இருவரும் ஒரே தரத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளியேறுகின்றார்கள்.
கலகலவென்ற சிரிப்பொலி இருவரிடமும் மன மகிழ்வைத் தருகின்றது. நீச்சல் போட்டி போட்டது
கணவன் மனைவி இருவரும் தான். இங்கு போட்டிதான் பொறாமை இல்லை. மகிழ்ச்சி ஒன்றேதான் இவர்கள்
நோக்கமாக இருந்தது. அவர்கள் குடியிருக்கும் வீட்டிலே நீச்சல் தடாகம் இருந்ததனால்,
ஒவ்வொருநாளும் இருவரும் நீச்சலடிப்பது வழக்கமாக
வைத்திருந்தார்கள். நீர் உலர்த்திய பின் வீட்டிற்குள் நுழைந்தனர். வாசலில் ஏற்கனவே
ஆர்டர் பண்ணிய உணவு இவர்கள் வருகைக்காகத் தயாராக இருந்தது. நீச்சல் களைப்பு பசியைக்
கூட்டி வந்திருந்தது.
மேசையில் அமர்ந்து
உணவைச் சுவைக்கத் தொடங்கினர்.
"ஸ்ரெல்லா! அடுத்த வாரம் மைனஸ்க்கு வெதர் போகின்றது. எலும்பு வருத்தம்
தேடி வந்து உடம்போடு ஒட்டிக் கொள்ளும். எங்கே போகலாம்? சென்ற வருடம் ஸ்பெயினுக்குப் போனோம். தாய்லாந்து போவமா?
மைக்கல் கேள்விக்கு
"ஆம். என்று சொன்ன டொரத்தி, சுப்பர் இடமாம்.
கலைகளும் இயற்கைக் காட்சிகளும் நிறைய இருக்கிறதாம். நல்ல வெயிலுமாம். எனக்கும் விருப்பமாகத்தான்
இருக்கிறது. தாய்லாந்துக்கு ரிக்கர் புக் பண்ணுங்கள்" என்றாள் ஸ்ரெல்லா.
காலமும் பொழுதும்
கடமைக்காய் கழிந்த காலம் போய் இன்று தமது பொழுதுகளை ரம்மியமாக நோய்நொடியின்றி சந்தோசமாகக்
கழிக்க வேண்டிய நேரம். ஸ்ரெல்லா 70 வயதுக்கு காலடி எடுத்து வைத்துவிட்டாள்.
மைக்கலோ 74 வயதைத் தாண்டுகின்றார். இருவருமாகத் தனித்திருக்க
துணிந்தார்கள் வயதானவர்களுக்கென்று அமைக்கப்பட்ட வீட்டிற்குக் குடிபுகுந்தார்கள். இது
வயோதிபர் மடம் அல்ல. வயோதிபர்களுக்கு என்று சகல வசதிகளுடனும் கூடிய அடுக்குமாடி வீடு.
இங்கு நடக்க முடியாதவர்கள் கூடத் தனித்திருக்கலாம். இவ்வீட்டைப் பராமரிப்பதற்கு என்றே
ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். மாடிப்படி ஏறுவதற்கு லிப்ற் இருக்கின்றது. அவரவர்
தமது கடமைகளைத் தாமே செய்வார்கள். வயோதிபர்கள் இவ்வீட்டைத் தேடுவதன் காரணம் அமைதியான
சூழ்நிலையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கடற்பயணமும்,
குளிர் காலங்களில் வெயில் தேவைக்காக வெப்பமான நாடுகளுக்கு
சுற்றுலாவும், நடன வகுப்புக்களும், பூங்காக்களிலும் காடுகளிலும் நடைப்பயிற்சியும், விழாக்களும் என தம்பதியர் இருவர் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்றது. தாய்லாந்தை
மாரிகாலத்துக்கு உகந்த இடமென்று தெரிவுசெய்து சுற்றுலாவைச் சுகமாகக் கழித்து வீடு வந்து
சேர்ந்தனர்.
