• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 18 அக்டோபர், 2010

    தமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் பெற்றோர் பங்கும்

    இவ்வுலகம் உருவாகி இலட்சக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. உயிரினங்கள் உருவாகி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அன்று தோன்றிய நாள் முதல் மனிதஇனம் பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்துவருகின்றது. இவ்வாறே மனிதஇனம் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதற்கு அம்மக்களிடம் இருந்துவந்த உறவுமுறைகளே காரணமாக இருந்திருக்கின்றன. ஆரம்பகாலம் உண்ணவும் உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், இன்று சிறந்த கலாசாரப் பண்புகளைக் கொண்ட மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் புலம்பெயர்வில் எமது இளந்தலைமுறையினர், கலாசாரம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்ற போதும் அதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு பெற்றோராகிய எம்மைச் சார்ந்தே இருக்கின்றது.

    முதலில் கலாசாரம் என்றால் என்ன என்கின்ற தெளிவு எம்மத்தியில் ஏற்பட வேண்டும். கலாசாரம் என்பது வாழுகின்ற காலநிலை பௌதிகசூழலுக்கேற்ப மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கால ஆச்சாரமே கலாசாரம் எனப்படுகின்றது. இது ஒரு எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. சுவாமி விவேகானந்தர் கருத்தும் இதுவேயாக இருக்கின்றது. கலாசாரம் என்னும் சொல்லானது பழந்தமிழ் இலக்கியங்கள் எதிலுமே காணப்படவில்லை. கல்சர் என்னும் சொல்லானது ஆங்கிலத்திலே வரலாற்றுத் துறையில் ஒரு பொருளிலும் மானிடஇயல் துறையில் வேறுஒரு பொருளிலும் கையாளப்படுகின்றது. கிரேக்கர் உயர் பண்புடமையை பண்பாடு என்கின்றார்கள். Mathew Arnold என்ற மொழி ஆய்வாளர் கூறும் கல்சர் என்ற சொல்லுக்குரிய விளக்கமானது பண்பாடு என்ற சொல்லுடன் பொருந்திவருகின்றது. இதே பொருளில் எமது பழந்தமிழ் இலக்கியங்களில் சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக 'பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்'' என நெய்தற்கலி 16 இலேயும்; வள்ளுவர் திருக்குறளிலே பண்புடைமை என்ற தலைப்பில் ஒரு அதிகாரத்தையும் கையாண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே கலாசாரம் என்பது பண்பாட்டுடன் பொருந்தி வருவதாக உள்ளது. பண்பூபடுதல், பண்பாடு எனப்படுகின்றது. எனவே மனிதனின் பண்பட்ட நிலையே கலாசாரமாகின்றது.

    சிந்துவெளிநாகரிக காலத்துக் கலாசாரமானது அக்காலச் சூழலுக்கமைய அமைந்திருந்தது. சங்கம் தொட்டு இன்று வரை கலாசாரத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. சங்ககாலத்தில் கள்ளுக் குடித்தல் ஒரு கூறாக இருந்தபோது அது குற்றமாகக் கருதப்படவில்லை. சமணர் வருகை அதைக் குற்றமாகக் காட்டியது. பெண்டீர் பலரை மணக்கும் வாய்ப்பு இருந்த போது அது பண்பாட்டுக் குறையாகச் சொல்லப்படவில்லை. எனவே காலத்துக்குக் காலம் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. Pயளஉயட புளைடிநசன என்னும் அறிஞர் தன்னுடைய ஆய்விலே சூழ்நிலை சமூகநிலைக்கேற்ப உளம் சார்ந்து உருவாவதே கலாசாரம் என்கிறார். நிலத்தின் பண்பட்டநிலை அக்ரிகல்சர் ( Agriculture) போல் மனதின் பண்பட்டநிலை கலாசாரம். எனவே மக்களது அறிவுநலம், கொள்கைநலம், ஒழுக்கநலம், வாழ்க்கைநலம் போன்றவை பண்பட்டநிலையே கலாசாரம் என்று முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இந்நலங்கள் எல்லாவற்றையும் எமது வளரும் தலைமுறையினர் அவர்கள் வாழுகின்ற சூழ்நிலையிலே பெறக்கூடியதாக இருக்கின்றது. இதற்குப் பெற்றோரின் கண்காணிப்பும் அவசியமாகின்றது.

