• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 25 ஜூன், 2017

    என்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்



    என்னால் எழுதி வெளியிடப்பட்ட என்னையே நானறியேன் என்னும் நூலுக்காக வந்த விமர்சனங்களில் சில இப்பதிவில் இடம் பெறுகின்றது. நூலை முழுவதுமாக வாசித்து தங்கள் 



    அன்புச் சகோதரி திருமதி கெளசி அவர்களுக்கு, வணக்கம்.

    தங்களது நூலான 'என்னையே நானறியேன்' கதையினை நேற்றிரவுதான் படித்தேன். ஒரு தேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்பதற்குச் சான்றாக இக்கதை அமைந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு உன்னதமானதாக, உண்மையாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதையும், அதுவே முரண்பட்டுவிட்டால் என்ன ஆகும் எeன்பதையும் இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது. கரன் போன்று, போலித்தனமான கணவன் அமைந்துவிட்டால் மனைவி எவ்வளவு துயருறுவாள் என்பதற்கு உதாரணமாக வரதேவியின் படைப்பு அமைந்திருக்கிறது. திருந்திவிட்டதாகக் கணவன் சொன்னாலும், மனத்தில் வெறுப்பு நிறைந்துவிட்டால் அங்கு மீண்டும் உறவு பூப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதனை அழகாக நிறுவியுள்ளீர்கள். கரன், வரதேவி இருவரைவிட, குழந்தை வரன் மீதே நமக்குக் கூடுதலாக இரக்கம் பிறக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் பெற்றோர், உடல் நலம் கெட்ட நிலையிலும் இணையாமல் இருந்தால், இடையில் சிக்கித் தவிக்கும் குழந்தையின் மனநிலை எவ்வளவு கொடுமையானதாக இருக்கும்....? அழகான படைப்பு சகோதரி! இன்னும் பல நல்ல படைப்புக்களை நமது தமிழ்ச் சமுதாயத்துக்கு நீங்கள் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.

    அன்புடன், த.இராமலிங்கம், சென்னை, இந்தியா.


    அன்புடையீர்,

    வணக்கம்.

    என்னையே நானறிவேன் எனப் பெயரிய அருமையான நாவல்
    இலக்கிய நூல் நேற்றுத்தான் கிடைத்தது. ஒரே அமர்வில் நூல் முழுவதையும் படித்து மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களை யதார்த்தமாகப் பேசும் நூல் என்ற முறையில் இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்துள்ள அருமையான கலைப்பெட்டகம் என்பேன். உயரிய, ஆனால் இயல்பான, விழுமிய செஞ்சொற்கவி இன்பம் உங்கள் உணர்ச்சியோட்டம் மிக்க உரைநடையில் பொங்கித் ததும்பி வழிகின்றது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். மொழியைத் திறம்படக் கையாள்வதில் தான் ஒரு எழுத்தாளனின் முழு வெற்றியும் அடங்கிக் கிடக்கின்றது என்று நான் நம்புகிறேன். உங்கள் உயரிய,
    உணர்ச்சி ததும்பும், எளிய உரைநடையும், பொருத்தமான சொற்கள் பொருத்தமான இடத்தில் அமர்ந்து உரைநடை ஆற்றொழுக்காகப் பாய்வதும் என்னை மிகவும் கவர்ந்தன.

               சதையும், குருதியும், உயிரோட்டமும் பெற்ற கதைத் தலைவியின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமை. பிறந்த இடத்தின் அகப்புறச் சூழல்கள் பிற நாடுகளுக்கும் செல்லும்படி பிடரியைப் பிடித்துத் தள்ள, புகுந்த இடத்தின் புறச்சூழல்கள் பூலோக சுவர்க்கமாக அமைய, குடும்ப வாழ்க்கை வெடித்துச் சிந்திச் சிதறுவதும் மீண்டும் புதுவாழ்வை புனரமைக்க முயலும்போது பேரிழப்பு ஏற்படுவதும் மிகப்பெரிய மானுட அவலமாகவே பரந்து பரவுகின்றது.

               புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த மேலும் பல இலக்கியங்களை நீங்கள் படைக்க வேண்டும் என்பது எனது அவா. மொரிசியசு நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த அனைத்துலக மாநாடு வரும்
    ஜூலை 23, 24, 25 - 2014 ஆகிய நாட்களில் நடைபெறுவது பற்றி அறிந்திருப்பீர்கள். அம்மாநாட்டில் பங்கேற்று புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் தாங்கள் ஆய்வுரை வழங்கலாம். ஜெர்மன் நாட்டின் பிரதிநிதியாக இருந்து அங்கு வாழும் தமிழர்களையும் இணைத்து இம்மாநாட்டின் வெற்றிக்கு உதவலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒருங்கிணைப்புப் பணிக்கு தாங்களால் இயன்ற அனைத்துப் பணிகளையும் நல்கலாம்.

    மிக்க நன்றி,
    மிக்க அன்புடன்,

    முனைவர் ஜி. ஜான்சாமுவேல்
    இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்.

