பிரண்டு படுத்த படுக்கையிலே தடவிப் பார்த்த கைகளுக்குத் தட்டுப்படாத மனைவி தேகம் உணர்ந்து துடித்தெழுந்தான் விஜய்.
என்ன செய்கிறாள் இவள். இன்னும் நித்திரை கொள்ளாமல் அவன் கைபட்டு மின்சாரம் தொழிற்பட்டு மின்விளக்கு வெழுத்தது. அறையின் வெளியே அவதானித்தான். சமையலறை வெளிச்சம் கதவிடுக்கூடாக கண்களுக்குப் பட்டுத் தெறித்தது. சமையலறை சென்றான். அங்கு மேசையிலே கைநீட்டிக் கையே தலையணையாய் மேசைமேல் முகம் புதைத்து தனை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள், கீதா. "கீதா......" தட்டி எழுப்பினான்.
"பிள்ளை வந்திட்டாளா, பிள்ளை வந்திட்டாளா....."தடுமாறினாள் கீதா
"வராமல் எங்கே போகப் போகிறாள். வருவாள் தானே. வந்து படு. இன்றைக்கு லெக்ஷர்ஸ் முடிய நேரமாகி விட்டது என்று நினைக்கின்றேன். வந்து எழுத்துச் சாப்பிடுவாள் தானே|" அதட்டலாகச் சொன்னான் விஜய். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை.
"நீங்கள் போய்ப் படுங்கள். நாளைக்கு வேலை இருக்கிறது. நான் சாப்பாடு கொடுத்திட்டு வந்து படுக்கின்றேன்" என்று கூறித் தன் கையில் பத்திரமாய் வைத்திருந்த போட்டோவை ஒருதரம் பார்த்தாள். என்ன லட்சணமான பெடியன். குடும்பமோ, உத்தியோகமோ, அழகோ என்ன குறை இருக்கிறது. இவனை மட்டும் ஜெசிக்குக் கட்டிக் கொடுத்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம். தன் மகளைத் தரமான ஒருவனிடம் ஒப்படைக்க நாளும் பொழுதும் தேடிக் கண்டுபிடித்த ஒருவனுடன் காத்திருந்தாள் கீதா.
"என்னவென்றாலும் செய். நான் சொன்னால், கேட்கப் போகின்றாயா? திரும்பி வந்து படுக்கைக்குப் பாரமானான் விஜய். கண்மூடியவுடன் நித்திரையாள் அவனை தாலாட்டிவிட்டாள்.
மணி இரவு பதினொன்று. உணவகம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் உறங்க வேண்டும். கலகலப்பு மெல்லமெல்லக் குறைந்தது. ஜெசி தன்னுடைய கைகளில் அடங்கிக் கிடந்த ராமுடைய கைகளை விலக்கினாள்.
"அம்மா காத்திருப்பாள். நான் போக வேண்டும். இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி கள்ளமாய் வாழ்க்கையைக் கடத்துவது. நாம் தானே உறவுக்கு அத்தாட்சிப்படுத்திவிட்டோம். உயிருள்ளவரை எனக்கு நீங்கள்தானே. புதியபாதை வகுப்பதற்கு பொறுப்பான பதவி தேவை. அதற்கு சிறப்பான படிப்பு அவசியம் என்று தானே, எல்லாவற்றையும் மறைத்துவிட்டோம். உழைக்கும் காலம் சேர்ந்தே உழைத்துத் தரமான வாழ்வு காண்போம். இப்போது நாம் படிப்பதற்கு வசதி தேவையில்லையா! எங்கே போவோம். சட்டரீதியாகக் கணவன் மனைவி. ஆனால், எங்கள் பெற்றோருக்கு நாங்கள் செல்லப்பிள்ளைகள். திட்டமிட்டுத்தானே தொடங்கினோம். பொறுத்திருப்போம். இன்னும் 2 வருடங்கள் காலத்தைக் கடத்த வழிதான் இல்லையா?
ஒரு இளம் தம்பதியர், கள்ளங்கபடமில்லாக் குழந்தைகளாய்ப் பெற்றோருடன் வாழும் நிகழ்வுடன் பிரயாணத்திற்காகப் பிரிந்து பெற்றோரிடம் சென்றனர். கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு கண்விழித்தாள், கீதா. என்ன ஒரு அபார சக்தி. தாய்ப்பாசத்தை ஒப்பிட்டுக் கூற வார்த்தைகளே இல்லை. எங்கிருந்தாலும் ஒரு காந்த சக்திபோன்ற உணர்வு பிள்ளைகளிடம் இழுத்தெடுக்கும். எவ்வாறான இரைச்சலிலும் இடரிலும் அழும் தன் குழந்தை ஓசை துள்ளியமாய் ஒலிக்கும்.
