• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 27 செப்டம்பர், 2011

    தூது போ மேகமே!


    தூது போ மேகமே!


    ஓடுகின்ற மேகமே! ஒருமுறைதான் கேளாயோ!
    வாடுகின்ற மனதின் வார்த்தைகளைக் கேளாயோ!
    நாடுவிட்டு நாடு சென்றநாயகனின் காதினிலே
    நானுரைக்கும் செய்தியினை 
    நாட்டமுடன் கூறாயோ!

    நாளும் பகலும் கண்விழித்து 
    நான் வளர்த்த மகவொன்று
    தேன் இனிக்கப் பேசுவதை
    வானிருந்து நீ கேட்டு
    வாஞ்சையுடன் சொல்வாயோ!

    கொஞ்சும் மொழி கூறுகையில்
    வாஞ்சையுடன் தந்தை 
    வந்தடையும் நாளதனை
    நெஞ்சழுந்தக் கேட்கின்றாளெனக்
    கொஞ்சம் நீ கூறாயோ!

    பஞ்சணை சுகத்தினிலே
    வஞ்சனை கலந்த சொல்
    தஞ்சமாய்ப் போனதனால்
    வஞ்சினான் இங்கு வாடுகின்றேனென
    நெஞ்சுறைக்கக் கூறாயோ!

    கடலளவு வாழ்க்கையிலே 
    கடுகளவு என்னுள்ளம்
    கலங்கி நிற்கும் செய்தியினை
    நிலாமகளின் துணை கொண்டு
    நீ உரைக்க மாட்டாயோ!

    சுற்றத்தார் கண்களுக்கு
    வற்றாத வாழவு காட்டி
    முற்றத்து நிலாவுக்கு
    முறையிட்டு நான் அழும் செய்தியினை
    முறையாய் நீ உரைக்காயோ!

    என் வீட்டு முற்றத்தில் - அவர்
    விதைத்துச் சென்ற வார்த்தைகள்
    விரியன் பாம்பாய் வந்து
    வில்லங்கம் செய்கிறது
    ஆசை வார்த்தைகளை 
    அள்ளிவீசிய செயல்
    ஆணி அடித்தது போல்
    சுள்ளென்று தைக்கிறது
    நல்லவன் என்றே நான்
    நம்பியிருந்த எண்ணமெல்லாம்
    நஞ்சாய் உடலைக் கொல்வதனால்,
    கொந்தளிக்கும் மனதின்
    கொப்பளங்கள் வெளிவரும் முன்
    நல்லநாள் பார்க்காத 
    நாள் ஒன்று தேர்ந்தெடுத்து 
    நாரசமாய்ச் செய்தியொன்று
    வாரக் கடைசியில் - உன்னை 
    வந்து அடையுமென்று
    சகலதுமாய்ச் சொல்லிவிடு

    18 கருத்துகள்:

    1. மேகவிடு தூது .....
      சுவாரஸ்யம் சகோதரி..

      பதிலளிநீக்கு
    2. நாடு விட்டு நாடு சென்ற உறவுக்கு மேக தூது நன்றாகத்தான் இருக்கிறது சகோதரி...

      பதிலளிநீக்கு
    3. மேகம் விடு தூது இன்றைய நிலைக் கேற்றார்ப்போல
      மிக அழகாக கற்பனை செய்து அருமையான பதிவைத்
      தந்துள்ளீர்கள்.
      முன் காலத்தில் காதலி காதலனுக்கு
      இதுபோல் தூதுவிடுதல் நடக்கும்
      இன்றைய கால்ச் சூழல் பொருளாதாரச் சூழல்
      மனைவி கணவனுக்குவிடும் தூதாக மாறித்தான் போனது
      அருமையான பதிவு
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    4. அருமையான கவிதை.
      மனசு நெகிழ்கிறது.
      எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

      பதிலளிநீக்கு
    5. அன்பு சகோதரி, கற்பனைக் கவிதையானால், வாசித்து பாராட்டலாம். கவிதையின் கரு மனசில் நெருடல்களைத் தோற்றுவிக்கிறது. அதுவும் அந்தக் கடைசி வரிகள்...துணையில்லாத் தாரத்தின் துயரங்கள் பெற்ற மகவின் மழலையைக் கேட்கும்போது இன்னும் அதிகரிக்கவே செய்யும். எல்லாம் கற்பனையாகவே இருக்க வேண்டி வாழ்த்துக்களுடன்.

      பதிலளிநீக்கு
    6. ரெவெரி,மகேந்திரன்,வை.கோபாலகிருஷ்ணன்,Ramani
      Rathnavel, G.M Balasubramaniam //

      உண்மையில் கற்பனையானாலும் இவ்வாறு பல சம்பவங்கள் அறிந்து அறிந்து மனம் வெந்து வந்த வரிகளே இவை. காதல் என்ற பெயரில் பல அபலைகள் நாட்டில் காத்திருக்க, வெளிநாட்டில் வேறுஒரு நாயகியுடன் சல்லாபம் புரியும் எத்தனையோ பேர் நம்மத்தியில். உங்கள் அனைவருக்கும் நன்றி. ரத்னவேல் ஐயா! முகநூல் சமூகக்களம் போடவேண்டிய இடத்திலேயே போட்டிருக்கின்றீர்கள். நன்றி

      பதிலளிநீக்கு
    7. காந்தி பனங்கூர் //

      வாருங்கள். உங்கள் முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

      பதிலளிநீக்கு
    8. >>பஞ்சணை சுகத்தினிலே
      வஞ்சனை கலந்த சொல்
      தஞ்சமாய்ப் போனதனால்
      வஞ்சினான் இங்கு வாடுகின்றேனென
      நெஞ்சுறைக்கக் கூறாயோ

      எதுகை மோனைல பின்றீங்களே?

