• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 2 ஏப்ரல், 2016

    முட்டாள் முட்டாள் ஏப்ரல் முட்டாள்

                

    ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அடுத்தவரை முட்டாளாக்கிப் பார்ப்பதில் அளவில்லா ஆனந்தம் கொள்ளுகின்றோம். எப்படி இப்படி ஒருநாளைத் தெரிவுசெய்து அடுத்தவருக்கு அதிர்ச்சி கொடுத்து, அழவைத்து அதன்பின் சிரிக்கவைக்கும் விளையாட்டு அரங்கேறியது? காரணமில்லாது எதுவுமில்லை. எனவே நான் அறிந்ததை இப்பதிவில் அறியத் தருகின்றேன். 

               ரோமானியர்கள் தமது நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம் திகதியையே புத்தாண்டு தினமாகக் கொண்டாடினார்கள். இந்நாளிலே கடவுளுக்கு பலி கொடுத்து, அன்பளிப்புக்கள் வழங்கி, கோலாகலக் கொண்டாட்டமாக விருந்துகள், ஆடல் பாடல் என்று ஆhப்பாட்டமாகக் கொண்டாடினார்கள். ஐரோப்பா முழுவதும் ஏப்ரல் முதலாம் திகதியையே புதுவருடமாகக் கொண்டாடினார்கள். 

               பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போப் கிரகோரி என்பவர் ஜனவரி 1ம் திகதியே புதுவருடம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1562ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் ஏப்ரல் முதலாம் திகதியையே தொடர்ந்து புதுவருடமாகக் கொண்டாடினார்கள். 1700 இல் ஜேர்மனி, நோர்வே, டென்மார்க், போன்றவையும், இங்கிலாந்து 1752 இலும், ஸ்கொட்லாந்த் 1660 இலும், ஜனவரி முதலாம் திகதியை புதுவருடமாக ஏற்றுக் கொண்டன. 

            தொடர்ந்து ஏப்ரல் 1ம் திகதியைப் புதுவருடமாகக் கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று கருதியதனால் இத்தினம் முட்டாள்கள் தினமாகப்பட்டது. இன்றைய தினம் பிரான்ஸ் நாட்டில் ஒரு கேலிக்கை என்னவென்றால், கடதாசியில் மீன் கீறி வெட்டி  அதனை நண்பர்கள் முதுகில் ஒட்டிவிடுவார்கள். முதகில் மீனுடன் திரிபவர்களை ஏப்ரல் மீன் என்று கேலி செய்வார்கள். 

    அப்படியென்றால் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடும் நாங்கள்????? 

    சனி, 26 மார்ச், 2016

    பிரேமை

                       


                        

    மூளைக்குள்ளே பாய்கின்ற மின்சாரம் அதிவேகமாக தொழிற்படத் தொடங்குகின்றது. பதிந்து வைத்த ஒரு பகுதி மாத்திரம் அடிக்கடி பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றது. அவள் கவனத்தைத் திசை திருப்ப வேறு நிகழ்ச்சிகளை முன் கொண்டு வருகின்றாள்.   ஆனால், அதுவோ அதிவேகமாக அப்பக்கமே இழுக்கின்றது. மூளைக்குள்ளேயே படுபோராட்டம். நினைவும் மறுப்பும் எதிர்த்து நின்று எகிறிப் பாய்கின்றன. காண்போர் காதுகளுக்கெல்லாம் இதுபற்றிய பேச்சே தொடர்கின்றது. இருளிலே அவ்வுருவம் இருப்பது போல் உணர்கின்றாள். தனிமையில் அவள் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போல் உணர்கின்றாள். நடந்த சம்பவங்களுக்கும் நடக்கின்ற சம்பவங்களுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கின்றாள். தான் உயிர்நீப்பின் மரணச்சடங்குகள் என் உடலுக்கு வேண்டாம். என் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்து விடுங்கள் என்று வீட்டிலுள்ளோருக்கு கட்டளையிடுகின்றாள். என் உயிர் நீப்பின் என் உடலுக்கு எரியூட்ட வேண்டாம். காக்கைக்கும் புழுவுக்கும் என் உடல் உணவாகட்டும் என்று கூறிய வள்ளுவர் வாக்குப் போல் உத்தரவிடுகின்றாள். 

