• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 14 பிப்ரவரி, 2018

    நெஞ்சம் மட்டும் பேசும் காதல்




    நிற்பனவும், நடப்பனவும், பறப்பனவும் தமது மனங்களைப் பகிர்ந்து கொள்ளும் இயல்பான நிகழ்வு காதல். மனிதவளர்ச்சியில் சத்தியமானதும் சாத்தியமானதும் காதல். மனதுக்குள் கிளுகிளுப்பையும் உடலிலே மாற்றத்தையும் நடத்தையில் நாகரிகத்தையும், பேச்சிலே கவர்ச்சியையும் கொண்டுவரும் காதல். இக்காதல் இல்லையேல் சாதல் சாதல் என்றார் மகாகவிபாரதி. ‘’காதலித்துப்பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்’’ என்றார் வைரமுத்து. ‘’கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசும்மா காதல், ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையையே போதிக்கும், ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே” என அகத்தியன் அவர்கள் தன் வரிகளில் காதலை விபரித்தார். “யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர். யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (என் தாயும் உன் தாயும் எவ்வித உறவினர்?  என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்கள்? நானும் நீயும் எந்தக் குடி சார்புடையவர்கள்? செம்மண் நிலத்திலே விழுந்த மழைநீர் போல அன்புள்ள நெஞ்சம் ஒன்றாகக் கலந்தன) என குறுந்தொகையிலே செம்புலப்பெயல் நீரார் பாடுகின்றார்.

    இவ்வாறு இரு மனங்களிடையே காதல் எவ்வாறு தோன்றுகிறது? எதிர்பார்ப்புக்கள், ஆசைகள், விருப்புக்கள், ஆர்வங்கள், ஈர்ப்புக்கள், உடலமைப்புக்களின் கவர்ச்சி போன்றவை இருமனங்களுக்கிடையிலே காதலை உருவாக்குகின்றன. இருவருக்கிடையில் அளவுகடந்த அன்பு தோன்றும் போது ஒக்சிரோசின் (oxytocin) என்னும் ஓமோன் மூளையில் சுரக்கும். இந்த ஓமோன் சுரப்பதற்கு எதிர்ப்பால் கவர்ச்சி ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது. பெண்களுக்குரிய ஈஸ்ரோஜன் (Estrogen) என்னும் ஓமோன் பெண்மையையும் மென்மையையும் வழங்க ஆண்களின்  ரெஸ்ரோஸ்ரெறோன் (Testosterone) என்னும் ஓமோன் ஆண்மையையும் வலிமையையும் கொடுக்கின்றது. இவ்விரு ஓமோன்களும் சரியான வகையில் தொழிற்படும்போது இரு பாலாரிடையும் அவரவர் விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப கவர்ச்சியான உடலமைப்பு தோன்றுகின்றது. இவ்வாறான உடலமைப்புக்கள் ஏற்படுகின்றபோது இருபாலாரிடமும் காணப்படும் அன்டரோஜன் (Androgen) என்னும் ஓமோன் இருபாலாரிடையும் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இக்கவர்ச்சியானது ஆழமான அன்பை ஏற்படுத்தும்போது ஒக்சிரோசன் என்னும் ஓமோன் மூளையில் சுரக்கின்றது. இவ்வாறு உடலுள்ளே ஓமோன்களின் மாற்றத்தினால் ஏற்படுகின்ற உள்ளுணர்வு ஒத்த அன்பினரான இரு மனங்களை ஒன்றிணைக்கின்றன.

