• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 22 நவம்பர், 2015

    மூளைப்பட இயக்குனர்




    சிறகடிக்கும் நினைவுகளை சிந்தைக்குள்ளே சிறைப்பிடிக்கும்
    கண்ணுக்குள்ளே தோன்றும் காட்சிப் படிவங்களை 
    கச்சிதமாய்ப் படம்பிடித்து கட்டுக்கோப்பாய்ச் சேகரிக்கும்
    கட்டுக்கடங்கா ஆசைகளைக் கலையாது சேர்த்தெடுக்கும்
    வெட்டி ஒட்டி வேதனைகள் மகிழ்வுகளை 
    வெளிவிடாது தேக்கியே வைத்திருக்கும்
    வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து ருசித்ததை 
    வர்ணக் கலவையுடன் வரைந்தே வைத்திருக்கும்
    நினைத்ததை நீங்கா நிலைத்திருக்கும் நினைவுகளை 
    நடந்ததை நடத்தத் துணிவின்றித் தவறியதை  
    வாழ்ந்ததை நித்தமும் வாழ விரும்பியதை
    இழந்ததை இழக்க எள்ளளவும் விரும்பாததை 
    சேர்ந்தே கழித்திருந்து விட்டுப் பிரிந்ததை 
    பிரிய மனமில்லாத பொக்கிச உறவுகளை
    நினைக்காத வேளையிலே நித்திரையில் காட்டிடுமே
    நிலையில்லா காட்சியில் வாழ்ந்து களித்திருக்க
    வாழ்வொன்றைத் தந்திடுமே மகிழ்ச்சியில் ஆழ்த்திடுமே
    நேரே காணும் திரைப்படத்தை நமக்குள்ளே காட்டிடுமே
    கண்ணால் பார்க்கா அற்புத காட்சிகளைக் 
    கண்ணுக்குள்ளே கலர் கலராய்க் காட்டிடுமே

    அண்ட சராசரங்கள் அத்தனைக்கும் மீறிய 
    அற்புத இயக்குனர் எமக்குள்ளே வாழ்கிறார் - இவர்
    தயாரிப்பில் வெளியான மூளைப் படத்தை 
    மீளப்பார்க்க விரும்பும் பார்வையாளர் ஆயிரம்
    மீளப் பார்க்க விரும்பா பார்வையாளர் ஆயிரம்
    மறுஒளிபரப்பு வராதாவென ஏங்குவோர் ஓர்புறம்
    ஏனிப்படி வந்ததென ஆராய்வோர் ஓர்புறம்
    ஒருமுறையேனும் பார்த்து மகிழ்ந்து இருந்தோமென
    களித்திருப்போர் ஆயிரம் ஓராயிரம் ஓராயிரம









    சனி, 31 அக்டோபர், 2015

    கொண்டாட்டங்களுக்கு நன்கொடை ரசீதும்

             


    வந்தது மறந்து, வாழ்ந்தது மறந்து, வாழ வேண்டியது மறந்தது, தமிழர் போடும் ஆட்டம் புலம்பெயர்வில் அளவின்றிப் போய்விட்டது.  மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திண்டாடும் பலரின் குரல்கள் பூனைக்கு மணி கட்டுவாரின்றிப் புலம்புகின்றது. சமுதாயக் குரலைப் பதிவு செய்யாத எவரும் எழுத்தாளராக நடமாட முடியாதல்லவா!

    ஆசைக்கு அளவுண்டு. பேராசைக்கு அழிவுண்டு. விழாக்களும் விருதுகளும் மலிந்து விட்டன. பணமும் புகழும் திறமையைத் தீர்மானிக்கின்றன. கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் அளவுக்கு அதிகமாகி விட்டன. கொள்கைகளும் கோஷங்களும்  கொஞ்சம் அடங்கியிருக்கின்றன. கலாச்சாரக் கலப்பும், அந்நிய மோகமும் பெற்றோருக்கு இனிப்பாகி விட்டன.

