• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 4 ஜூன், 2016

    மலேசிய பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒலிபரப்பிய என்னுடைய உரை






           முக்கோண முக்குளிப்பிலே நான் எடுத்த முத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்ற பொன்னான நாள் இன்று. கோலாலம்பூர் மண்ணை நான் தொட்டதில்லை. ஆனால் தமிழ் என்னை அழைத்திருக்கிறது. என் எழுத்து நாடு விட்டுத் தாவி பறந்திருக்கின்றது. எழுத்துக்குள்ள சக்தியை உணருகின்ற இத்தருணத்தில் எனக்கும் ஒரு இடம் தர பேருதவி புரிந்த  என் அன்புக்கும் மேலான தம்பி ரூபன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்நிகழ்வில் என் நூலும் வெளிவர சம்மதம் தெரிவித்த இனிய நந்தவன பதிப்பகத்தாருக்கும், தடாக இலக்கிய அமைப்பினருக்கும், முகவரி அறவாரிய அமைப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 

          விரிக்கப்படாத புத்தகமும் உடைக்கப்படாத தேங்காயும் ஒன்றே. விழாக்களிலே நூல்களைப் பெற்று தமது நூல் அடுக்குகளை அலங்கரிக்கின்ற புத்தகங்கள் படைப்பாளிகளுக்கு அவமானமாகின்றன. எழுத்தாளர்கள் உறங்கப்போவதில்லை. சமுதாயத்தை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். சிறகடிக்கும் உணர்வுகளுக்கு மக்கள் மனங்களுக்குப் பாதை போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் சிந்தனைகள் சமுதாயத்தைப் புரட்டிப் போடும். சாக்கடைகளின் கழிவகற்றும். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர்  பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு என்றார் பாரதி. இங்கு நான் எழுத்தாளர்களின் எழுத்துக்களை அக்கினிக் குஞ்சாகக் காண்கின்றேன். சமுதாயக் குப்பைகள் எழுத்தாளர்களின்  கைமுனைப் பேனாவால் எரிக்கப்படும். புரையோடிப் போயிருக்கின்ற மூடநம்பிக்கைகள்  எழுத்தென்னும் மயிலிறகால் தடவித் தடவி சுத்தீகரிக்கப்படும். இதில் அக்கினி எடுப்பவனாகவோ மயிலிறகைப் பயன்படுத்துபவனாகவோ எழுத்தாளன் களம் புகவேண்டும். வெறுமனே அழகுணர்ச்சிக்கு ஆட்படும் ஆக்கங்கள் மனிதர் மனத்திற்கு சுகம் சேர்க்கும். மனதை மாற்றாது. காதலைப் பாடும் வாய் உண்மைக்  காதலை உலகுக்கு உணர்த்த வேண்டும். அழகுணர்ச்சி கூட மனிதனை நல்வழிப்படுத்துவதாக இருக்கும் பட்சத்தில் எதிர்கால மனிதன் உன்னத வாழ்க்கையை உலகுக்குக் காட்டுவான். மனிதன் அறிவு விரிவுபட வேண்டுமென்றால், மனதுக்குக் கட்டுரைகளைப் படிக்கும் ஆர்வத்தைக் கொடுங்கள். யார்சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார் என்றார் சொக்ரடீஸ். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வாறு மெய்ப்பொருள் தேடித் தேடித் தெளிந்தவையே அறிந்ததும் புரிந்ததும் என்னும் எனது கட்டுரைகள். இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாது உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள். அதிகமாக அவை பற்றிச் சிந்தியுங்கள். என் தேடலும் உங்கள் தேடலும் தெளிவுக்குத் துணைபோகும். என் தீராத தாகமும் தீர்ந்து போகும். 

