மறக்குமா நெஞ்சம் மறக்குமா?
ஓ! நெஞ்சே! ஓ! நெஞ்சே!
ஒரு வயதில் நானுடுத்தி விளையாடியதாய்
ஒருமுறை என்னம்மா எடுத்துக் காட்டியதாய்
சிறுவயதில் எந்நெஞ்சில் நிலையாய் ஓர்எண்ணம்
சிந்தித்துப் பார்க்கிறேன், சிந்தனையில் எட்டவில்லை
சிவப்புக்கரைச் சேலையென்று சொன்ன அச்சலையை
மறந்து விட்டாயா? நெஞ்சே மறந்துவிட்டாயா?
நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்
பத்து வயதில் பவித்திரமாய் வைத்திருந்து
பத்துமுறை உடையணிந்து பக்கத்தில் படுக்கவைத்து
நித்தமும் நகையணிந்து சுத்தமாய்க் குளிக்கவைத்து
முத்தமும் தித்திப்பாய் தந்ததாயென் தாயுரைத்த
முத்துத் தோடணிந்த சித்திரப் பாவையை
கச்சிதமாய்க் காட்டிவிடு சித்தத்தில் வரவில்லை
மறக்குமா? நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்
ஓடும் பஸ்ஸில் பாய்ந்த ஏறியதும்
உதவும் கரங்களை உதறித் தள்ளியதும்
உண்ணும் கண்களை உறுத்துப் பார்த்ததும்
உரசிய உடல்களை ஊசியால் பதித்ததும்
நிஜமாய் வந்து நிழலாய் மறைகிறது
நினைத்துப் பார்க்கிறேன் நினைவிலில்லை முகங்கள்
மறக்குமா நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் : மறக்கும் நெஞ்சம் மறக்கும்
பெண்ணென்றும்ஆணென்றும் மொழியென்றும் பேதம் அங்கில்லை
பெற்றோரும் மற்றோரும் சுற்றமாய் இருந்ததில்லை
கற்றலும் மறக்கவில்லை களிப்பும் குறைந்ததில்லை
கையுணவு காய்ந்தும் கதைகள் குறைவதில்லை
கூடிக் குலாவி நின்றோம் கொட்டமடித்து நின்றோம்
பல்கலையும் பயின்று பாதை மாறிவிட்டோம்
பழகிய உறவுகளும் பறந்து மறைந்துவிட்டார்
பாடிப்பறந்த நட்பைத் தேடியும் காணவில்லை
சாடையாய் முகவடிவம் கண்ணில் தெரிகிறது
மறக்குமா நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்
துன்பத்தை மறந்து இன்பத்தை நினைத்திருக்க
இரண்டு மனம் இறைவன் படைக்கவில்லை
மறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு
மறக்க வேண்டம் மனம் அமைதி அடைவதற்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.