    புலம்பெயர்ந்தவுடன் பிள்ளைகளை அடுத்தடுத்துப் பெறும் கலாச்சாரம் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து போட்டி போட்டு பொறாமை கொண்டு அடுத்தவரைப் பார்த்துப் பார்த்தே பிள்ளைகளை வளர்க்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. மாற்றான் பிள்ளை நடனம் பயின்றால், என் பிள்ளை சங்கீதமும் நடனமும் சேர்ந்தே பயில வேண்டும். நேரமின்றி பிள்ளையை ஓடஓட விட்ட கலாச்சாரம் ஓய்ந்து விட்டது. தேவையைத் தீர்மானிக்காது அடுத்தவர் பார்வையைத் தீர்மானித்து வீடும் வாகனமும் வாங்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. இன்று கொண்டாட்டங்கள் கூடிவிட்டன.

    கொண்டாட்டங்கள்:

    இன்று கெண்டாட்டங்கள் களை கட்டுகிறன. ஒரே வீட்டில் பலவகை கொண்டாட்டங்கள். நச்சரிப்புடன் விருந்தினர் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர். வார இறுதிநாளில் வீட்டுக்கடமைகள் முடிக்க முடியாது திண்டாடும் வேலைக்குப் போகும் தமிழர்கள். பிள்ளை பிறந்தவுடன் அதன் துடக்குக் கழிக்கும் விழாவில் ஆரம்பித்து முதலாவது பிறந்தநாள் விழா, 10 ஆவது பிறந்தநாள் விழா, எத்தனை பெண்பிள்ளைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் பூப்புனிதநீராட்டு விழா, அத்தனைக்கும் பிறந்தநாள் விழா, 18 ஆவது பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம், திருமணவிழா, வளைகாப்பு, மீண்டும் குழந்தை பிறந்த கொண்டாட்டம், 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள், 25 ஆவது கல்யாணநாள். வீடு குடிபுகு விழா, இதுதவிர நடன அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம், மிருதங்க அரங்கேற்றம். வயலின் அரங்கேற்றம் எனத் தொடரும் வாழ்வில் தொடரும் கொண்டாட்டங்கள் மிதமிஞ்சிய நிலையில் புலம்பெயர் தமிழர் குதூகலிக்கின்றனர். ஆடம்பரத்திற்கே திருமணம் என ஆடம்பரத் திருமணத்திற்காக கல்வியையே விட்டெறிந்து விட்டு தொழிலுக்குப் போகத் தொடங்கியுள்ள ஒரு இளைய சமுதாயம் உருமாறுகிறது. 

    தமது ஆசைக்காக விழாக் கொண்டாடுவோருக்கு ஒரு ஆலோசனை கூற ஆசைப்படுகின்றேன். விழாக்களுக்கு விருந்தினரை அழைக்கும்போது "பரிசுப் பொருள்கள் தர விரும்புவோர். தாய்நாட்டிலே பசி பட்டினியால் வாடுவோர், அன்றாடம் உணவுக்கு அல்லாடுபவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அவர்கள் தேவைக்கான பணத்தை அனுப்பிவிட்டு அந்த ரசீதை எங்களுக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்'' என்று அழைப்பிதழ் கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் விழாக் கொண்டாடுவதில் பெருமை இருக்கின்றது. இதன் மூலம் புண்ணியம் தேடுபவர்களாகவும் ஆவீர்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

    கலாச்சாரச் சீர்கேடு:

    விவாகரத்து மலிந்து விட்ட நிலையில் அந்நிய மோகத்தில் அல்லாடும் பெற்றோர். பிள்ளைகளின் கலாச்சாரச் சீர்கேட்டை மறைத்துக் காத்த  காலம் மலையேறிவிட்டது. இன்று பெற்றோர் போற்றிப் பாராட்டும் காலம் வந்து விட்டது. பிழையைச் சரியென்பது போல், கலாச்சாரச் சீர்கேட்டை ஊர் கூடிக் கொண்டாடும் காலம் நடைபெறுகின்றது. மறைவில் மகிழ வேண்டிய விடயங்கள் படம் போட்டு முகநூலில் படம் விரித்துக் காட்டப்படுகின்றன. திரைப்படங்கள் திரை விரித்த நிகழ்வுகள் வாழ்வில் அம்பலப்படுத்தப்படுகின்றன. எதுவானாலும் பெற்றோர் தயார் என்னும் நிலைமை பிள்ளைகள் துணிந்துவிட்டனர். 


