• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 29 ஏப்ரல், 2020

    பாரதிதாசன் பாடல்களும் இனிய காதல் வரிகளும்




    அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
    அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு
    மானிட சமுத்திரம் நானென்று கூவு
    பிரிவிலை எங்கும் பேதமிலை”

    என்று விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கிய பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று நினைவுபடுத்தப்படுகின்றது.

    பாண்டிச்சேரியிலே 29.04.1891 அன்று கனகசபை முதலியாருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தை தனது எழுத்து வன்மையினாலும் புரட்சிப்போக்காலும், பொதுவுடமை கொள்கையினாலும் தமிழகத்தின் சிந்தனையை எதிர்காலத்தில் தூண்டச் செய்யும் என்பதைப் பிறந்தபோது யாருக்கும் புரியவில்லை. அந்தக் குழந்தையே சுப்புரெத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனாகும். இவர் மகாகவி பாரதியார் மேல் பேரன்பு கொண்டு பாரதியார் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். இவர் தமிழியக்கம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பாண்டியன் பரிசு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, மணிமேகலை வெண்பா, இசை அமுது, எதிர்பாராத முத்தம், பாரதிதாசன் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், புரட்சிக்கவி, தமிழச்சியின் கத்தி, காதல் நினைவுகள், சஞ்சீவி பர்வதத்ததின் சாரல், வீரத்தாய், சிறு காப்பியம், காதலா கடமையா, இரனியன் ஓர் இணையற்ற வீரன், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என்னும் புனை பெயர்களில் தன்னுடைய படைப்புக்களை எழுதி வந்தார். இவருடைய பாடல்களிலே பொதுவுடமை, இன விடுதலை, திராவிட உணர்வு, மொழிப் பற்று, தமிழ் தேசியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதி மறுப்பு, போன்ற பண்புகளை அறியக்கூடியதாக இருக்கின்றது. அறிஞர் அண்ணாவினால் புரட்சிக்கவி என்னும் பாராட்டைப் பெற்று 25.000 ரூபாய் பரிசு பெற்றார். 1970 இல் இவருடைய பிசிராந்தையார் என்னும் நாடக நூல் சாகித்திய அகடமி பரிசு பெற்றது.

    இவர் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து பாடிய பாடல் பாரதியாரால் ஸ்ரீசுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. “எங்கெங்குக் காணினும் சக்தியடா என்று பாடிய பாரதிதாசனே பின் ஒருமுறை சுத்தானந்தபாரதியார் “கடவுள் இல்லையென்று என்று சொன்னவன் யாரடா என் அப்பனை தில்லையில் வந்து பாரடா” என்று கூற “சிற்றப்பலத்தானையும் சிதம்பரத்தானையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் என்னாளோ” சமயமறுப்புக் கொள்கையுடன் பாடியுள்ளார்.

    கேள்வி கேட்கக் கேட்ட தெளிவு பிறக்கும் என்னும் சிந்தனைப் போக்கை தெளிவுறுத்தும் வகையில் கேள்வியால் அகலும் மடைமைபோல் நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது என விடிபுனல் பற்றி விதந்துரைத்த வார்த்தையிலே தன் பகுத்தறிவு சிந்தனையை உலகத்து விடியலுக்காக விளக்கினார்.

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் என்று

    மொழிமேல் பற்றுக்கொண்ட மொழியுணர்வு பாடல்களைப் போல் காதலுணர்வுப் பாடல்களையும் பாரதிதாசன் அதிகமாகப் பாடியுள்ளார்.

    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல”

    என்னும் வள்ளுவர் வரிகளுக்கொப்ப சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்னும் கவிதையிலே “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்று காதலியின் பார்வைக்கு இருக்கும் மகத்துவத்தைக் காண்கின்றார்.

    காதலிலும் பொதுவுடைமைப் புரட்சிப் போக்கைக் கொண்டு வந்தவரே பாரதிதாசன். தனது பாடல்களில் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஏழைத்தொழிலாளியின் மனைவி, மாட்டுவண்டிக்காரன் மனைவி போன்று சாதாரண பெண்களின் வாய்மொழிப் பாடல்களாக அமைவதுடன் பொதுவாக பழந்தமிழ் பாடல்களில் வரும் காதலியர் தம் காதல் உணர்வுகளைத் தமது காதலனிடம் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால் பாரதிதாசன் பெண்டீர் புரட்சிப் பெண்டீராகத் தம் காதல் உணர்வுகளைக் காதலனிடம் வெளிப்படையாக கூறவல்லவர்களாகவே படைக்கப்படுகின்றார்கள்.

