• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 1 ஜூன், 2017

                      ஹைக்கூ பற்றிய கண்ணோட்டம்.



    கவிதை கட்டுரையல்ல. கவிஞன் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அவன் பேசுகின்ற விடயங்களில் பல மௌனங்கள் மறைந்திருக்கும். அதனை தேடிப்பெறுபவனே சிறந்த கவிதா ரசிகன். மறைவாக ஆழமாகச் சிற விடயங்கள் சிறப்பாகச் சொல்லப்படும் துளிர்ப்பாவே ஹைக்கூக் கவிதையாகின்றது.

              தமிழைப் போன்று சங்கம் வைத்து இலக்கியம் வளர்த்த ஜப்பானிய புகழ்பெற்ற கவிதை வடிவமே ஹைக்கூவாகும். 1603 தொடக்கம் 1863 வரையுள்ள காலப்பகுதியில் சீன ஜப்பான் மொழிகளின் கலவையாக உருப்பெற்ற இக்கவிதை வடிவத்தினைப் பல நாடுகள் பின்பற்றி வந்தன. அவ்வகையிலேயே இன்று தமிழ்மொழியிலும் ஹைக்கூக் கவிதைகள் எழுதப்படுகின்றன. முதன் முதலில் 16.10.1916 அன்று வெளிவந்த சுதேசமித்திரன் என்னும் பத்திரிகையில் மகாகவி பாரதியார் ஜப்பானிய கவிதைகள் என்னும் தலைப்பிலே சில ஜப்பானிய ஹைக்கூக்களை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். இதுவே தமிழில் ஹைக்கூக்களின் புதுவரவாக அமைகின்றது. இவர் ஹைக்கூக் கவிதைகளை அறிமுகப்படுத்தும்போது இதன் பெயரைக் ஹொக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
       
         ஆயினும் ஹைக்கூத் தொகுப்பு நூலாக வெளிவந்த முதல்நூல் அமுதபாரதியின் ‘‘புள்ளிப்பூக்கள்‘‘ என்னும் நூலேயாகும். இது ஆவணி 1984 இல் வெளியானது. அதனைத் தொடர்ந்து 1984 கார்த்திகை மாதம் அறிவுமதி அவர்கள் ‘‘புல்லின் நுனியில் பனித்துளி‘‘ என்னும் நூலை வெளியிட்டார். நிர்மலா சுரேஷ் என்னும் பெண்கவிஞர் ஹைக்கூ பற்றிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். கவிஞர் கு.தேன்மொழி அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட துளிப்பாக்களில் அழகியலும் சமுதாயமும்‘‘ என்னும் பெயரில் வெளியிடப்பட்ட ஆய்வுநூலும் ஹைக்கூ பற்றிய தெளிவையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. ஜப்பானிய வாகா, சோகா, செடோகா, கட்டவ்டா, தான்கா, ரெங்கா, ஹொக்கு முதலிய இலக்கிய வடிவங்களை இனங்காட்டித் தமிழிலே ஹைக்கூ எப்படி கையாளப்படுகின்றது என் விளக்கியுள்ளார்.
     
         ஹைக்கூ கவிதையானது ஐந்து, ஏழு, ஐந்து என முறையே 17 அசைகளைக் கொண்டு 3 அடிகளில் எழுதப்படும். காற்றின் கைகள் என்னும் அமுதபாரதியின் நூலிலே இவ் அசை அமைப்புடன் கூடிய ஹைக்கூக் கவிதைகளைக் காணலாம். ஆனால் தற்போது அவ் இலக்கணம் கண்டுகொள்ளப்படுவதில்லை.  ஒரேயொரு காட்சியையோ பொருளையோ உணர்வையோ வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதன் ஆரம்பப் பெயர் ஜப்பானியரால் ஹொக்கு என்று வழங்கப்பட்டது. ஹைகை என்று திரிந்து அதாவது தமிழில்க  ஐகை என்று திரிந்து ஐக்கூவாயிற்று. அதாவது அணுத்தூசி போன்ற சிறிதானது என்னும் பொருள் கொண்டது. ஐ என்றால் கடுகு கூ என்றால் உலகம் கடுகு போன்ற சிறிய வடிவில் உலகளாவிய கருத்துக்களை செறிவாகத் தரும் கவிதை என்னும் பொருளிலும் வழங்கப்படுகின்றது.
       
