• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 2 செப்டம்பர், 2010

  குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

  பஞ்சு உடல் ஒன்று பூமித்தாயிடம் புகலிடம் தேடி அன்னை என்ற ஆதாரத்தின் துணையோடு அகிலத்தை வந்தடைகின்றது. இராட்சத உருவங்களாய்ச் சுற்றித்தன்னைச் சூழ்ந்து நிற்கும் வைத்தியர்களையும்; இருண்ட உலகு விட்டு வெளிச்சமான ஒரு புரியாத உலகத்தையும கண்ட குழந்தை, தொண்டை விரித்துத் தன் தொனியைக் குரல் எனக் கொண்டுவருகின்றது. குரல் எடுக்க யாரும் துணைக் கொடுத்தாரா? புரியாத உலகில் வெற்றுக் காகிதமாய் எழுதப்படாத இதயத்துடன் பிறந்த அந்த விநாடி தொட்டு வியத்தகு சாதனை புரியும் வின்னர்களாகத் தடம்பதிக்க அவர்கள் வளர்ந்தார்களா? வளர்க்கப்பட்டார்களா? விடைதேடி விளக்கமாய் விரிகிறது மனம்.

                                   தொட்டில் வந்த பிள்ளை சுவை தேடி, உடல் உறுதிநாடி அவதரிக்கும் போதே அன்னையின் மார்பகத்தில் பால் சுரக்கச் செய்து கட்டுச் சோற்றுடன் உலகுக்கு உதயமாகிறது. உணவின்றி உடல் எங்கு உருப்பெறப்போகிறது என்று உள்ளிருந்து உற்பத்தித் தொழிற்சாலையை ஊக்குவித்ததோ! பாதப்பெருவிரல் பக்குவமாய்த் தான் இழுத்து சிறுவாயில் விரல் வைத்துச் சுவை பார்க்கும் போதும், பட்டுப் போன்ற பாதம் நோகாது உருண்டு பிரண்டு சிற்சில பற்பல யோகாசனக் கலையைத் தானாகவே செய்து உடலை வளர்க்கின்றது. அதற்காக ஒரு உபாத்தியாயரை உதவிக்காய் அமர்த்தினோமா? என்னே அற்புதம்!

                                       உறுதியாக உணவு உட்கொள்ள உடல் வலுப்பட்டு விட்டதா? பற்களின் தேவை உணவைப் பதப்படுவதற்காக அன்று தொடங்குவது அகப்பட்ட பொருளை வாயினால் கடிகடியென்று கடிக்கின்றது. அது விறகா விரலா புரியாது அஃறிணைப் பொருளல்ல குழந்தை. கடிப்பதையே காண்கின்றோம். அதன் கருத்தைப் புரிந்தோமா? அத்தனையும் அதன் பற்கள் வெளிவரவேண்டும் என எடுக்கும் முயற்சியே. தன் தேவைக்காய்த் தானாகத் தோற்றுவித்த பற்களல்லவா!

                                    அறிவு துளிர்க்கின்றது. அண்மையிலுள்ள பொருளென்ன. சேய்மையிலுள்ள பொருளென்ன. அளைந்து உறவாட ஆசை பூக்கின்றது.
  ஆராய மனம் துடிக்க கையில் பட்டதைத் துணைக் கொண்டு எழுந்து பிடித்துப்பிடித்து நோக்கிய குறியை நாடி நடைபயில்கின்றதே. நம் துணை தேவையென நாம் எடுக்கும் முயற்சியெல்லாம் நம் தற்பெருமை தானென்று நாம் அறிய வேண்டும். தானாய் தன் முயற்சியில் தானாய் எழுந்த தளிர்நடை பயிலும். சமநிலைப்படுத்த தன் இரு பிஞ்சுக் கரங்களையும் சமநிலைப் பலகையாய் விரித்துத் தன் தள்ளாடும் தளிர்ப்பாதங்களைத் தாண்டித் தாண்டி வைத்து அழகாய் நடந்துவரும் காட்சியை அகக்கண்ணிலே நிறுத்துங்கள். ஐயோ இதுவன்றோ அதிசம்!

                                            பொருள் நோக்கிச் சுவை நோக்கி எம் அதரங்களின் அசைவை நோக்க முனைகின்றதே. அன்று தான் பேச்சுக்கலைக்கு முக்கியத்துவம் தேடுகின்றது. பேசுகின்றபோது எங்கள் உதடுகளின் அசைவை இமைவெட்டாது. உற்றுநோக்கித் தன் மென் இதழ்களையும் அசைத்துப் பார்க்கும். அங்கே பேச எத்தனிக்கும் முயற்சியின் முழுவடிவத்தையும் நாம் காணலாம்.

                                            இத்தனையும் சுயமாய் நடைபெறுகின்ற போது பறவைகளுக்கும் மனிதர்களுகு;கும் இடையே பாகுபாட்டை நாம் காண்கின்றோம். நடைபயிலும் காலம் வரை உணவு ஊட்டவேண்டியவர் உதவிநாடி நிற்கவேண்டியுள்ளது. இதற்காகப் பெற்றோர்கள் என்ற அந்தஸ்தைத் தந்த அந்தக் குழந்தைகளில் எங்கள் கருத்துக்கள் அத்தனையையும் திணிக்க முயலலாமா? அவர்களுக்கென ஓர் உலகம், உணர்வு ஆசைகள், அனைத்தும் உண்டு. எழுந்து நடமாட எவ்வளவோ முயற்சிகளைத் தங்களுக்காகத் தாங்களாகவே மேற்கொள்ளும் அவர்கள், அவர்களுக்காகவே இப் பூமியில் பிறப்பெடுத்தவர்கள். இதனையே அப்துல்கலாம் அவர்கள்,''உங்கள் குழந்தைகள் உங்களுக்கூடாக வந்தவர்கள் உங்களுக்காக வந்தவர்கள் அல்ல. அவர்கள் வளர நீங்கள் உதவியாக இருக்கலாம். அவர்கள் உணர்வாக மாறுதல் கூடாது'' என்றார். குழந்தை வளரத் தாய் வளர்க்கிறாள். என்பதைவிட தாய், தாயாக வளர்கிறாள் என்பதே மெய். குழந்தை குழந்தையாக வளர்கிறது என்பதும் மெய் ஆகும்.

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  பனைமடலால் ஒரு மிரட்டல

  அன்பு, காதல், பாசம், பரிவு, இரக்கம், விட்டுக்கொடுப்பு இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். இரு மனங்கள் இணையாத உறவு பொய்யான உறவாகவே அமைய...