• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 26 ஜூன், 2017

    ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

                                      

              


    சூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய ஆயுதங்கள் கொண்டு அழிக்க நினைக்கின்றார்கள். புதுமைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக வேண்டுமானால், சிறப்பான கல்வியை இளைய தலைமுறையினர் காணவேண்டும். உலகம் அழிவை நோக்கிப் போகாமல் இருக்கவேண்டுமானால், ஒழுங்கான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படல் வேண்டும். இதற்கு அடிப்படைக்கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள், மாதா, பிதா, குரு, தெய்வம், இவை நான்கும் ஒரு பிள்ளைக்கு அவசியம். பிள்ளை பிறந்தவுடன் அம்மாவைக் காண்கிறது. அம்மா சொல்லி அப்பாவைக் காண்கிறது. அப்பா, அம்மா பிள்ளைக்குக்குக் குருவைக் காட்டுகின்றார்கள். ஆசிரியர் கடவுளை வழிபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார்கள். எனவே ஒரு பிள்ளையை உருவாக்கும் பொறுப்பு முதலில் பெற்றோருக்கு இருக்கின்றது. அதன்பின் ஆசிரியர் கையிலே தான் தங்கியிருக்கிறது. தெய்வத்தைவிட முன்னிலையில் வைத்துப் பாராட்ட வேண்டியவர்கள் ஆசிரியர்களே. ''தாரமும் குருவும் தலைவிதிப்படி'' என்பார்கள். ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும்  ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும். ஆசிரியர் கற்பித்தவை மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருத்தல் வேண்டும். குரு நிந்தை செய்வோர், குரு நிறைவாய்க் கிடைக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர் வகையை ''அன்னம், ஆவே, மண்ணொடு கிளியே, இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யெரி'' என தலை, இடை, கடை மாணாக்கராய்ப் பிரித்தல் போல நல்லாசிரியர்களுக்கும் இலக்கணம் கூறப்படுகின்றது. ''நிலம், மலை, நிறைகோல், மலர் நிகர் மாட்சியும்
                 உலகியல் அறிவோடு உயர் குணம் இயையவும்
                 அமைவன நூலுரை ஆசிரியர்'' எனப்படுகிறது.
    தன்மேலே இருக்கும் சுமையால் கலங்காது, தோண்டினாலும் துன்புறாது நிலம். அதேபோல் விவாதங்கள் செய்து வருத்துபவர்களைக் கண்டு கலங்காது பொறுமை காப்பவர் ஆசிரியர். பொருள்களின் அளவைச் சந்தேகம் இல்லாமல் காட்டும் தராசு போல, சந்தேகம் தீருவதற்காக கேட்கப்பட்ட வினாவின் பொருளை விளக்குவதாலும், நடுநிலைமை மாறாது நிற்பதனாலும் தராசு ஆசிரியர்களுக்கு உவமையாக்கப்பட்டது. எல்லோராலும் விரும்பப்படுகின்ற மலர் போல் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும் சரியான நேரத்திலே பூ மலர்வது போலே கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பிப்பவரே ஆசிரியர். ஆனால் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு போன்ற ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆயினும் ஒரு மாணவன் வளர்ச்சிக்கு பெற்றோரை ஊக்கப்படுத்தி அதற்கான அறிவுரை வழங்கி அம் மாணவனை நல்நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.

              வீட்டுச்சூழல் தவிர்ந்து மற்றைய பொழுதுகளில் தமது பள்ளிப்பருவத்தில் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே ஒரு பிள்ளை கழிக்கின்றது. அந்நேரத்தில் அப்பிள்ளையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றது. குழந்தைகள் உலகத்திற்கு அவசியம். இவர்களே எதிர்கால உலகத்தை ஆளப் போகின்றவர்கள். எதிர்கால உலகை ஆளப் போகின்றவர்களை ஒழுங்கான முறையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. தவறு செய்யாத மனிதன் உலகத்தில் இல்லை. அந்தத் தவறை அறிந்து அவன் திருந்தி நடக்கும் போது அவன் வாழ்க்கை சிறப்புப் பெறுகின்றது. அனைத்தும் அறிந்த பெரிய மனிதர்களே தவறுகள் செய்கின்ற போது சிறிய பிள்ளைகள் எப்படித் தவறு செய்யாமல் இருப்பார்கள். பிள்ளைகள் களிமண் போன்றவர்கள். அவர்களை எப்படியும் நாம் வடிவமைக்கலாம். முறையானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறையாக வாளர்வார்கள். தவறானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறைகேடாக வளர்வார்கள். பிள்ளைகளில் மட்டும் தவறை நாம் காணமுடியாது. ஏனெனில் அவர்கள் பூமியில் பிறப்பெடுக்கும் போது வெற்றுப் பத்திரிகைளாகவே வந்து பிறந்தார்கள். பெற்றோரும் சூழலுமே அவர்களில் பதிவுகளை ஏற்படுத்தக் காரணங்களாகின்றன.

                          ஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில். இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும். பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை. என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது. ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும் எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும். ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும். அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள். பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள். மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு உயிரின் வாழ்வியலுக்கு அவசியமானவர். பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான். இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும் போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும் அதிகரித்துக் காணப்படுவார்கள். அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப்   பார்க்க   முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும். ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.
                       எனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.

    1 கருத்து:

    1. .வணக்கம்

      நல்ல தலைப்பில் நல்ல விடயத்தை விரிவாக சொல்லியுள்ளீர்கள் எத்தனையோ கல்விமான்கள் உருவாக ஆசிரியரே காரணம் மாத பிதா குருவும் வருவது தெய்வத்துக்கு சமமாகும் பகிர்வுக்கு நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...