      பதிலளிநீக்கு
    9. மிக்க சந்தோஷமாக இருக்கிறது சதீஷ். திறமைகள் முடக்கப்பட்டுக்கிடப்பது மடமைத்தனம். உன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முதல் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கமுடியும். விண்ணெட்டும் உன் புகழ் வளர என் வாழ்த்து என்றும் உனைச் சாரும்

      பதிலளிநீக்கு
    10. பிரிவுத்துயரில் நாயகி மேகத்தை தூது விட்டு தன் வேதனைகளை சொல்லிநிட்பது
      தற்கால தூது விடு படலம்

      பதிலளிநீக்கு
    11. புலம் பெயர்ந்த சிலர்களின் நய வஞ்சகத் தன்மைகளை புடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள் ! சமுகத்திற்கு தேவையான பாடம் !! வாழ்த்துக்கள் கௌசி .

      பதிலளிநீக்கு
    12. பிரிவின் துயரை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது சந்திரகௌரி....

      நீண்ட கருத்து இப்ப டைப் செய்தேன். என்னவோ நல் எரர் என்று வந்து எல்லாம் :( காணோம் :(

      நிலா, மேகம், சூரியன் , நட்சத்திரங்கள், தென்றல் எல்லாமே பொது மனித வாழ்க்கைக்கு என்பதால், மனித மனம் பேதை மனம் வஞ்சி இவள் தன் இணையின் தொலைதூர பிரிவால் தன் அவஸ்தைகளை இப்படி அழகாய் விவரித்து மேகத்திடம் சொல்லி தூதுவிடுகிறாள் உங்கள் கவிதை வாயிலாக....

      எத்தனை உறவிருந்து என்ன? எல்லாமாக முடியுமா ஒரு பெண்ணுக்கு? தாயாய் , தந்தையாய், சகோதரமாய், ஏன் நட்பாய் கூட இருக்கமுடியும்? ஆனால் எல்லாமாக இருக்கும் ஒரு கம்பானியன்ஷிப் கணவனால் மட்டுமே தரக்கூடியது....

      ஒரு சின்ன அணைப்பு, நெற்றியில் அழுத்தமான ஒரு முத்தம் போதும் நானிருக்கிறேன் கண்ணே உனக்கு என்று சொல்ல..

      துயரங்களை கொட்டி அழ யாரோ வேண்டாம், என் கணவனின் நெஞ்சு தான் வேண்டும் என்று சொல்லி செல்லும் வரிகள் மிக மிக அருமை....


      இங்கே மனைவி மேகத்தை தூதுவிட....அங்கே கணவனோ பகலெல்லாம் உழைப்பில் தன் தனிமை மறந்திருக்க... இரவில் தன் மழலை மொழியினை கேட்க இயலா வெறுமையை மனைவியின் கைமணக்கும் சமையலை உண்ண முடியா நிலையினை கண்ணீர் கோடுகள் அடுத்திருப்போர் காணாது மறைத்திருக்க... மேகம் சாட்சியாகி நிற்கும் இருவரின் காதலுக்கும் பிரிவுக்கும் அன்புக்கும்....

      குழந்தை தத்தி தவழி நடைபயிலும் நாட்களை, மழலையில் மிழற்றுவதை மிஸ் செய்கிறான் கணவன்....

      பிரிவு எப்படி எல்லாம் கணவனை மனைவியை தாக்குகிறது என்பதை மிக அழகிய வரிகளால் கோடிட்டு அழுத்தமா சொல்லி இருக்கீங்க சந்திரகௌரி....

      வெளியூரில் வேலை செய்பவரின் குடும்பங்கள் எப்படி எல்லாம் தத்தளிக்கிறது என்பதை அறியவும் முடிகிறது....

      கண்ணீர் கோடாகி வரிகள் சொல்வதெல்லாம் சத்திய வார்த்தைகளே....

      இப்படி ஒரு நிலையை அனுபவித்த எத்தனையோ பெண்களில் நானும் ஒன்று....

      பதிலளிநீக்கு
    13. மஞ்சுபாஷிணி //

      வெளியூரில் வேலை செய்வது பிரிவுத் துயரே. ஆயினும் துணைவியின் துணை மறந்து வேற்று நாயகி சுகம் தேடும் பலர் நம்மத்தியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடல் சுகம், பணசுகம் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணும் மாக்களுக்கு மாங்கல்ய உறவு பெரிதாய்ப் புரியாது. கடைசிவரிகளை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். இந்த நிலை நிச்சயமாக உங்களுக்கு வந்திருக்க மாட்டாது. உங்கள் நல்ல உள்ளத்திற்கு வரவும் கூடாது. நீண்ட பதிவிற்கு மிக்கநன்றி சகோதரி.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...