    பெறுநர்
    திருமதி. சந்திரகௌரி,
    ஜெர்மனி





    என்னையே நானறிவேன்....
    நாவலுக்கான விமர்சனம்
    ***********************************

    நாவல் என்றால்......
    இப்படியும் இருக்குமோ??
    ****************************************
    பல்வேறு அனுபவங்களோடு
    பல்வேறுபட்ட  செய்திகள் காணப்பட வேண்டும்.

    வாழ்வை முழுமையாகவோ அல்லது அதன்
    ஒரு பகுதி வாழ்க்கையையோ விளக்கமாகத் தரவேண்டும்.

    பல்வேறு பாத்திரங்களின் பண்புகளையும்
    வாழ்க்கை முறைகளையும் அவற்றிற்கிடையே நடைபெறும்
    நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்திக் கதையாகத் தொகுத்துத்
    தரவேண்டும்.

    நீண்டதொரு கதையாக ஐம்பதாயிரம் சொற்களுக்கு
    மேலாகவும் இருக்கலாம்.

    நாவல் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்
    கண்ணாடி எனலாம்.

    நாவல் எழுப்பும் கலையார்வம் நீண்ட நேரம் நீடித்து நிற்க வேண்டும்.
    பாத்திரங்களை உருவாக்குவதிலும், அவற்றை வழிநடத்திச் செல்வதிலும்தான் ஒரு நாவலின் வெற்றியும் தங்கி இருக்கிறது.
    உயிருள்ள பாத்திரங்களை உருவாக்கி அவற்றை உலாவ விடுவதன் மூலம் ஆசிரியரின் திறமை வெளிப்படும்.

    கதையின் நிகழ்வுகளையும் கால அளவுகளையும் பொறுத்து பாத்திரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

    பாத்திரங்களின் பண்புகளை அவற்றிக்கு இடப்படும் பெயர்களைக் கொண்டும் ஊகிக்க முடியும்.

    பாத்திரங்களை ஆசிரியரோ அல்லது இன்னொரு பாத்திரத்தின் மூலமாகவோ அறிமுகம் செய்து வைக்கலாம.

    பாத்திரங்களின்  வளர்ச்சியில்தான் நாவலும் வளர்கின்றது.

    அவற்றின்  செயல்பாடுகள், சமூகத்தோடு பாத்திரம் கொண்டுள்ள உறவு, பிறரோடு உரையாடும் உரையாடல்கள் போன்றவை பாத்திரத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.

    ஆசிரியரின் முழு ஆளுமையும் இங்கேதான் தீர்மானிக்கப்படும்.

    உச்சக் கட்டமும் கதை முடிப்பும்
    எந்த ஒரு இலக்கியப் படைப்பும் ஒரு உச்சக் கட்டத்தை
    நோக்கியே நகரும். நகர வேண்டும்.

    இதற்கு நாவல் இலக்கியமும் விதி விலக்கானதல்ல.

    பாத்திரப் படைப்பாக்க உத்தியில் பாத்திர முடிப்பும் ஓர் இன்றியமையாததாகும்.

    பாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவைக் கொண்டுதான்
    பாத்திரங்கள் வாசகர்களின் மனத்தில் இடம் பெறுவர்.

    திருமணம் அல்லது ஒரு குறிக்கோள் நிறைவேறுதல் போன்ற இன்ப முடிவாக இருக்கலாம்.

    இல்லையேல் மரணம் அல்லது ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதில் ஏற்படும்  தோல்வி போன்ற
    துன்பமுடிவாகவும் இருக்கலாம்.

    எந்த முடிவாக இருந்தாலும் அம்முடிவு பாத்திரத்திற்கு, இயற்கையாக ஏற்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும்.

    நடையும் கதை சொல்லும் பாங்கும்
    கதையை நெறிப்படுத்திச் செல்லும்போது பாத்திரங்களின் பண்புகளை ஆசிரியர் தம் கூற்றாகவே கூறிச்செல்வது
    ஒருமுறை யாகும்.
    அல்லது பாத்திரங்களின் செயல்கள் மூலம் வாசகனே உணர்ந்து கொள்ளுமாறு அமைப்பது இன்னொரு முறையாகும்.
    சொல்லாட்சியில் மிகவும் கவனம் செலுத்தப் படவேண்டும்.
    பாத்திரங்களின் உரையாடல்களின் போது வட்டாரச் சொற்கள், அல்லது பிறமொழிச்சொற்கள் கலந்து வரலாம்.
    ஆனால் ஆசிரியர் கூற்றுக்களின் போது எழுத்து வழக்கு இருக்கவேண்டும்.
    எல்லாவற்றிலும் மேலாக இந்த நாவலின் மூலம் ஆசிரியர் வாசகனுக்கு என்ன செய்தியைத் தந்து செல்லுகிறார் என்பதும் கவனிக்கப்படும்.
    இவற்றை அளவு கோல்களாகக் கொண்டு இந்த நாவலை உரசிப்பார்ப்போம்!
    குறை காணவேண்டும் என்பதுவோ
    அல்லது முகத்துதி செய்யவேண்டும் என்பதுவோ
    எமது நோக்கமல்ல.

    தராசுமுனையின் தாக்குதலுக்கு
    இவர் தாக்குப் பிடிக்கின்றாரா என்று பார்ப்போம்!

    XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

    இந்த பூமிப்பந்தின் ஒரு புலர் காலைப் பொழுதோடு
    புலத்தைக் களமாகக் கொண்டு கதை விரிகின்றது!
    அற்புதம்!!

    மனித நேயத்தையும்... மண்வாசனையையும்...
    பாத்திரங்கள் வாயிலாக பதிவு செய்து செல்லுகிறார்.

    ஒரு பெண்ணுக்கு வேலி தாலி என்னும் மரபோடு
    இவர் பாதம் பதிப்பதிலிருந்தே இவர் பெண்ணினத்தின்பால்
    பக்கச் சார்பானவர் என்பதை முன்கூட்டியே
    அறியத் தருகின்றார்.

    இவர் இங்கே அள்ளித் தெளிக்கும் அனுபவங்கள்...
    முதுமொழிகள் மூலம் இவரை ஒரு சாதாரண படைப்பாளியல்ல
    இவரை ஆழமாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

    இருநூறு பக்கங்களுக்கு மேலுள்ள ஒரு நாவலை
    ஒரு வாசகனை ஓரிடத்தில் இழுத்து வைத்து.....
    இருத்திவைத்து வாசிக்க வைக்க முடியும்
    என்பது அவ்வளவு சுலபமானதல்ல.

    வாசகன் மிகவும் புத்திசாலி!
    பக்கங்களைத் தட்டிவிட்டுக் கொண்டே
    பத்து நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டேன் என்று
    எழுந்தோடிவிடுவான்.

    ஆச்சரியம் என்னவென்றால்.....
    இந்த நாவலின் முதல் பக்கத்தைப் பிரிக்கும் எவரும்
    இதன் இறுதிப்பக்கம் வரும்வரைக்கு கீழே வைக்க விடாமல் ஆசிரியர் இழுத்துச் செல்லுகிறார்.....

    அத்தகைய ஒரு உத்தியை இந்த நாவலாசிரியர்
    கையாண்டிருப்பது வியக்கத் தக்கது!
    எம்மை விழியுயயர்த்த வைக்கின்றது!

    உயிருள்ள ஒரு சில பாத்திரங்களை
    எம் கண்முன்னே உலாவ விடுகின்றார்.

    சாதாரண மனித உறவுச் சிக்கல்கள்...
    உணர்வுச்சிக்கல்களில் இந்தப் பாத்திரங்களைச் சிக்கவைத்து
    கதையை நடத்திச் செல்லும் பாங்கு அற்புதமானது!!

    ஆசிரியரின் தற்கூற்றாகவும் பாத்திரங்கள் வாயிலாகவும்
    கதை வளர்ந்து செல்கிறது.

    எளிமையான சொல்லாட்சி கொண்டு
    பல இனிமையான கருத்துக்களை
    பொன்மொழிகளை நாவல் முழுவதும்
    தூவிச் செல்லுகிறார்.

    இவர் தானொரு கைத்தேர்ந்த எழுத்தாளர்தான்
    என்பதனை நிறுவிக் காட்டுகிறார்!

    தவிர தானொரு கவிதாயினி என்பதனையும்
    வெளிப்படுத்தும் நோக்கில் பலவிடங்களில்
    சான்றுகள் தருகின்றார்!


    தானொரு பெண் எழுத்தாளர் என்பதனை
    இவர் அடிக்கடி மறந்து போகின்றார்.

    இவர் தெளித்துச் செல்லும் தத்துவப் பொன்மொழிகள்....
    இவரை ஒரு தத்துவஞானி என்ற நிலைக்கும்
    உயர்த்திச் செல்கிறது.

    இது ஒரு கற்பனைக்கதையே....
    என்று இவரே தன் வாயால் சொல்லாமல் சொன்னாலும்
    வாசகன் ஏற்கமாட்டான்... அடம் பிடிப்பான்!

    அவ்வளவு ஆழமாக... அவ்வளவு நுட்பமாக..
    மிகவும் கைதேர்ந்த எழுத்துச் சிற்பியால்
    இந்த சிற்பம்  செதுக்கப்பட்டிருக்கின்றது!!

    இவர் தன்வாக்கு மூலத்தினை இவ்வாறு பதிவு செய்கின்றார்...

    “வரிகளால் பாலம் போட்டு நான், உங்கள் நெஞ்சங்களை இந்நூலின் மூலம் வந்தடைகின்றேன். மூளைவீங்கி வெளியான என் எண்ணங்கள் கோர்க்கப்பட்ட முதல்நூல் என்னையே நானறியேன். இப்புதிய அகம் என்னை யார் என்று உலகுக்கு உணர்த்தும் என்று நம்புகின்றேன். இதனுள் புகுந்து வரும் வாசகர்கள் பெற்றுவரும் அநுபவங்கள் அவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் கருதுகின்றேன். என் அநுபவங்கள் சொல் ஆடை கட்டிச் சுதந்திரமாய் இந்நூலில் நடைபயின்றிருக்கின்றன”

    இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
    இந்தக் கவிதாயினி... (மன்னிக்கவும்) கதாசிரியர் இலக்கணம் எழுதுகிறார்...

    “பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம் பிடிப்பது திறம் அல்லவா?”

    ஒரு பாத்திரத்தின் ஒரு நிமிட உணர்வுகளை இந்த ஆசிரியர் தன்கூற்றாகக் கூறும் சொல்லாட்சியைப் பாருங்கள்....

