புதியவை என்று உலகில் எதுவும் இல்லை. புதுமையென காணும் அனைத்தும் பழைமையின் மாற்று வடிவங்களே. விதையிலிருந்தே மரம் தோன்றுகிறது. பெற்றோர் மரபணுவில் இருந்தே புதிய உயிர் தோன்றுகிறது. எனவே புதியவை என நாம் ஏற்றுக்கொள்ளும் அனைத்தும் ஏற்கனவே இருந்தவைதான் என்பதை நாம் ஏற்றேயாக வேண்டும். மனிதன் கண்டுபிடிப்பும் புதுமையல்ல. பழைமையிலிருந்தே கண்டுபிடிக்கப்படுகின்றன. மனிதன் கண்டுபிடித்த புதுவடிவம் கனணியது பழைய பொருள்களை வைத்தே தோற்றமானது என்பேன்.
இதிலிருந்தே ஒன்று என் எண்ணச்சிறையில் எழுந்துவந்தது. புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் எனப் பிறப்புக்கள் பற்றிச் சொல்லப்படுகின்றன. இறந்த ஒரு மனிதனின் உடலை புதைக்கின்ற போது அவ்வுடலை உண்ணுகின்ற புழு, பூச்சிகளில் அம்மனிதனின் மரபணுக்கள் சேருகின்றன. அப்புழுக்களை உண்ணுகின்ற பறவைகளை மிருகங்கள் உண்ணுகின்றன, மனிதர்கள் உண்ணுகின்றார்கள்.
இல்லாவிட்டால் புதைக்கப்படும் உடலின் மூலக்கூறுகள் அங்கு வளருகின்ற மரங்களில் சேர்ந்துவிடுகின்றன. அம்மரங்களின் விதைகளை உண்ணுகின்ற பறவைகளின் எச்சம் மூலம் அவை உலகின் பலபகுதிகளில் பரந்துவிடுகின்றது. எனவே, இதுவே மனிதனின் மறுபிறப்பு எனப்படும் தத்துவமாக உணருகின்றேன். உயிர்கள் வடிவங்களில் பலவாகப் பிறப்பெடுக்கின்றன என்பதும் இதுவே.
உடலை எரித்து கங்கையில் கரைக்கின்றனர். அப்போது மறுபிறப்பு ஏற்படாது என்று கருதுகின்றனர். கடல்நீர் அருந்துவதற்கு உரியதல்ல என்பதும் உண்மையே. ஆனால், கடல் ஆற்றுடன் ஐக்கியமாகும்போது அங்கு கடல்நீர் குடிநீராகின்றது அல்லவா? அல்லது மீன் நீரை அருந்துகின்றது அல்லவா? அம்மீனை உண்ணுகின்ற மனிதனின் உடலில் ஒரு சிறு அணுவான இறந்த மனிதன் மூலக்கூறுகள் அடைக்கலமாகின்றது அல்லவா? இயற்கையில் எதுவுமே இறப்பதில்லை. அது என்றும் திரும்பத் திரும்ப இப்பிரபஞ்சத்தினுள்ளே சுழன்று கொண்டுதான் இருக்கும். தோற்றங்கள் மாறலாம். ஆனால், இருந்ததே மீண்டுமாய் தோற்றம் பெறும்.
பழமையைப் புதுமையாகச் சொல்லி வெளியிட்டுள்ளது அழகு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமறு சுழற்சி தான் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்கு