• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 25 ஜூன், 2017

    இலங்கைப் பயணம் 2









    யாழ்ப்பாணம்
                     
     2012 இல் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததை விட பாரிய மாற்றத்தை 4 வருடங்களின் பின் உணரக்கூடியதாக இருந்தது. ஒரு  நாடு முன்னேற வேண்டுமானால், முதலில் பாதைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும என்று மகாத்மா காந்தி ஒரு இடத்தில் கூறியிருக்கின்றார். அதேபோல் விரிவுபடுத்தப்பட்ட பாதை வியாபார போக்குவரத்துக்கு இலகுவாகவும் மக்களின் தொழில் பயணங்களுக்கு இலகுவாகவும் இருப்பது நாடு முன்னேற வழிசெய்கின்றது. ஆனால், வாகனச்சாரதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களும் வருத்தங்களும் அநுபவிக்க வேண்டிய சூழ்நிலை பிரயாணிகளுக்கு ஏற்படுகின்றது. நான் பயணம் செய்த சொகுசு பஸ் என்று அழைக்கப்படும் பலூன் பஸ் இருப்பிடங்களில் மூட்டைப்பூச்சிகளை வளர்த்து இரத்தம் உறிஞ்சும் பணியையும் செய்கின்றார்களோ! என்று நினைத்தேன். வெளிநாட்டு உணவுண்ட உடல்களை நன்றாகவே அம்மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்தன. என்றுமே மூட்டைப்பூச்சியைக் கண்டிராத என்னுடைய மகள் தனது உடலைப் பதம் பார்த்த மூட்டைப் பூச்சியை ஏதோ பூச்சி ஓடுகின்றது என்று பயந்து இருக்கையில் இருப்பதற்கு மறுத்துவிட்டார். சாரதியை விசாரித்தபோது அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று பொறுப்பில்லாது பதிலிறுத்தார்கள். பிரயாணம் முடிந்து வாகனத்தை நிறுத்தினால் மருந்து தெளித்து துப்பரவு செய்த பின்தான் அடுத்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிறிய வரன்முறை தெரியாமலே வாகனம் சேவையில் ஈடுபடுத்தும் நிலமையை எச்சரித்தேன். அதே பஸ் யாழ்ப்பாணம் நெருங்கிய வேளையில் ரயர் வெடித்து அத்தனை பயணிகளும் வாகனத்தை விட்டு இறங்கி பாதையில் நின்றனர். அளவுக்கு மிஞ்சிய பொதிகளை பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வரும்போது இப்படியான அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வழி இருக்கின்றது அல்லவா! ஏதோ வாழ்வதற்கு நாட்கள் இருக்கின்றது என்னும் காரணத்தால் நாம் உயிர் தப்பினோம். வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், வீதி ஒழுங்குமுறை தெரியாது வாகனம் கொண்டு செல்லுதல் போன்ற காரணங்களினால் அச்சங் கொண்ட பயணமாகவே போக்குவரத்து இலற்கையில் அமைகின்றது. இவையெல்லாம் சீர்செய்ய முடியாத தவறுகள் அல்ல என்பது யாவரும் அறிந்ததே.


                  
    யாழ்ப்பாண நூலகம் ஒரு கோயில் போல் வைத்திருக்கின்றார்கள். அழகான வாயில். அங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் சென்று என் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தேன். 





    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து கலைப்பிரிவு பீடாதிபதி பேராசிரியர் N.ஞானக்குமரன் அவர்களைச் சந்தித்து என் நூலை வழங்கினேன். நன்றாக உபசரித்து என் நூலைப் பெற்றுக் கொண்டார். நல்ல மனிதர். ஆனால், என்ன செய்வது அவருக்குத் தமிழ் ஒரு சொல் கூடத் தெரியாது என்பதே வருத்தப்பட வைத்தது. பூலோகசிங்கம் புத்தகசாலையிலும் என் நூல்கள் சிலவற்றை ஒப்படைத்தேன்.
            


      

    காங்கேசன் துறை (தல்சேவனா) கடற்கரை அழகான ஹொட்டல்கள் கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது. ரசிக்கும் படியான புகைப்படங்களை எனது மகளின் கைத்தொலைபேசி பிடித்துக் கொண்டது.





    யாழ்ப்பாண நகரம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் போது சிறிதளவேனும் அரசாங்கம் கவனம் எடுக்கவில்லையானால் வினாக்களை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்னும் காரணத்தினால் போர் நடைபெற்ற பிரதேசங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்தேன். கிளிநொச்சியில் நின்று போர்க்கால அனர்த்தங்களை நினைத்துப் பார்த்தேன். தீமையிலும் நன்மை உண்டு என்று எண்ணத் தோன்றியது. 

    யாழ்மண்ணின் தலைவாழை இலைபோட்டு உணவுண்ட மரக்கறிச் சுவையுடன் யாழ்மண்ணை விட்டு பயணமானோம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...