    “குளியலறைவிட்டு வெளியே வந்தாள். வீடு, வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் தன்னைத் துரத்துவது போல் அவள் கண்களுக்குத் தெரிந்தன. கைகளால் விரட்டினாள். மனதுக்குள் குரூரமொன்று தாண்டவமாடியது. பறிபோன பாடசாலை மூளைக்குள் மாறாட்டத்தை ஏற்படுத்தியது. விட்டுப்போன கணவன் சில்லறையாய் செய்துபோன செயல்கள் ஒவ்வொன்றும் ஆடை களைந்து நிற்பதுபோல் அவமானத்தைத் தந்தது. தனிமை அரக்கன் பக்கத்திலே நின்று பயமுறுத்துவதுபோல் இருந்தது. அமைதியான சூழல் மயானஅமைதியைத் தந்தது. சுற்றும் முற்றுமும் தலையை அசைத்து அசைத்துப் பார்த்தாள். அவள் கண்கள் இரண்டும் அளவுக்கதிகமாக விரிந்தன. சுவரின் ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தாள். அவள்  உள்ளே இருந்து ஒரு பெண் எழுந்து வந்தாள்.”

    ஒரு வானொலியில் ஒரு உணர்வு பூர்வமான கவிதையொன்று ஒலிபரப்பாகிறது.

    அந்தக் கவிதையையும் அதன் தாக்கத்தையும் பதிவு செய்யும்
    இந்த கந்தகக் கவிதாயினியைப் பாருங்கள்...


    “கவிதை என்னும் வரிகளால் காந்தமாய் வரதேவி இதயத்தை இழுத்தெடுத்தது. ஆன்மாவின் உன்னத ராகங்களைத் தட்டி எழுப்பியது. அக்கணமே அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. சிந்தனை தூண்டப்பட்டது. சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது”

    எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!
           உன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே
           உன் இதயமது இருண்டுவிடும்
           உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்
           உன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்
           தூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு
           பாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை
           கல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே
           வீரத்துடன் எழுந்து நடந்து செல்
           உன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்
           பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு
           நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்
           மறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்
           பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
           காலத்தை வென்று காவியம் படைக்க
           காலத்தை வென்று காவியம் படைக்க!”

    நாவல் அதன் உச்சக் கட்டம் எல்லாம் தாண்டி
    முடிவுக்கு வருகிறது...

    துன்பமோ... இன்பமோ... அதனை நான் இங்கு கூறிவிடப் போவதில்லை...  அது இலக்கிய தர்மமும் அன்று!!

    ஆசிரியரின் கைத்திறனை மட்டும் பாருங்கள்..
    “தொலைபேசி அழைப்புமணி ஒலித்தது. ஓடிச்சென்று வரன் தொலைபேசியை எடுத்தான். காதினுள் நுழைந்த செய்தி கேட்டு அப்படியே தரையில் அமர்ந்தான். தொண்டை அடைத்தது. தலையைப் பின்புறம் நோக்கிச் சரித்தான்.
     “ஓ……” என்று கத்தினான். அவன் அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்தாள் வரதேவி.....”
    பெரும்பாலும்
    கவிதை நூல்களுக்கே கம்பளம்
    விரிக்கும் சுபாவம் கொண்டவன் நான்...

    இங்கே ஒரு நாவலுக்கே
    நட்சத்திரப் பந்தல் போடுகின்றேன்!
    தீபங்கள் ஏற்றி...
    தோரணங்கள் தொங்க விடுகின்றேன்!

    காரணம்....
    இங்கே முத்துக்களும்... பவளங்களும்
    எங்கும் விரவிக் கிடக்கின்றன.
    பொன்மொழிகளும்... தத்துவமணிகளும்...
    நிறைந்து பொதிந்து கிடக்கின்றன!

    இதனை நான் வாசித்து முடித்தபோது...
    எழுந்து நடக்க அதிக நேரமாயிற்று!

    அற்புதமான அழகுத் தமிழை
    அள்ளியிறைத்த இந்த ஆசிரியைக்கு  
    நான் மனதார மலர்கள் தூவுகிறேன்!

    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
    வாழ்க நின் திருப்பணி!!
    வளரட்டும் உன் தமிழ்த்தொண்டு!



    **************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    15/11/2014









    சிவக்கும் சிலிர்க்கும் கவிதைள் நானும் சிவந்தேன் ...சிலிர்த்தேன் .தமிழ் இன்னும் அழகு உங்கள் நடையில் .....வண்ண வண்ண விண் மீன்களாய் சொற்கள் ....அவை கற் கண்டாய் .....முள் முகமாய் ....ஒரு ஓவியம்போல விரியும் வர்ண ஜாலங்களில் நிஜம் நிமிர்ந்து ஒளிர்கிறது
    பெண்களின் கண்ணீரை ...அவர்கள் விடுதலையை உங்கள் நடையில் தனித்துவமாக சொல்லியது அருமை ......கருவும் களமும் பழசு என்றாலும் நீங்கள் சொல்லும் விதம் அழகு புதுசு

    எனது வாசகங்கள்


                              நன்றி நவிலல்

    1. நன்றிநவில விதிமுறை இல்லை
        நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்;படும்.