             இவள் விபரீத நடவடிக்கைகள் கண்ட கணவன் வைத்தியரிடம் அவளை அழைத்துச் செல்ல மனஅழுத்தம் என மருத்துவர் பதிலிறுக்கின்றார். மனமாற்ற நடவடிக்கை எடுக்காது விட்டால், விபரீதத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்று மருத்துவரும் அறிவுறுத்துகின்றார். ஏனென்றால், அவள் வாழவேண்டும். அவளால் உருவாக வேண்டிய ஒரு உலகம் இருக்கின்றது. அவள் உதவியை நாடும் உள்ளங்கள் இருக்கின்றன. இவ்வாறுதான் துணையை இழந்த உள்ளங்கள் தனிமைக் கொலையைச் செய்கின்ற ஐரோப்பிய நாடுகளில் தவிக்கின்றன. மறதிநோயும், மயக்கநோயும், மனநிலை தடுமாறும் மந்த நோயும் ஆட்டிப் படைக்கின்றன. 

             இவள் நிலை பலருக்கு நடிப்பு, இவளுக்குத் துடிப்பு, எல்லோரும் ஒரே மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. வளர்ப்பு முறையாலும் வளர்ந்த சூழ்நிலையாலும் கல் மனம் கொண்டார் எதையும் தாங்கும் இரும்பு போலாவர்.  பலர் கூறும் வார்த்தைகளும் ஒரு காதால் வந்து மறு காதல் மறைந்துவிடும். ஆனால், இளகிய மனம் தன் நிலையை இழந்து விடும். கடமையுள்ளவர்கள் வெளியே செல்ல வீட்டில் தனித்திருக்கும் பெண்கள் மனநிலை பாதிக்கப்படுவது இயற்கை. இதனாலேயே ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் இறந்தால், குடும்பத்துடன் இணைந்து ஒப்பாரி வைப்பதை விட்டுவிட்டு அக்குடும்பத்தைச் சிரிக்க வைப்பதற்காக இருக்கும் இடம் விட்டு உறவினர்கள் அவர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பல்வேறுபட்ட மூளைப்பதிவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துவார்கள். இது எமது கலாச்சாரம் இல்லையென்று திரும்பத்திரும்ப அதேசம்பவத்தை எடுத்துரைத்து 1 வருடம் எந்தவித நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்டவர் சமூகமளிக்கக் கூடாது என்று கட்டளையிட்டு, சிரித்துவிட்டால், சிரிப்பதைப் பாருங்கள். கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் என்று மறைவாகப் பேசி, மனக்கொலை செய்யும் எமது சமுதாயம் என்றுதான் வெளிச்சம் காணப் போகின்றதோ. 

             வெள்ளைக்காரர் போல் நடையும் உடையும் மாத்திரம் போதாது. நல்பழக்கவழக்கங்களும் கற்றுக் கொள்ள வேண்டும், மனிதத் தன்மையையும் மனம் கொள்ள வேண்டும். 

    ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

    காதலர் தினம் 2016












    உலகவலத்தில் மனிதன் உருவாக உதவிடும் காதல் 
    காதல் இல்லையெனில்   உயிர்கள் தான் ஏது?                                                                                                   
    கடவுளுக்கும் புழு பூச்சிக்கும் காதல்
    கண்டவுடன் கவர்வது காதல் 
    காத்திருக்காமல் மலர்வது காதல்
    வார்த்தைக்குள்ளே தேனைக் கலந்து 
    வாரி இறைப்பது காதல்
    அணைப்புக்குள்ளே மலரை வைத்து
    அள்ளிச் சொரிவது காதல்

    பொய்யும் மெய்யும் கலந்தே தருவது
    போதை மனிதனாய் உலாவ விடுவது
    பெற்றவர் கண்களை மறைக்க வைப்பது
    தமக்குள்ளே ஒரு உலகை வைத்து
    தரையில் நிற்காது வாழ வைக்கும் காதல்

    உலகம் உள்ளவரை தொடரும் காதல்
    உயிர்கள் உள்ளவரை மலரும் காதல்
    காதலும் தேய்வதில்லை 
    காதலர் தினமும் ஓய்வதில்லை

    வியாழன், 31 டிசம்பர், 2015

    2016 ஏ

           



    பூமித்தாயின் புதுவரவே!
    அண்ட சுழற்சின் பிறப்பே!
    தமையனை வழி அனுப்பித் 
    தரணி ஆள வந்தவனே!
    ஓராண்டே கூட வந்தாலும்
    ஓராயிரம் சுமைகள் தருபவனே!
    ஓராயிரம் புதுமைகள் படைப்பவனே!

