• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 12 பிப்ரவரி, 2011

    மாண்டாள் மண்டோதரி



    கம்பனால் பலமாகப் பேசப்படாத பக்கம் மண்டோதரியாயினும், அந்தப் பெண்ணுக்கு விழைந்த பங்கமது போல் ஆண்மகன்களால் பல பெண்களுக்கு ஏற்படுகின்றன. மண்டோதரி என் செய்தால் தன் வாழ்விழக்க? கணவன் மறைந்த அக்கணமே தன் வாழ்வது இழந்தாள். அவள் என் குற்றம் செய்தாள்? அவள் வாழ்வில் என் குறை கண்டான் இராவணன்? இராவணனின் கற்பு மனையாளாய் வாழ்ந்தது குற்றமா? சூர்ப்பனகை மச்சாளாய் வாழப் புகுந்தது குற்றமா?

    அசுரத் தச்சன் அற்புதமாய்ச் செதுக்கிய
    அழகுச் சிற்பம் மண்டோதரி
    அன்பில் பண்பில் பாசத்தில் கற்பில் காதலில் 
    அளவிடமுடியா அறிவின் நுட்பமவள் 
    மணிவாசகரால் அழகமர் மண்டோதரியென
    மகிழ்ந்து பாடப்பட்டவள் 
    கற்புக்கரசி சீதைக் கொப்ப 
    கவின் அழகுப் பெண்ணரசி
    இந்திரனை வென்ற இந்திரசித்தை ஈன்றவள்.
    தவழ்கின்ற பருவமதில் கோள் அரியிரண்டு 
    பற்றிக் கொணர்ந்து பகைமூட்டி விளையாடிய 
    அசுரக் குமரனைப் பெற்றவள் – அவள் 
    அழகிலென் குறை கண்டான் இராவணன்
    அன்புச் சகோதரியில் கொண்ட 
    பாசத்தின் மோசத்தால் பாதை தடுமாறினான்
    பங்கம் விழைத்தான், மண்டோதரி வாழ்விழந்தாள்.


    சரம்பெய் தூணிபோல் தளிரடி
    கயல் மகிழ் கண்
    புயல் மகிழ் புரிகுழல்
    கருங்குழல் கற்றைப் பாரம்
    அகல் அல்குல் அன்றிச் சற்று 
    மருங்கலும் உண்டுண்டு – என்றே
    மங்காக் கவி புனைந்துரத்த மண்டோதரி 
    அழகிலென் மறுக் கண்டான் - தங்கை
    பாசத்தின் நேசத்தால் பங்கம் கொண்டான் - இராவணன்
    சீதை வாழ்வை சீர்குலைத்தான் 
    சீற்றம் கொண்டான் மண்டோதரி வாழ்விழந்தாள்


    மண்டோதரி அறிவின் புலம்பல் கம்பன்
    வண்ணச் சொல்லில் வடிவமைக்கையில்
    வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
    திருமேனி, மேலும்கீழும்
    எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் 
    இடம் நாடி, இழைத்தவாறோ?
    கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
    மனச் சிறையில் கரந்த காதல்
    உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து
    தடவியதோ ஒருவன் வாளி – என்று
    தெள்ளிய சொல்லால் கம்பன் வடிவமைத்தான்
       மண்டோதரி
    அறிவின் பெருமை எம் 
    அகக்கண்ணால் காணமுடிகிறதல்லவா! 
    கணவன் தன்மேற் கொண்ட காதலன்றி
    இராமன் வாளி ஏதும் கண்டறியாது 
    இராவணன் உயிருக்குத் தானே 
    உலை வைத்தென்றவள் கலங்கியதன்
    கருத்தொன்றி யாம் கண்டு கொண்டோமன்றோ!


    நினைத்ததும் மறந்ததும் இலா நெஞ்சினாளென
    நினைவிலென்று நிறுத்தி வைத்த கற்புநெறி
    நினைத்துநாம் பார்க்கையிலே நிந்தித்த இராவணனின்
    நிந்தனையால் நிலைகுலைந்த தவளன்றோ!


    அழகுநலம், அறிவுநலம், பண்புநலம்
    கற்புநலம் கொண்ட மண்டோதரி வாழ்வில்
    சூர்ப்பனகை மூட்டிய தீ 
    கொழுந்துவிட்டுப் பற்றியது – தங்கை
    பாசத்தின் நேசத்தால் பலர் வாழ்வில்
    பங்கம் விழைந்தது.


    பாசமது நேசத்தால் பலர் வாழ்வில் 
    நாசமது நெருங்குமெனில் - மனிதர்
    பாசமதை பரிசீலனை பண்ணவேண்டுமென
    பாரெல்லாம் முழங்க வேண்டும்.
    பாதகியர் பலரிருக்க அப்பாவிகள் பழியாவதை
    பாருக்கெல்லாம் உணர்த்த வேண்டும்.

    2 கருத்துகள்:

    1. இலக்கியத்தில் வாழ்வியலின் தேடல் மிகவும் பிடித்தது,
      தங்கள் தேடலின் சுவை தித்திக்கின்றது ! தொடர்ந்து தேடுங்கள். வாழ்த்துக்கள் !!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ரசவாதி நூல் அனுபவம்

    நூல்:  ரசவாதி ஆசிரியர் பாலோ கொயலோ தமிழில்: நாகலட்சுமி சண்முகம் இந்த நூலின் ஆசிரியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். உங்கள் கனவுகளை பின்தொடர...