    2. வலிந்து கேட்பதன்று நன்றி
        நன்றி பெற்றார் மனத்தின்கண்
        விரும்பிக்கொடுப்பது.

    3. நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
        நவிலத் துடிப்போடு வெளிப்படும்.

                                     உயர்ந்தோர் உள்ளம்

    1. பெருக்கத்துப் பணிவும்
          தாழ்வுவரின் தளராமையும்
          உயர்ந்தோர் உள்ளத்தின்
          உயரிய   பண்பாகும்.

    2. அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
        உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.

    3. மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்
        உயர்ந்தோர் உள்ளம்.
                                  
                                       பொறாமை

    1. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது
        புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்
        புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.

    2. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
        அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.

                                                    சந்தேகம்

    சந்தேகத்தால் பிறர்வாழ்வைச்  சந்திப்போரிடமெல்லாம் வினவாது
    சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்


    இலங்கைப் பயணம் 2









    யாழ்ப்பாணம்
                     
     2012 இல் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததை விட பாரிய மாற்றத்தை 4 வருடங்களின் பின் உணரக்கூடியதாக இருந்தது. ஒரு  நாடு முன்னேற வேண்டுமானால், முதலில் பாதைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும என்று மகாத்மா காந்தி ஒரு இடத்தில் கூறியிருக்கின்றார். அதேபோல் விரிவுபடுத்தப்பட்ட பாதை வியாபார போக்குவரத்துக்கு இலகுவாகவும் மக்களின் தொழில் பயணங்களுக்கு இலகுவாகவும் இருப்பது நாடு முன்னேற வழிசெய்கின்றது. ஆனால், வாகனச்சாரதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களும் வருத்தங்களும் அநுபவிக்க வேண்டிய சூழ்நிலை பிரயாணிகளுக்கு ஏற்படுகின்றது. நான் பயணம் செய்த சொகுசு பஸ் என்று அழைக்கப்படும் பலூன் பஸ் இருப்பிடங்களில் மூட்டைப்பூச்சிகளை வளர்த்து இரத்தம் உறிஞ்சும் பணியையும் செய்கின்றார்களோ! என்று நினைத்தேன். வெளிநாட்டு உணவுண்ட உடல்களை நன்றாகவே அம்மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்தன. என்றுமே மூட்டைப்பூச்சியைக் கண்டிராத என்னுடைய மகள் தனது உடலைப் பதம் பார்த்த மூட்டைப் பூச்சியை ஏதோ பூச்சி ஓடுகின்றது என்று பயந்து இருக்கையில் இருப்பதற்கு மறுத்துவிட்டார். சாரதியை விசாரித்தபோது அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று பொறுப்பில்லாது பதிலிறுத்தார்கள். பிரயாணம் முடிந்து வாகனத்தை நிறுத்தினால் மருந்து தெளித்து துப்பரவு செய்த பின்தான் அடுத்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிறிய வரன்முறை தெரியாமலே வாகனம் சேவையில் ஈடுபடுத்தும் நிலமையை எச்சரித்தேன். அதே பஸ் யாழ்ப்பாணம் நெருங்கிய வேளையில் ரயர் வெடித்து அத்தனை பயணிகளும் வாகனத்தை விட்டு இறங்கி பாதையில் நின்றனர். அளவுக்கு மிஞ்சிய பொதிகளை பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வரும்போது இப்படியான அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வழி இருக்கின்றது அல்லவா! ஏதோ வாழ்வதற்கு நாட்கள் இருக்கின்றது என்னும் காரணத்தால் நாம் உயிர் தப்பினோம். வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், வீதி ஒழுங்குமுறை தெரியாது வாகனம் கொண்டு செல்லுதல் போன்ற காரணங்களினால் அச்சங் கொண்ட பயணமாகவே போக்குவரத்து இலற்கையில் அமைகின்றது. இவையெல்லாம் சீர்செய்ய முடியாத தவறுகள் அல்ல என்பது யாவரும் அறிந்ததே.


                  
    யாழ்ப்பாண நூலகம் ஒரு கோயில் போல் வைத்திருக்கின்றார்கள். அழகான வாயில். அங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் சென்று என் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தேன். 





    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து கலைப்பிரிவு பீடாதிபதி பேராசிரியர் N.ஞானக்குமரன் அவர்களைச் சந்தித்து என் நூலை வழங்கினேன். நன்றாக உபசரித்து என் நூலைப் பெற்றுக் கொண்டார். நல்ல மனிதர். ஆனால், என்ன செய்வது அவருக்குத் தமிழ் ஒரு சொல் கூடத் தெரியாது என்பதே வருத்தப்பட வைத்தது. பூலோகசிங்கம் புத்தகசாலையிலும் என் நூல்கள் சிலவற்றை ஒப்படைத்தேன்.
            


      

    காங்கேசன் துறை (தல்சேவனா) கடற்கரை அழகான ஹொட்டல்கள் கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது. ரசிக்கும் படியான புகைப்படங்களை எனது மகளின் கைத்தொலைபேசி பிடித்துக் கொண்டது.





