• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 29 மார்ச், 2013

    பதறிய காரியம் சிதறிப்போம்



    வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.

    ஆண்டாண்டு காலங்கள் வானொலி என்னும் சமுதாய முன்னேற்ற வான் பரப்பில் பொன்மொழிகளையும்,  வாழ்வியல் சிந்தனைகளையும் வடித்து வடித்து பிறர் வாழ்வுக்கு வளம் சேர்த்த இந்த உள்ளமானது சொந்த வாழ்வின் சிந்தனைகளைச் சிந்திக்கத் தவறிவிட்டது.

    அன்று வழமைபோல் மகனின் அறையைத் துப்பரவு செய்வதற்காக அவன் அறைக்குள் சென்றவள் அவன் மேசையை ஒருமுறை நோட்டமிட்டாள். 

    "வளர்ந்ததுதான் மிச்சம் ஒருவேலை கூடச் செய்யத் தெரியாது. படிக்கிற மேசை கிடக்கிற கிடையைப் பார்''

    என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி ஒழுங்கின்றிக் கிடந்த புத்தகங்களை ஒழுங்கு செய்யும் நோக்குடன் புத்தகங்களைக் கையில் எடுத்தாள். ஒரு புத்தகத்தினுள் இருந்து ஒரு புகைப்படம் தரைநோக்கி விரைவாய் விழுந்தது. தன்னைப் பார் என்று கூறுமாப்போல் அழகாய் காட்சியளித்த அந்தப்  புகைப்படம் அவள் கண்களில் தென்பட்டது. குனிந்தாள். தன் கரம் தொட்டுப் புகைப்படத்தை கண்ணருகே கொண்டு வந்தாள். விசாகனும் ஒரு ஐரோப்பிய இனப் பெண்ணும் அருகருகே நின்றாற் போன்ற காட்சி கண்ணில் பட்டது. இதயம் சுக்குநூறாக வெடித்துவிடுவதுபோல் அமலா உணர்ந்தாள்.

    இந்த நிமிடம் அமலவிற்கு விசாகன் தாய் என்ற நிலையிலிருந்து தமிழ் சமுதாயத்தினிடையே ஒரு பெண் என்னும் ஒரு எண்ணமே தலைதூக்கி நின்றது. அடக்கமுடியாத கோபக்கனல் தெறித்தது. தொலைக்காட்சி நிகழ்வை சுவாரஸ்யமாகச் சிரித்துச் சிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த விசாகன் முன்னே கையிலிருந்த புகைப்படத்தை வீசி எறிந்தாள். விசாகனும் இலாவகமாக எறியப்பட்ட படத்தை எடுத்துத் தன் சட்டைப்பையினுள் வைத்து விட்டு மீண்டும் தொலைக்காட்சியில் லயித்தான்.
     
    "எவ்வளவு தைரியம் உனக்கு. யாரிந்தப் பெட்டை?  
    தாயாரின் கேள்விக்குப் பதிலாக
     
    "அது என்ர பிரண்ட். படம் எடுப்போம் என்றாள். எடுத்தோம். அதற்கேன் துள்ளிக்குதிக்கின்றீர்கள். இது என்ன புதினமான படமா? சொல்லிவிட்டு சலனமின்றி அமர்ந்திருந்தான் விசாகன்.
     
    "எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு. பிரண்ட் என்றால், என்ன அர்த்தம். அதை ஏன் புத்தகத்திற்குள் ஒளித்து வைத்திருக்கின்றாய். முளைத்து மூன்று இலை விடல்ல. அதற்குள் பெரிய எண்ணங்கள். அலட்சியமான கதை பேச்சு. உன்ன மகனாகப் பெற்றதற்கு இந்த சமுதாயத்தில தலை நிமிர்ந்து என்னால் எப்படி வாழ முடியும்'' படபடவென்று வார்த்தைகளை சரமாரியாகப் பொழிந்தாள்.
     
