• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 30 டிசம்பர், 2017

    இவ்வருடத் திட்டங்களைத் தீட்டுவோம் திடமாக்குவோம்.



      
     நாளைய உலகம் நமக்கே விடிவதை 
     நம்பிக்கை கொண்டே வரவேற்போம் - உயர் 
     நோக்குடன் மனதை ஒருநிலைப் படுத்தி 
     முழு மூச்சுடன் முயற்சியில் வெற்றி காண்போம்

    உலகை ஆட்டிப்படைப்பது இயற்கை. அதன் கையில் நாமும் தான் வாழ்கின்றோம். பெற்றோர் கையில் வளர்ந்து, ஏட்டைப்பிடித்து உயர்ந்து, ஏற்றம் பெற்று மகிழ்ந்து, எம்மால் தோற்றம் பெற்ற மக்கள் உயரம் காண உழைத்தோம். இயற்கை தொடரும் வேளையிலே இடத்தைப் பிடிக்கிறது 2018. சென்ற வருடத்திற்கு சமாதி கட்டிவிட்டோமா! இல்லை சாட்சியாகக் கொண்டோமா! இல்லை அடித்தளம் இட்டோமா! இதுதான் எமது இவ்வருடத் திட்டத்திற்கான கேள்வி.

                      சூரியச் சுழற்சியைப் பொறுத்தே நாள்கள் நகருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும் மாதங்களும் உருவாகின்றன. இதேபோல் இப்பூமியில் நடைபெறுகின்ற அனைத்துக் காரண காரியங்களுக்கும் அடிப்படை சக்தி சூரியசக்தியே ஆகும். அதனாலேயே தை மாதம் சூரியசக்தியைக் கொண்டாட சூரியவழிபாடாக தைப்பொங்கலை வைத்திருக்கின்றோம். முதல் மாதத்தில் நாம் கொண்டாடும் முதல் நிகழ்வு தைப்பொங்கல். இத்தைப்பொங்கல் நாள் தை முதலாம் திகதியாகக் கொள்ளப்படுகிறது. ஆயினும் எமது வருட முதல்நாளாகக் கருதப்படுவது சித்திரை நடுப்பகுதி என்பது யாவரும் அறிந்ததே. இதுபோல் வெவ்வேறு நாடுகள் தமது வருடப்பிறப்புக்களை வெவ்வேறு நாட்களில் பிரகனப்படுத்தி கொண்டாடுகின்றன. 15 நாட்கள் கொண்டாட்டமாக யப்பான், சீனா போன்ற நாடுகள் தை, மாசி மாதங்களுக்கு இடையில் வரும் வருடாவருடம் வெவ்வேறு நாட்களில் மிக சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். தாய்லாந்து சித்திரை மாதத்திலும், இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி வருடப்பிறப்பு நாளையும் வருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.  இவ்வாறு பிறக்கப்போகும் வருடத்தை மகிழ்வாக வரவேற்பது அனைத்து இன மக்களுக்கும் இயல்பாக இருக்கின்றது.

                       காலை எழுந்தவுடன் ஒரு மூச்சுப் பயிற்சி, சிறிது நேர உடற்பயிற்சி, சிறிது நேரத்தியானம், அன்றைய நாளின் அவதானிப்பு. இதுவே நாள்தோறும் எமது வழமை என்று இருந்த நிலமை போலவே இன்றைய வருட திட்டம் என்று மனக்கண்ணில் போடவேண்டிய காலக்கட்டாயம் வந்துவிட்டது.

                       ஒரு கடையிலே நாள் முடிவிலும் வருட முடிவிலும் கடையின் வரவு செலவு பார்த்து இருப்புச்சரக்கு கணக்கெடுப்பது யாவரும் அறிந்ததே. அதேபோல் பொருட்களுக்கு கொடுக்கும் அவதானம் எமது உடலுக்கும் வாழ்வுக்கும் கொடுக்க வேண்டாமா! அதனால், இவ்வருடம் நடந்தவை அவற்றிலுள்ள சாதக பாதங்களை ஒரு அரை மணி நேரம் இருந்து அவதானிக்கும் போது மகிழ்ச்சியான நிமிடத்துளிகளையும் துயரமான நிமிடத் துளிகளையும் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றோமானால்,  நாம் இவ்வருடம் ஆற்ற வேண்டிய கடமையை அறிந்து கொள்வோம். ஆசைகளை அளந்து கொள்வோம், தேவைகளைப் புரிந்து கொள்வோம். தனியே இருந்து செய்வது கடினமாக இருந்தால் குடும்பமாக இருந்து சிந்திக்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசாபாசங்கள் வேறுபடும். சாதனைகள், வேதனைகள் மாறுபடும். அதனால், உங்கள் சிந்திப்பின் கணக்கெடுப்பு உங்கள் உயர்வுக்கும் உங்களைச் சார்ந்தவர்களின் உயர்வுக்கும் ஏணியாகவும் மனதுக்கு ஏற்றமாகவும் இருந்தால் உங்களுடன் இணைந்தே உலகமும் உயர்வடையும்.