    யாழ்ப்பாண நகரம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் போது சிறிதளவேனும் அரசாங்கம் கவனம் எடுக்கவில்லையானால் வினாக்களை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்னும் காரணத்தினால் போர் நடைபெற்ற பிரதேசங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்தேன். கிளிநொச்சியில் நின்று போர்க்கால அனர்த்தங்களை நினைத்துப் பார்த்தேன். தீமையிலும் நன்மை உண்டு என்று எண்ணத் தோன்றியது. 

    யாழ்மண்ணின் தலைவாழை இலைபோட்டு உணவுண்ட மரக்கறிச் சுவையுடன் யாழ்மண்ணை விட்டு பயணமானோம்.

    செவ்வாய், 20 ஜூன், 2017






    காலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்
    வாழ்க்கை எனும் சூழல் எனை வதைத்து நின்றாலும்
    தமிழ் எனும் கைத்தடி கொண்டு தளராத மனம் கொண்டு
    எழுத்தால் என்றும் நிமிர்ந்து நிற்பேன் என்று கூறி


    அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் 


    என்னும் சத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்

    அகிலாண்ட ஈஸ்வரியே ஆதிபரா சக்தியே 
    அகிலமெல்லாம் ஆட்சி செய்யும் அன்னை பராசக்தியே
    அண்டமெல்லாம் புகழ் பரப்பி அரசாள வந்தவளே – என் 
    நாவினிலே வந்தமர்ந்து நல் ஆசி தாருமம்மா

    கவியரங்குத் தலைமைக்கும் கவிஞர்குழாம் மூவர்க்கும் 
    கவிபருக வந்தோர்க்கும் காமாட்சி பக்தர்க்கும் 
    சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் சிந்தையுள் நுழைகின்றேன்
    வரந்தந்தருளும் மாதேவி அடிபணிந்து வணங்குகிறேன்.

    மரபுக் கவியால் இங்கு மயக்க நான்வரவில்லை
    உணர்வுக் கவியால் உங்கள் உள்ளம் தொடவந்தேன்
    மதம் கொண்ட மதம் எனக்குப் பிடிக்கவில்லை
    இதம் கொண்ட மதத்தால் இதயங்கள் மீட்க வந்தேன்

    அகிலாண்ட நாயகியின் திருவிழா காட்சி - இங்கு
    அழகுத் தேர் பவனியின் அற்புதக் காட்சி
    காமாட்சி பக்தர்கள் மனமெங்கும் ஆட்சி 
    சிவஸ்ரீ பாஸ்கரகுருக்கள் மனதிலும் மகிழ்ச்சி

    அற்புதங்கள் தொடரட்டும் ஆன்மீகம் நிலைக்கட்டும்

    தாயே! அம்பிகையே!

    என்சொல்லும் செயலும் என்கருத்தும் கனிவும்
    என்கண்ணின் ஒளியும் என்காட்சிப் படிவும்;
    என்எண்ணக் கருவும் எடுத்தாளும் கவியும்
    எதிலும் நிறைந்தாய்தாயே என்னுள் அமர்ந்தாய் நீயே

    வீசும் காற்றும் வீழும் மழையும் 
    உதிக்கும் கதிரும் உறையும் பனியும்
    எரிக்கும் தணலும் அணைக்கும் நீரும் 
    விரிந்த கடலும் அடர்ந்த விருட்சமும்

    அணுவும் கருவும் ஆற்றல் உலகும் 
    விண்ணும் மண்ணும் வேதப் பொருளும் 
    எண்ணும் எழுத்தும் கண்ணின் ஒளியும்
    உள்ள அனைத்தும் உனக்குள் அடக்கம்

    விஞ்ஞானத் தோற்றத்தால் அஞ்ஞானம் அகற்றினாய் 
    விளக்கங்கள் வெளிப்படுத்தும் வினைகளையும் ஏற்றாய்
    விளக்கமில்லா மானிடரும் கலக்கமில்லா தேற்றார்
    விசாலாட்சி யுன்னருளால் விக்கினங்கள் விலக்கிட்டார்

    சந்தனம் சாத்தியே சாந்த சொரூபியானாய்
    அறுகம்புல் உண்ட பசுச்சாணத்தின் விபூதிதரும் 
    நல் அதிர்வுகளின் பெருமையினை உன்
    உடல் குளித்து விளக்கம் சொன்னாய்.

    நகை அணிந்தாய் நல்லாரம் புனர்ந்தாய் 
    நகையணியும் இடங்காட்டி குத்தூசி மருத்துவத்தை
    நயமாகக் காட்டினாய் தாயே! நாமணிய வைத்தாய் நீயே
    நோய்க் குறையின்றி எமை வாழவைத்தாய் நீயே

    காசியிலே விசாலாட்சி மதுரையிலே மீனாட்சி 
    காஞ்சியிலே காமாட்சி ஜேர்மனியிலும் உன்னாட்சி
    காமாட்சி உன்னருளால் பக்தர் குழாம் சூழ்ந்தாட்சி
    காலமெல்லாம் ஐரோப்பா உன்னிடமே அடைக்கலமாட்சி - இங்கு

    கட்டுக்கடங்கா ஆசை தொட்டுத் தொடர்கிறது
    மட்டுமரியாதை தெரியாமானிடம் தட்டுத் தடுமாறுகிறது
    வெட்டென்றும் குத்தென்றும் நாடே கட்டுப்பாடிழக்கிறது - தாயே
    சட்டமும் காவலும் கைகட்டி நிற்கிறது.