    ஒரு இனத்தின் குணநலன்கள் பிறப்பிலேயே வருவதில்லை. பிறந்தசூழல், வளரும், வாழும் சூழலுக்கேற்பவே அமையும். தொடக்கத்தில் இருந்த குணங்கள் பரிணாமவளர்ச்சி, அறிவுவளர்ச்சி மேம்பட விரிவடையும். வௌ;வேறு இனங்களாகப் பிரிந்து மாறுதலடையும் இல்லை மறைந்த போகும். இதுவே இன்றைய எமது இளந்தலைமுறையினர் நிலையாக இருக்கின்றது. எங்கள் இளந்தலைமுறையினர் சூழல் சுற்றம் நோக்கியே தம் வாழ்க்கைப் பாதையைக் கடக்கின்றனர் என்பது கண்கூடு. ஆனால் அவர்கள் காலில் சக்கரம் பூட்டப்பட்டிருக்கின்றது. கையில் மௌசை வைத்துக் கொண்டு உலகத்தையே காலடிக்குக் கொண்டுவருகின்றனர். அவர்கள் வெற்றிப்போக்கில் கலாசாரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தாம் வாழுகின்ற சூழலுக்கேற்பத் தம்மை மாற்றிக் கொள்வார்கள். 1871ம் ஆண்டு ஆராய்ச்சியில், ஒரு ஓநாயுடன் சேர்ந்தே வளருகின்ற ஒரு மனிதக் குழந்தையானது ஓநாயுடைய இயல்புகளைப் பெற்றிருப்பதாக டார்வின் எடுத்துக்காட்டுகின்றார். சுற்றுச் சூழலில் இருந்து அகற்றப்படுகின்ற குழந்தை தண்ணீரிலிருந்து அகற்றப்பட்ட மீன் போலாகும் என்று கருதப்படுகின்றது. எனவே வாழும் சூழலிலுள்ள தவறான போக்குகள், அவர்கள் பாதையில் பங்கம் விளைவிக்கா வகையில் பெற்றோர் பார்வை நீருக்குள்ளும் நின்றபடி நீரின் சிறந்த அம்சங்களை பெற்றுக் கொண்டு வாழும் பக்குவநிலை போதிக்கப்பட வாழும் சூழலைக் கற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது. சமுதாயவளர்ச்சிக்கேற்பத் தாமும் வளர்ந்திருக்க வேண்டியதும் கடமையாகின்றது.

    கலாசாரம் என்பது தனிமனிதனைச் சார்ந்து நிற்பதன்று தனி மனிதர் பலர் சேர்ந்தது தான் இனம். இனம் பல சேர்ந்ததுதான் சமூகம். எனவே கலாசாரம் என்பது இனவழி சமூகத்தின் போக்கைத் தாங்கி நிற்கின்றது. காலங்காலமாக சிறந்த பல நற்பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படும் நமது தமிழ் கலாசாரமானது, புலம்பெயர்விலும் போற்றிப் பாதுகாக்கப்படல் அவசியமாகின்றது. ஒரு கலாசாரத்தின் மூலவேர்கள் மொழியும் திருமணமுமாகும்.

    இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உலகில் ஏதோ ஒருமூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒரு மொழி அழிகின்ற போது அதன் பண்பாட்டு அம்சங்களும் அழிந்துவிடுகின்றன. உலகிலுள்ள 600 கோடி மக்கள் 6000 மொழிகளைப் பேசுகின்றார்கள். 3000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் பேசுகின்றார்கள். அதிகமான மக்கள் பேசுகின்ற 20 மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வாறான தமிழ்மொழி எமது கலாசாரத்தைச் சுமந்து செல்கின்ற வண்டியாகக் காணப்படுகின்றது. இப்புலம்பெயர்வில் தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவோர் குறைவாகவே இருக்கின்றார்கள். அந்தப் பெற்றோர்களுடைய பிள்ளைகள் கூட 500, 1000 அந்நியநாட்டுப் பிள்ளைகள் படிக்கின்ற பாடசாலையில் 4, 5 பிள்ளைகளாகவே படிக்கின்றார்கள். அவர்கள் கூட ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தமது கல்விமொழியையே பேசுகின்றார்கள். அதைவிடக் கூடிய நேரத்தை அந்நியமொழிக்காரருடன் செலவுசெய்யும் இவர்கள் வீட்டில் பெற்றோருடன் தமிழ்மொழியில் உரையாடுவார்கள் என்று பார்த்தால், வீட்டில் தொலைக்காட்சியுடனும் கணனியுடனும் தமது பொழுதைக் கழிக்கின்றனர். மொழி கற்பதற்காகத் தொலைக்காட்சித் தொடர்பை ஏற்படுத்தினோமேயானால், அதில் கலாசார சீர்கேடுகள் நிறைந்தே காணப்படுகின்றன. எனவே மொழியின் முக்கியத்துவம் நோக்கிப் பெற்றோர் தமது பிள்ளைகளின் மொழியறிவை அதிகரிக்கச் செய்யும் வகையில், மொழியில் கவர்ச்சியை ஏற்படுத்தவல்ல கலைகளைத் தமிழ்மொழியில் கற்பிப்பதன் மூலம் தமிழ்மொழியில் நாட்டம் கொள்ளச்செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

    புலம்பெயர் மக்களுடன் தொடர்பு கொள்வதிலுள்ள இலகுத் தன்மையும் பண்பனுபவமும் நமது மக்களிடம் கிடைப்பதில்லை. ஆசிரியர் தொட்டு வைத்தியர் வரையுள்ள அந்நியோன்யப் போக்கு எம்மவருடன் பழகுவதில் எமது தலைமுறையினருக்குக் கிடைப்பதில்லை. மதிப்பு என்ற பெயரில் கண்டிப்பும், வரதட்சணை, தாலிகட்டல் என்ற பெயரில் பெண் அடக்குமுறையும் எமது கலாசாரத்தில் எம் இளஞ்சந்ததியினருக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இதுவே இலகுவாக நட்புரிமையுடன் பழகக் கூடிய புலம்பெயர் கலாசாரதில் விருப்பை ஏற்படுத்துகின்றது. முற்காலம் சமூகம் என்ற அமைப்பு சிறிய அளவில் கூட உருவம் கொள்ளாத காலம் அது. சமூகம் என்ற அமைப்பு உருவான காலத்தில், ஒரு சிலரே சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை ஒரு அமைப்பாக உருவாகும் வரைத் திருமணம் என்ற சமூக அமைப்புமுறை உருவாகவில்லை. ஊரை ஆளும் முறை வர தலைமுறைச் சொத்தாகச் சிலர் அநுபவிக்க விரும்பியபோது திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த உடைமையும் தேவையில்லையென இஷ்டம் போல் அலைந்து திரிந்தநிலை மிகப்பழையநிலை, பின் கால்நடைகள், ஆடவர் உரிமைகள், உடைமைகள் ஆயின, அதன் பின் நிலம் பெண்களின் முதல் உடமைகள் ஆயிற்று. நிலம் உடைமையாக அந்நிலங்களில் பயிர்ச் செய்ய ஆள்த் துணை தேவைப்பட்டது. ஆளைப் பெற்றுப் பெருக்க ஆண் துணை நிரந்தர தேவையாயிற்று. நிலத்தை நிரந்தர உடைமையாகக் காக்கவும் மற்றவர் இடையூற்றிலிருந்து மீட்கவும் பெண்ணுக்கு ஆண்துணை நிரந்தர முதன்மையாயிற்று. இதன் மூலமே திருமணம் என்ற அமைப்பு உருவாயிற்று என க.ப. அறவாணன் ஆய்ந்து தெரிவிக்கின்றார். திருமணம் ஒருவருக்கு ஒருவர் என்ற நிலையான உளநிலையிலிருந்து தவறி உடல்நிலைக்கு மாற்றப்படும் போது விவாகரத்து மலிவாகப் போகின்றது. இந்தத் திருமணமுறிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தனிக்குடித்தனமே என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். நாட்டின் அரசியலுக்கு ஆலோசகர் தேவைபோல் வீட்டின் அரசியலுக்கும் ஆலோசகர் தேவையே. இதற்கு அநுபவ பலம் மிக்க பெற்றோர் அருகிருப்பது அவசியமாகின்றது.