    நூல் வெளியீடு:

    அன்றைய நாளில் தேவை கருதி தேவைப்படும் நூலை வாசிகசாலை சென்றும் கடையில் வாங்கிப் படித்து, ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் வாசித்தும் ஆவல் தீர்த்த காலங்கள் மறைந்து விட்டன. நூல் வெளியீடு என்ற பெயரிலே தரமற்ற தமது படைப்புக்களை கைகளில் திணித்து பணத்தைத் தாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. நூல்வெளியீடு என்றவுடன் வருவதற்குத் தயங்கும் மக்கள் நம்மவர் மத்தியில் அதிகரித்துவிட்டனர். இதன் மூலம் தரமான படைப்புக்களை வெளியீடு செய்வதற்கு எழுத்தாளர்கள் தயங்கி நிற்கின்றனர். புத்தகம் என்னும் போது அந்நூலினுள் புகுந்து வெளிவரும் போது ஒரு புதிய அநுபவம் கிடைக்க வேண்டும். அந்நூலைத் தேடிப்பெற வேண்டும். வாசகன் தன் தேவை கருதி ஒரு நூலை வாங்கிப் படிக்க வேண்டும். கண்டவற்றையெல்லாம் அள்ளிப் போடும் குப்பைத் தொட்டிலல்ல எமது மூளை. இதைப் படைப்பாளிகள் புர்pந்து கொள்ள வேண்டும். 

    இன்னும் உண்டு தொடர்வோம்.







    ஞாயிறு, 25 அக்டோபர், 2015

    செவ்வரத்தை நூல் வெளியீட்டு விழா (17.10.2015)


    இலக்கியப் பரப்பிலே இனம் காணப்பட வேண்டிய நிகழ்வு. இலைமறை காய்களாய், இலங்கையில் போர் நிமிர்த்தங்களினால் வறுமையில் நலிவடைந்து வாழுகின்ற  எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணியிலும் உதவி செய்யும் மனப்பாங்கிலும ஜேர்மனி எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில்; 134 பேர்களின் 141 கதைகள் பங்கு பற்றின. 17 வயதிலிருந்து 73 வயது வரையுள்ளோர் சிறுகதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். 

    இதில் தெரிவுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட முதலாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 25,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் இரண்டாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு10,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும், மூன்றாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 5,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் வழங்கியிருந்தார்கள். அத்துடன் இத்துடன் இணைத்து போட்டியில் பங்குபற்றிய 50 சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்து செவ்வரத்தை என்னும் நூலாக 17.10.2015 அன்று வெளியீடு செய்திருந்தார்கள். 

    அற்புதமாக நடந்தேறிய இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து வைத்திய கலாநிதி திரு.ஞானசேகரம் அவர்கள் வருகை தந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக டென்மார்க் நகரிலிருந்து எழுத்தாளர் ஜீவகுமரன் அவர்களும் இலங்கை ஆசிரியர் சங்க ஓய்வு பெற்ற செயலாளர் திரு. சரவணபவானந்தன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். நூலாய்வினை ஆன்மீக எழுத்தாளர் திருமதி. ஞனம் ஞானசேகரன் அவர்கள் செய்திருந்தார். 

    இந்நிகழ்வின் சில நிழற்படங்கள் 








     










    ஞாயிறு, 4 அக்டோபர், 2015

               
                         இணையத் தமிழனை இணைக்கும் விழா  



               காலம் என்னும் காற்று எமைப் புரட்டிப் போட்டாலும்
               வாழ்க்கை என்னும் சூழல் எமை வதைத்து நின்றாலும்
               தமிழென்னும் கைத்தடி கொண்டு தடுமாறா மனம் கொண்டு 
               எழுத்தால் என்றும் எழுந்து நிற்போம் 