    பொய்யுங்களவும் வஞ்சனையும் புகுந்திட்ட பூமியிலே
    தெய்வசக்தியைப் பாடாவிட்டால் சஞ்சலங்கள் தீர்ந்திடாது
    சக்தியுனைத் திடமோடு தஞ்சமென சரணடைந்தால் 
    வந்தவினை தீர்ந்துவிடும் எண்ணமெலாம் ஈடேறும் 

    ஆட்டையும் மாட்டையும் பலி கொடுப்பார் – தாய்
    ஆருயிர் கேட்பதாய்; கதை அளப்பார்
    அருளுங் கரங்கள் உதிரம் அருந்துமென
    அற்பமனிதன் அறிகிறான் ஆருயிர்கள் அழிக்கிறான்.

    ஆணவம் ஆத்திரம் கொன்று விடு
    ஆசைகள் அறியாமை அழித்து விடு
    அன்னையின் அடிகளில் பலி இட்டு 
    அன்னையின் அருளினைப் பெற்று விடு

    உண்மை ஒளி ஓங்கிட வரம் கேட்பாய்
    உள்ளக் கள்ளச்சிந்தை கரைந்திட வரங்கேட்பாய்
    வையகம் ஓங்கிட வரம் கேட்பாய்
    பொய் வேசங்கள் மறைந்திட வரங்கேட்பாய்

    சக்தியைப் பாடிடும் வாயாலே கொடுஞ்
    சொற்களை பேசிடா வரங்கேட்பாய்
    நித்தமும் ஜெயித்திடும் மந்திரத்தால் - கெட்ட
    நிந்தனை வென்றிடும் வரங்கேட்பாய்  

    செய்கையும் செயலுமே நலம் பெற்றால் - தாய்
    செவ்விய வரமதும் சேர்ந்திடு மென்
    சத்திய உண்மையைச் சாற்றிட வந்தேன்
    உத்தம மனிதா! உணர்ந்திடு நன்றாய்

    நீக்கமறுந் துயர் நீங்கத் துதித்தேத்தி
    போக்கரியவிடர் புவியகல புஷ்பம் சாற்றியே
    நோக்கரிய புண்ணியம் புரிந்துலகில் மேலோங்கின்
    காத்தருளும் தேவி காட்சி தந்தருள்வாள். 

    ஜேர்மன் நகர் அமர்ந்துயர்ந்தோர் தொழவிளங்கி
    சேர்ந்தொலிநீர் ஞாலத் திருலகற்றும் - அம்பிகையே 
    ஈங்குன் பெருமையினைச் சாற்றவெனக் கருள்புரிந்த
    பாங்கொளி தேவி பாதந்தொழுதேன்.





    வியாழன், 1 ஜூன், 2017

                      ஹைக்கூ பற்றிய கண்ணோட்டம்.



    கவிதை கட்டுரையல்ல. கவிஞன் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அவன் பேசுகின்ற விடயங்களில் பல மௌனங்கள் மறைந்திருக்கும். அதனை தேடிப்பெறுபவனே சிறந்த கவிதா ரசிகன். மறைவாக ஆழமாகச் சிற விடயங்கள் சிறப்பாகச் சொல்லப்படும் துளிர்ப்பாவே ஹைக்கூக் கவிதையாகின்றது.

              தமிழைப் போன்று சங்கம் வைத்து இலக்கியம் வளர்த்த ஜப்பானிய புகழ்பெற்ற கவிதை வடிவமே ஹைக்கூவாகும். 1603 தொடக்கம் 1863 வரையுள்ள காலப்பகுதியில் சீன ஜப்பான் மொழிகளின் கலவையாக உருப்பெற்ற இக்கவிதை வடிவத்தினைப் பல நாடுகள் பின்பற்றி வந்தன. அவ்வகையிலேயே இன்று தமிழ்மொழியிலும் ஹைக்கூக் கவிதைகள் எழுதப்படுகின்றன. முதன் முதலில் 16.10.1916 அன்று வெளிவந்த சுதேசமித்திரன் என்னும் பத்திரிகையில் மகாகவி பாரதியார் ஜப்பானிய கவிதைகள் என்னும் தலைப்பிலே சில ஜப்பானிய ஹைக்கூக்களை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். இதுவே தமிழில் ஹைக்கூக்களின் புதுவரவாக அமைகின்றது. இவர் ஹைக்கூக் கவிதைகளை அறிமுகப்படுத்தும்போது இதன் பெயரைக் ஹொக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
       