           கல்லூரிக் காலங்களில் பரீட்சையும் புள்ளிகளும் கண்ணும் கருத்துமாகும். அதனால், கருத்தூன்றி கற்கவோ என் கருத்துக்களைத் திணிக்கவோ மனம் ஒவ்வாது. இதனால் தவறிப்போன என் சிந்தனைகளுக்கு தளம் தந்தது இலக்கிய இன்பம் என்னும் பகுதி. பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாது இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கும் போது பின்புறம் ஒட்டியிருக்கும் மண்ணைத் தட்டிவிட்டுச் செல்லும் மனிதர்கள் போல் இல்லாது நாம் வாழ்ந்த நாட்டுக்கு நன்றி சொல்லவும் அங்கு காணும் நற் சிறப்புக்களை மக்களுக்கு நவின்றுரைக்கவும் என எழுந்ததே சிந்தனையின் தேனூற்று என்னும் பகுதி. அறிவுத் தேடல்கள் சொற்கள் என்னும் முத்துக்களாக இந்நூலிலே கோர்க்கப்பட்டுள்ளன. உங்கள் பார்வைக்கு வழங்கப்படுகின்றன. ஐஸ் மலை பார்வைக்கு சிறிதாகக் காணப்பட்டாலும் நீரினுள் ஆழமாகவும் அகலமாகவும் பரந்திருக்கும். அதேபோல் இந்நூலும் பார்வைக்குச் சிறிதாகத் தோன்றினாலும் அதனுள் பல விடயங்கள் ஆழமாகப் படிந்திருக்கின்றன. இம் மூன்று பக்கப் பார்வையாய் உருவாகியிருக்கும் இப்புதிய அகமாகிய புத்தகத்தினுள் புகுந்து வெளிவரும் நீங்கள் நிச்சயம் புதிய பல அநுபவங்களைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.  

               புத்தகங்கள் விரிக்கப்படாது, சிந்தனைகள் விரிவுபடாது தொழில் நுட்ப உலகினுள் புகுந்த ஒரு சமுதாயம் எம்முன்னே வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாசிப்புப் பழக்க வாசனையே இன்றி வீடீயோ உலகத்திலே விழுந்து கிடக்கின்றது. எழுத்துக்கள் எழுந்து நிற்;க நிலை தடுமாறுகின்றன. எழுதுவோர், எழுத்தாளர்கள் கேவலத்திற்காளாகின்றார்கள். எழுத்தாளர்களை ஏளனம் செய்யும் சமுதாயம் என்னும் ஒரு கட்டுரையில் எம்மைப் போன்றோரின் உள்ளக் கிலேசங்களுக்கு எழுத்தால் உருவம் கொடுத்திருக்கின்றேன். கால ஓட்டத்திலே இந்த நிலை தொடராது இருக்க எழுத்தாளர்கள் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று நான் கருதுகின்றேன். இது போன்ற பன்னாட்டு எழுத்தாளர் மாநாடுகள் போன்றவை செய்கின்ற பணிகளாலேயே தமிழும் தமிழால் எழுத்தாளர்களும் சிறப்புற முடியும். இவ்விடத்தில் இனிய நந்தவனம் பதிப்பகத்தினரையும் தடாகம் இலக்கிய அமைப்பினரையும் முகவரி அறவாரியம் அமைப்பினரையும் உங்கள் கரங்களுடன் என் கரத்தையும் இணைத்து மனம் ஒன்றி வாழ்த்துகின்றேன்.  நன்றி கூறுகின்றேன். 

          இந்நூலில் எழுத்துக்கள் நிச்சயமாக உங்கள் கண்களை விரியச் செய்யும், நெற்றியை சுருங்கச் செய்யும், உங்களுக்குள் வினாக்களை எழுப்பச் செய்யும் என்று நம்புகின்றேன். என் எண்ணங்களுக்கு இந்நூலால் ஆடை கட்டி உங்கள் முன் சமர்ப்பித்திருக்கின்றேன். இதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவீர்கள் என்று நம்பி சமுதாய ஓட்டத்திலே தமிழ் அந்நியமாக்கப்படுவதையும் அலட்சியம் செய்யப்படுவதையும் கலாச்சாரம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் உலகின் பல பக்கங்களில் ஆட்சி செய்யப்படுவதையும் பலமாக கண்டித்து எனை ஈன்று உலகுக்களித்த என் பெற்றோரை வணங்கி உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

    ஞாயிறு, 15 மே, 2016

    நூல் அறிமுகவிழா



    இனிய நந்தவனம் பதிப்பகமும் தடாகம் இலக்கிய அமைப்பும் முகவரி அறவாரியம் அமைப்பும் ஏற்பாடு செய்த பன்னாட்டு எழுத்தாளர்கள் மாநாட்டில் எனது முக்கோண முக்குளிப்பு என்னும் கட்டுரை நூல் 21/5/2016 மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் அறிமுகம் செய்யப்படுகிறது. 
                      