    அமீபாவாய்த் தோன்றி மனிதக் குரங்காய் பரிணாமங் கண்டு இன்று மனிதனாய் பெருமை கொண்டு ஒன்றாய்க் கூடிக் குதூகளித்தோம். விலங்கைச் சுட்டு, மரங்களில் பறித்து உணவை உண்டோம்.  காலம் கரைந்தது கூடிய வாழ்வு குலைந்தது. நாடாகப் பிரிந்தோம். இனமாகப் பிரிந்தோம். மனிதனுடன் மனிதன் பேசவே நேரமின்றி, பறந்து திரிந்தோம். இன்று கணனி எமைப் புரட்டிப் போட்டது. தேசத்தால், மொழியால், இனத்தால் பிரிந்தவர்கள் இணையத்தால் இணைந்து மொழியால் கூடிநிற்கின்றோம். யாரையும் யாரும் தேடலாம், யாரோடும் யாரும் தொடர்பு கொள்ளலாம். ஆதி என்ன? அதில் எம் எம் மொழி எங்கே? உண்மை புரிகிறது. அதை உலகம் புரிகிறது. கணனித் திரை காட்டிய உண்மை, உலகத் தலைக்குள் புகுந்து கொள்ளும் நாளும் நெருங்கும் நாளை நம்பிக் கிடக்கிறது நம் இதயம். 

      இந்நிலையில் புதுக்கோட்டை தலைநிமிர்ந்து நிற்கும் வலைப்பதிவர் திருவிழா நெஞ்சுக்குள் மகிழ்வை நிறைத்துத் தருகின்றது. 

    தமிழென்னும் ஓர் இனம் உண்டு தனியே அதற்கோர் இடமுண்டு என்று உலகு உச்சம் தலையில் வைத்துக் கொண்டாடும் நாள் நெருங்கிவிட்டது.  

    இவ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வலை உலக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    சனி, 19 செப்டம்பர், 2015

    அழகு தேடும் இளமை

       
     அழகு காட்டி ஆசை ஊட்டி
    பணத்தை அள்ளப் பார்க்கும் கொடுமை
    விலைக்குப் போகும் பொருளின் விலையை
    விண்ணுக்குயர்த்தும் கொடுமை
    மதி மயங்கும் இளமை தன்னை
    மயக்கிப் போடும் வலிய புத்தி
    மடையர்களாய் மயங்கும் நுகர்வோர் தம்மை
    கணக்குப் போடும் முதலாளித் தன்மை

    கல்லும் பொன்னிறமும் மலிந்த உடையில்
    பணமும் மதிப்பும் மிதந்து நிற்கும்
    மயங்கி நிற்கும் இளமை இங்கு
    கறந்து நிற்கும் பெற்றோர் பணத்தை
    கையில் புரளும் பணத்தின் பலத்தால்
    கண்ணைக் கட்டி காசை எறியும்
    கண் கெட்ட மனிதர் ஆட்டம்
    எண்ணிப் பார்த்தால் ஏனோ வெறுப்பு

    புடவைக் கடையிலோர் பெண்ணின் ஆட்சி
    அடங்கிப் பணியும் கணவன் போக்கு
    ஐரோப்பியத் தமிழன் முதலாளிப் போக்கில்
    விற்பளையாளன் பயந்து நிற்கும் பாவக்காட்சி
    தொட்ட ஆடை பார்க்க முடியும்
    தொட்டு அணிய அநுமதி இல்லை
    கட்டிப் பார்க்கா ஆடை வாங்கி
    காட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்

    நுகர்வோரை மதிக்காத முறையற்ற விற்பனையால்
    ஐரோப்பியர் முன்னிலையில் தலைகுனியும் தமிழன்நிலை
    பெருக்கத்து வேண்டுவது பணிவென்று அறியாத
    படிப்பறிவற்ற பேதைகளால் தடுமாறும் தமிழனிங்கு
    பணம்புரளும் கரங்களுள்ளோர் பணத்தை வழங்க
    பாரிலுண்டு பல பரிதாப இல்லங்கள்
    பலநாள் அணியா ஆடையின் நாட்டத்தால்
    பணமும் மதிப்பும் இழத்தல் தகுமோ

    சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!



    வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

    நினைத்துப் பார்க்கின்றேன்



       




    உறவின் பலமென்ன உங்கள் சிறப்பான சொற்களே
    பிறப்பின் பலமென்ன உங்கள் முறையான வளர்ப்பே
    குறையாத செல்வமென்ன உங்கள் நிறைவான அன்பே
    உன்னத நாட்களென்ன உங்களிடம் வளர்ந்த நாட்களே
    •                                            

    அணையாத அகல்விளக்கு – பெற்றோர்
    துணையான அறிவுரைகள்
    கணையாக உள்ளத்தில் - என்றும்
    கனமாக நிறைந்திருக்கும்
    பெற்றோர் வளமான சிந்தனைகள் - எம்
    வழிமாறும் மனஇருள் நீக்கும் 
    ஒளிதீபங்கள் 



    ஆழ்கடல் மனதில் ஆழமாய் உறைந்திருக்கும் நினைவுகள்
    ஆயுள் உள்ள வரை தேயாது உறைந்திருக்கும்
    ஓயாது தேடினாலும் ஓரிடமும் காணவொண்ணா – பெற்றோர்
    ஒப்பில்லா உள்ளம். 

    •   

    ஏழெழு காலங்கள் தேடினாலும் - வாழ்வில்
    தீராது நாம் பட்ட கடன்
    தேடி நாம் நின்றாலும் வாராது 
    கோடி இன்பம் காட்டிப் பெற்றோர்
    சீராட்டித் தந்த இன்பம்



    மனக்கோயிலின் தெய்வங்களே!
    உறவு எங்கள் உள்ளத்தில் உறைந்தது
    கனிவு உங்கள் உள்ளமிருந்து கவர்ந்தது
    நிறைவு உங்கள் அன்பில் கண்டது
    சோர்வு நீங்கள் என்றுமே காட்டாதது
    வாழ்வு உங்கள் வழிகாட்டலில் வந்தது



    எப்படி எப்படி எல்லாமோ
    குழப்படி பற்பல செய்தேனே
    பிரம்படி பட்டுத் திருந்தாது
    தப்படி வாழ்விது சிறக்காதென
    சொல்லடி பட்டுத் திருந்தியதை
    எப்படி இங்கு எடுத்துரைப்பேன்

    சனி, 1 ஆகஸ்ட், 2015

    சீ......தனம் புலம்பெயர்விலுமா!



                                    
                           பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்
                        மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்
                        விதை போட்டது யாரென்று புரியாத போதும் 
                        புலம்பெயர்ந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம் 
               
    பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா! 
    பலரின் புலம்பல் என் பார்வையிலும் என் கருத்திலும் இங்கு பதிவாகின்றது.

    சீதனம் பெறும் போதே தனம் என்னும் செல்வம் சீ என்னும் வெறுப்புக்கு உள்ளாகின்றது . பெற்றோர் பெண்ணைப் பெற்று கல்வி, செல்வம், குடும்பப் பொறுப்பு, பொறுமை, அத்தனையும் சேர்த்துக் கொடுக்கத் திருமணம் என்னும் பெயரில் தாலியைக் கழுத்தில் கட்டிவிட்டு சொந்தம் கொண்டாடும் ஆண்மக்களே! 

                       பெண் என்பவள் இச் சமுதாயத்தை ஒரு குடும்பத்தை சுமக்கின்ற அச்சாணி. இப்பெருமை எல்லாம் சேர்த்தே பூமிக்கு, பூமாதேவி என்னும் பெண்பால் பெயரிட்டார்கள். செல்வத்தைக் கொடுப்பதாகக் கருதும் கடவுளையே பெண்ணாகக் கருதி இலக்குமி என்று பெயரிட்டார்கள். வாழ வந்த வீட்டிற்கு வளம் சேர்க்கும் பெண்களை பணம் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்று  வாயைப் பிளந்து கொண்டிருக்கும் வறிய கையாலாகாத ஆண்சமுதாயமே!

                            திருமணம் என்பது இருவர் இணைந்து வாழுகின்ற ஒரு கோட்டை; வளருகின்ற விருட்சம். இது தகர்த்து எறியப்படவோ? இடையில் வெட்டி விழுத்தப்படவோ கூடாதது. இக்கோட்டைக்கு உற்றார் உறவினர்கள் அரணாக இருக்க வேண்டும். ஆரம்பமே, அடித்தளமே ஆட்டம் கண்டால் வாழ்க்கையை நிறுத்த முடியுமா? வாழ்வு நிலையாகுமா?