அன்று
"இந்தப் படங்கள் எல்லாவற்றையும் ஒரு அல்பமாக்குவோம் ஸ்ரெல்லா. டி.எம்
க்குக் கொண்டு போனால் செய்துவிடலாம்'
என்று எழுந்தார் மைக்கல். முழங்காலில் ஒரு சுள் என்ற வலி.
"ஓ மை கோட் ஸ்ரெல்லா...... என்னால நடக்க முடியாத
வலியாக இருக்கிறது. கடைக்கும் போக முடியாது. டொக்டரிட்டப் போவோம்.
"என்ன? முழங்கால் வலிக்குதா? நீங்கள் தானே எலும்புக்கு நல்லது என்று ஒருநாளுக்கு இரண்டு தடவை ரவுணுக்கு
40, 40 நிமிடங்கள்
நடந்து போய் வருகின்றீர்கள். ஒவ்வொரு நாளும் நீச்சல் செய்கின்றீர்கள். உங்களுக்கே எலும்பு
நோகின்றது என்றால், என்னுடைய நிலை"
"இப்போ இது தேவையா. தாங்க முடியாம இருக்குதென்றால், உன்னுடைய வியாக்கியானம். நீ வரத் தேவையில்ல. நான் போயிட்டு வர்றேன்"
வாடகைக் காருக்கு அழைப்பு விடுத்து மைக்கல். மருத்துவமனை சென்றார். ஸ்ரெல்லா
மனதுக்குள் கேள்வி அதிகரித்தது. இது எப்படி சாத்தியமாகும். நான்தான் அங்கே வலி,
இங்கே வலி என்று சொல்லிக் கொண்டு இருப்பேன். ஒருநாள்
கூட எந்த வலியும் இல்லாமல் இருந்த மைக்கலுக்கு, அவர் உடலில் காட்டும் அக்கறைக்கு எப்படி இந்த வலி வந்தது? மனதுக்குள் கவலை கலந்த ஏக்கம் ஸ்ரெலாவுக்குள் குடி புகுந்தது. மருத்துவமனை
சென்ற மைக்கல் திரும்பி வந்தார்.
"டொக்டர் எல்லா ரெஸ்ட்டும் எடுத்தார். முழங்காய் ஆபரேசன் செய்ய வேண்டுமாம்.
செயற்கை முழங்கால் மூட்டு வைக்கப் போகின்றார்கள் போல் இருக்கிறது. என்ன செய்வது?
வருவது வரட்டும். எல்லா ரெஸ்ட் முடிவுகளும் வந்தபின்
அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஊசி அடித்தபின்தான் வலி குறைந்திருக்கிறது. நாளைக்கு
படங்களை அல்பமாக்கக் கடையில் கொண்டு கொடுப்போம்"
என்று கூறியபடி கட்டிலில் சாய்ந்தார். காதலில் விழுந்து கல்யாணம் என்னும்
பந்தத்தை ஏற்படுத்தி என்றுமே பிரியாத தம்பதிகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர்கள். அவ்வப்போது
ஸ்ரெல்லாவே வருத்தம் வருவதும் மருந்தெடுப்பதும் என்று வாழ்ந்து வந்தாள். ஆனால் மைக்கலோ
நோய் என்று ஒருநாளாவது படுத்ததும் இல்லை. மருந்து எடுத்ததும் இல்லை. இதுவே ஸ்ரெல்லாவின்
கவலை அதிகரிப்பதற்குக் காரணமாகியது.
மீண்டும் நாட்கள் வழமைபோல் நீச்சலும் கலகலப்பும் என்று கரைந்து செல்லத்
திடீரென்று மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மைக்கலுடன் அவசரமாகப் பேச
வேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இருவரும் மருத்துவமனைக்குச் சென்ற போதுதான் தெரிந்தது.