                      ஆண்டவனுக்கு முன்னே நின்று வேண்டுதல் செய்கின்றோம். ஆண்டவன் நிறைவேற்றுவார் என்பது மூடத்தனம். வேண்டுதல்களை மனம் ஏற்கின்றது. ஓமோன்கள் செயற்படத் தூண்டுகின்றன. மூளை திட்டமிட முடிவெடுக்கின்றது. தேவைகளை நாமே நிறைவேற்றுகின்றோம். இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் எமது எண்ணங்களே. எண்ணங்கள் மேல்நோக்கிச் செல்லும்போது அதை செய்து முடிப்பதற்கான முழுமூச்சான வேகம் அதிகரிக்கின்றது. அதற்காக நீரோட்டம் உடலினுள் இருக்கும்போது அதற்கான போதியளவு பிராணவாயுவின் ஓட்டமும் அதிகரிக்கும். செயற்படுத்தலும் ஏற்படும். எனவே இவ்வருடம் நாமே நாம் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு அடித்தளமிட வேண்டியவர்கள்  ஆகின்றோம்.

                       நாம் எடுக்கும் இவ்வருட முயற்சி எமது வளர்ச்சிக்காக இருக்கும் போது நாம் பிறந்து வளர்ந்த பூமியில் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் போல் எம்மைத் தத்தெடுத்த நாட்டிலும் சிறிது பாசம் வைத்தோமென்றால் சிறப்பாக இருக்கும். எமது இனத்தின் மேல் வைக்கின்ற பாசம் போல் அனைத்து இனத்தின்மேல் வைக்கின்ற பாசமும் மேலோங்கினால் சிறப்பாக இருக்கும். 'நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு‘‘   இது எல்லோரும் அறிந்த பாடலே. இதனை இவ்வருடம் எண்ணிப் பார்க்கின்றேன். உயிர்வாழ இடம்தேடி உறைந்த இடமே இந்நாடு. இன்று தரம் உயர்ந்து வளம் பெருக்கிதரித்து நிலையூன்றி, சுகதேகியாய் நிற்கின்றோம் என்றால், எம் தரம் பார்த்து, இனம் பார்த்து ஏற்றுக்கொள்ளாது மனிதம் பார்த்து எம்மை வாரி அணைத்த நாடே  நாம் வாழுகின்ற நாடு. இந்த நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகின்றோம். இதுவே இன்றைய கேள்வி.

                   நாம் பெரிதாக எதுவுமே செய்யத் தேவையில்லை. எமது தொழிலை நேர்மையாகச் செய்தாலே போதுமானது. அவர்களிடம் இருந்து நாம் பெறும் வசதி வாய்ப்புக்களுக்கேற்ப நாமும் அவர்களுக்குக் கொடுத்தாலே போதுமானது. அதைவிட எமது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களில் நோட்டமிட வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோரிடம் இருக்கிறது. அரசாங்கச் சொத்துகளை சீரழிக்கும் எத்தனையோ பிள்ளைகளைக் கண்ணுற்றிருக்கின்றேன். பேரூந்துப் பயணத்திலே பாதணிகளை முன்னிருக்கையில் வைத்துக் கொண்டிருத்தல், பயணம் செய்கின்ற பொது வாகனங்களில் கீறுதல், பொது இடங்களில் குப்பை போடுதல், மண்டபங்களை அழுக்காக்குதல், போதைப் பொருளுக்கு அடிமையாகுதல், அரசாங்க சட்டதிட்டங்களை மீறுதல், சுதந்திரம் என்னும் சொல் கொண்டு பிறர் சுதந்திரத்தை பாதித்தல், இவ்வாறான தகாத நடவடிக்கைகள் நாட்டிற்கும் எமது இனத்திற்கும் கேடாக முடிகின்றது. நாம் மட்டுமல்லை நாம் வாழுகின்ற நாட்டு பிள்ளைகளும் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்னும் விதாண்டாவாதங்களை விட்டுவிட்டு எம்மைத் திருத்துவோம். உலகம் திருந்தும் என்று நினைப்போம். இதுவும் இவ்வருடத் திட்டமாக கொண்டு எம்மால் இயன்றவரை நாம் வாழுகின்ற நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? செய்ய வேண்டும்  என்று நினைத்துப் பார்க்கும் இவ்வருடத் திட்டத்தையும் திடமாக்குவோம்.


























    6 கருத்துகள்:

    1. நல்லதொரு கட்டுரை சகோ
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

      பதிலளிநீக்கு
    2. வணக்கம்

      ஒவ்வொரு திட்டங்களும் நல்லது நான் நிச்சயம் நடைமுறைப்படுத்துவேன் நிச்சயம்
      மற்றவர்கள் சமூகத்தை வழி நடத்தும் அரசியல் வாதிகளுக்கும் சரி வரும்
      இருந்தும் இறுதியில் சொல்லிய கருத்து நாடு பற்றியது சிறப்பு
      சிறப்பான கட்டுரை அக்கா...வாழ்த்துக்கள்

      தங்களுக்கும் தங்கள் குடுத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

      நன்றி
      அன்புடன்
      ரூபன்

      பதிலளிநீக்கு
    3. சிந்திக்க நல்லெண்ணங்கள்
      அருமையான கண்ணோட்டம்

      இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
      எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
      அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

      பதிலளிநீக்கு
    4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    5. அருமையான பகிர்வு..தங்கள் கண்ணோட்டத்தை வெளிப்படுத்திய விதம் அழகு.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    6. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
      http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
      தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

      நன்றியுடன்
      சாமானியன்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...