                 இக்காதலைப் பெருமைப்படுத்தி 14ம் திகதி மாசிமாதம் எடுக்கப்படுகின்ற திருநாளே காதலர் தினமாகும். இது வலன்ரீன்ஸ் நாள் ஏயடயவெiளெவயப  என்றும் அழைக்கப்படும். இத்தினத்தில் காதலர்கள் அவரவர் தமது காதல் துணைக்கு ரோஜா மலர்கள், வாழ்த்து அட்டைகள்; கொடுத்தும், சொக்லட் பரிசாகக் கொடுத்தும் கொண்டாடுவார்கள். சொக்லட்டினுள் சக்தியை அதிகரிக்கச் செய்யும் தியோப்ரோமைன் என்னும் அல்கலொய்ட் (Alkaloid) இருக்கிறது. உடலையும் மூளையையும் தூண்டிவிடக்கூடிய கோப்பியிலுள்ள கொப்ஃய்ன் (Coffeine) கூட ஒரு அல்கலொய்ட் தான். காதல் தாகம் அதிகரிக்க அல்கலொய்ட் அதிகமுள்ள சொக்லட் உதவுகின்றது. இதனை விட இதயத்துடன் தொடர்புடைய காதலுக்கு இதயத்தை வலிமைப்படுத்தும் தன்மையுடையது சொக்லட் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வுசெய்து கூறியிருக்கின்றது. சொக்லட்டினுள் இருக்கும் அன்ரி ஒக்சிடென்ட் (Antioxidant) இதயநோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கின்றது. அதனால் இதயத்தை வலிமைப்படுத்தக் கொடுப்பதுதான் கொடுக்கின்றீர்கள். கறுப்பு சொக்லட்டை (Dark chocolate) கொடுங்கள். ஏனென்றால், அதனுள் இருக்கும் கொக்கோவா (cocoa) சர்க்கரை வியாதி, அதிகரிக்கும் கலோரிகளை இல்லாமல் செய்துவிடுகின்றது. அதனால், கறுப்பு சொக்லட்டே உங்கள் காதலுக்கு உகந்தது என்பது தெளிவாகிறது.

                 இவவாறு பிரபலமாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடுகின்ற இத்தினம் எவ்வாறு ஆரம்பமானது என்றால், உண்மையில் ரோமர்களின் ஆட்சிக்காலத்திலேயே காதலர்தினம் ஆரம்பிக்கப்பட்டது. ரோமாபுரி நாட்டிலே படையில் சேர விரும்புபவர்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது. இதை மீறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மன்னன் கிளாடிஸ் மிமி அறிவித்தான். ஆனால், பாதிரியார் வாலண்டைன் இதனை அறிந்து இரகசியத் திருமணம் படைவீரர்களுக்குச் செய்து வைத்தார். இதனையறிந்த மன்னன் பாதிரியார் வாலண்டைனைச் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக்காவலாளிகளின் தலைவன் மகள் அஸ்டோரியஸ் இற்கும் இடையில் காதல் பிறந்தது. இதனை அறிந்த இவள் தந்தை அஸ்டோரியஸை வீட்டுக்காவலில் வைத்தார். அப்போது வாலண்டைன் அஸடோரியஸ் இற்கு ஒரு செய்தி அனுப்பினார். இக்கடிதம் படிக்கும்போது வாலண்டைன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இத்தினம் பிப்ரவரி 14. அதன் பின் ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டுக்குள் ரோம் வந்ததன்பின் இத்தினம் விடுமுறைதினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் ஜெலாசியஸ் மி என்னும் போப்பாண்டவர் என்பவர் வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அதன்பின் இத்தினம் வாலண்டைன தினமாகக் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

               காலம் காலமாகக் காதலுக்கு விழா எடுப்பதற்கான காரணம் புரிந்த பின்னும் பெற்றோர்களே! காதலுக்குச் சமாதி கட்ட துணிகின்றீர்களா? இல்லை காலமெல்லாம் காதல் வாழ்க என்று போற்றுகின்றீர்களா? எனினும் இளமையே! காதல் எனப்படும் பரிசுத்த அன்பில் காமம் கலவாது காத்துக் கொள்ளுங்கள் என்றும் காதல் கைகூடும்.



    2 கருத்துகள்:

    1. வணக்கம்

      காதல் பலவிதம் இருந்தாலும் இப்போது உள்ள காதல் உண்மையில் வித்தியாசம் அன்புக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத காதலர்கள் அதிகம்... மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...