• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 13 ஜனவரி, 2018

  தை தாங்கிவரும் தைப்பொங்கல்

                             

                             வாழ்க்கை பொங்க வசந்தம் பெருக உள்ளமெல்லாம் பொங்கித் ததும்ப நன்றியை மனமுவந்து, நாம் வாழ்வதற்கு ஆதாரமான ஆண்டவன் சூரியபகவானுக்கு நன்றி செலுத்துகின்ற நாளே இப் பொங்கல் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே. பகலவன் இன்றி உயிர்கள் ஏதுஉலகுதான் ஏது? பாரபட்சம் பார்த்து பகலவன் தன் கதிர்களைப் பூமிக்குத்  தருவதில்லை. அதனால் நன்றி சொல்லும் மகத்தான பண்புக்கு அடையாளமே இப்பொங்கலின் திருநாளாகும். இதனையே ஜேர்மனியர் Erntedankfest என்று தோட்டங்களில் விளையும் உருளைக்கிழங்கு, பூசணி போன்ற மரக்கறி வகைகளை படைத்துக் கொண்டாடுகின்றார்கள்.
                 
                           நாம் இன்றைய தினம் மாத்திரமே சூரியனுக்கு படையல்கள் படைத்துக் கொண்டாடிவிட்டு வருடம் முழுவதும் சூரியனின் கதிர்கள் எம்மீது விழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான அஸிரிய, அகேடிய, பாபிலோனிய நகரங்களின் முக்கிய வழிபாட்டுக் கடவுளே சூரியன்.  இவர்கள் சூரியனை ஷாமேஷ் என்று அழைக்கின்றார்கள்.
                  
                               புத்தி, ஆரோக்கியத்தை அளிக்கும் கடவுளாகக் கருதி எகிப்திய மக்கள் அமான் என்றும் கிராஸ் என்றும் சூரியனையே வழிபடுகின்றனர். வீரம் தரும் கடவுளாக பெரு, மெக்சிக்கோ நாட்டவர்கள் சூரியனை வழிபடுகின்றனர். பெருநாட்டிலுள்ள இன்கா என்னும் பழங்குடியினர் தாங்கள் சூரியனிலிருந்தே வந்தவர்கள் என்று கூறுகின்றனர். ஜப்பானிலும், சீனாவிலும் சூரியன் பெண்கடவுளாக வணங்கப்படுகின்றது.
              
                 தைமாதம் பிறக்கும்போது சூரியன் மகரராசியில் பிரவேசிக்கின்றார். இக்காலப்பகுதியில் தட்பமும் வெப்பமும் மிதமாக இருக்கும். இதனால் பயிர்கள் நன்றாக விளைந்து நற்பலனைத் தருகின்றன. அதனால் அப்பலனைத் தரும் சூரியனுக்குப் பொங்கல் படைத்து பொங்கலோ பொங்கல் என்று தமிழரும், ஹங்கரோ, ஹங்கர் என்று ஜப்பானியரும் பொங்கல் விழாக் கொண்டாடுகின்றனர். ஜப்பானியரும் சீனநாட்டவர்களும் சூரியனைப் பெண்தெய்வமாகவே வழிபடுகின்றனர். எமக்கு மாட்டுப் பொங்கல் போல் ஜப்பானியர்களுக்கு குதிரைப்பொங்கல் அமைகின்றது.  குதிரைகளை நன்றாகக் கழுவி அலங்கரித்து மாலை போட்டு இனிப்புவகை கொடுத்துக் கொண்டாடுவார்கள். இதேபோல் பர்மாவிலும் இந்நாளில் புத்தாடை அணிந்து கால்நடைகளுக்குப் பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கின்றது. 
                
                                  காலைச் சூரிய வழிபாடு மனிதனுக்குச் சாலச்சிறந்தது என்பது யோகக் கலையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இது இன்று நேற்றல்ல ஆதி மனிதன் கூட சூரியனை வழிபட்டுத் தன் நன்றியைத் தெரிவித்திருக்கின்றான். காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டப், பிரஹதி, பங்கதீ, திருஷ்டுப், ஜகதி என்ற பெயர்களையுடைய குதிரைகள் சூரியபகவானை இழுத்து வருவதாக நம்பப்படுகின்றது. சூரியனுக்குரியவையாக தாமிர உலோகம், கோதுமைப்பண்டம், செந்தாமரை, செம்பட்டு, கபிலைப்பசு, மாணிக்கம், எருக்கங்குச்சி, காரப்பொருள்கள் போன்றவை கொள்ளப்படுகின்றன. மகரசங்கராந்தி நாளன்று இத்தைப்பொங்கல் கொண்டாடப்படுவதனால், மேற்கு வங்காளத்திலுள்ள சாகர்தீவு ஸ்நான கட்டடத்தில் புனிதநீராடி பிதிர்க்கடன் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.
             
