கள்ளி என் கடைக்குட்டி – ஏன்
கன்னத்தில் நீர் வடித்தாய்
பொல்லாப்பு யானொன்றும் புரியவில்லை
பெண்ணாய் மகவிரண்டைப் பெற்றுவிட்டேன்
செல்லப்பிள்ளை உன் செவ்விதழ்கள்
சில்லறை கொட்டவில்லை – உன்
சிந்தையில் உள்ளதைத் தாயறிதல்
விந்தையொன்றும் இல்லை.
பத்தரை மாற்றுத் தங்கமே
பண்பில் நிறைகுடம் நீயன்றோ
பத்துமாதம் உன் அக்காளும் உன்போல்
பத்திரமாயென் வயிற்றில் குடியிருந்தாள்.
மூவாறு வயதாகியும் தாயின் முகம்பார்த்தே தூங்கும் மகளைக் கட்டிலில் விட்டு வந்து கதிரையில் சட்டென்று சாய்ந்தாள், சாந்தி. கண்ணீர் கண்களின் ஓரமாய் வடிந்து இதழ்களில் உப்புக் கரித்தது. சின்னவயதில் அக்காள், தங்கை இருவரினதும் சில்லறைச் சண்டைகளைச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பார்த்த இரசித்துள்ளாள். அக்காவைவிட ஒருபடி உயர வேண்டும் எனத் தங்கை எடுக்கும் முயற்சிகளைத் தட்டிக் கொடுத்துத் தாயாய் ஒத்துழைப்பும் தந்துள்ளாள். அக்கா பாட வாயெடுக்க அதை அற்புதமாய்ப் பாடி முடித்து அப்பா அம்மா பாராட்டைப் பெற்றுவிடுவாள், தங்கையும். போட்டி வளர்ச்சிக்கு உறுதுணையென்று தூபம் போட்டு வளர்த்தவள் அல்லவா, தாய். ஆனால், பத்துப் பிள்ளைப் பெற்றாலும் தாயன்பு பத்துப் பேருக்கும் மாற்றமில்லாது பகிர்ந்தளிக்கும் பரிசுத்த நீரல்லவா. பெற்றோர்களாகிய தாம், வயோதிப காலத்தின்பின் சகோதரிகள் இருவரும் தமக்குள் தாமே துணையாய் வாழ்வை இங்கிதமாய்க் கழிப்பார்களென்ற நம்பிக்கையில் வாழ்க்கையைச் செலுத்தும் பெற்றோர். சஞசலத்தில் இன்று தவித்தனர். குமணன் இளங்குமணன் வாழ்க்கைபோல் தமது குஞ்சுகள் இரண்டும் தம்மைத்தாமே கொத்தித் தின்றுவிடுமோ என்று பேதலித்தனர்.
இருவருக்கும் கொள்வனவு செய்யும் பொருட்களில் சிறிது வேறுபாட்டைக் கண்டால், அல்லது அக்காவிற்கு ஏதோ ஒரு பொருள் பொருத்தமென்று கண்டு அதை வாங்கி வந்தால், போதும், ``உங்கள் செல்ல மகளுக்குத்தான் எல்லாம் வாங்குவீர்கள்´´என்று குறையைப் போட்டுவிடுவாள், இளையவள். ஆனால், மூத்தவளோ இதைப் பொருட்படுத்துவதாய் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாய் வார்த்தையை எடுத்தெறிந்து கொள்ளும்போக்குச் சிறிதும் இல்லை. ஆனால், கடைக்குட்டி என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்த சின்னவள், பண்பிலே நிறைகுடம், பாசத்திற்கு உறைவிடம் அக்காவைப் பிரிந்திருக்கும் வேளைகளில் பிதற்றித் திரிவாள். ``எங்கே, எங்கே´´ என்று அலைந்து திரிவாள். ஆனால், பெற்றோர் பாசம் பகிர்ந்து கொள்ளும்போது மனதுள் வெம்புகிறாள். வார்த்தைகளால் தாயை வம்புக்கு இழுக்கிறாள். அன்றும் அவ்வாறே உயர்கல்விக்கு உயர்ந்ததான பெறுமதியில் உயர்வான பொருளொன்று கட்டாய தேவை கருதி மூத்தவளுக்காய் வாங்கப்பட்டது. அக்காட்சி பொறுக்காது கண்ணீர் வடித்தாள், கட்டிலில் படுத்திருந்த தங்கையென்ற உடன்பிறப்பு. அறிவுரை ஆயிரம் முறை ஆறுதலாய்க் கூறியும் அதை மனதில் நிறுத்த முடியாத மகளை எண்ணிக் கலங்குகிறாள், தாய்.
இங்கு காட்சி காட்டப்பட்டுள்ளது. முடிவறியாத் திரைப்படமாய் வாசகர்கள் சிந்தனை சிறகடிக்கப்பட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும், அநுபவங்களும் பகிரப்படும்போது கணனி காட்டும் கருத்துகளில் தனக்குரிய சாதகங்களைச் சேகரிப்பாள், சாந்தி.

.png)