                          பணமில்லாது வாழ்வில்லை. பணமே வாழ்வுமில்லை. இது புரிந்தே உலகில் யாவரும் வாழுகின்றனர். ஆனால், பிறரின் உழைப்பில் பணம் சேர்க்க நான் நினைப்பதில் நியாயம் இருக்கின்றதா? பெண்ணையும்  ஆணையும் சேர்த்து வைக்கலாம். இதனால் வம்சம் விருத்தியாகும், வாழ்க்கை சிறக்கும். பெண்ணோடு சேர்த்து பணத்தையும் தாருங்கள். அப்போதுதான் ஓரளவாவது வாழ்க்கையை என்னால் கொண்டு இழுக்க முடியும் என்று கேட்பது ஆணுக்குக் கேவலம் இல்லையா?  

                யாழ்ப்பாணத்து அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பாகிய சீதனம் என்பது யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்டகாலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட தேசவழமைச் சட்டமாகும். கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் மருமக்கட்தாயச் சட்டத்தின் கூறுகள் யாழ்ப்பாண சமுதாய நிலைமைக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாண சீதன முறை கொண்டுவரப்பட்டது. ஆண் கொண்டுவரும் சொத்து முதுசம். பெண் கொண்டுவரும் சொத்து சீதனம். ஆணும் பெண்ணும் சேர்ந்து தேடிக்கொள்ளும் சொத்து தேடிய தேட்டம். இவ்வாறு விக்கிபீடியா சீதனத்துக்கான விளக்கம் கொடுக்கின்றது. இப்போது முதுசம் எங்கோ மறைந்தது? சீதனம் இங்கே நிலைத்தது. தேடிய தேட்டமே நடக்க வேண்டியது. 
                      
                  பெண்கள் தொழிலின்றி வீட்டில் கணவன் உழைப்பை எதிர் பார்த்துக் காத்திருந்த காலப் பகுதியில் பணம் படைத்த பெற்றோர் நன்கொடையாக அதாவது அன்பளிப்பாக மகளின் திருமண மகிழ்வில் கொடுத்த நிகழ்வு  நடந்து முடிந்து விட்ட நடைமுறை ஆகும். இன்று பெண்ணும் ஆணும் சரி சமமாக உழைக்கும், அல்லது ஆணை விட பெண் கூடுதலாக உழைக்கும் காலம். இக்காலத்திலும் சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்க நினைப்பது சமுதாய சீர் குலைவு என்பதே உண்மை. 
             
              ‘சீதனம் எவன் கேட்டால் செருப்பெடுத்தடி 
              கோவணம் கட்டிய கும்பகனை மணம் பிடி’’ 

    ஏனென்றால் பெண் தன் குடும்பத்தை நடத்தக் கூடிய வலிமை மிக்கவள் இல்லையா? ஆண் எப்படித்தான் இருந்தால் என்ன? அவனை மனிதனாக்கும் வலிமை பெண்ணுக்கு உண்டு.

             ‘’ தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற
               சொற்காத்துச் சோர்விலாள்  பெண்’’

    கற்பு நெறியில் தன்னையும் காத்து, தன் கணவனையும் காத்து, தகுதி வாய்ந்த புகழையும் காத்து உறுதி தளராது வாழ்பவளே பெண் என்று வள்ளுவரே கூறியிருக்கின்றார். 