    "இப்ப என்ன நடந்திட்டு. நான் ஒன்றும் ஒளித்து வைக்கல்ல. நீங்க எந்த உலகத்தில. எந்த நூற்றாண்டில வாழ்றீங்கள்? போதும் அம்மா உங்கட சமுதாயக் கதையெல்லாம். அதைத் தூக்கிக் குப்பையில போடுங்க. அப்பா வேலையில்லாமல் கஷ்டப்பட்ட போது எந்த சமுதாயம் உங்கள வழ வைத்தது. நோயாளியாய் நீங்கள் கட்டிலில் கிடந்தீங்களே....எந்த சமுதாயம் உங்களைக் கவனித்தது....'' இது விசாகன் அநுபவித்த அத்தாட்சி வார்த்தைகள். அமலாவும் விடுவதாக இல்லை.

    "சமுதாயம் எம்மை ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்பதற்காக சமுதாயக் கட்டுப்பாடுகளை மீற முடியுமா? பரம்பரைப் பழக்கவழக்கங்களை மாற்றமுடியுமா.....? எப்படியும் வாழலாம் என்பது இல்லை வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை. இனிமேல் அவளுடைய தொடர்பை விட்டுவிடு''
     
    "போதும், போதும் அம்மா! இப்போது கூட உங்கள் சமுதாயத்தின் முன் உங்கள் பெயர் கெட்டுப் போவது பற்றித்தானே சிந்திக்கின்றீர்கள். என்னைப் பற்றி நினைத்துப் பார்க்கிறீங்களா? எதற்காக இங்கு வந்து என்னைப் பெற்றீர்கள்? எல்லா இனங்களுடனும் என்னைப் படிக்க அனுப்பினீர்கள்? இந்த நாட்டு உதவிகளை ஏன் பெற்றீர்கள்? சிறு வயதிலிருந்து இவர்களுடன் பழகுவதற்கு ஏன் அநுமதித்தீர்கள்? முடியாது உங்களால் முடியாது. ஏனென்றால், இங்கு வாழ வேண்டுமென்றால், இணைந்துதான் வாழ வேண்டும். இந்த நாட்டு சுகம் தேவை என்றால், எங்களை இங்கு பெற்று வளர்த்து பயன் பெறுவீர்கள். ஆனால், இந்தப் பெண்களுடன் நாங்கள் வாழக்கூடாது. இது எந்த விதத்தில் நியாயமாக உங்களுக்குப் படுகின்றது அம்மா? என் எண்ணத்தில் ஊறியிருக்கும் அவள் நினைவுகளை இலகுவாக அழித்துவிட முடியும் என்று நினைக்கின்றீர்களா? இது உங்களுக்கு எங்கே விளங்கப் போகின்றது. நீங்கள் மகனை விட சமுதாயத்தைத்தானே நேசிக்கின்றீர்கள்?
     
    "நியாயம் நீ பேச நான் கேட்கப் போவதில்லை. எது நல்லது கெட்டது என்ற அறிந்து கொள்ள உனக்கு வயது போதும். எங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்து வராது. எங்கடைய ஆட்கள் இதை அறிந்தால் என்ன கதைப்பார்கள்''
     
    "பார்த்தீங்களா அம்மா. இப்போது கூட எங்கடை ஆட்கள் என்ன கதைப்பார்கள் என்பதுதான் உங்களுக்குப் பிரச்சினை. உங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்து வராமல் இருக்கலாம். ஆனால், எனக்கும் அவர்களுக்கும் ஒத்துவரும். ஏனென்றால், நாங்கள் அப்படித்தான் பிறந்ததிலிருந்து வாழுகின்றோம்''
     
    "அப்படியென்றால், உனக்கு ஒத்துவந்தால் மட்டும் போதும். எங்களுக்கு ஒத்துவரா விட்டால் உனக்குப் பிரச்சினையில்லை. அப்படித்தானே''
     
    "இல்லை அம்மா! அது போகப் போகப் பழகிடும்''

    இளமையும் முதுமையும் தத்தம் வாதங்களை முன் வைத்தன. வாக்குவாதங்கள் அறிவை மழுங்கடித்தன. "நான் உயிரோடு இருந்தால்தானே இதையெல்லாம் பார்க்க வேணும்...''

