• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 4 ஜூன், 2016

    மலேசிய பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒலிபரப்பிய என்னுடைய உரை






           முக்கோண முக்குளிப்பிலே நான் எடுத்த முத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்ற பொன்னான நாள் இன்று. கோலாலம்பூர் மண்ணை நான் தொட்டதில்லை. ஆனால் தமிழ் என்னை அழைத்திருக்கிறது. என் எழுத்து நாடு விட்டுத் தாவி பறந்திருக்கின்றது. எழுத்துக்குள்ள சக்தியை உணருகின்ற இத்தருணத்தில் எனக்கும் ஒரு இடம் தர பேருதவி புரிந்த  என் அன்புக்கும் மேலான தம்பி ரூபன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்நிகழ்வில் என் நூலும் வெளிவர சம்மதம் தெரிவித்த இனிய நந்தவன பதிப்பகத்தாருக்கும், தடாக இலக்கிய அமைப்பினருக்கும், முகவரி அறவாரிய அமைப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 

          விரிக்கப்படாத புத்தகமும் உடைக்கப்படாத தேங்காயும் ஒன்றே. விழாக்களிலே நூல்களைப் பெற்று தமது நூல் அடுக்குகளை அலங்கரிக்கின்ற புத்தகங்கள் படைப்பாளிகளுக்கு அவமானமாகின்றன. எழுத்தாளர்கள் உறங்கப்போவதில்லை. சமுதாயத்தை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். சிறகடிக்கும் உணர்வுகளுக்கு மக்கள் மனங்களுக்குப் பாதை போட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் சிந்தனைகள் சமுதாயத்தைப் புரட்டிப் போடும். சாக்கடைகளின் கழிவகற்றும். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர்  பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு என்றார் பாரதி. இங்கு நான் எழுத்தாளர்களின் எழுத்துக்களை அக்கினிக் குஞ்சாகக் காண்கின்றேன். சமுதாயக் குப்பைகள் எழுத்தாளர்களின்  கைமுனைப் பேனாவால் எரிக்கப்படும். புரையோடிப் போயிருக்கின்ற மூடநம்பிக்கைகள்  எழுத்தென்னும் மயிலிறகால் தடவித் தடவி சுத்தீகரிக்கப்படும். இதில் அக்கினி எடுப்பவனாகவோ மயிலிறகைப் பயன்படுத்துபவனாகவோ எழுத்தாளன் களம் புகவேண்டும். வெறுமனே அழகுணர்ச்சிக்கு ஆட்படும் ஆக்கங்கள் மனிதர் மனத்திற்கு சுகம் சேர்க்கும். மனதை மாற்றாது. காதலைப் பாடும் வாய் உண்மைக்  காதலை உலகுக்கு உணர்த்த வேண்டும். அழகுணர்ச்சி கூட மனிதனை நல்வழிப்படுத்துவதாக இருக்கும் பட்சத்தில் எதிர்கால மனிதன் உன்னத வாழ்க்கையை உலகுக்குக் காட்டுவான். மனிதன் அறிவு விரிவுபட வேண்டுமென்றால், மனதுக்குக் கட்டுரைகளைப் படிக்கும் ஆர்வத்தைக் கொடுங்கள். யார்சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார் என்றார் சொக்ரடீஸ். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வாறு மெய்ப்பொருள் தேடித் தேடித் தெளிந்தவையே அறிந்ததும் புரிந்ததும் என்னும் எனது கட்டுரைகள். இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாது உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள். அதிகமாக அவை பற்றிச் சிந்தியுங்கள். என் தேடலும் உங்கள் தேடலும் தெளிவுக்குத் துணைபோகும். என் தீராத தாகமும் தீர்ந்து போகும். 