மைக்கல் நுரையீரல் புற்றுநோய் கண்டிருக்கின்றது என்னும் செய்தி. இருவரும் துடித்துப்
போனார்கள்.
தனது வாழ்க்கையில்
விளையாட்டுக்குக் கூட சிகரெட் புகைத்த பழக்கம் மைக்கலுக்கு இருந்ததில்லை. உடலுக்கும்
உள்ளத்துக்கும் நல்உணவும் நற்பழக்கவழக்கங்களையுமே கொண்டிருந்த மைக்கலுக்குக் காலன்
கொண்டுவிட்ட நோயா இது? நினைத்துப் பார்க்காத விடயங்கள் நடக்கின்ற
போதுதான் இயற்கையைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றான். இதுதான் நோய் என்றவுடன் அதற்குரிய
சிகிச்சை ஆரம்பமானது. சிகிச்சை ஆரம்பமாகியதுமே உடலில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடுவதுதான்
நோயின் தன்மையாக இருக்கின்றது. நோய் என்று தெரியும் வரை எந்தவித அறிகுறிகளோ உடலின்
மெலிவு மாற்றங்களோ நடைபெறாதிருக்கும். ஆனால், நோய் என்று அறிந்துவிட்டால், உடனே உடலில் மாற்றம்
தெரிந்துவிடும். இதுதான் எல்லாம் மனதில்தான் இருக்கின்றது என்னும் உண்மைத் தத்துவம்.
ஹீமோதெரபி தொடங்கியது.
நோயின் பிடியில் படுக்கையில் விழுந்த மைக்கல் இயக்கம் இழந்தார். சுறுசுறுப்பை இழந்தார்.
உடலுக்கு இப்படித்தான் பயிற்சிகள் கொடுக்க வேண்டும் என்று பலருக்கும் அறிவுரை கூறிய
மைக்கல் மௌனமானார். 3 வருடங்கள் நோயின் தாக்கம் அதிகரிக்க இவ்வுலக
வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலையில் உடலைக் கழட்டி உயிரை நீத்தார். தனது உடலில் பாதி
உயிர் போனது போன்ற பிரமையைப் பெற்ற ஸ்ரெல்லா மைக்கல் உடல் எரித்து மிஞ்சிய சாம்பலைத்
தன்னுடனேயே வைத்திருக்க முடிவு செய்தாள். அழகான மண்ணால் செய்யப்பட்ட பொம்மை. ஒரு ஆணும்
பெண்ணும் அணைத்துக் கொண்டு இருப்பது போன்ற தோற்றமுள்ள பொம்மையை வாங்கினாள். அதன் கீழ்ப்பகுதி
குடம் போல் அழகாகக் காட்சியளித்தது. அதற்குள் மைக்கலின் சாம்பல் அடங்கிக் கிடந்தது.
அருகே இருந்து அவருடன் நாளும் உறவாடி மகிழ்ந்திருப்பாள்.
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லையே. வேளை வந்தால் உயிர் நிலைப்பதில்லையே.
ஸ்ரெல்லாவின் இதயம் கூட வலு இழந்தது. மாற்று இதயம் அவள் உடலுள் வந்து குடிபுகுந்தது.
அவ் இதயம் கூட மைக்கலை நேசிக்கத் தொடங்கியது. வலிமையான குளிசைகள் சிறுநீரகத்தின் இடது
பகுதியை பழுதடையச் செய்தது. ஒரு சீறுநீரகத்துடன் தனது கணவன் துணை இல்லாத வேதனை அவளை
வாட்டியது. உதவிக்கு யார் யாரோ எல்லாம் வந்து போனார்கள். ஆனால், தனது கணவன் அரவணைப்புப் போல் எதுவும் இல்லாமையை நினைத்து வருந்தினாள்.
இடுப்புவலி உடலை எழுந்து நிற்க வைக்கத் தயங்கியது.