    அமலா ஓடிப்போய் குளியலறையிலிருந்த கிமிநாசினிப் போத்தலைத் திறந்தாள். குடிப்பதற்காக போத்தலை உயர்த்தினாள். கூடவே ஓடிச் சென்ற விசாகன் போத்தலைத் தட்டிப் பறித்தான் பறித்த விசையில் தன் வாய்க்குள் மருந்தைச் சரித்து ஊற்றினான். உட்சென்ற மருந்து தொண்டை கழிந்து குடல் நோக்கிப் பயணமானது.

    அந்தக்கணமே அமலாவுக்குத் தாய்மை மேலோங்கியது. சமுதாயம், சுயசிந்தனை அத்தனையும் எங்கோ மறைந்தது. மகனின் உயிர் ஒன்றே முதன்மையானது. அவசரஅவசரமாக வாகனத்தினுள் மகனை ஏற்றினாள். இந்த நாடகத்தைப் பார்த்தும் பார்க்காது இருந்த தந்தை வாகனத்தின் வேகத்தைத் துரிதமாக்கினார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே விசாகன் உடல் தாயின் மடியில் சரிந்தது. தன் கைகளால் தன் தலையிலே மாறிமாறி அடித்தாள். வலிக்கும் வரை அடித்தாள்.

    பலத்த முயற்சியின் பின் விசாகன் உயிரை மீட்ட வைத்தியர். அவன் பழைய நினைவுகளை மீட்க முடியாது கைவிரித்தார்.

    பிற்குறிப்பு:

    புலம்பெயர் சூழ்நிலையில் இவ்வாறுதான் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தாய் நினைத்திருந்தால், மிக சுலபமாக இப்பிரச்சினையைக் கையாண்டிருக்கலாம்.

    8 கருத்துகள்:

    1. தலைப்பும் நிகழ்வும் சொல்லிச் சென்றவிதமும்
      மனதை மிகவும் பதிகச் செய்து போகிறது
      நீங்கள் இறுதியாகச் சொன்ன விஷயம் அருமை
      அந்தத் தாய் கொஞ்சம் பொறுமையாய் கையாண்டிருந்தால்
      இத்தனை விபரீதம் நேர வாய்ப்பே இல்லை
      அருமையான பதிவு தந்தமைக்கு மாமார்ந்த நன்றி

      பதிலளிநீக்கு
    2. உண்மையில் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை கதையாக்கிக் கொடுத்துள்ளீர்கள். கதை மிகவும் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. சோகமான முடிவாக இருப்பினும், இதைப்படிப்பவர்களுக்கு இது ஒரு படிப்பிணையாகவும், மனமாற்றத்தைக் கொண்டு வருவதாகவும் அமையக்கூடும். பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. புலம்பெயர்வில் ஆங்காங்கே இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன . பெற்றோர்கள் தான் இப்போது விட்டுக் கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது நன்றி சார்

        நீக்கு
    3. வீண் வாக்குவாதங்கள் எல்லாவற்றையும் அழித்து(ம்) விடும்...

      பதிலளிநீக்கு
    4. பிள்ளைகளின் மகிழ்வு நிம்மதியை எண்ணினால் மற்றவை யாவும் மறந்து விடும்.
      பெற்றவர்கள் உலக உண்மையை நிறைய சிந்திக்க வேண்டும்.
      இதற்கு மிகத் தைரியமான மனம் வேண்டும்.

      பதிலளிநீக்கு
    5. வாழ்த்துக்கள் கௌசி

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...