• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

    எது நிஜம்

    கருவிழி மறைக்க இமையொன்று திரையிட்ட நாளென்ற திரைப்படம் முடிவடைகிறது. நீண்ட ஓய்வு தேடினும் சிலமணிநேரமாவது இறந்து மீண்டும் பிறப்பெடுக்கும் உயிரோட்டம். படபடவென்று செக்கன்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் கடிகாரமும் உண்மையான ஊழியனாய் மீண்டும் ராதிகா, உலகில் சஞ்சரிக்க உலுப்பிவிட்டது, அவள் உணர்வுகளை. திரையகற்றிச் சாளரத்தை மெல்லத் திறந்தாள். சத்திரத்து வாசல் பிச்சைக்காரனைப்போல் புகுபுகுவென்று உள்நுழைந்து சில்லிட்ட தென்றல்காற்று மனதுக்கு இதமான உணர்வை உணர்த்தியது. செய்தொழில் முடித்துத் தன் ஊதியத்தொழில் தொடங்க வீட்டைவிட்டுப் படியிறங்கினாள். சூரியனைக் கட்டிப்போட்டிருந்த இருள் தன்பிடியை மெல்லமெல்லத் தளர்த்தியது.
                                ராதிகா, அவசரஅவசரமாகப் பேரூந்து நிலையத்தை அடைந்தாள். சத்தமின்றி அருகே ஊர்ந்து வந்த பேரூந்து தரித்து நின்று வாசலைத் தாராளமாகத் திறந்துவிட்டது. குபுகுபுவென்று உள்நுழைந்த எறும்புக்கூட்டமாம் சனநெருக்கடியுள் நுழைந்தவளுக்கு இருக்கை சந்தர்ப்பவசமாய் இடந்தந்தது. தன்முன்னே அமர்ந்திருந்த இருபருவக் குழந்தைகளின் முகத்தில் பட்டுத்தெறித்த அவள் பார்வை மீண்டும் சென்று அதில் ஒரு பளிங்குச் சிற்பத்தை விட்டகல முடியாவண்ணம் அப்பிக் கொண்டது. தேநீருக்குள் விழுந்த சீனிபோல் கரைந்து போனாள். புன்னகை புரியும் பாங்கில் புதியவள் முகத்தில் அந்நியோன்யம் நாடினாள். சிறகடிக்கும் இமையினுள் சிக்கிக்கொண்ட கருவிழிகள் பற்கள் இல்லாமலே சிரித்தன. ஓவியன்   கைப்படாத சித்திரம், சிற்பி வடிக்காத சிலை, ஆயிரம் கண்களை வசப்படுத்தும் அற்புத உடல்வண்ணம். அவள் தாயார் தங்கபஸ்பம் உண்டாளோ! கலர்கலர் மரக்கறிகளைக் கரைத்துக் குடித்தாளோ! பிரம்மன் சிருஷ்டிப்பில் நேரம் ஒதுக்கியதும் இவளுக்குத்தானோ! இவ்வாறெல்லாம் மனதில் சிந்தனைகள், ராதிகாவின் மூளையில் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன.Nächste haltestelle Merscheid தரிக்குமிடம் அறிவிக்கப்பட்டதும் அந்தப்பருவச்சிறுமியின் பார்வை சட்டென்று உள்வரவு  நுழைவிற்குப் பறந்தது. பேரூந்து நின்றது. ஆவலின் இறுதி ஓரம் தடுக்கிவிழ இறுக்கமானது, அவளின் உடலின் முகவரி. சிவந்தது கன்னங்கள், ஏங்கிய தாகம் தீராதவள் தோழியிடம் முறையிட்டாள். அவள் தோழி வரிகளில் வர்ணமிட்டாள்.
                ' கடுகதி என் நினைவு
           காக்கவைப்பது உன் வரவு
           ஏங்கவைப்பது உன் பண்பு
           இரங்கி நிற்குது என் காதல் ''
    படபடவென்று தொலைபேசியில் இசைக்கருவி மீட்டுவது போல விரல்கள் ஆடிய நர்த்தனத்தில் விரைந்து சென்றது எஸ்.எம்.எஸ். யாரோ எழுதித் தாளமிட்ட கவிதைக்குத் தன் கற்பனையாமென கடைவிரிக்கும் கவிஞர்களை இக்கணம் சொப்பனம் கண்டாள், ராதிகா. சிலநிமிடங்களில் தலைவளைத்து விடைபெற்றபடி பேரூந்தை விட்டகன்றாள், அந்த அழகின் அவதாரம்.
                   காலச்சுழற்சியின் அடுத்தநாளும் அதேபேரூந்து அதே இருக்கை. அந்த சுந்தரப்பாவையின் சிநேகிதி தன்னுடைய சிரிப்பை எங்கோ தொலைத்திருந்தாள். முகத்தின் தசைகள் அவள் கட்டளைக்குள் கட்டப்பட்டிருந்தன. அவள் அருகே வந்த ராதிகாவும் உள்ளத்திடம் உத்தரவு கேட்காமலே மிக விரைவாக 'இன்று உங்கள் சிநேகிதி பாடசாலைக்கு விடுமுறை எடுத்து விட்டாளா?' 'இல்லை அவள் இனிமேல் வரமாட்டாள்' நேற்றுப் பிற்பகல் ஒரு விபத்தில் இறந்து விட்டாள்' மின்சாரம்தாக்கியது போன்று ஒருகணம் நாடிநரம்புக்குள்; இரத்தம் அத்தனையும் ஒன்றாக அதிவேக வெப்பத்தில் கொதித்தெழுந்தன. திடீரென்று சூரியகிரகணம் வந்துவிட்டது போன்று உணர்வுகள.; அனைத்தும் இருண்டு போயின. ஒருநாள் இதயம் முழுவதும் ஆச்சரியமாகி மறுநாள் இதயத்தைப் பிழிந்தெடுத்துப் போன அந்தப்பருவப் பெண்ணை எண்ணிஎண்ணிக் கலங்கினாள்,ராதிகா.
                    எது நிஜம். அவள் இரம்மியம் நிஜமா? அவள் காதல் நிஜமா? அவள் கல்வி நிஜமா? இல்லை அவளைப் படைத்ததுதான் நிஜமா? அவள் வாழ்க்கைதான் நிஜமா? எதுவும் நிஜமில்லை என்று அறிந்தபின்னும் நமக்குள்ளே போட்டிகளும் பொறாமைகளும், மறைமுகப்பேச்சுகளும், இதயத்தை வெட்டிப்பிழியும் வார்த்தைகளும், காலம் கடந்தும் தொடர்ந்தே வாழ்வோம் என்ற இறுமாப்புப் பேச்சுகளும் தற்பெருமையும் கொண்டு மனிதன் வாழும் வாழ்க்கைக்கு இவளின் மறைவும் ஒரு எடுத்துக்காட்டு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...