                              இந்நூல் கோலாலம்பூரில் அறிமுகம் செய்வதற்கான முழு ஒத்துழைப்பையும் ரூபன் அவர்கள் வழங்கியிருக்கின்றார். கவிஞர்களை பாராட்டுவதற்காக போட்டிகள் வைப்பதுடன் பதிவுகளுக்கு உடனடியாக பின்னூட்டம் இடுவதும் எழுத்தாளர்களைப் பாராட்டுவதும் இவரது தமிழ் மீது கொண்ட ஆர்வத்திற்கு அடையாளமாகப்படுகின்றது. தடாக இலக்கிய அமைப்பு கலைமகள் ஹிதாய அவர்களும் முழு ஆர்வத்தையும் தந்துள்ளார். இவற்றுக்கெல்லாம் மேலாக இத்தொடர்புகளுக்கு மூல காரணகர்த்தா ரமணி சார் தான். இந்நூலுக்கான பின்னட்டைக் கவிதைகூட அவரே தந்துள்ளார்.

                                          எழுத்தை நேசிப்பவர்கள் இதய சுத்தியுடன் இருக்கும் வரை தமிழ் வாழும். தொடர்புகளும் இணைவுகளும் தாமாக வந்து சேர்வதில்லை. நற் தொடர்புகள் நன்மையிலேயே சென்றடையும். இவ்விழா நிச்சயமாக நன்றாக நடைபெறும் என்று நான் நம்புகின்றேன். இந்தியாவில் ரமணி சார் ஒத்துழப்புடன் வலையுலக சந்திப்பு நிகழ்விலும் இந்நூல் அறிமுகமாவதற்கு  ஆவன செய்வதாகவுள்ளார். 

    ஞாயிறு, 8 மே, 2016

    அன்னையர் தினம் 2016




    புனிதமான உறவுக்குக் காரணமானவர்களுக்கும்
    உன்னத உலகத்தை உருவாக்கித் தருபவர்களுக்கும் 
    கண்ணுக்குள் உறவு வைத்து
    காலமெல்லாம் தம் பிள்ளைகளைக் காப்பவர்களுக்கும்
    அன்புக்கும் அரவணைப்புக்கும் இலக்கணமானவர்களுக்கும்  
    இன்றைய நாள் உரித்தானது 

    அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். 

    வியாழன், 5 மே, 2016

    நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் நயனங்களின் தேடலும் முக்கோண முக்குளிப்பு நூல் அறிமுக விழாவும்

                   நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய                                                       மாணவர்களின்  நயனங்களின் தேடலும் 
                                                     முக்கோண முக்குளிப்பு நூல் 
                                                             அறிமுக விழாவும்
             




    30.04.2016 அன்று நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் இங்கிலாந்து Harrow  என்னும் நகரத்திலே நயனங்களின் தேடல் 2016 என்னும் நிகழ்வினை மிகச் சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்விலே முன்னாள் நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆசிரியராகிய என்னுடைய முக்கோணமுக்குளிப்பு என்னும் நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இளைப்பாறிய முன்னாள் அதிபர் திருமதி. அசலாம்பிகை கல்யாண சுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். 


    நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். பழைய மாணவனும் நூலகவியலாளருமான திரு. செல்வராஜா நடராஜா அவர்களும் இந்நிகழ்வினில் கலந்து கொண்டது இந்நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்த்தது.