இன்று மருத்துவமனையில் ஸ்ரெல்லா. நோவுக்கான மருந்து கையில் ஊசியைக் குத்தி,
ஊசி மூலம் உடலுக்கு ஏற்றப்பட்டது. இரண்டு கைகளிலும்
அவள் வெண்ணிறத் தோளில் தடித்த நீல நிறத் தடயங்கள். ஊசி மருந்து செலுத்திய அடையாளங்கள்,
சுருங்கிய தோல்களில் எலும்புகளும் நரம்புகளும் வெளிப்படையாகத்
தம்மை அடையாளங் காட்டின. எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தரித்திருக்க வேண்டும் என்ற
கணக்கு அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையே அவளது இருப்பிடமாகியது.
அருகே வனெஸ்லா. அவளும்
இவ்வாறான இதயநோயாளிதான். இருவரும் சிறந்த நண்பர்களாயினர். அவளைக் கவனிப்பதற்காக வரும்
அவள் கணவன் டானியல் எப்போதும் அன்பாக ஸ்ரெல்லாவிற்கு உதவுகின்றான். பொழுது போவதற்காக
விளையாட்டுக்களை மூவரும் இணைந்து விளையாடுகின்றனர். நட்பு தொடர்கின்றது. நல்ல நண்பர்களாகின்றனர்.
இன்று வனெஸ்ஸா ஆபரேசனுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றாள். வனெஸ்ஸாவின் ஆபரேஸன் நல்லபடியாக
முடிந்து திரும்ப வேண்டும், எமது நட்புத் தொடர வேண்டும் என்று தன் ஆண்டவனிடம்
ஸ்ரெல்லா மன்றாடுகின்றாள். அவள் இதயமோ டிக்டிக் என்று வழமைக்கு மேலாகத் துடிக்கிறது.
நேரமோ சென்று கொண்டிருக்கிறது. வாசற்கதவைப் பார்த்தபடியே கண்கள் நிலைத்திருக்கின்றன.
எங்கே இவ்வளவு நேரமும் ஆபரேஸன் செய்கின்றார்கள்! எனது பொறுமையைச் சோதிக்கின்றார்கள்.
சிறிது நேரத்தின் பின் டானியல் அறையினுள் நுழைகின்றான். கண்களில் நீர்த்துளிகள். வனெஸ்ஸா
ஆபரேஸனின் போது உயிர் துறந்த செய்தியைக் கண்ணீர் மல்கக் கூறிச் செல்கின்றான்.
என்ன கொடுமை! எனக்கு
வாழ்க்கையில் நல்ல உறவுகளே வந்து இணையாதா? உயிரான கணவனுக்குப்
பிறகு என்னுடன் எத்தனை அன்பாக வினிதா என்னுடன் பழகினாள். இருவரும் என்றும் இணைபிரியா
நட்புடன் வாழ்வோம் என்றல்லவா நினைத்திருந்தேன். மீண்டும் தனிமை உணர்வல்லவா எனக்கு ஏற்படுகின்றது.
என்று எண்ணியபடி கண்ணீரைத் துடைத்தபடி படுக்கையில் கிடந்தாள். அடுத்தநாள் டானியல் அவளைப்
பார்ப்பதற்காக வந்திருந்தார். தனது மனைவியின் பிரிவுத் துயரை ஸ்ரெல்லாவுடன் பகிர்ந்து
கொள்வதற்காக வந்திருந்தார். மனைவியின் உடலைப் புதைப்பதற்கான நாள் குறிக்கப்பட்டாயிற்று
என்ற செய்தியைச் சொல்லிச்சொல்லி அழுதார். பின் அடிக்கடி ஸ்ரெல்லாவைப் பார்வையிடுவதற்காகவும்
அவளுக்கான உதவி செய்வதற்காகவும் வந்து போனார்.
