இறைவன் நமக்கு அற்புதமான சக்தியைக் கொடுத்திருக்கின்றான். அந்த சக்தியே மனம். மனதைக் கொண்டிருப்பதனாலேயே நாம் மனிதர்களாகின்றோம். வளமுடன் வாழ வழி காட்டுவது அந்த மனம்தானே. இந்த மனதின் சக்தியை சிதற விடாமல் ஒரு குறிக்கோள் குவித்தோமேயானால், நாம் எண்ணுகின்ற எக் காரியங்களிலும் வெற்றியை அடையலாம்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தினுள் நீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பாத்திரத்தின் மூடி தள்ளியதைப் பார்த்த ஜேம்ஸ்வர்ட் தனது கவனம் முழுவதையும் அதில் செலுத்தி நீராவிக்குத் தள்ளும் சக்தி இருக்கின்றது, என்று அறிந்து ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார். அப்பிள் மரத்தில் இருந்து விழும் பழம் கீழ் நோக்கி விழுவதை அவதானித்து ஏன் விழுகின்றது! மேலே செல்லவில்லை. என்று சிந்தித்துத் தனது கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்திய சேர்.ஐசாக்.நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டறிந்தார். லூதர் பர்பாங் ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்து செடி கொடிகளுக்கு உயிர் இருக்கின்றது என்று கண்டறிந்தார். எனவே, எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். சூரியனுடைய கதிர்களை ஒரு கண்ணாடி லென்ஸ் மூலம் குவிக்கும் போது ஒளிக்கதிர்கள் ஒன்றாக திரண்டு லென்ஸை ஊடுருவிச் சென்று எரிக்கின்ற நெருப்பாக மாறுகிறது. திரண்டு ஒரு நிலைப்பாடும் எண்ணம் உச்சத்தை அடையும். ஒரு செயல் வெற்றியடைய வேண்டுமானால் முழுமனத்தையும் செலுத்துவது, முழு ஆற்றலையும் ஒன்று குவிப்பது, முழு அறிவையும் புகுத்துவது போன்ற 3 திறன்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் வெற்றி கிட்டும்.
கல்வியானது அடிப்படை அறிவுக்கு வித்திடும். மூளையை இயங்க வைக்கும். அந்தக் கல்வி என்னும் ஏணியைப் பிடித்து ஏறிவிட வேண்டும். ஆனால், அந்த ஏணியில் ஏறும் போதும் அதன் தன்மையை அறிந்துதான் காலை வைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஒரு குறிக்கோளைப் பிரார்த்தனை மூலம் ஒவ்வொரு நாளும் மனம் ஒன்றி;க் கேட்கும் போது மனதில் ஆழமான உறுதி ஏற்படும். பிரார்த்தனை என்ற பெயரில் எமது மனதிற்கு நாமே கட்டளையிடுகின்றோம் அல்லவா. இதன் மூலம் ஆழமாகப் பதியும் முயற்சியில் மனம் ஒன்றி விடும். வாகனம் ஓட்டும் போது எப்படிச் செலுத்துகின்றோம் அப்படியேதான். இந்த மனித உடலால் எதுவுமே செய்ய முடியாது. மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதனை வெற்றி கொள்ளுங்கள். வெற்றி என்பது நாம் விரும்பியதெல்லாம் வெற்றி கண்டு விடுவதல்ல. எம்முடைய தீமைகளைத் தீய எண்ணங்களை தீய ஆசைகளை தீய செயல்களை வெற்றி கொள்வது. இவையெல்லாவற்றையும் வென்றுவிட்டால், பிறரால் நாம் குறை கூறப்பட மாட்டோம். குறையில்லாமல் வாழுகின்ற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை. இவ்வாழ்க்கையுடன், நாம் கொண்ட ஒரு குறிக்கோளை நோக்கி மனம் ஒருமைப்பாட்டுடன் செல்லும் போது வெற்றி அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.