    உனை வரவேற்க

    வான வேடிக்கைகள் 
    வைன்(wine) உடைப்புக்கள்
     முத்த அணைப்புக்கள்
    ஆலய மணியோசைகள்
    அலங்கார ஆடைஅணிகள்
    ஆரம்பமோ ஆனந்தம் 
    ஆனாலும் மனதில் ஆதங்கம்

    வெண்பஞ்சாய் வருவாய் என 
    விழி வைத்துக் காத்திருந்தோம் 
    வரும் போதே ஏமாற்றி
    வாரி மழை இறைக்கின்றாய்
    வசந்தத்தைத் தருவாயா? தமையன் போல்
    வாரி உயிர் எடுப்பாயா?
    வந்து சொல்லும் செய்தியென்ன?

    அனைத்து உறவுகளுக்கும் புதுவருட நல் வாழ்த்துக்கள்

    சனி, 26 டிசம்பர், 2015

    மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்


    கடற்கரை மணலோரம் காலம் போவதறியாது
    கால் பதித்து நடைபயின்று விளையாடியதை
    மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்

    அலையோ டலையாய் கடலலை தழுவ
    மலைமேடாய் அலையோடுயர்ந்து
    உடல் நனைத்து உறவாடிய பொழுதுகளை
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.

    சிப்பி சங்கு சேகரித்து சின்னஞ்சிறு உருச் செய்து
    சிறப்பாய் கடல் மண்ணில்சிறந்த நல்படம் வரைந்து
    படம் நனையும் காட்சிகளை பார்த்து பார்த்து
    மகிழ்ந்திருந்த மகிழ்ச்சி மிகு காலங்களை
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.


    இன்று 

    கடல் அன்னையே! – உன்
    கோரப்பசி தீர்க்க அலைக்கரங்களால்
    ஆருயிர்கள் அள்ளி விழுங்கி
    அழகாய் ஏப்பம் விட்டதனை
    மீண்டுமாய் மீட்டிப் பாக்கிறேன்.


    உன்னால் வாழ்வு பெற்றோர்
    உன்னால் வாழ்விழந்தார்
    நன்றிக் கடனதனை
    வலிந்து நீ எடுத்தாயோ!

    உன் வஞ்சகச் செயலை நான்
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.


    ஆழிப் பேரலையாய் கடல்கோளாய்
    ஆழகான பெயர் தாங்கி
    காசினி எங்கும் கலங்காது
    கால் பதித்து நீ! காலம் காலமாய்
    காத்துவைத்த காலங்கடந்த
    தொல்பொருள் சின்னங்களை
    கவர்ந்து சென்ற நிகழ்வுகளை
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.

    வெள்ளி, 18 டிசம்பர், 2015

    நான் எழுதாவிட்டால், யார்தான் எழுதுவார்.



    எழுத மறந்த நினைவுகள்.

    இப்படியும் ஒரு பெண்ணா! 

    அழகும் இளமையும் இணைந்தே இருந்தால், முதுமையும் கூட அதை அடையப் பார்க்கும். வறுமையும் கூட இணைந்தே இருந்தால், செல்வந்தர் துணையும் சேர்ந்தே கிடைக்கும். இவர் கம்பீரத்தை வலிந்து பெற்றாரா? இல்லை அவருக்கு வலியவே கிடைத்ததா? 

               அழகாய் இருந்ததனாலும் வறுமையில் அகப்பட்டதனாலும் ஒரு செல்வந்தனுக்கு செல்ல மாணிக்கம் இரண்டாம் தாரமாய் குடும்ப வாழ்க்கையைப் பொறுப்பேற்றார். கணவனும் மட்டக்களப்பிலே முதன்முதலாக போட்டிக்கோ என்று சொல்லப்படுகின்ற வீட்டைக் கட்டியதாலும், சமுதாய மத்தியில் தங்கச் சங்கிலியை அணிந்ததனாலும் போட்டிக்கோ காளியர், சங்கிலிக் காளியர் என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டார். ஆடம்பரமான வாழ்க்கை. வீட்டுக்குள்ளே குடிக்க பார்(Bar). குதூகல வாழ்க்கை. அழகான அன்பான வாழ்வில் அற்புதமான மூன்று குழந்தைகள். செல்வம் நிலைக்காது. நண்பர் சேர்க்கையும் அதை நிலைக்க விடாது. சிறிது சிறிதாய் பணமும் கரைய கோர்ட், வழக்கு என்று ஓடிஓடி கடைசியில் கணவன் உயிரும் விடைபெற்றது. கையில் காசும் கரைந்து விட்டது.