           வரிகளால் பெருந்தூண் எழுப்பாமல் குறைவான சொற்களால் அழகுணர்ச்சியை வெளிபடுத்த ஹைக்கூ கைகொடுக்கின்றது. வெளிப்படையாக எல்லாவற்றையும் கூறாமல் வாசகன் சிந்தனைக்கு இடம் கொடுக்கவேண்டும். ஹைக்கூக் கவிதைக்குத் தலைப்புத் தேவையில்லை. கவிதையின் அழகை இறுதி வரிகளில் அடக்க வேண்டும். இறுதி அடியில் முழுக்கவிதையினதும் வெளிப்பாடும், உணர்வும் பளிச்சென்று புலப்படும். இது மின்மினிப்பா, குறும்பா, வாமன் கவிதை, அணில்வரிக்கவிதை, துளிக்கவிதை, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா என்னும் பெயர்களினால் தமிழில் அழைக்கப்படுகின்றது.
        
        அப்துல் ரகுமான் அவர்கள் பல ஹைக்கூக் கவிதைகளை மொழிபெயர்த்தார். எம்மைச் சுற்றி ஓராயிரம் ஹைக்கூக்கள் ஆழமாக நோக்கினால் அத்தனையும் அற்புதங்கள். சென் தத்துவத்தைப் பரப்புவதற்குக் ஹைக்கூக் கவிதைகள் மிகவும் உதவின.

    அமுதபாரதியின ஹைக்கூ

    குளமொன்றை வெட்டு
    குறைவின்றி நீர் நிரப்பு
    குளிக்க வரும் நிலவு

    தற்போது வரிகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து அசை பற்றிய அக்கறையை விடுத்து ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன.

    தற்போது இணையங்களில் பல சிறப்பான ஹைக்கூக்கள் வெளிவருகின்றன.

    பத்துமலைத் தைப்பூசம்
    உண்டியலைப் பார்த்தபடி
    ஏழைச்சிறுமி

    வாளியைக் காலி செய்ததும்
    வானத்துக்குப் போனது
    நிலவு.

    தற்போது வரிகளும் அசைகளும் இழந்த நிலையில் ஹைக்கூ என்ற பெயரில் வெளிவரும் அற்புதமான ஹைக்கூக்களும் உண்டு

    அழகான பொய்களில் அன்பினைப் பெறுவதை விட
    உண்மையான கோபங்களை அன்பாகவே
    ஏற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு ஹைக்கூ தமிழில் வந்து புகுந்தது. தன் அமைப்பையும் இலக்கணத்தையும் மாற்றி புதுப்பொலிவுடன் ஹைக்கூ என்னும் பெயருடன் இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் வலம் வருகின்றது.


                                     -  மே மாத Tamil Nenjam சஞ்சிகையில் வெளியானது  -

    4 கருத்துகள்:

    1. ஹைக்கூக் குறித்து தெளிவான
      விரிவான அருமையானப் பதிவு
      நிறையத் தகவல்கள் புதியவை
      இதுவரை அறியாதவை
      பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    2. "ஹைக்கூ கவிதையானது ஐந்து, ஏழு, ஐந்து என முறையே 17 அசைகளைக் கொண்டு 3 அடிகளில் எழுதப்படும்." என்ற இலக்கண எல்லை உண்டு. ஆயினும், தற்போது "அவ் இலக்கணம் கண்டுகொள்ளப்படுவதில்லை." என்பதும் உண்மையே!

      பதிலளிநீக்கு
    3. அருமையான விளக்கம் என்னையும் எழுத தூண்டுகிறது

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...