ஒட்டி உலர்ந்த கன்னங்கள்,
பெண்களின் கவர்ச்சி காய்ந்து போன நிலை, உடம்புண்டு உயிருண்டு தசைகளை வழித்து எடுத்தால் அரை கிலோ கூடத் தேறாது,
ஆனாலும் வாழுகின்றாள் ஸ்ரெல்லா. கவர்ந்தெடுக்கும் பேச்சிலும், கனிவிலும், அறிவிலும் குறைவே தெரியவில்லை.
அதிக நாட்கள் மருத்துவமனையில்
இருக்க முடியாத ஸ்ரெல்லா வீட்டிற்கு அனுப்பப்;பட்டாள். தனிமையும் நோயும் அவளை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீரை வடியச்
செய்யும். அவளுக்காக நியமிக்கப்பட்ட டொரத்தி அருகே வருகின்றாள்.
"எப்படி இருக்கின்றீர்கள் மேடம்?
"இருக்கிறேன் டொரத்தி. பசி கொல்லுது. உன்னைத்தான் காத்திருந்தேன். இடுப்பு
தாங்கமுடியாத வலியாக இருக்கிறது"
"உங்களுக்கான உணவை சூடு பண்ணிக் கொண்டுவருகின்றேன். பிறகு பேசுவோம்"
என்றவளாய் டொரத்தி. உணவை வெப்பமாகச் சூடு பண்ணி ஸ்ரெல்லாவின் படுக்கைக்குக்
கொண்டுவந்தாள். படுக்கையை உயர்த்தித் தலையணையைச் சாய்த்து வைத்தாள். உணவு வைப்பதற்கான
தட்டை படுக்கையில் வைத்தாள். ஸ்ரெல்லாவை நிமிர்ந்திருக்கச் செய்து உணவை உண்பதற்குச்
செய்தபடி, ஸ்ரெல்லா அருகே இருந்தாள்.
ஷஷமெடம் இன்றுதான் உங்களை நான் சந்திக்கின்றேன். நான் தான் வரவிருப்பதாக
உங்களுக்கு முன்னமே அறிவித்திருப்பார்கள் அல்லவா?
"ஆமாம். டொரத்திதான் இன்று வருவார் என்று சொன்னார்கள். யாராக இருக்கும்
என்று காத்திருந்தேன்"
ஜேர்மன்காரர்கள் பெயரை அழகாக உச்சரிப்பார்கள். ஒருதடவை பெயரைக் கேட்டால்,
மறக்கப் போவதேயில்லை. அந்தளவில் ஞாபகசக்தி இருக்கும்.
"உங்களுக்கு என்ன உடல் பிரச்சினை என்று அறிந்து கொள்ளலாமா? அதற்குரிய பயிற்சிகளை நான் செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும். இன்று நாம்
ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளலாமா?
ஷஷடொரத்தி! எனக்கு உடல் உறுப்புக்கள் எல்லாம் பழுதாகத்தான் போய்விட்டன.
வெட்டிக்குத்தி வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் என்னால் எல்லாம் செய்யமுடியும்"
எத்தனை தைரியம். ஒரு சிறு வருத்தம் என்றாலே யாராவது உதவி செய்ய மாட்டார்களா?
என்று எதிர்பார்த்திருக்கும் எம்மவர் மத்தியில்
ஸ்ரெல்லாவின் தன்னம்பிக்கையை மெச்சியபடி டொரத்தி தொடர்ந்தாள்.
"புரிகிறது மெடம். உங்கள் கண்களில் அத்தனை பிரகாசம். முகத்தில் பொலிவு.
நீங்கள் நீண்ட காலம் சந்தோசத்துடன் இருப்பீர்கள் என்று என்னுடைய மனம் சொல்கிறது. மனமும்,
தெளிவும் நல்லதையே நினைத்தால் போதும். அனைத்தும்
நல்லதாகவே நடக்கும்"
"அப்படி ஒன்றும் நினைப்பதுபோல் நடப்பதில்லை டொரத்தி. எனது கணவர் அப்படித்தான்
இருந்தார். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாது மறைந்துவிட்டார்.