                இந்நிகழ்விலே பழைய மாணவர்களின் பிள்ளைகளின் நடனங்கள், வில்லுப்பாட்டு, பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வரவேற்புரையினை திருமதி. ராகினி அருண்குலசூரிய அவர்களும் நன்றியுரையினை திருமதி. சுபா ஜூலியன் அவர்களும் வழங்கினர். தலைவர் வர்மன் மங்களராஜா அவர்கள் தனது தலைமையுரையிலே நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு சென்ற வருடம் கணனிகள் வழங்கியமை பற்றியும் இனி வரும் காலங்களில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தங்களின் மேலான ஒத்துழைப்பு இருக்கும் என்று உறுதியளித்தார். பிரதம விருந்தினர் தனது உரையில் பழைய மாணவர்களின் ஊக்கத்தினையும் ஒத்துழைப்பினையும் பாராட்டிப் பேசினார். நான் மாணவர்களைக் கற்பிக்கும் போது ஏற்பட்ட அநுபவங்களையும் இச்சங்கத்தினை வளப்படுத்துவதற்காக மாணவர்களின் ஒத்துழைப்புத் தேவை என்பதனையும் வலியுறுத்திப் உரையாற்றினேன். திரு. செல்வராஜா நடராஜா அவர்கள் இப்பாடசாலை ஆரம்பகால கட்டங்களை நினைவுறுத்திப் பேசினார். 
           முக்கோணமுக்குளிப்பு என்ற நூலினை நூலகவியலாளர் செல்வராஜா நடராஜா அவர்கள்  விமர்சனம் செய்தார். வாசிப்புப் பழக்கம் அருகி வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் வாசிப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாகவும்  கல்வித்திட்டத்துடன் இணைக்கப்படக்கூடிய தகுதியை உடையதாகக் காணப்படுவதாக எடுத்துரைத்தார். பாடசாலை முன்னாள் அதிபர் திருமதி அசலாம்பிகை கல்யாணசுந்தரம் அவர்கள் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார். நான் எனது ஏற்புரையில் இந்நூல் நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரியிலே முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், மத்தியில் அறிமுகம் செய்யப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகக் கூறினேன். மூன்று பரிமாணங்களை எடுத்துள்ள இந்த நூலின் தோற்றம் உருவான தன்மை பற்றிய சகல விடயங்களையும் நன்றியுணர்வினையும் எடுத்துரைத்தேன். ஒருமேடை இரு நிகழ்வாக நயனங்களின் தேடல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
    எனது இந்நூல் பன்னாட்டு எழுத்தாளர் மாநாட்டில் 22.05 மலேசியாவிலும், 25.05 சிங்கப்பூரிலும் அறிமுகம் செய்யப்படுவதாக உள்ளது. 

    செவ்வாய், 19 ஏப்ரல், 2016

    காத்திருப்பு




    பிரண்டு படுத்த படுக்கையிலே தடவிப் பார்த்த கைகளுக்குத் தட்டுப்படாத மனைவி தேகம் உணர்ந்து துடித்தெழுந்தான் விஜய். 

    என்ன செய்கிறாள் இவள். இன்னும் நித்திரை கொள்ளாமல் அவன் கைபட்டு மின்சாரம் தொழிற்பட்டு மின்விளக்கு வெழுத்தது. அறையின் வெளியே அவதானித்தான். சமையலறை வெளிச்சம் கதவிடுக்கூடாக கண்களுக்குப் பட்டுத் தெறித்தது. சமையலறை சென்றான். அங்கு மேசையிலே கைநீட்டிக் கையே தலையணையாய் மேசைமேல் முகம் புதைத்து தனை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள், கீதா. "கீதா......" தட்டி எழுப்பினான். 

    "பிள்ளை வந்திட்டாளா, பிள்ளை வந்திட்டாளா....."தடுமாறினாள் கீதா

    "வராமல் எங்கே போகப் போகிறாள். வருவாள் தானே. வந்து படு. இன்றைக்கு லெக்ஷர்ஸ் முடிய நேரமாகி விட்டது என்று நினைக்கின்றேன். வந்து எழுத்துச் சாப்பிடுவாள் தானே|" அதட்டலாகச் சொன்னான் விஜய். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை. 

    "நீங்கள் போய்ப் படுங்கள். நாளைக்கு வேலை இருக்கிறது. நான் சாப்பாடு கொடுத்திட்டு வந்து படுக்கின்றேன்" என்று கூறித் தன் கையில் பத்திரமாய் வைத்திருந்த போட்டோவை ஒருதரம் பார்த்தாள். என்ன லட்சணமான பெடியன். குடும்பமோ, உத்தியோகமோ, அழகோ என்ன குறை இருக்கிறது. இவனை மட்டும் ஜெசிக்குக் கட்டிக் கொடுத்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம். தன் மகளைத் தரமான ஒருவனிடம் ஒப்படைக்க நாளும் பொழுதும் தேடிக் கண்டுபிடித்த ஒருவனுடன் காத்திருந்தாள் கீதா. 

