• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 26 ஜனவரி, 2018

    வாசிக்க மறக்கும் தலைமுறை





    ஆதிமனிதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தனது உடல் அங்கங்களைப் பயன்படுத்தினான். அதன் பின் மனித வளர்ச்சியில் மொழியின் தேவை உணரப்பட்டது. சத்தங்கள் வரிவடிவங்களாகி மொழி உருவானது. மொழி மனித வாழ்வின் தொடர்பாடலுக்கு முக்கிய அம்சமாகப்பட்டது. அடுத்தடுத்த வளர்ச்சியில் உண்பது உறங்குவது என்னும் நிலை மாறி அறிவுத்தேவை மூளை வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டு வந்தது. கற்றல், கற்பித்தல் என்பன அறிவுபட்ட சமுதாயத்துக்கு அடித்தளமிட்டது.

     ``விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல்
      கற்றாரோடு ஏனை யவர்

    கல்வியறிவுடையோரே மனிதரென்றும், அஃதிலாதோர் விலங்குகளெனவும் திருவள்ளுவர் எடுத்தியம்புகின்றார்.

    ``நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டில் நன்மரம்” என்று சொன்னார் ஒளவைப்பிராட்டியார்.

    பரந்துபட்ட அக்கல்வியறிவை சிந்தையில் நிறுத்தி அறிவுச் செல்வத்தை சிரத்தையுடன் தேடும் போது மனிதவாழ்வு சிறப்படைகின்றது. அக்கல்வியின் ஆணிவேராக வாசித்தலே அமைகின்றது. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி. மனவிசாரங்களும், மனவிகாரங்களுமற்ற இளமைப்பருவக்கல்வி சிந்தாது, சிதையாது, சிதறாது மனதில் நன்றாகப் பதியும். எனவே கல்விக்கு அடித்தளமான வாசிப்பு இளமையிலேயே அரும்பி வருதல் வேண்டும். வாசிப்பு என்பது மேலோட்டமாய் வாசித்தல், ஆழமாய் வாசித்தறிதல் என்று இரு வகைப்படுகின்றன. சஞ்சிகைகள் மேலோட்டமாய் வாசிக்கப்படுகின்றது. அதுகூட மூளையின் ஏதோ ஒரு மூலையில் பதியப்பட்டு அவ்வப்போது எமது தேவைக்கு வெளிக் கொண்டு வரப்படுகின்றது. ‘‘கற்க கசடற கற்க‘‘ என்பது போல சந்தேகம் நீங்க கற்கும் போது ஆழ்மனதில் கற்கும் விடயம் ஆழமாகப் பதியப்படுகின்றது.

                       ஆரம்பக் கல்வியைத் தொடங்குவதற்குப் பாடசாலைக்கு வரும் மாணவன் ஏறத்தாள 2700 க்கு மேற்பட்ட சொற்களைக் கற்றுக் கொண்டே வருகின்றான் என ஆய்வுகள் கூறுகின்றன. கற்கும் ஆவலுடன் வருகின்ற ஒரு சிறுவனின் மூளையானது வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் போது மேலும் மெருகேற்றப்படுகின்றது. புதிய சொற்களைக் கற்கும் ஆர்வம் தேடலின் உச்சத்திற்குக் கொண்டுவிட வாசித்தலின் பெறுமதி ஊக்குவிக்கப்படுகின்றது. மொழிப்பயன்பாடு அதிகரிக்கின்றது. கற்றலில் மொழிச் செல்வாக்கு அதிகரிக்கின்றது. வாசித்தலில் ஊக்கம் குறைந்த மாணவன் கற்றலும் பின் தங்கி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

                வாசித்தலுக்கு மனம், கண், நா, காது, மூக்கு, குரல் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் வாசித்தலுக்கு மன ஒருமைப்பாடு அத்தியாவசியமாகின்றது. வாய்விட்டு வாசிக்கும் போது ஏற்படுத்தப்படுகின்ற உச்சரிப்பானது வாய் மூடி மனதால் வாசிக்கின்ற போதும் எமது மனதினுள் ஒலிக்கும். எனவே கற்பிக்கின்றபோது உச்சரிப்பு சரியான முறையில் கற்பிக்கப்பட வேண்டும். வெறுமனே வாசித்துச் செல்லும்போது அதில் பயன் ஏதும் கிடைப்பதில்லை. பொருளுணர்ந்து மனதுள் ஆழப்பதிக்கும் போதே வாசிப்பு முழுமையுறுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாசிப்புப் பழக்கமானது பண்பாட்டு விழுமியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

                       கல்வியைப் பெறுவதற்கு காட்சி, அனுபவம், கேள்வி முதலிய பலவழிகள் உளவேனும், அவற்றுள் தலைசிறந்தது காட்சிப்படுத்தல் மூலம் கிடைக்கும் வாசித்தலே. செய்தித்தாளிலே, ஆசிரியர் குறிப்பு, உலகச்செய்திகள், விளையாட்டுத்துறை, பொதுஅறிவு, இலக்கியம், குறுக்கெழுத்துப் போட்டி போன்ற பலவிடயங்கள் அடங்கிக் காணப்படுவதனால், ஒவ்வொருத்தரும் தாம் தமக்கு விருப்பமான துறையைத் தெரிவுசெய்து வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. செய்தி, கட்டுரை, விமர்சனம், அறிக்கை போன்றவை செய்தித்தாளில் இடம்பெறுவதால் இவை ஒவ்வொன்றின் வேறுபாடுகளையும் அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது. 
                   