                 வளரத் துடிக்கும் குழந்தைகள், வாழ்வாதாரம் ஏதுமில்லை, புகழ் மட்டும் கொடுத்து ஏழ்மையை விட்டுச் சென்ற கணவன். அழிந்த சொத்துக்கள் போக இருந்த சொத்துக்களை அழியவிடாது பாதுகாக்கத் துணிந்த அந்த சாகசப் பெண் தனக்காய் ஒரு தொழிலைத் தேடிப் பெற்றார். மண்பானை, சட்டியிலே தன் வாழ்வாதாரத்தை ஆரம்பித்தார். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு  பகலெல்லாம் கைவேலை, செய்த சட்டி, பானையை வீட்டு வளவினுள்ளே சுட்டெடுத்து வியாபாரிகளுக்கு கணக்குப் பார்க்கும் அழகோஅழகு. போற்றிப் பாதுகாத்த சொத்தை இன்று பேரப் பிள்ளைகள் சந்தோசத்தில் அனுபவிக்கின்றார்கள். இந்த ஊக்கத்தை இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.

                   ஆண்குழந்தை இரண்டு, பெண்குழந்தை ஒன்று ஆண்குழந்தைகள் ஆண்மகன்களாய் உருக்கொள்ளும் வரை அழகான அம்மாவுக்கு தொந்தரவுகள் வழமையே. அதனாலே தைரியத்தை இயல்பாகப் பெற்றாள். இரவுப்படக்காட்சி முடிந்து வீதியால் போகும் ஆண்கள், ஆண் துணையற்ற வீடு என்று முன் வேலியில் சலம் கழிப்பார்கள். பொறுத்திருந்து பார்த்து கொதிக்கும் நீரை சலம் கழிப்பார்க்கு ஊற்றிய போது அவர்கள் கத்திக் கொண்டு சென்ற காட்சியை அழகாய் வர்ணிப்பார். ஆத்திரம் கொண்டு அடக்க நினைக்கும் ஆண்கள் தலையில் தேங்காயால் ஓங்கி அடித்த கதையை ஒய்யாரமாய்ச் சொல்லிச் சிரிப்பார். பெண்களுக்கு ஆயுதங்கள் அவர்களிடமே படைக்கப்பட்டிருக்கின்றது என்று மகாத்மா காந்தி சொன்னது உண்மையே. இந்தத் தைரியத்தை இன்று நினைக்கின்றேன்.

              கையில் சுழுக்கிவிட்டது, கைமுறிவு ஏற்பட்டுவிட்டது, முழங்கால் சில்லு விலகிவிட்டது. இவ்வாறான பிரச்சினைகளுடன் Orthopädie டாக்டரிடம் சென்றால், உடனடி ஆபரேஷன் என்று வயிற்றைக் கலக்குகின்றார். ஆபரேஷன் செய்ய அறையினுள் சென்றவர்கள் முகத்தை மூடி உயிரற்றவராய் திரும்பக் கொண்டுவரும் நிலை கண்டு செல்லமாணிக்கம் அவர்கள் இன்று இருந்தால் கையால் தடவித் தடவியே வலியை நீக்கியிருப்பார், தன் கையால் செய்த எண்ணெய் எடுத்து நோய் கண்ட இடத்தில் நீவி விட்டு முறிவுக்குப் பத்துப்போட்டு முறிவை ஒட்டச் செய்திருப்பார். 
               பிள்ளை இல்லையே என்று மருத்துவமனைகள் சென்று திரும்பி, சுகமாய் இருந்த கருப்பையை மருத்துவத்தின் பெயரால் அழித்துவிட்டுச் மனச்சுமையுடன் வாழ்பவர்கள் நிலை கண்டு செல்லமாணிக்கம் அவர்கள் இருந்திருந்தால், செல்லா இடமெல்லாம் சென்று தேடிப்பெற்ற இலைகுழை கொண்டு, அம்மியில் வைத்து அரைத்தெடுத்த மருத்துவச் சாற்றைக் குவளையில் எடுத்து, தலைவாசலில் பெண்ணை சூரியனைப் பார்த்து நிற்க வைத்துத் தொண்டைக்குள் ஊற்றி கருப்பையில் கருவைத் தங்கவே செய்திருப்பார் என்று இன்று சிந்தித்துப் பார்க்கின்றேன்.