    "என்னவென்றாலும் செய். நான் சொன்னால், கேட்கப் போகின்றாயா? திரும்பி வந்து படுக்கைக்குப் பாரமானான் விஜய். கண்மூடியவுடன் நித்திரையாள் அவனை தாலாட்டிவிட்டாள். 

    மணி இரவு பதினொன்று.  உணவகம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் உறங்க வேண்டும். கலகலப்பு மெல்லமெல்லக் குறைந்தது. ஜெசி தன்னுடைய கைகளில் அடங்கிக் கிடந்த ராமுடைய கைகளை விலக்கினாள். 

    "அம்மா காத்திருப்பாள். நான் போக வேண்டும். இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி கள்ளமாய் வாழ்க்கையைக் கடத்துவது. நாம் தானே உறவுக்கு அத்தாட்சிப்படுத்திவிட்டோம். உயிருள்ளவரை எனக்கு நீங்கள்தானே. புதியபாதை வகுப்பதற்கு பொறுப்பான பதவி தேவை. அதற்கு சிறப்பான படிப்பு அவசியம் என்று தானே, எல்லாவற்றையும் மறைத்துவிட்டோம். உழைக்கும் காலம் சேர்ந்தே உழைத்துத் தரமான வாழ்வு காண்போம். இப்போது நாம் படிப்பதற்கு வசதி தேவையில்லையா! எங்கே போவோம். சட்டரீதியாகக் கணவன் மனைவி. ஆனால், எங்கள் பெற்றோருக்கு நாங்கள் செல்லப்பிள்ளைகள். திட்டமிட்டுத்தானே தொடங்கினோம். பொறுத்திருப்போம்.  இன்னும் 2 வருடங்கள் காலத்தைக் கடத்த வழிதான் இல்லையா? 

    ஒரு இளம் தம்பதியர், கள்ளங்கபடமில்லாக் குழந்தைகளாய்ப் பெற்றோருடன் வாழும் நிகழ்வுடன் பிரயாணத்திற்காகப் பிரிந்து பெற்றோரிடம் சென்றனர். கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு கண்விழித்தாள், கீதா. என்ன ஒரு அபார சக்தி. தாய்ப்பாசத்தை  ஒப்பிட்டுக் கூற வார்த்தைகளே இல்லை. எங்கிருந்தாலும் ஒரு காந்த சக்திபோன்ற உணர்வு பிள்ளைகளிடம் இழுத்தெடுக்கும். எவ்வாறான இரைச்சலிலும் இடரிலும் அழும் தன் குழந்தை ஓசை துள்ளியமாய் ஒலிக்கும். 

    "ஜெசி வந்திட்டாயா? கெதியாக முகத்தைக் கழுவிட்டு வா. வந்து சாப்பிடு"

    "எனக்குப் பசிக்கல்ல"

    "இரவில் சாப்பிடாமல் படுக்கக் கூடாது. நீ வா! நான் குழைத்து ஊட்டிவிடுகிறேன்"

    உடைமாற்றித் தாய் ஊட்டிய உணவை வாய்க்குள் அசைபோட்டாள் ஜெசி. உணவுண்ணும் சமயத்தில் தன் மனக்கிடங்கில் உள்ளவற்றை கீதா மெதுவாக எடுத்துரைத்தாள். 

    "அம்மா இப்ப நான் படிக்கிறதா? கல்யாணம் கட்டி வாழ்றதா? சும்மா யாரோ ஒருவனைக் கொண்டுவந்து என்ர படிப்பைக் கெடுக்காதீங்க. படிப்பு முடிஞ்சாப் பிறகு இதெல்லாம் வைத்துக் கொள்ளுங்கள். எடுத்தெறிந்து பேசிவிட்டு சட்டென்று எழுந்து படுக்கைக்குப் போய்விட்டாள், மகள் ஜெசி.