எனக்கு இதயத்தில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. எனது சிறுநீரகத்தில் ஒன்றை எடுத்துவிட்டார்கள்.
இடுப்பில் ஆபரேசன் செய்திருக்கின்றார்கள்"
''அப்படியா! தெரியவேயில்லை. நீங்கள்
நன்றாகவே இருக்கின்றீர்கள்'' என்று ஸ்ரெல்லாவுடைய கவலையைப் போக்குவதற்கான
நேர்மறையான வார்த்தைகளைப் பகிர்ந்தாள் டொரத்தி. அருகே இருக்கும் படுக்கையை நோக்கிய
டொரத்தி,
"மெடம் உங்களுடன் உங்கள் மகளும் தங்குகின்றாரா? என்று கேட்டாள்.
''இல்லை. நானும் பாசத்துக்கு ஏங்குகின்றேன். அதேபோல் டானியலும் பாசத்துக்காக
ஏங்குகின்றார். அவரது மனைவியும் இறந்துவிட்டாள். இப்போது எனக்கு எல்லாவிதமான உதவிகளையும்
டானியலே செய்கின்றார். எனது வலது கை போல் ஒரு நண்பனாக இருக்கின்றார். நோய்க் கவலையை
மறக்கவும், சிரிக்கவும் இப்படி ஒருவர் எனக்குத் தேவை.
அதனை டானியல் தீர்த்து வைக்கின்றார். நாளை வருவார். உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்.
உங்களுக்குத் தெரியுமா டொரத்தி. அவர் என்ன சொன்னார் தெரியுமா? தன்னுடைய மனைவியைக் காண்பதற்கு முன் என்னைக் கண்டிருந்தாள். என்னைக் கல்யாணம்
செய்திருப்பாராம். நானோ அப்படியென்றால், அற்புதமான என்னுடைய
கணவனை நான் இழந்திருப்பேன் என்று சிரித்தபடி கூறினேன். உண்மையில் இப்படி ஒரு நட்பை
எனது கணவன்தான் கடவுளாய் இருந்து என்னுடைய இறுதிக்காலத்திலத் தேவைக்காக அனுப்பி வைத்திருக்கின்றார்
என்று நினைக்கிறேன். எனது பிள்ளைகள் கூட டானியலில் நல்ல பாசம் வைத்திருக்கின்றார்கள்" என்றாள்.
"அப்படியென்றால், உங்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றார்களா?
"ஆம். அவர்கள், அவர்களுக்கு என்று குடும்பம். நான் கரைச்சல்
கொடுப்பதில்லை. அடிக்கடி பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும்
வந்து போவார்கள்''
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், எமது கலாச்சாரத்திற்கு ஏற்றதல்ல என்றெல்லாம் நினைத்து தமது கடைசிக் காலத்திற்கு
பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாமல் தனிமையில் கவலை மண்டி இறந்து போகும் எமது மக்கள்
மத்தியில் ஸ்ரெல்லாவின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகவே டொரத்திக்குப்பட்டது. நினைப்பதைச்
சொல்வதற்கும், கவலைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும்,
சந்தோசத்தைச் சேர்ந்து கொண்டாடுவதற்கும் காமத்தைக்
கடந்து அன்பான, பாசமுள்ள ஒரு இதயம் இறுதிக்காலத்திற்கு
நிச்சயம் தேவை. அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். வயதான காலத்தில்
இரண்டும் ஒன்றுதான் என்று சிந்தித்தவளாய் டொரத்தி ஸ்ரெல்லாவிடம் அன்றைய நாளுக்காக விடைபெற்றாள்.
அருமையான நட்பு அமைவது கடவுளின் சித்தம்!
பதிலளிநீக்குஎன் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். அக்கால உண்மையான நட்பு அமைவதெல்லாம் இக்காலகட்டத்தில் சற்று சிரமமே. அவ்வாறு அமையும் நிலையில் பாராட்டவேண்டும்.
பதிலளிநீக்கு