           கல்லூரிக் காலங்களில் பரீட்சையும் புள்ளிகளும் கண்ணும் கருத்துமாகும். அதனால், கருத்தூன்றி கற்கவோ என் கருத்துக்களைத் திணிக்கவோ மனம் ஒவ்வாது. இதனால் தவறிப்போன என் சிந்தனைகளுக்கு தளம் தந்தது இலக்கிய இன்பம் என்னும் பகுதி. பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாது இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கும் போது பின்புறம் ஒட்டியிருக்கும் மண்ணைத் தட்டிவிட்டுச் செல்லும் மனிதர்கள் போல் இல்லாது நாம் வாழ்ந்த நாட்டுக்கு நன்றி சொல்லவும் அங்கு காணும் நற் சிறப்புக்களை மக்களுக்கு நவின்றுரைக்கவும் என எழுந்ததே சிந்தனையின் தேனூற்று என்னும் பகுதி. அறிவுத் தேடல்கள் சொற்கள் என்னும் முத்துக்களாக இந்நூலிலே கோர்க்கப்பட்டுள்ளன. உங்கள் பார்வைக்கு வழங்கப்படுகின்றன. ஐஸ் மலை பார்வைக்கு சிறிதாகக் காணப்பட்டாலும் நீரினுள் ஆழமாகவும் அகலமாகவும் பரந்திருக்கும். அதேபோல் இந்நூலும் பார்வைக்குச் சிறிதாகத் தோன்றினாலும் அதனுள் பல விடயங்கள் ஆழமாகப் படிந்திருக்கின்றன. இம் மூன்று பக்கப் பார்வையாய் உருவாகியிருக்கும் இப்புதிய அகமாகிய புத்தகத்தினுள் புகுந்து வெளிவரும் நீங்கள் நிச்சயம் புதிய பல அநுபவங்களைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.  

               புத்தகங்கள் விரிக்கப்படாது, சிந்தனைகள் விரிவுபடாது தொழில் நுட்ப உலகினுள் புகுந்த ஒரு சமுதாயம் எம்முன்னே வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாசிப்புப் பழக்க வாசனையே இன்றி வீடீயோ உலகத்திலே விழுந்து கிடக்கின்றது. எழுத்துக்கள் எழுந்து நிற்;க நிலை தடுமாறுகின்றன. எழுதுவோர், எழுத்தாளர்கள் கேவலத்திற்காளாகின்றார்கள். எழுத்தாளர்களை ஏளனம் செய்யும் சமுதாயம் என்னும் ஒரு கட்டுரையில் எம்மைப் போன்றோரின் உள்ளக் கிலேசங்களுக்கு எழுத்தால் உருவம் கொடுத்திருக்கின்றேன். கால ஓட்டத்திலே இந்த நிலை தொடராது இருக்க எழுத்தாளர்கள் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று நான் கருதுகின்றேன். இது போன்ற பன்னாட்டு எழுத்தாளர் மாநாடுகள் போன்றவை செய்கின்ற பணிகளாலேயே தமிழும் தமிழால் எழுத்தாளர்களும் சிறப்புற முடியும். இவ்விடத்தில் இனிய நந்தவனம் பதிப்பகத்தினரையும் தடாகம் இலக்கிய அமைப்பினரையும் முகவரி அறவாரியம் அமைப்பினரையும் உங்கள் கரங்களுடன் என் கரத்தையும் இணைத்து மனம் ஒன்றி வாழ்த்துகின்றேன்.  நன்றி கூறுகின்றேன். 

          இந்நூலில் எழுத்துக்கள் நிச்சயமாக உங்கள் கண்களை விரியச் செய்யும், நெற்றியை சுருங்கச் செய்யும், உங்களுக்குள் வினாக்களை எழுப்பச் செய்யும் என்று நம்புகின்றேன். என் எண்ணங்களுக்கு இந்நூலால் ஆடை கட்டி உங்கள் முன் சமர்ப்பித்திருக்கின்றேன். இதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவீர்கள் என்று நம்பி சமுதாய ஓட்டத்திலே தமிழ் அந்நியமாக்கப்படுவதையும் அலட்சியம் செய்யப்படுவதையும் கலாச்சாரம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் உலகின் பல பக்கங்களில் ஆட்சி செய்யப்படுவதையும் பலமாக கண்டித்து எனை ஈன்று உலகுக்களித்த என் பெற்றோரை வணங்கி உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

    3 கருத்துகள்:

    1. மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள் சகோ - கில்லர்ஜி

      பதிலளிநீக்கு
    2. வணக்கம்
      சகோதரி

      தங்களின் உரையை ஒலிவடிவத்தை மலேசியாவில் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வந்த யாவரும் கேட்டார்கள்.. மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மேலும் பல நூல்கள் மேடை ஏற எனது வாழ்த்துக்கள்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு
    3. நல்ச உரை.
      மேலும் சிறப்படைய இனிய வாழ்த்துகள்.
      https://kovaikkavi.wordpress.com/

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...