நேரமோ 10.
நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து
ஓய்ந்து ஒரு பிடிச் சோற்றைக் கையால் குழைத்துச் சாப்பிட்டாலேயே மனம் நிம்மதியடைகிறது.
என்னதான் இரண்டாவது வேலை ரெஸ்டோரன்டில் செய்தாலும் இந்த ஐரோப்பியர்களுடைய உணவு எந்தப்
பிடிப்பும் இல்லாத அவர்களைப்போலவே காரம், புளிப்பு இல்லாமல் சப்பென்று இருக்கும். கட்டிக்
குழம்பை சோற்றில் ஊற்றி கையால் பிசைத்து ருசித்துச் சாப்பிடும் சுவைக்கு எதுவும் ஒப்பில்லை.
பசிக் களை நீக்கினால், பாய்ந்து வரும் உறக்கம். சிறிதுநேரம் இருந்துவிட்டு உறங்கவேண்டும் என்று
புத்தி பலர் புகட்டினாலும் மூளையதைப் புரிந்து கொண்டு நடப்பதாகத் தெரியவில்லையே. முடியாத
காரணத்தால் ஓசையிடும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்ட விசாகன் எழுந்தான். படுக்கையை நெருங்கினான்.
அழைப்புமணி ஓசை நித்திரை மயக்கத்தை நீக்கியது. இந்த நேரத்தில் யாரது வாசல்மணியை
அழுத்துவது! இப்போதெல்லாம் பாரிஸ், ஜேர்மனி பகுதியில் நிம்மதியாக வாழத்தான் முடிகிறதா.
களவு, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, அச்சுறுத்தல் அப்பப்பா... நிம்மதியைத் தொலைத்துவிட்டு வாழவேண்டிய சூழ்நிலை.
பரிதாபம் பார்த்துப் படுகுழியில் விழுந்த நிலை இந்த ஐரோப்பியர்களுக்கு வந்திருக்கின்றது.
பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் வீடுகள் பாதுகாப்பு மதிலோ, சாளரக் கம்பிகளோ
கொண்டிருப்பதில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலை இவற்றுக்கெல்லாம் அவசியத்தைக் காட்டிநிற்கின்றன. மெதுவாக
சாளரத்தைத் திறந்து கீழ் நோக்கி இருட்டில் பார்வையைச் செலுத்திய விசாகனுக்கு ஆச்சரியம்.
என்ன .... தீபன்! இவன் என்ன இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறான். ஓடிப்போய்
கதவைத் திறந்தான். தள்ளாடித் தள்ளாடி வாசல் படியை வந்தவனிடம் இருந்து மதுவின் வாசைன
விசாகனை வந்தடைந்தது.
'தீபன் என்னடா
இது. இந்தநேரத்தில்!'
'என்ர மச்சான்
எனக்கு ஏலாதுடா. என்னால ஏலாது. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா... இன்றைக்கு மட்டும் நான்
இங்க படுக்கட்டா. ஏன்டா நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்தனான்? ஓடிஓடி உழைச்சனான்?
பிள்ளைகளப் பெத்தனான்? இப்ப ஒன்றுமில்ல. ஒன்றுமில்ல. இந்தப் போத்தல் மட்டும்தான் எனக்கிருக்கு.
மனிசி, பிள்ளைளகள்..........‘‘
ஓ....... என்று சத்தமாக அழுதான். ஆண்கள் அழுதால், அது விசித்திரம்.
பொதுவாகவே மனதைக் கல்லாக்கி எதையும் தாங்கும் சக்தி அவர்களுக்கு உண்டு. அழுவதென்றால்,
அவர்கள் மதுவுக்கும் மாதுக்கும் அடிமையாக வேண்டும். அப்போதுதான் அழுகையும்
அவர்களை வந்தடையும்.
அவனைச் சமாதானப்படுத்திய
விசாகன். அன்று தீபனைத் தன் வீட்டில் தங்க வைத்தான். இரவு படுத்தானோ, புரண்டானோ
யாரறிவார். விசாகன் நாள் களைப்பில் நன்றாகவே உறங்கிவிட்டான். விடிந்த பொழுது காலை 5 மணி கடமைக்காக
எழுந்திருந்த விசாகன். ஏற்கனவே பொழுது புலர்ந்துவிட்ட தீபனைக் கண்டான்.