    எதிர்பாராத முத்தம் என்னும் நூலிலே ஒரு பெண்ணின் வருகையை வர்ணிக்கும் வரிகளில் எம் கண்முன்னே ஒரு பெண்ணை கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

    நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்
    கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்
    செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்
    அப்படி இப்படி வலதுகை யசைத்தும்
    புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.
    நிறப்பட்டாடை நெகிழ்ந்தது காற்றில்!
    பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
    சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!
    பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,


    கீழுள்ள வரிகளில் காதலின் வர்ணனை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.


    பட்டாணி வன்னப் புதுச்சேலை - அடி
    கட்டாணி முத்தே உன் கையாலே - எனைத்
    தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை – உடல்
    பட்டாலும் மணக்கும் அன்பாலே

    எட்டாத தூரம் இருந்தாலும் - உனை
    எட்டும் என் நெஞ்சம் மென்மேலும் - அது
    கட்டாயம் செய்திட வந்தாலும் - நீ
    ஒட்டாரம் செய்வதென் போங்காலம்

    ஆவணி வந்தது செந்தேனே – ஒரு
    தாவணி வாங்கி வந்தேனே -  எனைப்
    போவென்று சொன்னாய் நொந்தேனே – செத்துப்
    போகவும் மனம் நொந்தேனே

    காதலின் தவிப்பும் காதலி வார்த்தை கேட்டு வாழ்க்கை இழக்கவும் துணியும் ஆண்வர்க்கத்தை இங்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

    குடும்பவிளக்கு என்னும் அவரின் நூலைப் படிக்கும் போது ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு கண்முன்னே சித்திரிக்கப்பட்டிருந்தது. குடும்பவிளக்கு நாயகியின் கண்களை வர்ணிக்கும் போது

    தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
    குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

    எனக் கண்களை கெண்டைமீனுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.

    இவ்வாறே பெண்களின் கண்களை வர்ணிக்கும் வண்ணக்களஞ்சியப்புலவர்

    பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்
    தளம்குளிர் புனல்என நெடிய
    கருவிழிஇரண்டும் கயல்எனத் தோன்றக்
    கண்டுவந்து உடல் அசையாது
    விரிசிறை அசைத்துஅந்த ரத்தில்நின்று எழில்சேர்
    மீன்எறி பறவை வீழ்ந் திடுமே!

    மாடத்திலே நிற்கின்ற பெண்ணின் கண்கள் பளிங்குத் தரையிலே விம்பமாகத் தோன்றுகின்றன. அந்நிலப்பகுதி குளிர்புனல் என நினைத்து மீன்கொத்திப் பறவைகள் பறந்து வருகின்றன.  அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டும் கயல்மீன்கள் போல் காட்சியளிக்கின்றன. எனவே அப்பெண்ணின் கருவிழிகள் இரண்டையும் கயல் மீன்கள் என்று நினைத்து மீன்கொத்திப் பறவை கவ்விக் கொள்ள வந்து வீழ்கின்றது என்று அழகாகப் பாடுகின்றார்.

    மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே
    போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே என்று வாலி பாடுகின்றார்.

    இதே கண்களை

    வள்ளுவர் 1093 ஆவது குறளிலே

    நோக்கினாள் நோக்கின் இறைஞ்சினாள் அஃதவள்
    யாப்பினுள் அட்டிய நீர்

    என்னும் வரிகளுக்கு நான் பார்க்காத போது என்னைப்பார்த்தாள். பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள். இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும் என சாலமன் பாப்பையா பொருள் கூறுகின்றார். 

    இதனையே பாரதிதாசன் காதல் குற்றவாளிகள் என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைகளிலே

    கூடத்திலே மனப் பாடத்திலே- விழி

    கூடிக் கிடந்திடும் ஆணழகை,

    ஓடைக் குளிர் மலர்ப் பார்வையினால்- அவள்

    உண்ணத் தலைப்படும் நேரத்திலே,

    பாடம் படித்து நிமிர்ந்த விழி- தனிற்

    பட்டுத் தெறித்தது மானின் விழி!

    ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்

    ஆயிரம் ஏடு திருப்புகின்றான்

    என பாடியிருக்கின்றார்.

    உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான்  பார்க்கும் போது என்னை நான் என்னை நீ பார்க்கின்றாயே” என்று கவியரசு கண்ணதாசன் கூட அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

    பெண்மையின் பெருமையையும் உலகுக்கு உணர்த்துவதற்கு பாரதிதாசனின் குடும்பவிளக்கு ஒன்று போதும். பெண் வீட்டின் கண். அவள் உறவிலே விளங்கிடும் குடும்பம் என்னும் தத்துவத்தை அழகாகச் சித்திரித்திருக்கின்றார். காலை எழுகின்றாள். கோலமிட்டாள், கணவனைப் பிள்ளைகளைத் துயிலெழுப்புகின்றாள், காலையுணவு தயாரிக்கின்றாள். காதலின் மேன்மை உணவுப் பரிமாற்றத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது. 

    செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்;
    பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த
    அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக்
    குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
    இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
    நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
    முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
    "அத்தான்" என்றனள் அழகியோன் வந்தான்

    பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு கணவனை வெற்றிலை கொடுத்து அனுப்பிவிட்டு உணவுண்ணச் செல்கின்றாள் இங்கு அவளின் காதலுள்ளம் தௌ;ளத்தெளிவாகப் புலப்டுகின்றது.

    உணவுண்ணச் சென்றாள், அப்பம்
    உண்டனள், சீனி யோடு
    தணல்நிற மாம் பழத்தில்
    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!
    மணவாளன் அருமை பற்றி
    மனம்ஒரு கேள்வி கேட்க,
    'இணையற்ற அவன் அன்புக்கு
    நிகராமோ இவைகள்' என்றாள்.


    வீட்டுவேலைகள், தையல்வேலைகள், மரச்சாமான்கள் பழுதுபார்த்தல், கொல்லூற்றுவேலை, மாமன்மாமி தேவைகளின் கவனிப்பு, பிள்ளைகளுக்கு, கணவனுக்கு எது பிடிக்கும் என தேடிச் சமைத்தல், உணவு பரிமாற்றம், கடைக்குச் சென்று கணக்கு வழக்குப் பார்த்தல், பிள்ளைகளைக் கடற்கரைக்கு செல்லல், பிள்ளைகளை அழைத்து வரல், பெற்றோர் பெருமை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தல், பிள்ளைகளை உறங்கச் செய்து கணவன் கட்டிலண்டை வந்து பேசல், விருந்தினர் வரவேற்றல், இவ்வாறு நீண்டு கொண்டு செல்லும் குடும்பவிளக்கு நல்ல பல கருத்துக்களையும் இவற்றினூடு இடையிடையே தமிழின் பெருமை, பொதுவுடைமைக் கருத்துக்கள், போன்றவற்றையும் சுவையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    முதுமையில் ஏற்படும் காதல் பற்றி சுவை மிகுந்த பாடல் குடும்பவிளக்கிலே வாசித்து இன்புறத்தக்கது. இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் என்றால், முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் என்று கண்ணதாசன் கூறுவதுபோல் இங்கு இளமை வடிந்து விட்டதோற்றம் ஒட்டிய மேனியில் காமத்தின் கடைசிச் சொட்டுக் கூட இல்லாத வயது. ஆனால், உண்மை அன்பு மனைவியில் காணுகின்ற வயதில் எல்லையைத் தொடும் ஆண்மகன் அவள் அழகை இழந்து விட்டாலும் அவள் உயிரோடு இருக்கின்றாள் என்பதே எனக்குப் போதும் என்கின்றார்




    புதுமலர் அல்ல காய்ந்த
    புற்கட்டே அவள் உடம்பு!
    சதிராடும் நடையாள் அல்லள்
    தள்ளாடி விழும் மூதாட்டி
    மதியல்ல முகம் அவட்கு
    வறள்நிலம்! குழிகள் கண்கள்!
    எது எனக்கின்பம் நல்கும்?
    இருக்கின்றாள் என்ப தொன்றே!

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கண்ணதாசன் கூறியதுபோல் இந்த உலகத்தில் எல்லாம் ஒருநாள் ஓய்ந்து போகும் ஆனால், உங்கள் அன்பைச் சுமந்திருக்கும் மனம் மட்டும் ஓய்வதில்லை என முதுமை கண்ட கணவனில் கொண்ட காதலை முதாட்டி உரைக்கும் போது

    அறம் செய்த கையும் ஓயும்!
    மக்களை அன்பால் தூக்கிப்
    புறம்போன காலும் ஓயும்!
    செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
    திறம் கேட்ட காதும் ஓயும்!
    செயல்கண்ட கண்ணும் ஓயும்!
    மறவரைச் சுமக்கும் என்றன்
    மன மட்டும் ஓய்தலில்லை

    என்று மூதாட்டி காதலை குடும்பவிளக்கிலே நாம் காணலாம்.

    காதலிலும் பொதுவுடமையைக் கருத்துக்களையும் புரட்சியையும் கையாண்டவர் பாரதிதாசன்.

    'சின்ன வயதினில் என்றனையோர் -- பெருஞ்
    சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! -- எனில்
    அன்னது நான் செய்த குற்றமன்று! -- நான்
    அமங்கலை' என்றுகண் ணீர்சொரிந்தாள்!

    'மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?' -- என்று
    வார்த்தை சொன்னாள்; குப்பன் யோசித்தனன்! -- தன்னை
    இணங்கென்று சொன்னது -- காதலுள்ளம் -- 'தள்'
    என்றன மூட வழக்க மெலாம் -- தலை
    வணங்கிய வண்ணம் தரையினிலே -- குப்பன்
    மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! -- பின்
    கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே -- சில
    கண்ணற்ற மூட உறவினரும்     

    வீதியிற் பற்பல வீணர்களும் வேறு
    விதியற்ற சிற்சில பண்டிதரும் -- வந்து
    சாதியி லுன்னை விலக்கிடுவோம் -- உன்
    தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! -- நம்
    ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! -- தாலி
    அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! -- நல்ல
    கோதை யொருத்தியை யாம்பார்த்து -- மணம்
    கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்!

    கூடிய மட்டிலும் யோசித்தனன் -- குப்பன்
    குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! -- முன்
    வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் -- அந்த
    வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் -- ஆ!
    ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! -- மூடர்
    எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! -- மற்றும்
    பேடி வழக்கங்கள், மூடத்தனம் -- இந்தப்
    பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!

    காதல் அடைதல் உயிரியற்கை! -- அது
    கட்டில் அகப்படும் தன்மையதோ? -- அடி
    சாதல் அடைவதும் காதலிலே -- ஒரு
    தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! -- இனி
    நீதடு மாற்றம் அகற்றிவிடு! -- கை
    நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! -- அடி
    கோதை தொடங்கடி! என்று சொன்னான் -- இன்பம்
    கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!

    என மூடக் கொள்கையை உடைத்தெறிந்து தன் எண்ணச் சுதந்திரத்தை எழுத்தில்  வடிக்கும் திறம்பெற்றவர் பாரதிதாசன்.

    இவ்வாறு அற்புதமான கவிதைகளை பாரதிதாசன் எமக்களித்து 21. 04. 1964 ஆம் ஆண்டு எம்மை விட்டுப் பிரிந்து சென்றார்.

    கவிஞர் ஹீட்ஸ் வாழ்ந்த காலங்கள் -  22 வயதுவரை
    ஷெல்லி  வாழ்ந்த காலங்கள்     -  26 வயதுவரை
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்   -  29 வயதுவரை
    பாரதியார்                   -   39 வயதுவரை
    பாரதிதாசன்                  -   73 வயதுவரை





    14 கருத்துகள்:

    1. பாரதிதாசன் அவர்கள் பற்றிய நல்லதொரு கட்டுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தட்டிக் கொடுத்து ஆர்வத்தை ஏற்படுத்தும் உங்கள் பணிக்கும் மிக்க நன்றி

        நீக்கு
    2. பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய அழகிய இலக்கியக் கட்டுரை. அவர் கவிதை வரிகளைத் தொடுத்துக்  கொடுத்த பாங்கும் கருத்துக்களை எடுத்துக் கொடுத்த நயமும் குறிப்பாக எவருமே பாடாத முதியோர் காதலை அவர் பாடியதைப் போற்றிய திறமும் பாராட்டத்  தக்கன . வழக்கம் போல் நல்லதொரு படைப்பை அவர் நினைவஞ்சலியாகச் செலுத்தி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உங்களை போன்றோரின் பாராட்டுக்களே எங்கள் முயற்சிக்கு வித்திடுகின்றன

        நீக்கு
    3. பதில்கள்
      1. தொடர்ந்து என்னை ஊக்குவிக்கின்றீர்கள். நன்றி

        நீக்கு
    4. பாவேந்தர் பா வேந்தர்தான்
      பாவேந்தரின் நினைவினைப் போற்றுவோம்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நீங்கள் எழுதாதது எது இருக்கின்றது? உங்கள் பாணியே தனித்துவமானது

        நீக்கு
    5. அருமையான நினைவஞ்சலி. நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் காதல் கவிதைகள். அத்துடன் சீர்திருத்த எண்ணங்கள். அருமை கௌசி

      பதிலளிநீக்கு
    6. படித்து படித்து மயங்கிய வரிகள்
      மீண்டும் தங்கள் தளத்தில் வாசித்தேன்
      இனிது.
      நன்றி

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நீண்ட நாட்களின் பின் என் தளம் புகுந்துள்ளீர்கள். மிக்க நன்றி

        நீக்கு
    7. அருமை.... இந்தீ யாவில்... அந்தக் காதலிலும் சாதிவெறி கொண்டு ஆணவ கொலையும் செய்கிறார்களே.....

      பதிலளிநீக்கு
    8. காலம் காலமாக எழுத்தாளர்கள் எழுதினாலும் மக்கள் திருந்தப் போவதில்லை. ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் எழுதவில்லையா

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...