    சமையலறையை மூடிவிட்டுத் தன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மகள் கல்விக்கரை கண்டவுடன் ஏற்ற துணை தேடுவோம், இல்லையென்றால், இப்பொருத்தத்தைக் காத்திருக்கச் சொல்வோம் என்று முடிவெடுத்தவளாய் படுக்கையை  நாடினாள், அப்பாவித் தாய். 

    பெற்றோரை உறிஞ்சிக் கல்வியை முடித்துவிட்டுத் தன் மனதுக்குப் பிடித்த ராமுடன் சிறப்பான வாழ்வு காணக் காத்திருந்த ஜெசி சட்டரீதியாக ராம் அளித்த மோதிரத்தை முத்தமிட்டபடி கண்ணுறங்கினாள்.

    உடல் உழைத்து உடல் இளைத்து
    உலகம் இழக்கும் வரை – எங்கள்
    பிள்ளைகள் பிள்ளைகள் பிள்ளைகள் - என்று
    ஏங்கும் பெற்றோர்கள் பேர் அப்பாவிகள்





    சனி, 2 ஏப்ரல், 2016

    முட்டாள் முட்டாள் ஏப்ரல் முட்டாள்

                

    ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அடுத்தவரை முட்டாளாக்கிப் பார்ப்பதில் அளவில்லா ஆனந்தம் கொள்ளுகின்றோம். எப்படி இப்படி ஒருநாளைத் தெரிவுசெய்து அடுத்தவருக்கு அதிர்ச்சி கொடுத்து, அழவைத்து அதன்பின் சிரிக்கவைக்கும் விளையாட்டு அரங்கேறியது? காரணமில்லாது எதுவுமில்லை. எனவே நான் அறிந்ததை இப்பதிவில் அறியத் தருகின்றேன். 

               ரோமானியர்கள் தமது நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம் திகதியையே புத்தாண்டு தினமாகக் கொண்டாடினார்கள். இந்நாளிலே கடவுளுக்கு பலி கொடுத்து, அன்பளிப்புக்கள் வழங்கி, கோலாகலக் கொண்டாட்டமாக விருந்துகள், ஆடல் பாடல் என்று ஆhப்பாட்டமாகக் கொண்டாடினார்கள். ஐரோப்பா முழுவதும் ஏப்ரல் முதலாம் திகதியையே புதுவருடமாகக் கொண்டாடினார்கள். 

               பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போப் கிரகோரி என்பவர் ஜனவரி 1ம் திகதியே புதுவருடம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1562ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் ஏப்ரல் முதலாம் திகதியையே தொடர்ந்து புதுவருடமாகக் கொண்டாடினார்கள். 1700 இல் ஜேர்மனி, நோர்வே, டென்மார்க், போன்றவையும், இங்கிலாந்து 1752 இலும், ஸ்கொட்லாந்த் 1660 இலும், ஜனவரி முதலாம் திகதியை புதுவருடமாக ஏற்றுக் கொண்டன. 

            தொடர்ந்து ஏப்ரல் 1ம் திகதியைப் புதுவருடமாகக் கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று கருதியதனால் இத்தினம் முட்டாள்கள் தினமாகப்பட்டது. இன்றைய தினம் பிரான்ஸ் நாட்டில் ஒரு கேலிக்கை என்னவென்றால், கடதாசியில் மீன் கீறி வெட்டி  அதனை நண்பர்கள் முதுகில் ஒட்டிவிடுவார்கள். முதகில் மீனுடன் திரிபவர்களை ஏப்ரல் மீன் என்று கேலி செய்வார்கள். 

    அப்படியென்றால் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடும் நாங்கள்????? 

