயாழும் 17 தந்திகளுடைய மகரயாழும் வழக்கத்திற்கு வந்தன. அதன்பின் 1 தந்தியுடைய மருத்துவயாழும், 1000 தந்திகளுடைய நாரத பேரியாழும் 100 தந்திகளுடைய கீசகயாழும், 9 தந்திகளுடைய தும்புருயாழும் வழக்கத்திற்கு வந்தன. அழகான வேலைப்பாடுகளுடனும் இரத்தினக்கற்கள் பதித்தும் இவ் யாழ்வகைகள் காணப்பட்ட எனவும். மேலும் அவை பற்றிய விளக்கங்களும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், கல்லாடம் ஆகிய நூல்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
சிறு கட்டுரை, நன்கு அலசப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குvetha. Elangathilakam.- Denmark.
விபுலானந்த அடிகளாரின் அலசல் நன்று ! தொடருங்கள் கௌரி!!
பதிலளிநீக்கு