         ஆயினும் ஹைக்கூத் தொகுப்பு நூலாக வெளிவந்த முதல்நூல் அமுதபாரதியின் ‘‘புள்ளிப்பூக்கள்‘‘ என்னும் நூலேயாகும். இது ஆவணி 1984 இல் வெளியானது. அதனைத் தொடர்ந்து 1984 கார்த்திகை மாதம் அறிவுமதி அவர்கள் ‘‘புல்லின் நுனியில் பனித்துளி‘‘ என்னும் நூலை வெளியிட்டார். நிர்மலா சுரேஷ் என்னும் பெண்கவிஞர் ஹைக்கூ பற்றிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். கவிஞர் கு.தேன்மொழி அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட “துளிப்பாக்களில் அழகியலும் சமுதாயமும்‘‘ என்னும் பெயரில் வெளியிடப்பட்ட ஆய்வுநூலும் ஹைக்கூ பற்றிய தெளிவையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. ஜப்பானிய வாகா, சோகா, செடோகா, கட்டவ்டா, தான்கா, ரெங்கா, ஹொக்கு முதலிய இலக்கிய வடிவங்களை இனங்காட்டித் தமிழிலே ஹைக்கூ எப்படி கையாளப்படுகின்றது என் விளக்கியுள்ளார்.
     
         ஹைக்கூ கவிதையானது ஐந்து, ஏழு, ஐந்து என முறையே 17 அசைகளைக் கொண்டு 3 அடிகளில் எழுதப்படும். காற்றின் கைகள் என்னும் அமுதபாரதியின் நூலிலே இவ் அசை அமைப்புடன் கூடிய ஹைக்கூக் கவிதைகளைக் காணலாம். ஆனால் தற்போது அவ் இலக்கணம் கண்டுகொள்ளப்படுவதில்லை.  ஒரேயொரு காட்சியையோ பொருளையோ உணர்வையோ வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதன் ஆரம்பப் பெயர் ஜப்பானியரால் ஹொக்கு என்று வழங்கப்பட்டது. ஹைகை என்று திரிந்து அதாவது தமிழில்க  ஐகை என்று திரிந்து ஐக்கூவாயிற்று. அதாவது அணுத்தூசி போன்ற சிறிதானது என்னும் பொருள் கொண்டது. ஐ என்றால் கடுகு கூ என்றால் உலகம் கடுகு போன்ற சிறிய வடிவில் உலகளாவிய கருத்துக்களை செறிவாகத் தரும் கவிதை என்னும் பொருளிலும் வழங்கப்படுகின்றது.
       
           வரிகளால் பெருந்தூண் எழுப்பாமல் குறைவான சொற்களால் அழகுணர்ச்சியை வெளிபடுத்த ஹைக்கூ கைகொடுக்கின்றது. வெளிப்படையாக எல்லாவற்றையும் கூறாமல் வாசகன் சிந்தனைக்கு இடம் கொடுக்கவேண்டும். ஹைக்கூக் கவிதைக்குத் தலைப்புத் தேவையில்லை. கவிதையின் அழகை இறுதி வரிகளில் அடக்க வேண்டும். இறுதி அடியில் முழுக்கவிதையினதும் வெளிப்பாடும், உணர்வும் பளிச்சென்று புலப்படும். இது மின்மினிப்பா, குறும்பா, வாமன் கவிதை, அணில்வரிக்கவிதை, துளிக்கவிதை, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா என்னும் பெயர்களினால் தமிழில் அழைக்கப்படுகின்றது.
        
        அப்துல் ரகுமான் அவர்கள் பல ஹைக்கூக் கவிதைகளை மொழிபெயர்த்தார். எம்மைச் சுற்றி ஓராயிரம் ஹைக்கூக்கள் ஆழமாக நோக்கினால் அத்தனையும் அற்புதங்கள். சென் தத்துவத்தைப் பரப்புவதற்குக் ஹைக்கூக் கவிதைகள் மிகவும் உதவின.

    அமுதபாரதியின ஹைக்கூ

    குளமொன்றை வெட்டு
    குறைவின்றி நீர் நிரப்பு
    குளிக்க வரும் நிலவு

    தற்போது வரிகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து அசை பற்றிய அக்கறையை விடுத்து ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன.

    தற்போது இணையங்களில் பல சிறப்பான ஹைக்கூக்கள் வெளிவருகின்றன.

    பத்துமலைத் தைப்பூசம்
    உண்டியலைப் பார்த்தபடி
    ஏழைச்சிறுமி

    வாளியைக் காலி செய்ததும்
    வானத்துக்குப் போனது
    நிலவு.

    தற்போது வரிகளும் அசைகளும் இழந்த நிலையில் ஹைக்கூ என்ற பெயரில் வெளிவரும் அற்புதமான ஹைக்கூக்களும் உண்டு

    அழகான பொய்களில் அன்பினைப் பெறுவதை விட
    உண்மையான கோபங்களை அன்பாகவே
    ஏற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு ஹைக்கூ தமிழில் வந்து புகுந்தது. தன் அமைப்பையும் இலக்கணத்தையும் மாற்றி புதுப்பொலிவுடன் ஹைக்கூ என்னும் பெயருடன் இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் வலம் வருகின்றது.


                                     -  மே மாத Tamil Nenjam சஞ்சிகையில் வெளியானது  -

    நேரத்தால் அழியாத ஒரு காதல்

    மாலை நேரம் . சூரியன் தன் கடைசி ஒளிக்கீற்றை பூமியின் நெற்றியில் மெதுவாகத் தடவி விட்டு மறைந்து கொண்டிருந்தது . அந்த வெளிச்சம் போல் , ஒரு மனிதன...