    சனி, 26 மார்ச், 2016

    பிரேமை

                       


                        

    மூளைக்குள்ளே பாய்கின்ற மின்சாரம் அதிவேகமாக தொழிற்படத் தொடங்குகின்றது. பதிந்து வைத்த ஒரு பகுதி மாத்திரம் அடிக்கடி பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றது. அவள் கவனத்தைத் திசை திருப்ப வேறு நிகழ்ச்சிகளை முன் கொண்டு வருகின்றாள்.   ஆனால், அதுவோ அதிவேகமாக அப்பக்கமே இழுக்கின்றது. மூளைக்குள்ளேயே படுபோராட்டம். நினைவும் மறுப்பும் எதிர்த்து நின்று எகிறிப் பாய்கின்றன. காண்போர் காதுகளுக்கெல்லாம் இதுபற்றிய பேச்சே தொடர்கின்றது. இருளிலே அவ்வுருவம் இருப்பது போல் உணர்கின்றாள். தனிமையில் அவள் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போல் உணர்கின்றாள். நடந்த சம்பவங்களுக்கும் நடக்கின்ற சம்பவங்களுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கின்றாள். தான் உயிர்நீப்பின் மரணச்சடங்குகள் என் உடலுக்கு வேண்டாம். என் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்து விடுங்கள் என்று வீட்டிலுள்ளோருக்கு கட்டளையிடுகின்றாள். என் உயிர் நீப்பின் என் உடலுக்கு எரியூட்ட வேண்டாம். காக்கைக்கும் புழுவுக்கும் என் உடல் உணவாகட்டும் என்று கூறிய வள்ளுவர் வாக்குப் போல் உத்தரவிடுகின்றாள். 

             இவள் விபரீத நடவடிக்கைகள் கண்ட கணவன் வைத்தியரிடம் அவளை அழைத்துச் செல்ல மனஅழுத்தம் என மருத்துவர் பதிலிறுக்கின்றார். மனமாற்ற நடவடிக்கை எடுக்காது விட்டால், விபரீதத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்று மருத்துவரும் அறிவுறுத்துகின்றார். ஏனென்றால், அவள் வாழவேண்டும். அவளால் உருவாக வேண்டிய ஒரு உலகம் இருக்கின்றது. அவள் உதவியை நாடும் உள்ளங்கள் இருக்கின்றன. இவ்வாறுதான் துணையை இழந்த உள்ளங்கள் தனிமைக் கொலையைச் செய்கின்ற ஐரோப்பிய நாடுகளில் தவிக்கின்றன. மறதிநோயும், மயக்கநோயும், மனநிலை தடுமாறும் மந்த நோயும் ஆட்டிப் படைக்கின்றன. 

             இவள் நிலை பலருக்கு நடிப்பு, இவளுக்குத் துடிப்பு, எல்லோரும் ஒரே மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. வளர்ப்பு முறையாலும் வளர்ந்த சூழ்நிலையாலும் கல் மனம் கொண்டார் எதையும் தாங்கும் இரும்பு போலாவர்.  பலர் கூறும் வார்த்தைகளும் ஒரு காதால் வந்து மறு காதல் மறைந்துவிடும். ஆனால், இளகிய மனம் தன் நிலையை இழந்து விடும். கடமையுள்ளவர்கள் வெளியே செல்ல வீட்டில் தனித்திருக்கும் பெண்கள் மனநிலை பாதிக்கப்படுவது இயற்கை. இதனாலேயே ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் இறந்தால், குடும்பத்துடன் இணைந்து ஒப்பாரி வைப்பதை விட்டுவிட்டு அக்குடும்பத்தைச் சிரிக்க வைப்பதற்காக இருக்கும் இடம் விட்டு உறவினர்கள் அவர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பல்வேறுபட்ட மூளைப்பதிவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துவார்கள். இது எமது கலாச்சாரம் இல்லையென்று திரும்பத்திரும்ப அதேசம்பவத்தை எடுத்துரைத்து 1 வருடம் எந்தவித நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்டவர் சமூகமளிக்கக் கூடாது என்று கட்டளையிட்டு, சிரித்துவிட்டால், சிரிப்பதைப் பாருங்கள். கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் என்று மறைவாகப் பேசி, மனக்கொலை செய்யும் எமது சமுதாயம் என்றுதான் வெளிச்சம் காணப் போகின்றதோ. 

             வெள்ளைக்காரர் போல் நடையும் உடையும் மாத்திரம் போதாது. நல்பழக்கவழக்கங்களும் கற்றுக் கொள்ள வேண்டும், மனிதத் தன்மையையும் மனம் கொள்ள வேண்டும். 

    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

      எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்   இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு , அடுத்த கால கட...