"ஜெசி வந்திட்டாயா? கெதியாக முகத்தைக் கழுவிட்டு வா. வந்து சாப்பிடு"
"எனக்குப் பசிக்கல்ல"
"இரவில் சாப்பிடாமல் படுக்கக் கூடாது. நீ வா! நான் குழைத்து ஊட்டிவிடுகிறேன்"
உடைமாற்றித் தாய் ஊட்டிய உணவை வாய்க்குள் அசைபோட்டாள் ஜெசி. உணவுண்ணும் சமயத்தில் தன் மனக்கிடங்கில் உள்ளவற்றை கீதா மெதுவாக எடுத்துரைத்தாள்.
"அம்மா இப்ப நான் படிக்கிறதா? கல்யாணம் கட்டி வாழ்றதா? சும்மா யாரோ ஒருவனைக் கொண்டுவந்து என்ர படிப்பைக் கெடுக்காதீங்க. படிப்பு முடிஞ்சாப் பிறகு இதெல்லாம் வைத்துக் கொள்ளுங்கள். எடுத்தெறிந்து பேசிவிட்டு சட்டென்று எழுந்து படுக்கைக்குப் போய்விட்டாள், மகள் ஜெசி.
சமையலறையை மூடிவிட்டுத் தன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மகள் கல்விக்கரை கண்டவுடன் ஏற்ற துணை தேடுவோம், இல்லையென்றால், இப்பொருத்தத்தைக் காத்திருக்கச் சொல்வோம் என்று முடிவெடுத்தவளாய் படுக்கையை நாடினாள், அப்பாவித் தாய்.
பெற்றோரை உறிஞ்சிக் கல்வியை முடித்துவிட்டுத் தன் மனதுக்குப் பிடித்த ராமுடன் சிறப்பான வாழ்வு காணக் காத்திருந்த ஜெசி சட்டரீதியாக ராம் அளித்த மோதிரத்தை முத்தமிட்டபடி கண்ணுறங்கினாள்.
உலகம் இழக்கும் வரை – எங்கள்
பிள்ளைகள் பிள்ளைகள் பிள்ளைகள் - என்று
ஏங்கும் பெற்றோர்கள் பேர் அப்பாவிகள்
கதையென்றாலும் மனசுக்கு பாரமாகிபோனது அக்கா !..இதுதானே நிதர்சனம் ..வெளிநாட்டில் வாழும் பல பெற்றோர்கள்/பிள்ளைகள் நிலை இதுவே ..ஒருவேளைநம் நாட்டில் பிறந்து வெளிநாட்டில் பாதி மரமாக வேரோடு பிடுங்கி நடப்பட்டதால் நம் நாட்டு பெற்றோர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா இக்கால பிள்ளைங்களை பற்றி எனவும் தோன்றுகிறது ..
பதிலளிநீக்குபாசத்தையும் கண்மூடித்தனமாக வைக்க கூடாதோ ..எதையும் ஏற்கும் மனோநிலையை பெற்றோராகிய நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் ..
வணக்கம்
பதிலளிநீக்குகதை மிக அருமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்... முதலில் முகநூலில் படித்தேன்
காலம் உணர்ந்து காத்திரமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பெற்றோர்களுக்கு கனவு காணவும்
பதிலளிநீக்குபிள்ளைகளின் எதிர்காலம் எண்ணியும் ஏங்க மட்டும்தானே தெரியும்
அருமையான கதை சகோதரியாரே
பிள்ளைகள் மேல் அதீத நம்பிக்கை வைக்கும் + அவர்களின் மேல் அதிக அக்கறை கொள்ளும் இதுபோன்ற பெற்றோர்கள் பாடு கொஞ்சம் கஷ்டம்தான்.
பதிலளிநீக்குஇருப்பினும் பருவ வயதினில் உள்ள பெண்/பிள்ளைகளின் மனதில், எப்படியோ தவிர்க்கமுடியாதபடி, இயற்கையாகவே நுழைந்துவிடும் காதல் உணர்வுகளைத் தடுப்பதோ நிராகரிப்பதோ நல்லது அல்ல என்பது என் கருத்தாகும்.அவர்களின் சந்தோஷமே இதில் முக்கியமாகும். வாழ்க்கையில் அனுபவம் இல்லாத அவர்களின், வாழ்க்கைத்துணை பற்றிய தேர்ந்தெடுத்தலும், அவசரமில்லாமல், நிதானமாக, நல்லபடியாக அமைய வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாகும்.
பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி, விட்டுக்கொடுத்துப்போய், ஓர் சுமுகமான முடிவுக்கு வரவேண்டும்.
இது முள்ளின் மேல் விழுந்த சேலையைக் கிழியாமல் எடுப்பது போன்ற கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். அதனை மிகவும் ஜாக்கிரதையாகத்தான் கையாள வேண்டும்.
யோசிக்க வைக்கும் நல்லதொரு படைப்புக்குப் பாராட்டுகள்.