                 சீதனம் கேட்பதும், கொடுப்பதும் குற்றம் என்றே கருதுகின்றேன். கடந்த காலத்தை மறந்து சீதனம் கேட்பது பெண்களே என்பது உண்மையே. அவர்கள் கருத்தில் ஆணுக்குப் பின் பெண்ணைப் பெற்ற தாய்மார் ஆணைக் கொடுத்துக் கறக்கும் பணத்தைப் பெற்று அடுத்துத் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கத் திட்டம் இடுகின்றனர். மகனை வளர்க்க செலவு செய்ததை வரும் மருமகள் குடும்பத்திடம் இருந்து கறக்க நினைக்கிறாள். அடிப்படையில் இயலாமையே இதற்கு காரணமாகின்றது. புலம்பெயர்வில் அதிகமாக அரசாங்கப் பணத்தில் வளர்க்கும் மகனுக்கே சீதனம் எதிர்பார்க்கும் பெற்றோர். பெற்றேன் கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்றெல்லாம் வாய் அளப்பது சரியா? தாய் சொன்னார். தனையன் தலை ஆட்டுகின்றான். தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று காரணம் காட்டி பணத்துக்கு தலை பணிந்து நிற்கின்றனர் ஆண்கள். அதனால், கோவிலினுள்ளே உள்ள சக்தியாக இருக்க வேண்டிய   தாய். சீதனம் கேட்டு பழமொழியையே மாற்றி அமைக்கின்றாள். 

                    பெண்ணைப் பெற்றவர்கள் கூறுகின்றார்கள். பிள்ளையைப் படிக்க வைத்து சிறந்த உத்தியோகம் பெற வைத்து திருமணம் செய்து கொடுக்கும் போது. சீதனமும் தா எனக் கேட்டல் எவ்வகையில் நியாயம் ஆகின்றது. என் பிள்ளை உழைத்துக் கணவனையும் கண் கலங்காது பார்த்துக் கொள்வாள். தன் வாழ்க்கையையும் உயர்வுக்குக் கொண்டு வருவாள். கணவன் உழைப்பில் மண்டியிட்டுக் கிடக்க  வேண்டிய அவசியம் இல்லை. தன் மகளை வாழ வைக்க அக்காலம் போல் மருமகனுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் மட்டுமா, தங்க நகையையே விரும்பாத பெண்களுக்கு தங்க நகைகளும் சீதனமாகக் கேட்கின்றார்கள். வாழ வழி அற்று புலம் பெயர்ந்த நிலைமை மறந்து சொந்த நாட்டில் வீடற்று தங்க வந்த இடத்திலேயே சீதனமாக வீடும் கேட்கின்றார்கள். இரவு பகலாக உழைத்து இரண்டு மூன்று வேலை என்று செய்து வீட்டை வாங்கி, வங்கிக்கு பணத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், வீட்டை மகள் பெயருக்கு எழுதும் படிக் கூறிப் பின் மகனை வளைத்துத் தன் மகளுக்கு அவ்வீட்டை எழுதிக் கொடுக்கப் பண்ணும் பெற்றோரின் திறமைக்கு நாம் என்ன மடையர்களோ? என்று கேள்வி கேட்கும் பெண்ணைப் பெற்றோர், வாழும் வரை உழைத்து வீடு வாங்கி மீண்டும் வாடகை வீட்டில் குடியிருக்க விரும்புவாரோ!

                          ஐரோப்பிய நாட்டில் வளருகின்ற பெண்கள் கணவனை விலை கொடுத்து வாங்க மறுப்பதனால், திருமண கலாச்சாரம் மறைந்து போகும் நிலை ஏற்படுகின்றது. ஐரோப்பிய கலாச்சாரம் மேலோங்குகின்றது. இயற்கையான உடல் இச்சைகள் தவறான வழிகளில் தடுமாறும் சூழல் ஏற்படப் போகின்றது. கலாச்சாரக் கட்டுப்பாடுகள் மீறும் நிலை வரும் காலங்களில் மேம்படப் போகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சூழல், சுற்றம், உறவினர் போன்றோருக்குப்  பயந்து பெண்கள் வாழ்ந்த நிலைமை இல்லையென்பதால் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் நடமாடுவதற்கு வழி வகுக்கும் ஆண்களைப் பெற்றவர்களே சிந்தித்துப் பாருங்கள். புலம்பெயர்வில் சீ....... தனம் தேவையா?

    எழுதி விட்டேன். இது பற்றி காலம் காலமாக எழுதப்படுகின்றது. ஆயினும் சமுதாயம் சீர்பெற ஒரு சிந்திப்பு என்னாலும் நடக்கட்டும்.

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...