                குழந்தையை உறங்க வைக்க Iphone இல் பாட்டுப் போட்டு காதடைக்கும் Drum சத்தத்தில் உறங்கமறுக்கும் குழந்தையை உறங்கச் செய்ய இளந்தலைமுறை படும்பாட்டைப் பார்க்கும் போது செல்லமாணிக்கம் அவர்கள் தானாய் இயற்றும் கவிவரிகளில் சந்தம் சேர்த்து பாடும் அழகையும் தொட்டில் ஆட்டும் போதும், ஊஞ்சல் ஆட்டும் போதும் அழகாய்ப் பாடிய அற்புதவரிகளை, மெட்டுக்களை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். 
                இவர் நோயென்று படுக்கையில் சரிந்ததில்லை. பிள்ளைகளைப் பறிகொடுத்த துயரில், உணவை ஒறுத்து, உள் உறுப்புகளின் இயக்கம் நீக்கித் தானாய் இறப்பதை வலிந்து பெற்று, இறுதியில் குழந்தையாய் மாறி இவ்வுலகு நீத்தார்.  
                   இத்தனை திறமைகளையும் தன்னகத்தே கொண்ட அற்புதப் பெண்ணாய் என் கண்முன்னே தெரிபவர் வேறு யாருமில்லை. என் அன்புப் பாட்டி. ஆசை ஆச்சி. அருகே இருக்கும் போது அருமை தெரிவதில்லை. அதனால் தானோ என்னவோ அவர் வைத்தியம் கற்கவில்லை. கைப்பக்குவம் பழகவில்லை. இதனால், இழந்ததை எண்ணி ஏங்கவே முடிகிறது. 



























    ஞாயிறு, 22 நவம்பர், 2015

    மூளைப்பட இயக்குனர்




    சிறகடிக்கும் நினைவுகளை சிந்தைக்குள்ளே சிறைப்பிடிக்கும்
    கண்ணுக்குள்ளே தோன்றும் காட்சிப் படிவங்களை 
    கச்சிதமாய்ப் படம்பிடித்து கட்டுக்கோப்பாய்ச் சேகரிக்கும்
    கட்டுக்கடங்கா ஆசைகளைக் கலையாது சேர்த்தெடுக்கும்
    வெட்டி ஒட்டி வேதனைகள் மகிழ்வுகளை 
    வெளிவிடாது தேக்கியே வைத்திருக்கும்
    வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து ருசித்ததை 
    வர்ணக் கலவையுடன் வரைந்தே வைத்திருக்கும்
    நினைத்ததை நீங்கா நிலைத்திருக்கும் நினைவுகளை 
    நடந்ததை நடத்தத் துணிவின்றித் தவறியதை  
    வாழ்ந்ததை நித்தமும் வாழ விரும்பியதை
    இழந்ததை இழக்க எள்ளளவும் விரும்பாததை 
    சேர்ந்தே கழித்திருந்து விட்டுப் பிரிந்ததை 
    பிரிய மனமில்லாத பொக்கிச உறவுகளை
    நினைக்காத வேளையிலே நித்திரையில் காட்டிடுமே
    நிலையில்லா காட்சியில் வாழ்ந்து களித்திருக்க
    வாழ்வொன்றைத் தந்திடுமே மகிழ்ச்சியில் ஆழ்த்திடுமே
    நேரே காணும் திரைப்படத்தை நமக்குள்ளே காட்டிடுமே
    கண்ணால் பார்க்கா அற்புத காட்சிகளைக் 
    கண்ணுக்குள்ளே கலர் கலராய்க் காட்டிடுமே

    அண்ட சராசரங்கள் அத்தனைக்கும் மீறிய 
    அற்புத இயக்குனர் எமக்குள்ளே வாழ்கிறார் - இவர்
    தயாரிப்பில் வெளியான மூளைப் படத்தை 
    மீளப்பார்க்க விரும்பும் பார்வையாளர் ஆயிரம்
    மீளப் பார்க்க விரும்பா பார்வையாளர் ஆயிரம்
    மறுஒளிபரப்பு வராதாவென ஏங்குவோர் ஓர்புறம்
    ஏனிப்படி வந்ததென ஆராய்வோர் ஓர்புறம்
    ஒருமுறையேனும் பார்த்து மகிழ்ந்து இருந்தோமென
    களித்திருப்போர் ஆயிரம் ஓராயிரம் ஓராயிரம









    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

      எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்   இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு , அடுத்த கால கட...