                                           
                 அறுவடை காலத்தில் அறுவடை சிறப்பாக அமைய சங்ககாலத்திலே பெண்கள் விரதம் இருந்து தைமாதம் முதல் நாளில் விரதத்தை முடித்து பயிர் சிறக்க உதவிய பூமி, கால்நடைகள், சூரியன் போன்றவைக்கு பொங்கல் படைத்து வழிபட்டார்கள். இலக்கிய காலத்திலேயே இந்திர விழா என்ற பெயரில் காவிரிப்பூம்பட்டினத்தில் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலில் உழவுக்கு  உதவிய மாட்டுக்கு பொங்கல் படைத்து ``பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல், பொங்கல் படி பெருக, பானை போங்க, நோவும் பிணியும் தெருவோடு போக” என்று கூறி மாடு தின்ற எச்சில் தண்ணீரை மாட்டுத்தொழுவத்திலே தெளிப்பார்கள்.
                பொங்கல் கொண்டாட்டம் போகிப்பொங்கல், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. போகிப்பொங்கல் என்பது தாம் பயன்படுத்திய, வீட்டிலே பாவனையற்று தேங்கிக் கிடக்கும் பழைய பொருட்களை அகற்றும் தினமாகக் கருதப்பட்டது. இத்தினம் மனங்களில் தேக்கி வைத்திருக்கும் குப்பைகளையும் தெரிந்தெடுத்து அகற்றும் தினமாகும். இது மார்கழி மாதக் கடைசி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் தினத்திலே உழவுத்தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும், மாட்டுப்பொங்கலிலே  உழவுத்தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்கும், நான்காம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கலில் தொழிலில் முழுமூச்சாக ஈடுபட்டு அறுவடை முடித்தவர்கள். இன்றைய நாளில் தங்களுடைய உறவினர்கள் நண்பர்களைச் சந்தித்து பொங்கலை வழங்கி அன்பைப் பகிர்ந்து கொள்வார்கள்.  
            
                    பொதுவாக காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை ஊறவைத்து அதில் சீனி, ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றைக் கலந்து செய்வதுதான் இக்காதரிசி. முதன்முதலாகக் காது குத்தும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதனால் இப்பெயர் வழங்கப்பட்டது. இதனைப் பொங்கல் அன்று படைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்பொழுது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். குளிர் கூடிய ஐரோப்பியநாடுகளில் மின்னடுப்பில் பானை வைத்து வசதிக்கேற்ப சூரியன் வெளிவரும் நேரம் பார்த்து பொங்கல் படைத்து வழிபடுவர். சிலவேளைகளில் அன்றைய பொழுது சூரியன் மேகக்கூட்டங்களுக்குள் மறைந்தே இருப்பார். ஆயினும் காணாத போதும் கண்டதாகக் கருத்தில் கொண்டு பொங்கல் படைத்துத் தம் கலாச்சாரத்தைப் பேணுகின்றனர். 
                                     சூரியன் பற்றிய அற்புத நிகழ்வு ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள வித்யாசங்கர் கோவிலில் நிகழ்கின்றது. இக்கோவிலிலே கிழக்குப் பார்த்த மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபமானது 12 தூண்களினால் தாங்கி நிற்கின்றது. இந்தத் தூண்களின் காலடியில் காலைச்சூரியனின் கதிர்கள் விழுகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தூணாக ஒவ்வொரு தூணின் காலடியில் சூரியக்கதிர்கள் விழுவதுபோல் தூண்களை அக்கால கட்டக்கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். வானியல் தெரிந்த இவ்வல்லுனர்கள் பூமி சுழற்சியின் தன்மையை அழகாக இக்கட்டிடக்கலையின் மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். 
          
                                               இயற்கையின் வனப்பிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் இயற்கைக்கு நன்றி சொல்லத் தயங்கினால் நன்றிகெட்ட மனிதர்களாவோம். அதனால், இது தமிழருக்கு மட்டுமே உரித்தான நாள் என்று கருதாது ஒவ்வொரு மனிதர்களும் கொண்டாடவேண்டிய திருநாள் என்பதை மனம் பதிக்கவென இக்கட்டுரை  தந்துள்ளேன்.


  அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  இக்கட்டுரை தை மாத வெற்றிமணி பத்திரிகைக்காக எழுதினேன்.

  4 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான சிறப்புப்பதிவு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  2. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

   பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  4. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  பனைமடலால் ஒரு மிரட்டல

  அன்பு, காதல், பாசம், பரிவு, இரக்கம், விட்டுக்கொடுப்பு இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். இரு மனங்கள் இணையாத உறவு பொய்யான உறவாகவே அமைய...