“எப்படி நித்திரை? என்றவனிடம்
“சுத்தமாய் இல்லை‘‘ என்று பதிலளித்துவிட்டு தேநீருக்கும் காத்திருக்காமல் வீடு செல்ல ஆயத்தமானான்.
விசாகன் வேண்டுதலும் பதிலளிக்காததால், நடந்தது உரைக்க விருப்பில்லை என்று உணர்ந்து
கொண்ட விசாகன்.
‘‘மச்சான் குடிச்சுக்
குட்டிச் சுவராகாதே. எப்படி இருந்தனீ. இப்படி குடிச்சுத் தேயிறியே. மனிசி பிள்ளகள நினைச்சுப்
பார்க்கக் கூடாதா? என்றபோது
‘‘என்னது?
மனிசி பிள்ளைகளா? போடா.. டேய்... “என்றபடி பதிலுக்குக் காத்திருக்காது. வெளியேறினான். சொந்தக்கதையை வெளிப்படுத்த
அவன் விரும்பவில்லை என்பது அவன் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே.
சொந்தவீட்டின் மேல்பகுதியில் தனியனாய்
வசித்துவரும் தீபன் நிலையைப் பின் பிறர் கூறக் கேட்ட விசாகனும் மனம் மிக வருந்தினான்.
தாயாரிடம் சென்று உணவருந்தி வாழும் அவன் வாழ்க்கையின் சோகத்தை புரிந்து கொண்ட விசாகனும்
இவன் குடிப்பது போதைக்கு அல்ல. அவன் இறப்பை அவனே தேடிக்கொள்ள என்னும் சூட்சுமம் அப்போதுதான் விசாகனுக்குப் புரிந்தது.
வேலை வீடு என்று வாழ்ந்து வரும் விசாகனுக்கு
பல நாள் தொடர்பில்லாத தீபன் பற்றி நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அன்றொருநாள்
வேலைத்தளத்திலே விரைவாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி தொடர்ந்து
அடித்துத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. வேலைத்தளத்திலே உத்தரவு பெற்று தொலைபேசியை
அழுத்தினான். தீபனின் அம்மாவே மறுமுனையில்
“விசாகன் என்ர
பிள்ள 2,3 நாளா சாப்பாட்டுக்கு வரல்ல. பிள்ளைக்கு என்னவோ, ஏதோ தெரியாது
போய்ப் பார்க்கக் கூட எனக்கு அனுமதியில்ல. அவனை ஒருக்காப் போய்ப் பார்க்கிறியா மகன்.
எனக்கு மனம் திக்குத் திக்கென்று அடிக்குது‘‘ தாயின் தவிப்பை
சொற்கள் தாராளமாகக் காட்டின.
“ஓமம்மா. வையுங்க.
நான் மற்ற வேலைக்குப் போகமுதல் போய்ப் பார்க்கிறன். பார்த்திட்டு உங்களுக்குச் சொல்றன்.
நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்கள். அவனுக்கு ஒன்றும் நடந்திருக்காது‘‘ என்ற விசாகன்
வேலை முடிந்து தீபன் வீட்டை அடைந்தான்.
அழைப்புமணியை அழுத்தியபோது தீபன் மனைவியே கதவைத்
திறந்தாள். தீபனைப் பற்றி விசாரித்தபோது மேலே இருக்கின்றார் என்ற பதிலுடன் மேலே போகும்படிச்
சைகை காட்டினாள். மேலே சென்ற விசாகனுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. பலநாள்
துப்பரவு செய்யப்படாத வீட்டினுள் கெட்ட வாடையுடன் சாளரங்கள் என்றுமே மூடப்பட்டு சாக்கடை
போன்ற மணமும் அருவருப்பை அள்ளித் தந்தது. மூக்கை இறுகப் பொத்தியபடி உள்ளே நுழைந்தான்.
வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் வாந்தியை அடக்கியபடி கட்டிலில் சரிந்து கிடக்கும்
தீபனைக் கண்டான். அருகே போய் அவனை எழுப்பியபோதே தெரிந்தது. ஐயகோ....... நெஞ்சை நிமிர்த்தி
ஜாம்பவானாக விதவித ஆடையுடன் கம்பீரமாகத் திரிந்த தீபன் உயிரற்று மடிந்து கிடக்கும்
நிலையது கண்டு துடித்துப் போய்விட்டான் விசாகன்.
கீழே ஓடிவந்து காவல்துறைக்கு தொலைபேசி
அழைப்பு விட்டவுடன் காவல் துறையும் விரைவு வாகனமும் விரைந்து வந்தது. பரிசோதித்த வைத்தியர்
உயிர் பிரிந்து ஒரு நாளுக்கு மேலாகிவிட்டது என்று கூறியபடி உடலை உடன் கொண்டு சென்றனர்.
சொந்தவீட்டிலே, அநாதைப் பிணமாக ஒருநாள் முழுவதுமாகக் கிடந்த மனிதனை ஏறெடுத்தும் பார்க்காத
மனிதர்களும் வாழுகின்ற புலம்பெயர் வாழ்க்கையானது தொடரும் நாட்களில் இன்னும் மோசமான
நிலைக்குத் தான் போகப்போகின்றதா என்பது பற்றி நினைக்க நினைக்க வேதனையாக இருக்கின்றது.
யாரும் எப்படியும் வாழலாம் என்னும் மனங்களெல்லாம் கொடூர வஞ்சனைப் பிண்டங்களாகிப் போய்விட்டன.
அன்பு, பாசம், விட்டுக்கொடுப்புக்கள், மரியாதை, சமூகபயம்,
எதுவுமே இன்றி சுயநலப்பிசாசுகள் வாழுகின்ற பூமியில் நாமும் வாழுகின்றோம்
என்னும்போது பயமாக இருக்கின்றது. தீபன் ஒரு தடவையாவது தனது நிலையைச் சொல்லியிருக்கலாம். ஆறுதலாக அதற்குரிய பரிகாரத்தை வேறுவழியில் வேறுயாரிடமாவது
அறிவுரை மூலம் பெற்றிருக்கலாம். ஆனால், தமக்குள்ளேளே போட்டு மறைத்து அநியாயமாக
சின்ன வயசிலே வாழாமல் மடிந்துவிட்டானே. இப்படி எத்தனை ஆண்வர்க்கம், தமது குடும்பப் பிரச்சினைகளைத் தமக்குள்ளே
போட்டு மறைத்து மாண்டுபோகின்றார்கள். சொல்லி
அழ நாதியற்று குடிக்கு அடிமையாகித் தமது விதியைத் தாமே தேடிக்கொள்ளுகின்றார்கள் என்று எண்ணிபடி
வீடுநோக்கிப் புறப்பட்டான் விசாகன்.
கௌசி
ஜேர்மனி
வணக்கம்
பதிலளிநீக்குபுலம்பெயர்ந்த தேசமாக இருக்கட்டும் தாயகத்திலும் இதைப்போன்றுதான் நடக்கிறது.கதையில் மனி விழுமையத்தை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//சொந்தவீட்டிலே, அநாதைப் பிணமாக ஒருநாள் முழுவதுமாகக் கிடந்த மனிதனை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர்களும் வாழுகின்ற புலம்பெயர் வாழ்க்கையானது தொடரும் நாட்களில் இன்னும் மோசமான நிலைக்குத் தான் போகப்போகின்றதா என்பது பற்றி நினைக்க நினைக்க வேதனையாக இருக்கின்றது.//
பதிலளிநீக்குகதையைப்படிக்க மிகவும் சோகமாகவும் வருத்தமாகவும் உள்ளது. எந்தவொரு பிரச்சனைகளையும் மனதிலேயே வைத்துக்கொள்ளாமல் ஒருசில நெருங்கிய நண்பர்களிடமோ, சொந்தங்களிடமோ பகிர்ந்து கொள்வதுதான் மிகவும் நல்லது.
குடியினால் ஏற்படும் தீமைகளுக்கு இந்தக்கதை நல்லதொரு உதாரணமாக உள்ளது.
வேதனை சகோதரியாரே
பதிலளிநீக்கு