                     இன்று கணனித்துறை உலகமெல்லாம் மிகச்சிறந்த துறையாகக் கருதப்படுகின்றது. வாசித்தலுக்கு இலகுவானதாகவும் உலகம் முழுவதும் இருக்கும் விடயங்களைத் தேடி வீட்டினுள்ளே இருந்தபடி தேடிப் பெற முடியாத பல புத்தகங்களை விரல் தட்டலின் மூலம் கண் முன்னே கொண்டுவந்துவிட முடிகின்றது. இப்போது கைக்கடக்கமான மின்சாரப்புத்தகம் (E Book) பலர் கைகளில் தவழுகின்றது. தேவையான புத்தகத்தைக் கணனியிலிருந்து பதிவிறக்கும் செய்து போகும் இடங்களுக்கெல்லாம் கொண்டு சென்று வாசிக்கக் கூடியநிலை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு வாசித்தல் மனிதர்களிடையே மேலும் மேலும் வளர்க்கப்படுகின்றது.  சஞ்சிகையிலே வருகின்ற தொடர்கதையானது மக்களிடையே தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டுவதாக இருக்கின்றது. சிரிப்பதனால் நோய் தீரும். நகைச்சுவை துணுக்குக்கள்  வாசகரைச் சிரிக்கவைத்து அவர்கள் மனதிலே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஓமோன்கள் சுரக்கப்பட வாசித்தலும் ஒரு காரணமாக அமைகின்றது.

                கணிதம், விஞ்ஞானம், மொழி முதலிய பாடங்களைக் கற்கும் மாணவன் ஒரு விவேகியாக இருந்தாலும் பொது அறிவு இலனாயின் அவனுடைய விவேகத்தால் முழுப்பயன் பெறமுடியாமல் போய்விடும். பாடநூல்களோடு பற்பல உலகச்செய்திகள் அறியும் போதே பரந்துபட்ட உலக அறிவு பெற்று உலகுக்கேற்ப வாழப்பழகிக் கொள்வான். பல்வேறுபட்ட கலாச்சார விழுமியங்களை வாசிப்பின் மூலம் அறிந்து கொள்வதுடன் நல்லன தீயன எவையெனப் பகுத்துணரும் பண்பைப் பெறும் அவனுள்ளம், விரிவடைகின்றது. எதிர்கால வாழ்வுக்குத் தம்மை ஆயத்தஞ் செய்து கொள்ளும் உன்னதநிலை உண்டாகின்றது.  வாசித்தலைப் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் வேறு தேவையற்ற எண்ணங்களுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவனாகக் காணப்படுவான்.

          எதிர்காலச் சிற்பிகள் அறிவாளிகளாகவும் உள்ளத்தால் உயர்ந்தவர்களாகவும் வளர வேண்டுமானால், கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பதற்கிணங்க, ஒவ்வொருவரும் நல்லனவென கண்டவற்றை வாசித்துக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதுவே அவனை வாழ்வின்  உச்சிக்கு இட்டுச் செல்லும். ஆய்வுக்கு வழிவகுக்கும், புதிய கண்டுபிடிப்புக்களுக்கு ஊக்கமளிக்கும், புதுமை விரும்பியாக மாற்றும், சிறந்த சிந்தனைவாதிகளாகத் திகழ வைக்கும்.
           
    கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்னும் முதுமொழிக்கிணங்க நாலுங்கற்று உலகின் நாயகர்களாய்த் திகழ்வோம்.

    2 கருத்துகள்:

    1. வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அருமையான பதிவு.

      பதிலளிநீக்கு
    2. வாசிப்பு என்றால் பாட புத்தகம் மட்டும்தான் என்று நினைப்பவர்கள் நம் பக்கத்தில் அதிகம் ! அடுத்தகட்ட வாசிப்பு என்றால் பலருக்கும் குமுதம், ஆனந்தவிகடன், ராணிதான் !! இன்னும் அடுத்தகட்டம் சமையல், பணம் சம்பாதிப்பது எப்படி மற்றும் ஜோதிட நூல்கள் !!!

      தமிழில் சிறுவர் இலக்கியம் அழிந்து போனதே நமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் எப்படி இருக்கிறது என்பதற்கான சாட்சி.

      வாசிப்பு பழக்கத்துக்கு முதல் கட்டமாய் பெற்றோர்கள் பழக்க வேண்டும். அடுத்ததாக கல்வி அமைப்பிலும் மாற்றங்கள் தேவை. இந்த இரண்டுக்கும் ஆதாரமான நூலகங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். இன்றைய அரசு நூலகங்களின் கதியை நினைத்தால் ...

      மிகவும் அருமையான, வசியமான பதிவு.

      நன்றி
      சாமானியன்

      எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
      http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
      தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி


      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...