    இப்போதுள்ள வரதட்சணை முறை ஆரியர் சார்பில் தமிழர்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்தில் காதல்மணம் பெருவழக்காய் இருந்தது. காலப்போக்கில் கற்புமணம் முதன்மை பெற்றது. அக்காலப்பகுதியில், பெண்ணைப் பெற்றோர்கள் மணமகனுக்கோ மணமகன் பெற்றோர்க்கோ எதுவுமே கொடுத்ததில்லை. பெற்று, வளர்த்து, ஆளாக்கி நல்வழியில் நெறிப்படுத்திய பெண்ணை ஆண்மகனுக்குக் கொடுத்த பெற்றோர், வேறு யாது கொடுத்தல் வேண்டும். ஆனால் பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் ஆண்மகன் பெண்ணின் தாய்க்குப் பால்க்கூலி அல்லது முலைக்கூலி அன்பளிப்பாக அளிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பழங்குடிகளிடம் ஆடு, மாடு, நிலம், பொருள் ஆகியவற்றைப் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்துப் பெண்ணை எடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றுள்ள நிலை பெண்பிள்ளையைப் பெற்றோர் ஆண்மகனுக்கு வரதட்சணை கொடுத்தலாக ஆரியமுறைப்படி புலம்பெயர்ந்தும் தொடர்கின்றது. இந்நிலையில் வெறுப்புக் கொள்ளும் எமது இளந்தலைமுறையினரின் வெறுப்புக்குப் பெற்றோர் ஆளாகாமல் இருப்பதும் அவசியமாகப்படுகின்றது.

    இவ்வாறு எமது மக்களிடம் காணப்படும் சில தவறுகளைக் கூர்ந்து நோக்கும் எமது இளஞ்சந்தியினர் அந்நிய கலாசாரத்தை நாடிச் செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. இன்று இளஞ்சந்ததியினரிடம் அடித்தளமாய்க் காணப்படுவது மொழிக்கல்வி, அறிவு, பொது அறிவு, மனவளர்ச்சி, வாழ்க்கை வசதி போன்றவையே. இவற்றில் நாட்டம் கொள்கையிலே கலாசாரம் தவறிவிடுகின்றது. முற்றுமுழுதாக அந்நிய கலாசாரத்தின் மத்தியில் வாழும் எமது இளந்தலைமுறையினர் பெரும் இக்கட்டான சூழ்நிலையிலே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைக் குறை கூறமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். நாம் முற்றுமுழுதாக தமிழ்கலாசாரம், தமிழ்மொழி, தமிழ் உறவினர் என்று ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் அப்படியல்ல. முழக்கமுழுக்க அந்நிய கலாசாரத்தில் பல்வேறுபட்ட கலப்புச் சூழலில் தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகிய எமது வாழ்க்கை வேறு. ஓரிரு நிகழ்ச்சிகளில் மட்டும் கண்டு கலந்து வாழும் எங்கள் பிள்ளைகளின் நிலை வேறு. எனவே அவர்கள் மனநிலையைப் புரிந்து விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து, அவர்கள் அருகிருந்து நாட்டைக்கற்று, சூழலைக்கற்று, நமது எதிர்கால சந்ததியினரை எமது கலாசாரத்துடன் வாழவைத்து, அவர் தம் பெருமையினை உலகறியச் செய்ய வேண்டிய பெரும்பணி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் எம்மால் முடியாது என பெற்றோர் ஒதுங்கும் பொழுது பிள்ளைகள் குறைநிறைகளை அவதானிக்க முடியாமல் போகின்றது. நல்ல ஒரு சமுதாயத்தை நல்ல ஒரு கலாசாரத்தைப் புலம்பெயர்வில் கட்டிக்காக்க முடியாது போன பெரும் பழி பெற்றோர்களிடம் வந்து சேர்கின்றது.


    தமிழ் நற்பணிமன்றம் ஜேர்மனி 25ம் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...